ராஜஸ்தானில் நடக்கும் துவந்த யுத்தம்.
ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அஷோக் கெலாட்டுக்கும், முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையே நடக்கும் அதிகார யுத்தம் பற்றிய *ஒரு அலசல்.* இது காங்கிரசின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகும் ஒன்றாக இருக்கவும் கூடும்.
ராஜஸ்தான் ஆளுங்கட்சியில் இதோ அதோ என்று எதிர்பார்த்த மோதல் கடைசியில் வெடித்தே விட்டது.
கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் பெற்ற படுதோல்வி, அக்கட்சியில் தலைமை வகித்த ராகுல் காந்தியை சலிப்படைய வைத்து அவர் தலைமைப் பதவியை ராஜினாமா செய்தார்.
அதன் பின்விளைவுகள் ஆங்காங்கே தென்பட ஆரம்பித்தன. இளம் தலைவர்களான ஜ்யோதிர் ஆதித்ய சிந்தியா(ம.பி.) சச்சின் பைலட் (ராஜஸ்தான்) போன்றோரை மாநில காங்கிரஸ் அரசியலை ஆக்கிரமிப்பு செய்து வைத்திருக்கும் பழம் பெருச்சாளிகளான கமல்நாத் மற்றும் அசோக் கெலாட் போன்றவர்கள் உதாசீனப்படுத்தி ஓரம் கட்ட ஆரம்பித்தனர்.
உண்மையில் அந்த இருமாநிலங்களிலும் நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் ஆளுங்கட்சியான பாஜகவை தோற்கடித்து காங்கிரசை ஆட்சிப் பொறுப்புக்கு கொண்டு வருவதில் சிந்தியாவும், பைலட்டும் மிகப் பெரிய அளவில் வேலை செய்திருந்தார்கள். உண்மையில் அவர்கள் இருவருக்கும் தான் மாநில முதல்வர் பதவிகள் சென்றிருக்க வேண்டும். ஆனால், அங்கே அரசியல் செய்து கொண்டிருந்த சீனியர் காங்கிரஸ் பெருச்சாளிகளான கமல் நாத், அசோக் கெலாட் போன்றவர்கள் டெல்லியில் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி முதல்வராகி விட்டனர்.
இது இளம் தலைவர்களை கொதிக்கச் செய்தாலும், எதிர்வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டு உட்கட்சி பூசலை உருவாக்காமல் அமைதி காத்தனர். ராஜஸ்தானில் சச்சின் பைலட்டுக்கு துணை முதல்வர் பதவியும், மாநிலக் கட்சி தலைவர் பொறுப்பும் தரப்பட்டு சமாதானம் செய்யப்பட்டார். ஆனால் மத்தியப் பிரதேசத்தில் சிந்தியாவுக்கு அரசில் எந்த பதவியும் தரப்படவில்லை. முதல்வர் பதவியை எதிர்பார்த்திருந்த சிந்தியா வேறு எந்த பதவியும் வேண்டாமென்று மறுத்துவிட்டார்.
நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டி நேர்ந்தது. அந்த சமயத்தில் இருந்து இருமாநிலங்களிலும் மூத்த தலைவர்களுக்கும், இளம் தலைவர்களுக்கும் இடையே உரசல்கள் அதிகமாக தொடங்கின.
பின்னர் கடந்த மார்ச் மாதம் மத்திய பிரதேசத்தில் கமல்நாத் ஆட்சி கவிழ்ந்தது. ஆட்சிக் கவிழ்ப்பில் மிக முக்கிய பங்கை சிந்தியா ஆற்றினார். கட்சியில் இருந்து தனது ஆதரவாளர்களுடன் வெளியேறி பாஜகவில் இணைந்து மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுஹான் தலைமையிலான பாஜக ஆட்சி உருவாக உதவினார். அதற்கு பிரதி உபகாரமாக அவருக்கு ராஜ்ய சபா உறுப்பினர் பதவி தரப்பட்டது.
இவ்வாறாக ம.பி.யில் காங்கிரஸ் அரசியல் கடந்த மார்ச் மாதம் முடிவுக்கு வந்த பின்னர், அரசியல் நோக்கர்களின் பார்வை ராஜஸ்தான் மீது திரும்பியது.
அதற்கு தகுந்த காரணங்கள் இல்லாமல் இல்லை.
