‘அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’
பாரதியின் இக்கனவு வெறும் ஏட்டிற்கு மட்டுமே உதவும் தத்துவச் சுரைக்காய் போல. நம் பிரதமர் மோடிக்கு பாரதியின் கவிதையை அவருடைய ஸ்பீச் ரைடர்ஸ் எவரும் எடுத்துரைக்கவில்லை போலும், கல்வித் துறையில் பெரும் மாற்றங்கள் கொண்டு வர விழைவதாகக் கூறிக் கொள்ளும் இந்த அரசு அனைவருக்கும் இலவசம் அல்லது குறைந்தபட்சம் அதிகப் பணச்சுமையற்ற கல்வி வழங்க முற்படவில்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற கணக்கில் NIFT கல்விக் கட்டண உயர்வு எடுத்துக்காட்டாகிறது. IVY league பல்கலைகள் போன்று நம் நாட்டு கல்விச்சாலைகளும் வரவேண்டும் என்று புதிய கல்விக் கொள்கையில் கோடிடு காட்டிடும் போதே இந்த அரசின் மக்கள் நலம் பற்றிய போலித்தனமும் கல்வி உட்பட நாட்டையே கார்போரேட் மயமாக்கும் உத்தியும் வெளிப்படுகிறது. மேலை நாட்டுப் பல்கலைகளுக்குப் பட்டுக் கம்பள விரிக்கும் இந்த செய்கை ஒரு கடையாணி. பாரதீயக் கலாச்சாரம் பற்றிப் பீற்றிக் கொள்ளும் இவ்வரசு தக்ஸசீலம், நலாந்தா, மிதிலா விக்ரம சீலா கந்தலூர் போன்ற பழம் பெருமை வாய்ந்த பல்கலைகள் போன்றவை எடுத்காட்டாகத் தோன்றவில்லை, IVY league தான் நினைவிற்கு வருகிறது, அதுதான் வரும் ஏனெனில் அவைதானே நாட்டிற்குள் வரப்போகின்றன. சரி இப்போது நடக்கும் அநியாயத்திற்கு வருவோம்.
மிக முக்கியமான விஷயம், குறிப்பாக பலரது கவனத்திற்கு வராமல் போன விஷயம் குறித்து சுருக்கமாக பார்ப்போம்.
ஊரில் ஒரு சொல்வழக்கு உண்டு – “படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோவில்” என்று. யாருக்கு இது பொருந்துகிறதோ இல்லையோ மத்திய பாஜக அரசின் ஜவுளித் துறையின் கீழ் இயங்கும் NIFT எனப்படும் தேசிய ஃபேஷன் டெக்னாலஜி வடிவமைப்பு கழகம் என்ற கல்வி நிறுவனத்திற்கு இது முழுவதுமாக, கனகச்சிதமாக பொருந்தி வரும். நாடு முழுவதும் 16 இடங்களில் NIFT கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இளநிலை படிப்பு, முதுநிலை படிப்பு, ஆராய்ச்சிப் படிப்பு என பல நிலைகளில் இவை ஃபேஷன் டெக்னாலஜி தொடர்புடைய கல்வியை வழங்குகின்றன. பல்லாயிரம் மாணவர்கள் இதில் படித்து பயன்பெற்று வருகிறார்கள். இவர்களில் மிகப் பெரும்பாலானவர்கள் நடுத்தர வர்க்கத்தை சார்ந்தவர்கள்.
நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று பேயாட்டம் ஆடி வருகிறது. மக்களின் வாழ்க்கை முடங்கி வாழ்வாதாரங்கள் கிட்டத்தட்ட முழுவதுமாக அற்றுப் போய்விட்டன. சிறு குறு தொழில்களில் ஈடுபட்டுள்ள பல தனியார் நிறுவனங்கள், அவற்றில் பணிபுரியும் பணியாளர்கள் என அனைவரின் வாழ்க்கையும் அந்தரத்தில் ஆடுகிறது. மத்திய அரசு மிகவும் சரியான முறையில் சாதாரண மக்கள் தொடங்கி பல தரப்பு மக்களுக்கும் பல சலுகைகளை அறிவித்தது. அதேபோல் கல்வி நிறுவனங்கள் தங்களது மாணவர்களிடம் முழுமையாக கல்வி கட்டணம் வசூலிக்கக் கூடாது, தவணை முறைகளில் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
நிற்க. இவையெல்லாம் ஏட்டளவில் தான். இந்த NIFT செய்துள்ள காரியத்தைப் பார்த்தால் நீங்களும் என்னுடன் சேர்ந்து ஆமாம் என்பீர்கள். இந்த சிரம காலத்தில், வருமானம் இல்லாமல் அவனவன் சாப்பாட்டிற்கே கஷ்டப்படும் காலத்தில் செமஸ்டர் கல்விக் கட்டணங்களை 10 சதவீதம் அளவிற்கு உயர்த்தியுள்ளது NIFT. உயர்த்தப்பட்ட கட்டணங்கள் லட்சக்கணக்கில் இருக்கின்றன. குப்புறத் தள்ளிய குதிரை குழியையும் பறித்த கதையாக முழு செமஸ்டர் கட்டணத்தையும் ஒரே தவணையில் செலுத்துமாறு வேறு சொல்லியுள்ளதாக மாணவர்களும் பெற்றோர்களும் கதறுகின்றனர்.

எந்தெந்த கட்டணங்களை எல்லாம் உயர்த்துகிறார்கள் என்பது தான் உலக மகா காமெடி. லைப்ரரி கட்டணம், லேப் கட்டணம்ஸ(Lab Fees) , மெடிக்ளெயம் கட்டணம் என சகலமும் உயர்ந்துள்ளன. ஆன்லைனில் படிக்கும் போது லைப்ரரி கட்டணமும் லேப் கட்டணமும் உயர்ந்த அதிசயம் இங்கே மட்டுமே நிகழும்.


எவ்வளவு திட்டமிட்டு இதனை செய்துள்ளார்கள் என்பதை பார்த்தால் இன்னும் அதிர்ச்சி கூடுகிறது. இந்த கடும் விலை உயர்வுக்கு முன்பாக தனது மாணவர்கள் அனைவருக்கும் ஒரு சுற்றறிக்கையினை அனுப்பியிருந்தது NIFT நிர்வாகம். எந்த மாணவராவது சமூக வலைத்தளங்களில் NIFT நிர்வாகத்தையோ அல்லது அதன் நடவடிக்கைகளையோ விமர்சனம் செய்தால் கடும் நடவடிக்கை பாயும் என்று கடுமையான மிரட்டல் தொனியில் இருந்தது அந்த அறிக்கை. எதற்காக இந்த திடீர் அறிக்கை என்று மாணவர்கள் குழம்பியிருந்த நிலையில் கட்டண உயர்வு என்ற பேரிடியை அவர்கள் தலையில் இறக்கியுள்ளது ஜவுளித் துறையின் கீழ் இயங்கும் NIFT நிர்வாகம்.
பெருந்தொற்று காலத்தில் வீட்டு உரிமையாளர்கள் குடியிருப்பவர்களிடம் வாடகை வாங்குவதை தள்ளிப்போட வேண்டும், தனியார் கல்வி நிறுவனங்கள் 40 சதவீதம் மட்டுமே கட்டணத்தை முதல் தவணையாக தங்களது மாணவர்களிடம் வாங்க வேண்டும் என்று வரிசையாக உபதேச மழை பொழிந்தது மத்திய அரசு. ஆனால் அதன் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் கல்வி நிறுவனமோ அசாத்தியமாக கட்டணத்தை உயர்த்தியதோடு மட்டுமில்லாமல் ஒரே தவணையில் முழு கட்டணத்தை செலுத்த சொல்லி உத்தரவு போடுகிறது. அரை சம்பளமும் கால் சம்பளமும் மட்டும் வாங்கி காலத்தை தள்ளும் நடுத்தர/கீழ் நடுத்தர வர்க்க குடும்பங்கள் இந்த அதிர்ச்சியை எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
இந்த கல்விக் கட்டண உயர்வை முன்மாதிரியாகக் கொண்டு இன்னும் யாரெல்லாம் கட்டணத்தை உயர்த்தப் போகிறார்கள் என்றுமே கூட தெரியவில்லை. அரசாங்கமே செய்யும் போது அதனைப் பின்பற்றி தனியார் கல்வி நிறுவனங்களும் இவ்வாறே செய்தால் ஆச்சரியப்பட எதுவுமில்லை. தேவன் வகுத்த விதி இது என்று நொந்து கொள்வதைத் தவிர வேறு வழிகள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
ரொம்ப நீட்டி முழக்குறாரு. அவனவன் படிச்சி பட்டம் வாங்கி வெளியே சென்றபிறகு தன்சம்பாத்தியததில் ஒருபகுதியை சமுதாயத்துக்கு தான் செலவிட போறாங்க. அதனால் இந்த சத்தியவான்கள் எந்த சிரமமும் இல்லாம படிக்கிறதுக்கு, குப்பனும் சுப்பனும் வரிப்பணம் அழுகனும். அடிப்படை கல்வி மட்டுமே அரசாஙகத்து பொறுப்பு. உயர்கல்வி அவனவன் சம்பாத்தியத்தில் படிக்கட்டும்.
திரு.சுப்பிரமணி,உங்கள் பொன்னான கருத்துக்களை பொதுவெளியில் பேசுங்கள். பாஜக நன்றாக வளரும். நிச்சயமாக உங்களைப் போன்றவர்களால் பாஜக அமோக வளர்ச்சி பெறும். சாதாரண மனிதனை எள்ளி நகையாடும் தங்களது மனித நேயம் வியப்பூட்டுகிறது. வாழ்க வளமுடன்.
ஜோசுவா பெனிடிக் அவர்களே, ஈறுகளை பேனாக்கி, பேர்களை பெருமாளாக்கி வியாபாரம் செய்யுங்கள். மருத்துவம் படிப்பவர்கள் கிராமபுறத்திறகு சென்று பணிபுரிய மறுக்கிறார்கள். IIT, IIM முதலான உயர்படிப்புகளை படித்தவர்கள் எளிதாக வெளிநாடுகளுக்கு சென்று செட்டிலாகி விடுகிறார்கள். சாமானயர்களின் வரிப்பணத்தில் படித்து இந்திய மக்களுக்கு பயன்படாமல் போவதை தடுக்க திட்டம் சொல்லுங்கள்.