சந்துரு… பிரமாதம்..
கடந்த இரண்டு வருடங்களாக மத்திய பாஜக அரசுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வந்த தெலுங்கானா முதல்வர் கே.சி.ஆர் தெலுங்கானாவின் ஆரோக்கியஸ்ரி திட்டத்தை மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்துடன் இணைக்க ஒப்புக் கொண்டுள்ளது.
பிரதமர் மோடியின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை தெலுங்கானா மாநிலத்தில் அமல்படுத்தப்படுவதை இதுவரை எதிர்த்த கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி அரசாங்கம் தனது ஆரோக்கியஸ்ரீ திட்டத்தை பாஜக தலைமையிலான தேசீய முற்போக்கு கூட்டணி மைய அரசின் நாடு தழுவிய ஆயுஷ்மான் பாரத் எனப்படும் சுகாதார காப்பீட்டு திட்டத்துடன் இணைக்க முடிவு செய்துள்ளது.
இது குறித்த முதலமைச்சர் கே.சி.ஆர் அரசாங்கத்தின் முடிவு அரசியல் வட்டாரங்களில் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வந்த தெலுங்கானா அரசு, இதுவரையில் பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை விட தனது மாநிலத்தின் ஆரோக்கியஸ்ரீ திட்டம் விரிவானது மற்றும் சிறந்தது என்று கூறி வந்தது.
பாரதப் பிரதமர் திரு மோடி நேற்று (புதன்கிழமை) அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுடன் வீடியோ மாநாடு நடத்தியதோடு, பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களின் முன்னேற்றம், ஆயுஷ்மான் பாரத பிரதான் மந்திரி ஜான் ஆரோக்ய யோஜனா மற்றும் ஜல் ஜீவன் மிஷன் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ததையடுத்து தெலுங்கானா மாநில அரசால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாநில பாஜக தலைவர் பாண்டி சஞ்சய் குமார் இது குறித்து கூறுகையில் , :கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த திட்டத்தை செயல்படுத்தாததற்காக ராவின் அரசு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். “ஆயுஷ்மான் பாரத் மாநிலத்தில் செயல்படுத்தப்படாததால் பலர் பாதிக்கப்பட்டு இறந்தனர்” என்று அவர் கூறினார்.
சில மாதங்களுக்கு முன்னர் தான் தெலுங்கானா முதல்வர் கே.சி.ஆர் பாஜக எதிர்ப்பு முன்னணி ஒன்றை உருவாக்கிட முனைப்பு காட்டினார் என்பது நினைவு கூரத்தக்கது. ஹைதராபாத் பெருநகர நகரசபைத் தேர்தலுக்கு சற்று முன்னதாக, தெலுங்கானா முதல்வர் கேசிஆர், தேசீயவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான ஷரத் பவார், திரிணாமுல் காங்கிரசின் மம்தா பானர்ஜி, கர்நாடகாவின் மதச்சார்பற்ற ஐக்கிய ஜனதா தள தலைவர் குமாரசாமி, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, ஷிரோமணி அகாலிதளத்தின் பிரகாஷ் சிங் பாதல், ஒடிசாவில் பிஜு ஜனதா தளக் கட்சியின் நவீன் பட்நாயக், மற்றும் தி.முக தலைவர்களை ஒருங்கிணைத்து பாஜகவுக்கு எதிரான முன்னணி ஒன்றை உருவாக்கப் போவதாக யோசனை தெரிவித்திருந்தார்.
இருப்பினும், அந்த மாநகர தேர்தலில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி அதிகபட்ச வார்டுகளை வென்ற பிறகு, பாஜக எதிர்ப்பு முன்னணியின் யோசனை எதுவும் எழுப்பப்படாமல் திடீர் மௌனம் காக்கப்பட்டது.
கடந்த ஞாயிறன்று மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு அளித்து தனது எதிர்ப்பு நிலைப்பாட்டினை மாற்றிக்கொண்ட ஒரு சில நாட்களுக்குள்ளேயே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்துடன் தெலுங்கானா அரசின் ஆரோக்கியஸ்ரீ இணைக்கப்படும் என்ற அறிவிப்பு வந்துள்ளது.
அதன் படி, முதல்வர் கே.சி.ஆர் தலைமையிலான தெலுங்கானா மாநில அரசு புதன்கிழமை ஒரு முக்கிய முடிவை எடுத்தது.
மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா-பி.எம்.ஜே.ஏ) சுகாதார காப்பீட்டு திட்டத்தை தனது ஆரோக்யஸ்ரீ சுகாதாரத் திட்டத்துடன் இணைத்து செயல்பட்டதை மாநில அரசு தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற வீடியோ மாநாட்டில் பங்கேற்றபோது தெலுங்கானா தலைமைச் செயலாளர் சோமேஷ்குமார் பிரதமர் மோடிக்கு இந்த முடிவினை அறிவித்தார். வீடியோ மாநாட்டில் பேசிய சோமேஷ் குமார், முதலமைச்சர் கே.சி.ஆர் இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்தார்.
மத்திய அரசுடன் இணக்கமான போக்கை கடைப்பிடிக்க தெலுங்கானா முதல்வர் தீர்மானித்திருப்பது வேளாண் சட்டங்களுக்கு அவர் தெரிவித்த ஆதரவும், அதனை தொடர்ந்து இப்போது ஆயுஷ்மான் பாரத் திட்டத்துக்கான வரவேற்பும் காட்டுகிறது.
இதன் மூலம் தெலுங்கானாவில் பாஜகவுக்கு மக்கள் மத்தியில் எழுச்சி மிகுந்த ஆதரவு இருப்பதை கண்டு கொண்ட KCR மென்மையான அணுகுமுறையை கடைப்பிடிக்க முடிவு எடுத்துள்ளார் என்று அனுமானிக்க இடமுண்டு.
பாஜகவுக்கு எதிரான மாபெரும் கூட்டணி பற்றிய யோசனையையும் தெலுங்கானா முதல்வர் கிடப்பில் போட்டுவிடுவார் என்று எதிர்பார்க்கலாம்.