ராகுல் காந்தி கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து விலகிய பின்னர் ராஜஸ்தானின் பழம் தின்று கொட்டை போட்ட காங்கிரசின் சீனியர் அரசியல்வாதி அசோக் கெலோட்டும், அவரது விசுவாசிகளும் சச்சின் பைலட்டை ஓரம் கட்ட ஆரம்பித்தார்கள்.
மத்திய பிரதேசத்தை தொடர்ந்து நிச்சயம் அதே பாணியில் ராஜஸ்தானிலும் அரசியல் மாற்றங்கள் நடைபெறும் என்று எல்லோரும் காத்துக் கொண்டிருந்த வேளையில் இப்போது அது நடந்தே விட்டது.
சச்சின் பைலட் தனது ஆதரவாளர்களுடன் போர்க்கொடி உயர்த்தினார். அவரது கோரிக்கை முதல்வர் பதவி மட்டுமே. வேறெந்த சமாதானத்துக்கும் அவர் தயாராக இல்லை. கட்சியில் எல்லாத் தரப்புகளில் இருந்தும் அவரை சமாதானம் செய்ய முயன்றது தோல்வியில் முடிந்தது.
பாஜக தான் பின்னணியில் இருந்து கொண்டு சச்சின் பைலட்டை, இயக்குவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. ஆனால் இது மத்தியப்பிரதேசம் போலவே காங்கிரசுக்குள் எழுந்த உள்கட்சிப் பூசல், எங்களுக்கு இதில் தொடர்பு இல்லை என்று பாஜக கூறியது.
கடந்த சில நாட்களில் நடந்த நாடகம் கடைசியில் மாநிலக் காங்கிரஸ் தலைமை ஒரு வழியாக சச்சின் பைலட்டை அரசு, மற்றும் கட்சிப் பதவியில் இருந்து விலக்கியதோடு தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.
ஆனால் இது முடிவல்ல; ஆரம்பம் தான் என்பதை இனிமேல் நடக்கவிருக்கும் நிகழ்வுகள் கூறவுள்ளன.
சச்சின் ‘தான் பாஜகவில் இணையப் போவதில்லை. காங்கிரசில் தான் இருக்கிறேன்’ என்கிறார். மாநில காங்கிரசோ சச்சின் பைலட் ‘சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு எங்களுடன் பேச வந்தால் கட்சியில் மீண்டும் இணைத்து கொள்வது பற்றி யோசிக்கலாம்’ என்கிறது. இதற்கிடையே சபாநாயகர் இவருக்கும், இவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சச்சின் பைலட்டும் அவரது ஆதரவாளர்களும் சபாநாயகரின் நடவடிக்கையை எதிர்த்து உயர்நீதி மன்றத்தை அணுகியுள்ளனர்.
இதற்கிடையில், சச்சின் பைலட் ஒரு மீடியா நேர்காணலில் மனம் திறந்துள்ளார்:
என்னதான் நடந்தது?
‘ராஜஸ்தானின் வளர்ச்சிக்காக வேலை செய்ய என்னை முதல்வர் அனுமதிக்கவில்லை’ என்று குற்றம் சாட்டிய அவர், ராகுல் காந்தி கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகிய உடனேயே, அசோக் கெலோட் மற்றும் அவரது விசுவாசிகள் ஒன்று சேர்ந்து தம்மை அலட்சியம் செய்து தூக்கி எறிந்ததாகக் கூறினார். இதனைத் தொடர்ந்து தன்னுடைய சுயமரியாதையைப் பாதுகாப்பதற்காக கடந்த ஒரு வருட காலமாக நான் கட்சிக்குள் போராட வேண்டியிருந்தது.’ என்றார் பைலட்.
முதல்வருடனான தனது கருத்து வேறுபாடுகள் குறித்து மேலும் கூறுகையில், “நான் அவர் மீது கோபப்படவில்லை. நான் எந்த சிறப்பு அதிகாரத்தையும் சலுகையையும் கோரவில்லை. நான் விரும்பியதெல்லாம், ராஜஸ்தானில் தேர்தலுக்கு முன்னதாக கட்சி சார்பில் நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முயன்றது தான்.”
