உலகம் முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் உள்ளதாக செய்திகள் வருகின்றன. அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி போன்ற பல ஐரோப்பிய நாடுகளில் இரண்டாவது அலையின் தாக்கம் உணரப்பட்டு கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மருத்துவர் திரு.ஃபாருக் அப்துல்லா, சிவகங்கையை சேர்ந்தவர். சமூக அக்கறை கொண்டவர். அவரது மருத்துவக் கட்டுரைகள் மிகவும் பயனுள்ளவை. கொரோனாவின் இரண்டாவது அலையை எதிர்கொள்ளுவது எப்படி என்பதைப் பற்றி விரிவாக தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். ***********
இரண்டாவது அலை எப்படி இருக்கலாம்??? ஒரு கணிப்பு.
Dr.A.B.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை
இந்த விசயத்தில் எனது கணிப்புகள் பொய்யாக வேண்டும் என்ற ஆசையில் ஆரம்பிக்கிறேன்.
காரணம் யாரும் இந்த கொரோனா தொற்று மீண்டும் ஒருமுறை பேரலையாக உருவாகுவதை விரும்ப மாட்டோம்.
மீண்டும் எப்போது உறவினர்களை சந்திப்போம். எப்போது ரிலாக்ஸ்டாக டூர் செல்வது.. மீண்டும் இந்த முகக்கவசங்கள் இல்லாத வாழ்க்கைக்கு எப்போது திரும்புவது போன்ற ஏக்கங்கள் துளிர்க்க ஆரம்பித்து விட்டன.
இருப்பினும்
📷 தொற்று நோய் குறித்த அறிவியல்
📷 இதுவரை கிடைத்துள்ள அனுபவம்
📷 தற்போது மேற்குலகில் நடந்து வரும் செய்திகள்
📷 நம்மில் பலரும் தொற்றின் இருப்பை மறந்து மீண்டும் பழைய நார்மல் நிலைக்கு சென்றிருப்பது
ஆகியவற்றை வைத்துக் கணிக்கும் போது இரண்டாம் அலை அல்லது இந்த கொரோனா தொற்றின் அடுத்து வரும் நாட்கள் பின்வரும் மூன்று விதங்களில் இருக்கலாம்.
முதல் விதம்
First Assumption: (A Huge Peak) – மிக உயரமான சிகரம் (பேரலை)
அதாவது முந்தைய அலையை விடவும் பெரிய மற்றும் உயரமான அலை இரண்டாவதாக வரக்கூடும். உலகம் முழுவதும் இருந்து பெரும்பான்மை வல்லுனர்கள் இந்த கருத்தில் ஒன்றிணைகின்றனர். அதாவது முதல் அலையில் உச்சம் தொட்டபோது இருந்த நோய் தொற்றாளர்கள் அளவை விட மிக அதிகமாக தொற்றாளர்கள் உருவாவது. அதனால் அதிகமான அளவு மருத்துவமனைகள் நிரம்புவது. மீண்டும் அதிக மரணங்கள் நிகழ்வது.
இதற்கான முக்கிய காரணங்களாக கூறப்படுவது:
மக்களில் பெரும்பான்மையினரிடையே வந்திருக்கும் அலட்சியம் என்றே கூறப்படுகிறது.
பொதுமக்களில் பலரும் முகக்கவசம் அணியாமல் வெளியே வருவதும், அரசு நிர்ணயித்த அளவுகளை விட அதிக மக்கள் குடும்ப சுப துக்க நிகழ்வுகளில் கூடிப் பிரிவது காரணமாக இருக்கலாம்.
இரண்டாவது விதம்
குறைவான நீளம் மற்றும் உயரம் உள்ள சிகரங்கள் மற்றும் பள்ளத்தாக்குகள். தொடர்ந்து ஒரு வருடம் மாறி மாறி வருவது. (Smaller peaks and troughs for next one year)
இந்த வகையில் கொள்ளை நோய்கள் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு காலங்களில் பரவும். நாடு முழுவதும் அல்லது மாநிலம் முழுவதும் ஒரே போன்று பரவல் இருக்காது. எனவே ஒரு இடத்தில் கொள்ளை நோய் இருந்தாலும் மற்றொரு இடம் அமைதியாக இருக்கும். கொள்ளை நோய் நடைபெற்ற இடம் அமைதியாகும் போது ..ஏற்கனவே அமைதியாக இருந்த இடத்தில் பரவல் அதிகமாகும்.
இவ்வகையில் பரவல் நடக்கும் போது ஒரு நன்மை யாதெனில் நம்மால் மருத்துவ ஊழியர்கள் மற்றும் உபகரணங்களை தேவை இல்லாத இடத்தில் இருந்து தேவை இருக்கும் இடங்களுக்கு மாற்றிக்கொண்டே இருக்க முடியும்.
மூன்றாவது விதம்
குன்றுகளும் பள்ளத்தாக்குகளும் (Hills and valleys)
அளவில் மிக மிக குறுகிய அளவில் தொற்றுப்பரவல் இருக்கலாம். இதனால் மருத்துவமனைகள் ஸ்தம்பிக்காமல் தொடர்ந்து இப்போது முதல் அலைக்கு பின் எப்படி இருக்கிறதோ அதே போன்ற சூழல் நிலவலாம். இந்த நிலையை நமது பொது சுகாதாரத்துறை எளிதில் கட்டுக்குள் வைத்து மரணங்கள் பெருமளவு குறைந்து காணப்படும்.
ஆனால் இதற்கு நாம் மிக கவனத்துடன் செயல்பட வேண்டும்.
முகக்கவசங்களை தொடர்ந்து அணிய வேண்டும்.
தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும்.
முதியோர்களை பாதுகாக்க வேண்டும்.
மேற்சொன்ன மூன்று விதங்களில் இரண்டாம் அலை இருக்கலாம்.
இதில் மக்களாகிய நமது செயல்பாடுகள் இதில் எந்த நிலையில் இரண்டாவது அலை இருக்கும் என்பதை மாற்றியமைக்கும் தடுப்பூசிகள் அடுத்த ஆண்டின் ஆரம்பம் முதல் மத்தியில் கிடைக்கக்கூடும் என்ற நிலையில் இரண்டாம் அலையின் எதிர்காலத்தை ஓரளவு அவற்றால் மாற்றியமைக்ககூடும்.
இரண்டாம் அலை ஏற்படுமா? ஏற்படாதா? என்பதில் பெரிய சந்தேகம் கிடையாது.
கட்டாயம் இரண்டாம் அலை ஏற்படும். ஆனால் அது எந்த மாதிரி இருக்கும் என்பது நமது செயல்பாடுகள் வழி அமையும்.
தொடர்ந்து
📷 முகக்கவசம் அணிவோம்
📷 தனிமனித இடைவெளியைப் பேணுவோம்
📷 கைகளை வழலை (சோப்பு நீர்) கொண்டு கழுவுவோம்
📷 முதியோர்களை வீட்டுக்குள் வைத்து பாதுகாப்போம்.
நன்றி: Dr.A.B.ஃபரூக் அப்துல்லா, பொது நல மருத்துவர், சிவகங்கை.