புதிதாக எதுவும் இங்கே சொல்லிவிடவில்லை.
வளர்சிதை மாற்றம் என்று ஒரு சொல் உண்டு.
உயிரியலில் பயன்படுத்தப்படும் சொல் அது. சிதையும் போதே வளர்வது என்று மேம்போக்காக பார்க்கும் போதே சொல்லின் பொருள் புரியும். செல்கள் அனைத்தும் இப்படித்தான் சிதைவுற்று மாறி வளருகின்றன.
உயிர்ப்பு இருக்கிறது எனில் அங்கே சிதைவும், மாற்றமும், வளர்ச்சியும் இருக்கும்.
நான் எனது தந்தை வழி பாட்டனாரைப் பார்த்ததில்லை. நான் பிறப்பதற்கு முன்னரே இறந்து விட்டார்.
அவர் காலத்தில் காப்பி கிளப் நடத்தி வந்தாராம். அப்போதெல்லாம் கிராமபோன் கருவியை காப்பி கிளப்பில் வைத்திருப்பார்கள். கிராமபோன் ரிகார்டுகள் அரக்கினால் ஆனவை. அப்போது மின்சார வசதி இல்லை என்பதால் கிராமபோன் இயங்கும் விதமும் சாவி கொடுத்து சுழல வைக்கும் படி அமைந்திருக்கும். ஒரு ஊசியை அந்த கை போல நீட்டிக் கொண்டிருப்பதன் முனையில் பொருத்தி சுழலும் இசைத் தட்டில் வைத்துவிட்டால் அதில் இருந்து இசை பிரவாகம் ஆகும். சாவி குறைந்து விட்டால் கர்ணகடூரமாக ஒலிக்கும் என்பதால் பக்கத்தில் இருந்து சாவியை கொடுத்துக் கொண்டிருப்பார்கள். தாத்தா காலத்துக்குப் பிறகு காப்பி கிளப்பை மூடிவிட்டார்கள்.
காப்பி கிளப்பின் நினைவெச்சமாக எங்களிடம் இருந்தது இந்த கிராமபோன் கருவி மட்டும் தான். அந்தக் காலத்து பிரபல பாடகர்களான எம்.கே.டி பாகவதர், எம்.எம்.தண்டபாணி தேசிகர், எஸ்.ஜி.கிட்டப்பா, என்.சி.வசந்தகோகிலம், எம்.எஸ்.சுப்புலட்சுமி, டி.கே.பட்டம்மாள், ஜி.என்.பாலசுப்ரமணியம் போன்றோரின் கர்னாடக இசைத் தொகுப்புகளே நிறைய இருந்தன. வள்ளி சரிதம், கருட கர்வபங்கம் போன்ற இசை நாடகங்களும், மிக அபூர்வமாக சில சினிமாக்களின் ஒலி வடிவங்களும் கிடைத்தன. நாளடைவில் அந்த கருவி பழுதடைய ஆரம்பிக்க, அதனை பழுது பார்க்கும் ஆட்கள் குறைந்து போக ஆரம்பித்து விட்டார்கள்.
மின்சாரப் பயன்பாடு இல்லாத காலங்களில் கிராமபோன் கருவிகள் தான் சிறப்பான பொழுதுபோக்கு. அது மட்டுமின்றி அவைகளை வைத்திருப்பது ஒரு சமுதாய அந்தஸ்தாகவும் இருந்தது.
மின்சாரம் அறிமுகமான பின்னர், வால்வ் ரேடியோக்கள் அறிமுகமானயின. பிலிப்ஸ், மர்பி போன்ற பிராண்டுகள் மிகவும் பிரசித்தம். ஒரு மர்பி வால்வ் ரேடியோவை அப்பா சென்னையில் இருந்து வாங்கி வந்தார்.
எங்கள் ஊரில் பத்து தெருக்கள் இருந்தன. இரண்டு மூன்று வீடுகளில் மட்டுமே இந்த வால்வு ரேடியோக்கள் இருந்தன.
இந்தோ-சீனப் போரின் போது வானொலியை வீட்டுக்கு வெளியே வைத்து போர் தொடர்பான செய்திகளை ஒலிபரப்புவோம். ஊரே திரண்டு வந்து செய்திகளை ஆவலோடு கேட்டு விட்டுப் போகும்.
பின்னர் டிரான்சிஸ்டர் வகை ரேடியோக்கள் அறிமுகம் ஆனதும் எல்லோர் வீட்டிலும் வானொலிப் பெட்டிகள் பயனுக்கு வந்தன. வால்வ் ரேடியோக்கள் அருகிப் போயின.
பின்னாளில், பேட்டரி போட்டு பயன்படுத்த முடியும். மின்சார வசதி அவசியம் இல்லை என்ற நிலை வந்த போது நம்ம ஊர் ஜிப்சிகள் ஆன குருவிக்காரர்களிடம் இந்த வானொலிப் பெட்டிகள் சரளமாக புழங்க ஆரம்பித்தன.
பின்னர் பாக்கெட் ரேடியோக்கள், வாக்மேன்கள், என்று நாம் ஆதிகாலத்தில் பயன்படுத்திய கிராமபோன் இசைக் கருவி பலவிதமாக வளர்சிதை மாற்றம் அடைந்தது.
இப்போது ஃபோன், கைக்கடிகாரம், அலாரம், வானொலி, எம்பித்ரீ பிளேயர், எம்பிஃபோர் வீடியோ ப்ளேயர், அட்ரஸ் புக், கணினிப் பயன்பாடுகள், பணப் பரிமாற்றம் செய்யும் செயலிகள், ப்ரொஜெக்டர் என்று இன்னும் என்ன என்ன வசதிகள் உள்ளனவோ எல்லாமே ஒருங்கிணைந்து இப்போது கைபேசிக்குள் வந்து விட்டது. கைபேசிக்குள் வங்கிப் பரிமாற்றம் செய்யலாம். பணத்தை கையால் தொடாமலேயே பொருட்களை விற்கவும், வாங்கவும் செய்யலாம்.
2000வது வருடத்தின் ஆரம்பங்களில் நமக்கு செல்போன் பற்றிய அறிமுகமே இல்லாமல் இருந்தது. ஹாலிவுட் படங்களில் ஜேம்ஸ்பாண்டு பயன்படுத்துவார். அதைப் பார்த்து நாம் வியந்து கொண்டிருந்தோம். இப்போது வீட்டுக்கு ஒருவருக்கு குறைந்த பட்சம் இரண்டு ஸ்மார்ட் போன்கள். ஒவ்வொன்றிலும் இரண்டு சிம்கள் என்று தறிகெட்டு ஓடிக் கொண்டிருக்கிறது. காணொளி வழியாக வேண்டியவர்களுடன் நினைத்த நேரத்தில் உரையாட முடியும் என்பதை நாம் கனவில் கூட நினைத்ததில்லை.
1950-60களில் பிறந்தவர்கள் அப்போது இருந்த நிலைமையுடன் இப்போது உள்ள மாற்றங்களை பார்ப்பதோடு மட்டுமின்றி, அவற்றை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இவை எல்லாமே நம் வாழ்க்கையில் நமக்குக் கிடைத்திருக்கும் சிறந்த அனுபவங்கள் தான்.
மாற்றம் ஒன்றே மாறாத தத்துவம்.