“அவர் [அசோக் கெலோட்] என்னையும் எனது ஆதரவாளர்களையும் ராஜஸ்தானின் வளர்ச்சிக்காக உழைக்க அனுமதிக்கவில்லை. எனது உத்தரவுகளைப் பின்பற்ற வேண்டாம் என்று அதிகாரிகளிடம் கூறப்பட்டது. கோப்புகள் எனக்கு அனுப்பப்படவில்லை. அமைச்சரவைக் கூட்டங்கள் மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற கட்சிக் கூட்டங்கள் பல மாதங்களாக நடத்தப்படவில்லை. மக்களுக்கு நான் உறுதி கூறியிருந்த கடமைகளை நிறைவேற்ற என்னை அனுமதிக்கவில்லை என்றால் அப்புறம் அந்தப் பதவியின் மதிப்புதான் என்ன? ” என்று சச்சின் பைலட் கேட்டார்.
‘நான் பலமுறை பிரச்சினைகளை எழுப்பினேன். நான் ராஜஸ்தான் மற்றும் அகில இந்திய தலைமையில் உள்ள பிற மூத்த தலைவர்களின் கவனத்துக்கு இவற்றைக் கொண்டு சென்றேன். ஆனால், நான் கேட்டுக் கொண்டது போல அமைச்சர்கள் அல்லது சட்டமன்ற உறுப்பினர்களிடையே எந்தவொரு சந்திப்பும் ஏற்பாடு செய்யப்படவில்லை. இதனால் பிரச்சினைகள் குறித்த எந்த ஒரு விவாதத்திற்கும் இடமில்லாமல் போனது.’ என்கிறார் பைலட்.
பாஜக இந்த கிளர்ச்சியின் பின்னணியில் உள்ளதா?
“இந்த குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை. ராஜஸ்தானில் காங்கிரஸை வென்றெடுக்க நான் கடுமையாக உழைத்தேன். நான் எனது சொந்த கட்சிக்கு எதிராக செயல்படுவேனா என்ன? ”
சச்சின் பைலட்: பாஜகவில் இணைவது பற்றி:
பாஜகவுடன் இணைந்து பணியாற்றுகிறார் என்ற காங்கிரஸ் குற்றச்சாட்டினை மறுத்த சச்சின் பைலட், “ஐந்து ஆண்டுகளாக, நான் பாஜகவுடன் போராடுவதில் கடுமையாக உழைத்தேன். ராஜஸ்தான் காங்கிரஸின் ஒரு பகுதியாக நான் இருந்து, பாஜகவை ஆட்சியில் இருந்து வெளியேற்றவும், காங்கிரஸ் அரசாங்கத்தை திரும்பக் கொண்டு வரவும் பணியாற்றினேன். யாராவது அரசியல் சார்பாக சில கருத்துக்களைக் கூறினால், அதை வைத்து நான் அவர்களுடன் சேருவேன் என்று கூற முடியாது. ”
அப்போது நீங்கள் பாஜகவில் இணையப் போவதில்லையா?
“நான் பாஜகவில் சேர்கிறேன் என்று சொல்பவர்கள் எனது பிம்பத்தை கெடுக்க முயற்சிக்கின்றனர். ஆத்திரமூட்டல்கள், மற்றும் பதவி நீக்கம் போன்றவைக்கு பிறகும், நான் கட்சிக்கு எதிராக ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை, ”என்று சச்சின் பைலட் கூறினார்.
நேர்காணலில் இவரது சிந்தனை வெளிப்பாடுகள் இப்படி இருக்க. சச்சின் பைலட் அதிரடியாகப் பதவி நீக்கம் செய்யப்பட்டார். கடந்த செவ்வாயன்று மாநில காங்கிரஸ் சச்சின் பைலட் மீது ஒரு துல்லியத் தாக்குதலை நடத்தியது.
அவரை ராஜஸ்தானின் துணை முதலமைச்சர் மற்றும் கட்சியின் மாநில பிரிவு தலைவர் பதவிகளில் இருந்து நீக்கிய கையோடு மாநில அமைச்சரவையில் இருந்த அவரது இரண்டு விசுவாசிகளையும் (அமைச்சர்கள் விஸ்வேந்திர சிங் மற்றும் ரமேஷ் மீனா) காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியின் கூட்டத்திற்குப் பிறகு அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டனர்.
ஆக, 2018 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அசோக் கெஹ்லாட்டை காங்கிரஸ் முதல்வராகத் தேர்ந்தெடுத்ததில் இருந்து பைலட் வருத்தமடைந்துள்ளார். இதுவரையில், காங்கிரசின் அகில இந்திய தலைமை இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு எதையும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முடிவெடுப்புக்களில் மாநில காங்கிரசின் கை ஓங்கியிருப்பதாக ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் காட்டுகின்றன.
