நல்ல தமிழில் பேச, படிக்க, எழுத ஆர்வம் உள்ளவரா நீங்கள்????
ஆம், எனில் இந்த தொடரில் வரும் தகவல்களை படித்து பழகுங்கள்.
தொடரின் அடுத்த தொகுப்பு இதோ:-
“வலியுறுத்தலும் வற்புறுத்தலும்”.
இவ்விரண்டுசொற்களுக்கும் பொருளில் வேறுபாடுள்ளது.
வலியுறுத்தல் என்றால் ஒரு செயலை புறக்கணிக்காமல் செய்து முடிக்குமாறு அன்பாக வேண்டிக்கொள்ளுதல். Insist என்னும் ஆங்கிலச்சொல்லின் பொருளுக்கு நேரானது. இது வேண்டுதலைக்காட்டும்.
வற்புறுத்தல் என்றால் ஒரு செயலை செய்தேதீரவேண்டுமென்று பலாத்தாரம்செய்தல். Force என்னும் ஆங்கிலச்சொல்லின் பொருளுக்கு நேரானது. இது கண்டிப்பைக்காட்டுவது.
“மானாவாரி”.
நன்செய், புன்செய் என்னும் இருவகை வயல்களுக்குள் ‘மானாவாரி’ என்பதெந்த வயல்?
எவ்வகை நீர்ப்பாசனமும் இல்லாமல், மழையால் மட்டுமே நீரைப் பெற்று விளைச்சல்தரும் நிலமே மானாவாரி என்றழைக்கப்படுகிறது.
இச்சொல்லின் உண்மையானவடிவம் “வானமாரி” என்பதுதான்.
வானம் = ஆகாயம்,
மாரி = மழை,
வானம் + மாரி = வானமாரி.
புணர்ச்சியில் மகரவொற்று நீங்கிவிடும். இதன் சொற்கள் முன்பின்னாகமாறியும், எழுத்துகள் திரிபடைந்தும் வானம் மானமாகவும், மாரி வாரியாகவும் ஆகி நம்மை குழம்பவைத்துள்ளது. வானமாரியே பொருள்பொருத்தமான சரியான சொல்.
“மதியம்”.
நடுப்பகலைக்குறிக்க ‘மதியம்’ என்னுஞ்சொல் பரவலாக ஆளப்படுகிறது. ‘மத்தியானம்’ என்னும் சமஸ்கிருதசொல் மதியமாக மாறி வழங்கப்படுகிறது. மதியம் அவ்வளவு பொருத்தமான சொல்லன்று.
மதியம் என்பது தமிழில் பெரும்பாலும் சந்திரனைத்தான் குறிக்கும். எடுத்துக்காட்டுகள்:
“மாசில்வீணையும் மாலைமதியமும்” – அப்பரடிகள்.
“கார்மேனி செங்கண் கதிர்மதியம்போல் முகத்தான்”- ஆண்டாள்நாச்சியார்.
“விசும்பின் மதியமும் ஞாயிறும்”- பெருங்கதை.
ஆதலால் பகலுணவை , ‘மதியவுணவு’ என்றுசொல்வது அவ்வளவு பொருந்துமாவென சிந்திப்பீர்.
“பகல்” என்பதுதான் சரியான, பொருத்தமான சொல். ‘பகல் உணவு’ என்றுதான் எங்கும் பொதுவாகக்கூறுவர். பகல் என்னுஞ்சொல் பெரும்பாலும் ‘நடுப்பகலை’யே குறிக்கும்.
எடுத்துக்காட்டுகள்:
“காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலருமிந் நோய்” – திருக்குறள்.
“காலையும் பகலும் கையறு மாலையும்
ஊர் துஞ்சு யாமமும் விடியலும்” – குறுந்தொகை.
இவற்றில் பகலென்பது நடுப்பகலையே காட்டுகிறதன்றோ. ஆங்கிலத்தில் சொல்லப்படும் noon என்பதும் நடுப்பகலையே குறிக்கும். குக்கிராமங்களில் பகல்சோறு சமைக்கவில்லை என்று சொல்வார்கள். இதில் பகல் என்பது நடுப்பகலைத்தானே குறிக்கிறது?
காலைப்பொழுதுக்கும் பகலுக்கும் இடைப்பட்ட காலத்தை ‘முற்பகல்’ (forenoon) என்றும்; பகலுக்கும் மாலைப்பொழுதுக்கும் இடைப்பட்ட காலத்தை ‘பிற்பகல்’ (afternoon) என்றும் அழைக்கிறோமல்லவா?
முனைவர் திரு முத்து கண்ணப்பன் அவர்களது “நல்லதமிழ் அறிவோம்” என்னும் நூலிலிருந்து நன்றியுடன் எடுத்தாளப்பட்டது.
(தொடரும்)
முந்தைய பதிவுகளைப் படிக்க: