அனுபவ அறிவை விட அறிவியலுக்கு நாம் அதிக முக்கியத்துவம் தர வேண்டுமா?
- அலோபதி மருத்துவம் வரும் முன் இருந்த மருத்துவ முறைகள் பயனற்றவையா?
- இப்போதைய அறிவியல் ஆரோக்கியமாக உள்ளதா?
சமீபத்தில், மத்திய அரசின் ஆயுஷ் அமைப்பு, ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய அனுமதி அளித்தது. அதற்கு எதிர் வினையாக, ரகுராஜ் ஹெக்டே என்ற அலோபதி மருத்துவர், ஆயுர் வேதம் அறிவியல் பூர்வமானதல்ல என்று ட்வீட் செய்திருந்தார். பல எதிர்ப்புகளுக்குப் பின் ஒரு மாதிரி சமாளித்து பதில் சொல்லியிருக்கிறார்.
“மனிதகுல முன்னேற்றங்களுக்குக் காரணம் நவீன அறிவியலா அல்லது அனுபவ அறிவா? நாம் அறிவியலுக்கும் அலோபதி மருத்துவத்திற்கும் கொடுக்கும் முக்கியத்துவம் எந்த அளவிற்கு சரி?” என்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கும் முயற்சியே இந்தக் கட்டுரை.
மனித குலத்தின் வரலாற்றை ஒரு நாள் என்று கொண்டால், நவீன அறிவியலின் காலம் கண்ணிமைக்கும் நேரமே. சமூகங்கள் பல அனுபவங்களின் மூலமே, முன்னேறின. அந்த அனுபவங்களை வகைப் படுத்தி, அவற்றின் சாரத்திலிருந்து கிடைத்ததே நவீன அறிவியல் முறை.
தொழில் நுட்பமும், மருத்துவமும் அவ்வாறே வளர்ந்தன. தேவைகளுக்கும் காலத்திற்கும் ஏற்ற கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன. நவீன அறிவியலின் துணை இல்லாமல் தான் பல கண்டுபிடிப்புகள் நடந்துள்ளன. அவற்றிற்கான காலம் சரியாக இருந்தால், அறிவியலின் உதவியுடன் செம்மைப் படுத்தியபின் பொதுப் பயன்பாட்டிற்கு வருகின்றன.
உதாரணமாக, விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி சாலையில் விமானம் கட்டப்படவில்லை. ரைட் சகோதரர்களும், அவர்களின் முன்னோடிகளான பல விமான ஆர்வலர்களின் பல சோதனைகளுக்கும் தோல்விகளுக்கும் பின்னரே பறக்கும் விமானம் சாத்தியமானது. போர்களில் விமானங்களின் பயனால், தொடர்ந்த ஆராய்ச்சிகளால், தொழில் நுட்ப முன்னேற்றங்கள் நிகழ்ந்தன.
அதே போல, பொ.யு முதல் நூற்றாண்டிலேயே, அலெக்ஸாண்டிரியாவில் நீராவி மூலம் இயங்கும் கருவி கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. பதினாறு நூற்றாண்டுகளுக்குப் பிறகே ஜேம்ஸ் வாட்டின் நீராவி எஞ்சின் அதற்கேற்ற பயன் இருந்ததால், மேலும் நடந்த ஆராய்ச்சிகளினால் பரவலாகப் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தது.
அதே போல, மருத்துவத்துறையிலும் நாம் அறிந்த பல அடிப்படைகள் அனுபவ அறிவின் மூலம் பெறப்பட்டவையே. நவீன வாழ்க்கை முறை வருவதற்கு முன் இருந்த காலத்திலிருந்து மருத்துவ உதவி தேவைப்படும் ஜலதோஷம், காய்ச்சல், வயிற்று உபாதை, வலி, எலும்பு முறிவு ஆகியவற்றிற்கு உலகின் பல பகுதிகளில் பாரம்பரிய மருத்துவங்களில் நிவாரணம் உள்ளது. கண், மூளை அறுவை சிகிச்சைகள் சுஸ்ருதர் காலத்திலிருந்து செய்யப்பட்டு வந்துள்ளது. ஆங்காங்கே, பிளாஸ்டிக் சர்ஜரி கூட இருந்திருக்கிறது.
பாரம்பரிய மருத்துவ முறைகள் அனுபவம் சார்ந்தவை. அனுபவ அறிவு பல முயற்சிகளுக்குப் பின், பிழைகளைத் தவிர்த்து, திருத்தி செம்மைப் படுத்தப் பட்டது. காலங்களைக் கடந்தும் நிலைப்பது. ஆதாரம் சார்ந்த அலோபதி மருத்துவத்தில் சில பத்தாண்டுகளிலேயே ஒரு மருந்து பயன்படுத்தத் தகுந்ததல்ல என்றும் கூறப்படுவதுண்டு.
அலோபதி மருத்துவத்தில் உள்ளது போன்ற மைய நிறுவன அமைப்பும், அதன் மூலம் கட்டுப்படுத்துலும் பாரம்பரிய மருத்துவங்களில் இல்லை. குறுங்குழுக்கள் அனுபவத்தில் பெற்ற அறிவை முழு விளக்கத்துடன் சீராக ஆவணப்படுத்த முயலவில்லை; பல்வேறு காரணங்களுக்காக அது தவிர்க்கப்பட்டதும் உண்டு. (காரணங்களில் நிச்சயம் சுயநலம் இல்லை.) ஆவணங்களாகக் கருதப்படும் நூல்கள், இந்தியாவின் நீண்ட பாரம்பரியத்துடன் ஒப்பிடும் போது மிகவும் குறைவே.
நவீன அறிவியல் ஒப்புக்கொள்ளும், கட்டுப்படுத்தப்பட்ட சோதனைச் சூழலும், விளக்கங்களும் ஆவணப்படுத்தப்படவில்லை. இதன் காரணமாகவே, அனுபவ அறிவு தரக் குறைவானதாகக் கருதப்படுகிறது.
ஆனால், இப்போதைய அறிவியல் இந்தத் தளங்களில் பலமானதா?
ஆவணப்படுத்துதலின் முக்கிய நோக்கம் – பிறர் அந்தச் சோதனையை செய்யும்போது அதே விளைவுகளைப் பெறுவதே. அவ்வாறு பெற்றால் மட்டுமே அந்த அறிவு பரவலாகப் பயன்படும். ஆனால் சமீப கால அறிவியல் சோதனைகளின் விளைவுகள், முதல் ஆராய்ச்சியில் ஆவணப்படுத்தப்படுத்தப்படி மறுபடியும் செய்தால் விளைவுகள் ஆவணத்தில் உள்ளது போல் இல்லை. இந்தப் பிரச்சினை, மருத்துவ ஆய்வுகளில் மட்டும் 60%க்கு மேல் உள்ளது. இந்த அழகில் உள்ளது நவீன அறிவியல்.
மேலும் நவீன மருத்துவம், ஒரே நூற்றாண்டில் அரசு, மருந்துக்கம்பெனிகள், பெரும் மருத்துவமனைகள் ஆகியவற்றின் பெரும் ஆதரவுடன் வளர்ந்து விட்டது. ஆவணப்படுத்தப் பட்ட பக்க விளைவுகளுடன் பெரும்பான்மை மக்கள் அதை ஏற்றுக் கொண்டுவிட்டனர். ஆனால், பாரம்பரிய வைத்திய முறைகளுக்கு உரிய கவனம் இப்போது தான் கொடுக்கப்பட்டு வருகிறது. 1995இல் தான் முதல் முறை இந்திய மருத்துவ முறைகளுக்கென்று ஒரு அமைச்சகம் உருவாக்கப் பட்டது. சீனா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்ளது போல பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கான சமூக, அரசு அங்கீகாரம் ஆரம்பித்துள்ளது.
பாரம்பரிய மருத்துவ முறைகள் நிலைத்து நம்பிக்கையை பெற சில காலம் ஆகும். அது வரை, தரக்குறைவான மருந்துகள், மருத்துவர்கள் போன்ற சங்கடங்களை சந்திக்க வேண்டும். இந்தப் பிரச்சினை அலோபதி மருந்துகளுக்கும், மருத்துவர்களுக்கும் கூட உண்டு. ஆனால் அலோபதிக்கு ஆதரவாக பெரும் மருத்துவமனைகளும், மருந்துக் கம்பெனிகளுக்கும் உள்ளன. பாரம்பரிய மருத்திவத்திற்கு பாபா ராம்தேவின் பதஞ்சலி, டாபர், வைத்யநாத் போன்ற செல்வாக்குள்ள நிறுவனங்கள் சொற்பமாகவே உள்ளன.
வலுவான அமைப்புகளின் ஆதரவுடன் உள்ள அலோபதியுடன் போட்டி போட்டு பாரம்பரிய முறைகள் வளர்வது கடினம். ஆனால், விலை உயர்ந்த அலோபதி மருத்துவத்திற்கு மாற்றாக பாரம்பரிய வைத்திய முறைகள் வளர்வது நமக்கு நல்லது.
Balanced view Sridhar