கொரோனா வைரஸ் அழிப்பில் புற ஊதாக் கதிர்களின் பங்கு
பொதுவெளியில் பலவிதமான பரப்புகளில் மீது படிந்து பின் அவற்றை தொடுபவர்கள் உடலில் தொற்றிக்கொள்ளும் கொரோனா வைரஸினை ஒழித்திட தற்போது புதிய முறை ஒன்று ஜப்பானிய விஞ்ஞானிகளினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கோவிட்-19 நோய் பரவலுக்கு முக்கியமான காரணம், மனிதர்கள் அதிகம் புழங்கும் இடங்களில் உள்ள பொருட்களின் மேற்பரப்புகள்தான் . உதாரணமாக, ஒரு அலுவலகத்தில் உள்ள மேஜையின் மேல் பரப்பில் கொரோனா வைரஸ் இருந்து அதனைப் தொடும் நபரின் கைகளில் வைரஸ்களின் ஒரு பகுதி ஒட்டிக்கொண்டு பின்னர் அந்த நபர் தனது முகத்தினை தொடும்போது- முக்கியமாக வாய் ,மூக்கினை தொடும்போது -அவருக்கு நோய் தொற்று ஏற்படுகிறது.
நோய்த்தொற்று உள்ள நபர் தும்மும்போது அல்லது பேசும்போது அவர் வாய், மூக்கு வழியாக வெளிவரும் ஈரத்திவலைகள் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதை விட இவ்வாறு கட்டிட , பொருட்களின் மேற்பரப்புகளின் வழியாக பரவுவது குறைவான அளவிலேயே இருந்தாலும், மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மருத்துவமனை, பெரிய வர்த்தக வளாகங்கள் மற்றும் பொது போக்குவரத்து வாகனங்களில் மக்கள் ஒருவரை ஒருவர் உரசும்போதும் அல்லது வைரஸ் படிந்துள்ள மேற்பரப்பு களைத் தொடுவது மூலமாகவோ நோய் தொற்று பரவ அதிக வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் பாதுகாப்பான வழியில் கொரோனா வைரஸ்களை ஒழிப்பது குறித்த ஆராய்ச்சி முடிவுகள் மிகுந்த நம்பிக்கை அளிக்கின்றன.
ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி முடிவில், ஒரு குறிப்பிட்ட ஒளி கதிர்கள்- அதாவது 222 நானோமீட்டர் அலைவரிசை உடைய சி பட்டை புற ஊதாக் கதிர் எனப்படும் ஒளிக்கதிர்கள்- கோவிட் 19 பெருந்தொற்று பரவலுக்கு பின்னுள்ள சார்ஸ் கோவி- 2 என்ற வைரசினை திறம்பட கொல்கிறது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சி-பட்டை புற ஊதாக் கதிர் என்ற ஊதாக் கதிர்களை, பொது வெளியில் காணப்படும் பரப்புகளின் மீது- அதாவது மேஜை, நாற்காலி, கதவு கைப்பிடிகள் முதலானவை மீது- செலுத்தும்போது 99 சதவீதத்துக்கு கொரோனா வைரஸ்கள் அழிவதாக ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த புற ஊதாக் கதிர்கள் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்காது என்பதை கூடுதல் அனுகூலம்.
தில்லியில் உள்ள மெட்ரோ ரயில் நிறுவனம் நமது ராணுவ ஆராய்ச்சி நிறுவனத்தை தொடர்பு கொண்டு இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரயில் நிலையங்களில் உள்ள பொது வெளியை தூய்மைப் படுத்துவது தொடர்பாக விவாதித்து வருகிறது .
விரைவில் இத்தொழில்நுட்பம் பலவித பொது வெளிகளில் பயன்படுத்தப்படும்போது கொரோனா நோய் தொற்று பரவல் மிக அதிக அளவில் கட்டுப்படுத்தப்படும் என நம்பலாம்.
நன்றி: ஸ்வராஜ்யா தளம்
மொழிபெயர்ப்பு ஆசிரியர்:கீதாப்ரியன்