அதே சமயம் கட்சியில் உள்ள இளம் தலைவர்கள் சச்சின் பைலட்டுக்கு நேர்ந்த இந்த கதியைப் பார்த்து அதிர்ந்து போயுள்ளனர்.
எதிர்வரும் நாட்களில் சச்சின் பைலட்டுக்கு மாநில கட்சியினர் மற்றும் ஏனைய சட்டமன்ற உறுப்பினர்களிடம் இருந்து ஆதரவு பெருகி வரும் பட்சத்தில் சச்சின் பைலட்டின் கை ஓங்கலாம்.
அதுவரை காத்திருக்கலாம் என்று சச்சின் பைலட் முடிவெடுத்திருக்கிறார் என்று தோன்றுகிறது.
மத்தியப் பிரதேச அரசியலில் ஜ்யோதிர் ஆதித்ய சிந்தியா அரசு/கட்சி பதவிகளை வகிக்கவில்லை. இருந்தும் அவருக்குப் பின்னே பலர் அணி திரண்டனர்.
ராஜஸ்தானில் கட்சித் தலைவராகவும், ஆட்சியில் துணை முதல்வராகவும் பதவியில் இருந்த சச்சின் பைலட் பெரிய அளவில் ஆதரவை திரட்ட முடியாமல் போனது அரசியில் நோக்கர்களிடையே வியப்பை உண்டு பண்ணியுள்ளது. முதல் ரவுண்டில் அசோக் கெலாட் வெற்றி பெற்றுள்ளார். ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பு, மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் பதவி நீக்கம் தொடர்பான வழக்கு போன்றவற்றில் யார் பக்கம் காற்று வீசும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
இறுதியாக, சச்சின் பைலட் முன்வைத்த குற்றச்சாட்டுகளை வைத்து பார்க்கும் போது பதவிக்காலத்தில் ஒரு முதல்வர் தனது துணை முதவரிடம் நடந்து கொண்டிருக்கும் விதம் அரசியலமைப்புக்கு முரணான ஒன்றாக உள்ளது.
இது நிச்சயமாக, இந்திரா காந்தி காலத்திலிருந்தே, நடந்து வந்த அரசபரம்பரை ஆட்சி முறை தான். அந்தப் பாரம்பர்யம் மாநில முதலமைச்சர்களாக டம்மிகளை மட்டுமே நாடியது. ஒரு முதல்வர் தனது செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு தனது மாநிலத்தில் சொந்த ஆதரவு தளத்தை வளர்த்துக் கொள்வதை இந்திரா காந்தி ஒருவித பயத்துடன் தான் எதிர்கொண்டார். தன்னை மீறிய தலைவர்களை வளர அனுமதிப்பது தனது மேலாதிக்கத்தையும், கட்சி மீது ஆதிக்கம் செலுத்தும் தன்மையை நீர்த்துப் போகச் செய்துவிடும் என்ற அச்சம் அவருக்கு எப்போதும் இருந்தது. இதன் விளைவாக அவரது காலத்தில் காங்கிரசில் நிரந்தர உள் கட்சி சண்டைகள் ஏற்பட்டன. கட்சியினர் போட்டி போட்டுக் கொண்டு தங்களது தனிப்பட்ட குறைகளை தெரிவிக்க டெல்லியில் உள்ள மேலிட அதிகார மையத்தை நோக்கி அவர்களது கட்டளையை எதிர்பார்த்து விரைந்தனர். கட்சிக்குள் பல அணிகள் உருவாகி அது காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் நிர்வாகத்தில் முட்டுக்கட்டை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, காங்கிரஸ் ஆட்சி செய்த மாநிலங்களில் ஏழைகள் தொடர்ந்து முடிவில்லாமல் அவதிப்பட்டனர்.
முடிவாக, காங்கிரஸ் இத்தனை தோல்விகளை சந்தித்தும் தனது ஊசிப்போன, கவைக்குதவாத, பழைய காலாவதியான அணுகுமுறைகளை மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை என்று தெரிகிறது. காங்கிரஸ் கலாச்சாரம் பழைய காலத்து ஜமீன்தாரர் கலாச்சாரத்தை அடிப்படையாக கொண்டது. கொத்தடிமை முறையை பின்பற்றிய காலத்தை சேர்ந்தது. இப்போது அரசியிலில் ஈடுபடும் இளைய தலைமுறை அரசியல்வாதிகள் சுதந்திரமான சிந்தனை உடையவர்கள். நேரு, இந்திரா காலத்திய அணுகுமுறைகளையே சோனியாவும் மேற்கொண்டார். அவரைச் சுற்றி ஜால்ராக்கள் இயங்கவும் குறிப்பிட்ட குழுவினரின் முடிவுகளை அனைவரையும் ஏற்றுக் கொள்ளச் செய்யவேண்டும் என்பதே அங்கே சட்டவிதிகளாக இருந்தன. இப்போதும் இருக்கின்றன.
