முதல் பகுதி : https://sanjigai108.com/?p=4655
பிப்ரவரி 25 அன்று 58 வயதான அன்வர் காஸார் கொல்லப்பட்டான்.
பிப்ரவரி 25 காலை. 24 மணி நேரமாக, வடகிழக்கு டெல்லி கலவரங்களினால் எரிந்து கொண்டிருந்தது. கும்பல் ஒன்று ஒரு கிழவரை ஒரே அறை மட்டும் உள்ள அவருடைய வீட்டிலிருந்து வெளியே இழுத்து அடித்தது. அவரை துப்பாக்கியால் சுட்டு விட்டு, உடலை நெருப்பில் இட்டு விட்டுச் சென்றது.
போலீஸுக்கு அவருடைய கால் மட்டுமே கிடைத்தது.
அன்வர் காஸாருக்கு வயது 58. கலவரத்தின் மையமாக இருந்த ஷிவ் விஹாரிலுள்ள ப்ரேம் விஹார் காலனியில் அவர் வசித்து வந்த சந்திலிருந்த ஒரே முஸ்லிம் அவர்.
அன்வரின் தம்பி சலீம் – வயது 51. அடுத்த தெருவில் வசிக்கும் அவர், இந்தக் கொலைக்குச் சாட்சி. அவர் குடும்பத்திற்குப் புகலிடம் கொடுத்த ஹிந்துவான பக்கத்து வீட்டுக்காரரின் வீட்டு மொட்டை மாடியிலிருந்து கொலையைப் பார்த்திருக்கிறார்.
அன்வரைக் கொன்ற கும்பல், அவர் வீட்டையும், வண்டிகளையும் தீக்கிரையாக்கி விட்டுச் சென்றது.
பின்னர் இரவில், சலீமும் அவர் குடும்பத்தினரும் தங்கள் அடையாளங்களை மறைத்துக் கொண்டு, வடகிழக்கு டெல்லியிலுள்ள முஸ்தஃபாபாத் பகுதியிலுள்ள தெரிந்தவர் வீட்டிற்குத் தப்பிச் சென்றனர்.
குற்றம் நடந்த சில நாட்களுக்குப் பின், ஊடகங்களிடம் பேசிய சலீம், போலீஸுக்கு சில நபர்களின் பெயர்களைத் தெரிவித்ததாகக் கூறினார்.
இதைப் பற்றிய குற்றப் பத்திரிகை (காரவல் காவல் நிலையத்தில் FIR number 62/2020) பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியிலுள்ள ஒரு பழைய கேடிதான் அன்வரைக் கொன்றதாக அது தெரிவிக்கிறது.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் முதலில் இருப்பது லக்பத். அவன் பெயரில் இது வரை டெல்லி காவல் நிலையங்களில் மட்டும் ஆறு வழக்குகள் பதியப் பட்டுள்ளன. இரண்டு முறை சிறை சென்றுள்ள லக்பத்தின் வயது 23.
அன்வரை சுட, லக்பத் பயன் படுத்திய துப்பாக்கியை, பிரேம் விஹாரிலேயே வசித்து வரும் அவன் நண்பன் குல்தீப் கொடுத்துள்ளான்.
குற்றப்பத்திரிகையில், குற்றம் நிகழ்ந்ததற்குச் சில மணி நேரங்களுக்கு முன்னரே, ஒரு கிழவரிடமிருந்து அந்தத் துப்பாக்கி தனக்குக் கிடைத்ததாக குல்தீப் வாக்குமூலம் கொடுத்துள்ளான். கொடுக்கும் போது அந்தக் கிழவர், தனக்கு வயதாகி விட்டதால், தான் துப்பாக்கியைப் பயன்படுத்த முடியாதென்றும், குல்தீப் அதைப் பயன்படுத்தி ஹிந்துக்களைக் காக்க வேண்டும் என்று சொன்னதாகக் கூறியுள்ளான்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள், முந்தைய நாளான பிப்ரவரி 24 அன்று, ஷிவ் விஹார் சந்தியிலுள்ள ராஜ்தானி பள்ளியிலிருந்து, முஸ்லிம் கும்பல்கள், ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், “முஸ்லிம்களுக்குப் பாடம் கற்பிக்க” வேண்டி அன்று மாலை, சந்திக்குச் சென்றதாகவும் போலீஸிடம் தெரிவித்துள்ளனர்.
ஆனால், ராஜ்தானி பள்ளி அருகே ஒரு இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்டதால், அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றதாகவும் தெரிவித்துள்ளனர். இது அனேகமாக, ராஹுல் சோலங்கியின் கொலையாக இருக்கலாம். (இதைப் பற்றி, சஞ்சிகையில் படிக்க).
“ப்ரேம் விஹாரில் உள்ள குற்றவாளி லக்பத், நிலைமையை தனக்குச் சாதகமாகப் பயன் படுத்திக் கொள்ள, குல்தீப்புடன் பிப்ரவரி 24 அன்று ஷிவ் விஹார் சந்திக்குச் சென்றான்” என்று குற்றப்பத்திரிகை கூறுகிறது.
அடுத்த நாள், பிப்ரவரி 25 அன்று காலை, ஏழு மணி அளவில், யோகேஷையும், குல்தீப்பையும் சந்தித்தான். மூவரும், புறப்பட்டனர்.
குல்தீப்பைப் போல, யோகேஷும் ஒரு துப்பாக்கி வைத்திருந்தான். சில மணி நேரங்களுக்கு முன்னரே, அது தனக்கு ஹனுமான் கோவில் சென்றபோது கிடைத்ததாக அவன் வாக்குமூலம் தெரிவிக்கிறது. இரண்டு கும்பல்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்த போது, துப்பாக்கி சாலையில் கிடந்ததாகக் கூறியுள்ளான். அதை எடுத்துத் தன் பையில் மறைத்து அங்கிருந்து கிளம்பியுள்ளான். குடியுரிமை சட்டத்திருத்திற்கு எதிரான போராட்டங்கள் தன்னை கோபமூட்டியதாக வாக்குமூலம் தந்துள்ளான்.
மூவரும் அன்வரை ஒரு கும்பல் அடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து, கும்பலுடன் சேர்ந்து கொண்டனர்.
யோகேஷ் தன் துப்பாக்கியை லக்பத்திடம் கொடுத்துள்ளான். அது சரியாக வேலை செய்யவில்லை. அடுத்து, குல்தீப் கொடுத்த துப்பாக்கி வேலை செய்துள்ளது. அன்வர் சரிந்தார்.
பின்னர் அந்தக் கும்பல், அன்வரின் உடலை தீயில் வீசியதாக லக்பத் தெரிவித்தான்.
யோகேஷ் தன் ஒன்றுவிட்ட சகோதரனான லக்பத், “கிரிமினல் போன்ற ஆசாமி” என்று போலீஸிடம் சொல்லியுள்ளான். முந்தைய நாளை வீட்டிலேயே கழித்ததாகவும், மாலையில், பள்ளியில் சிக்கிக் கொண்ட தன் ஒன்று விட்ட சகோதரியை அழைத்து வர வெளியே சென்றதாகவும் கூறியுள்ளான். அப்போது கலவரம் பல சாலைகளுக்குப் பரவியிருந்தது. டெல்லி பல்கலைக் கழகத்தில் பி.காம் பட்டம் பெற்ற யோகேஷ், பிப்ரவரி, 24ம் தேதி இரவு முழுதும், ஊழியர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்காக படித்துக் கொண்டிருந்தான்.
அன்வரை சுட்டபிறகு, மற்ற முஸ்லீம்களைத் தாக்கப் புறப்பட்டது. ஹிந்து ஒருவருக்குச் சொந்தமான கட்டிடத்தில், முதல் தளத்தில் ஒரு முஸ்லிம் குளிர்பதன சாதன ரிப்பேர் கடை வைத்துள்ளார். அங்கு சென்ற மூவர் அணி, சேர்ந்திருந்த கும்பலிடம், கடைக்குத் தீ வைக்குமாறு தூண்டியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
லக்பத், யோகேஷ், குல்தீப் தவிர, போலீஸ் மேலும் லலித், மற்றொரு குல்தீப் ஆகியோர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
“ஹிந்துக்களை இரக்கமின்றி கொன்றதற்காகவும், அவர்கள் உடைமைகளை அழித்ததற்கும்” பழி வாங்க, ஷிவ் விஹார், 33 அடி சாலையிலுள்ள முஸ்லிம்கள் மீதான தாக்குதலை, லக்பத் தலைமை ஏற்று நடத்தியதாக போலீஸின் குற்றப்பத்திரிகை கூறுகிறது.
19 வயதான லலித், ஒரு பரிசோதனை நிலையத்தில் உதவியாளராக வேலை செய்கிறான். முஸ்லிம்களைப் பழி வாங்க, அவனும் அவன் நண்பர்களும் அன்வரின் வீட்டை எரித்தாலும், அன்வர் வயதானவர் என்பதால் அவரைக் கொல்லவில்லை என்று தெரிவித்துள்ளான். எனினும், அன்வர் அவர்களைத் திட்டியதால், அவரை தடியால் அடித்துள்ளான்.
அதற்குப் பிறகு, லலித் இரண்டாவது குல்தீப் மற்றும், சாட்டு என்ற நண்பனுடன், அன்வரின் சகோதரர் சலீம் வீட்டிற்குச் சென்றுள்ளனர். அவர் வீட்டில் தொலைக்காட்சி, ஃபிர்ட்ஜை உடைத்த பிறகு, அவர் காருக்கும் தீ வைத்தனர்.
லலித்தின் வாக்குமூலத்தின் படி, அதன்பின், லக்பத் கூட்டமும், லலித் கூட்டமும் வெவ்வேறு திசைகளில் சென்றனர். லலித், ப்ரேம் விஹாரில் மற்றொரு சந்தில் வசித்து வரும் அல்டாஃப் என்பவரின் வீட்டிற்குச் சென்றுள்ளான். அது பூட்டப் பட்டிருந்தது. பூட்டை உடைத்து உள்ளே சென்ற கூட்டம், வீட்டில் இருந்த எலக்ட்ரானிக் பொருட்களையும் ஃபிரிஜ்ஜையும் உடைத்த பிறகு, வெளியே நிறுத்தப் பட்டிருந்த இரண்டு மோட்டர் சைக்கிள்களையும் எரித்தனர்.
மே 27 அன்று, அன்வரின் சகோதரன் சலீம் விசாரணைக் குழுவிடம் ஒரு விவரமான வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதன் படி, பிப்ரவரி 25 அன்று அதிகாலையில், சந்தீப் பண்டிட் என்ற அவர் பக்கத்து வீட்டுக்காரர் ஐந்தாறு பேருடன், சலீமின் நலமறியவும், நம்பிக்கை தரவும். வந்துள்ளார். சலீம் வீட்டிற்கு வெளியே சில நாற்காலிகளைப் போட, அவற்றில் அமர்ந்து சிறிது நேரம் பேசி விட்டுச் சென்றுள்ளனர்.
முந்தைய நாள், கலவரம் வெடித்த போது தான் மிகவும் கவலைப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 25 அன்று, சந்தீப் பண்டிட்டும் நண்பர்களும் சென்ற பின், சலீம் தன் சகோதரன் வீட்டிற்கு, ஆட்டுப் பால் வாங்கச் சென்றிருக்கிறார். அன்வர் ஆடு வளர்த்து வருவது உண்டு. (கும்பல், அவர் கடைக்குத் தீ வைக்கும் முன், ஆடுகளை வெளியேற்றியுள்ளது.)
சலீம் வீடு திரும்பி, பாலிட்டு தேனீர் அருந்தியுள்ளார். சிறிது நேரம் கழித்து, வெளியே ஒரு கும்பல் அவருடைய காரின் கண்ணாடியை உடைப்பதைப் பார்த்து, அவசர அவசரமாகக் குடும்பத்துடன், பக்கத்து வீட்டான் அபிஷேக்கின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கிருந்து, தன் சகோதரன் கலவரக்காரர்களால் கொல்லப்படுவதைப் பார்த்துள்ளார்.
பின்னர் அவர் வீடும், வாகனங்களும் கலவரக்காரர்களால் சேதப் படுத்தப் பட்டதை அறிந்தார். கலவரக்காரர்கள் சலீம் எங்கே என்று கேட்டுள்ளனர். அக்கம்பக்கத்தினர், அவர் அங்கிருந்து தப்பி விட்டதாகக் கூறியுள்ளனர்.
சலீம், அபிஷேக் வீட்டில் மேலும் 12 மணி நேரம் இருந்தபின், முஸ்தஃபாபாத் சென்றுள்ளார்.
மொழிப்பெயர்ப்பு: ஸ்ரீதர் திருச்செந்துரை
Swarajya: https://swarajyamag.com/politics/delhi-riots-inside-the-chargesheet-in-the-murder-of-anwar-kassar