ராஜீவ் காந்தி ஒருவேளை கொலையாகாமல் அரசியலில் தொடர்ந்திருந்தால் கட்சி அமைப்பில் கொஞ்சமாவது மாற்றங்களை கொண்டு வந்திருப்பார். ஆனால் அவர் முதலில் ஆட்சியில் இருந்த ராஜீவாக இல்லாமல் பின்னாளில் சர்வதேச மாஃபியாக்களின் பிடியில் சிக்கிக் கொண்டுவிட்டார். அதனைத் தொடர்ந்து நடந்த சம்பவங்கள் மத்தியில் நிலையற்ற ஆட்சிகளைக் கொண்டுவர வேண்டியதாயிற்று.
இந்திராவின் காலத்தில் தான் மாநிலக் கட்சிகள் பலம் பெற்றன. அந்த கட்சிகளை உருவாக்கியவர்கள் அனைவருமே ஒரு காலத்தில் காங்கிரசில் இருந்தவர்கள் தான். தலைமையின் அடக்குமுறை சர்வாதிகாரத்தை எதிர்த்தே அவர்கள் மாநிலக் கட்சிகளை தொடங்கினார்கள்.
காங்கிரஸ் மீண்டும் ஆட்சியில் அமரவேண்டும் என்கிற ஆசையில் தம்மிடமிருந்து பிரிந்து சென்றவர்களுடன் கூட்டணி அமைத்து ‘மத்தியில் நாங்கள், மாநிலத்தில் நீங்கள்‘ என்கிற ஒரு ஃபார்முலாவைச் செயல்படுத்தியது. காங்கிரஸ் அதிகாரத்தில் நீடிக்க வேண்டி, அமைத்துக் கொண்ட கூட்டணிக்காக மாபெரும் ஊழல்கள் நடைபெற அனுமதித்ததை நாம் யுபிஏ2 ஆட்சிக் காலத்தில் பார்த்தோம்.
நாட்டு மக்கள் இப்போது மிகவும் தெளிவு பெற்றுவிட்டார்கள். அதனால் தான் காங்கிரசை மத்தியில் இரண்டாவது முறையும் நிராகரித்தார்கள். இப்போது தாங்கள் ஆட்சியில் இருக்கும் மாநில அரசியலை காங்கிரஸ் தனது தவறான அணுகுமுறைகளால் கெடுத்துக் குட்டிச் சுவராக்கிக் கொண்டிருக்கிறது. அதன் மூலம் ஒவ்வொரு மாநிலத்திலும் தனது ஆட்சியை ஒன்றன்பின் ஒன்றாக இழந்து கொண்டே வருகிறது.
தனது பழைய தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளாத வரை காங்கிரசுக்கு சரியான எதிர்காலம் இல்லை என்று தான் தோன்றுகிறது. பரம்பரை ஆட்சி முறையில் இருந்து ஜனநாயக அணுகுமுறைக்குத் திரும்பாமல் போனால் காங்கிரஸ் கட்சி சில நாட்களுக்கு பின்னர் வரலாற்றுப் புத்தகங்களில் தான் காணக் கிடைக்கும்.
காங்கிரஸ் பரம்பரைக் குடும்பத் தலைமையில் நாட்டம் கொண்ட பழம் பெருச்சாளிகளின் பிடியில் சிக்கி சீரழியுமா? அல்லது சச்சின் பைலட், சஞ்சய் ஜா, சசி தரூர், ப்ரியா தத் போன்ற புதிய தலைமுறையின் தலைமையில் பாஜகவுக்கு மாற்றான ஒரு வலிமையான எதிர்க்கட்சியாக மாறுமா? என்கிற கேள்விக்கான விடையில் தான் கட்சியின் தலைவிதி ஊசலாடிக் கொண்டிருக்கிறது.
காங்கிரஸ் புத்துணர்வு பெற வேண்டாம். முடியட்டும்.