“லெஃப்ட் இண்டிகேட்டர் போட்டு ரைட்ல கை காட்டி நேரா போகற சென்னை ஆட்டோ மாதிரி” – பாஜக ஆதரவாளர்கள் எல்லாரும் ஆஹா ஓஹோ என்று பாராட்டி மகிழும் பொருளாதார வளர்ச்சியை தூண்டுவதற்கென்று வந்துள்ள ” 20 லட்சம் கோடி ” அறிவிப்பு பற்றி ஆடிட்டர் எம்.ஆர்.வெங்கடேஷ் தெரிவித்துள்ள கருத்துக்களின் அடிப்படையில் ஓர் அலசல் தான் இந்த கட்டுரை. பாஜக அனுதாபிகள் மற்றும் ஆதரவாளர்களுக்கு கசப்பாக இருந்தாலும் உண்மை என்னவோ இதுதான். இதே M.R.வெங்கடேஷ் தான் “A Decade of Decay” என்ற தனது நூலில் மன்மோகன் சிங் அரசை நார்நாராக கிழித்து தொங்க விட்டார். அப்போது இனித்தது, அவரை கொண்டாடி மகிழ்ந்தனர். என்ன செய்ய பாவம், MRV மனசாட்சியுள்ள மனிதர், உண்மை நிலையை எடுத்துரைத்துள்ளார்.
பணமதிப்பிழப்பின் போது நீண்ட வரிசையில் பொதுமக்கள் நின்று வாடி இறந்து போனதைக் கூட முட்டுக் கொடுத்தவர்களை கணக்கில்லாமல் பார்த்தோம். இதற்கு ஒரே விதிவிலக்கு, அதுவும் எப்போதாவது மட்டுமே என்றால் அது அந்த கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி தான். மோடியின் சில கொள்கைகளை கடுமையாக விமர்சிக்க தயங்கியதே இல்லை . 20 லட்சம் கோடி வாய்ப் பந்தல் ஜூம்லாக்களை பிரித்து மேய்ந்துள்ளார் பாஜக எம்.பி.யும் பொருளாதார நிபுணருமான சுப்பிரமணியன் சுவாமி.
சாமியின் கருத்துக்கள், மிகவும் சுருக்கமாக.
கோரோனா வைரஸ் பரவுவதற்கு முன்பிருந்தே நாட்டின் பொருளாதாரம் தள்ளாட்டத்தில் இருந்து வருகிறது. கடந்த 4 வருடங்களாக ஒவ்வொரு முறை பட்ஜெட் வரும்போதும் நாட்டின் பொருளாதாரத்தில் நிலவும் பிரச்சினைகளை சுட்டிக்காட்டி பத்திரிகைகளில் Op ed எழுதி வருகிறார். ஆனால் அரசாங்கம் தான் அக்கறை காட்டவேயில்லை. கோரோனா வைரஸ் தாக்குதல் தொடங்கிய நேரத்திலேயே நமது பொருளாதார வளர்ச்சி வெறும் 4 சதவீதமாக சுருங்கியிருந்தது. அள்ளித் தெளித்த அலங்கோலமாக நடந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை, அதனைத் தொடர்ந்து ஜிஎஸ்டி, நடுத்தர மக்களை இம்சைக்கு உண்டாக்கும் வருமான வரித்துறை நடவடிக்கைகள் என தவறு மேல் தவறாக இந்த அரசு தொடர்ந்து செய்து நாட்டின் பொருளாதாரத்தை ஆட்டம் காணச் செய்துள்ளது. (சுவாமியின் புகழ்பெற்ற வாக்கியம் – “இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய முட்டாள்தனம் ஜிஎஸ்டி தான்”).
தங்கள் முன் இருக்கும் பிரச்சினைகள் என்னவென்று இந்த அரசுக்கு தெரியுமா என்றே தெரியவில்லை. இப்போது இருக்கும் பிரச்சினை பொருட்களின் உற்பத்தி குறித்தது அல்ல, ஆனால் அவற்றை வாங்கும் திறன் வாடிக்கையாளர்களுக்கு சுத்தமாக இல்லாமல் போனதைக் குறித்தது. ஆட்டோமொபைல் துறையை எடுத்துக்கொண்டால் ஏற்கனவே விற்காமல் தேங்கியுள்ள கார்கள் எக்கச்சக்கமாக டீலர்களின் ஷோரூம்களில் உறங்குகின்றன. அவற்றை வாங்கும் அளவிற்கு பொருளாதார வசதி வாடிக்கையாளர்களிடம் இல்லை. இப்போது நீங்கள் கார் தயாரிக்கும் கம்பெனிகளுக்கு உதவியளித்து அவர்கள் மேலும் புதிதாக உற்பத்தி செய்தால் அவற்றை வாங்குவதற்கு யாரிடம் பணம் இருக்கிறது? (ஏப்ரல் மாதம் முழுவதற்கும் சேர்த்து நாடு முழுவதிலும் ஒரு காரைக் கூட விற்கவில்லை மாருதி சூஸுகி மற்றும் மஹிந்தரா & மஹிந்தரா நிறுவனங்கள்.) இந்திய பொருளாதாரத்தை இயக்குவது வாடிக்கையாளர்கள் மட்டுமே. அவர்களது வாங்கும் திறனை அதிகரித்தால் தான் தேவை அதிகரிக்கும், அப்போது தான் உற்பத்தி அதிகரிக்க முடியும். இந்த அடிப்படையான விஷயங்களைக் கூட புரிந்து கொள்ள தவறி விட்டார்கள்.

ஏழைக்கு இரங்காத சர்க்கார்
அவர் ஏழைத் தாயின் மகன் தான். ஆனால் அவர் இரக்கம் கொள்வது என்னவோ கார்ப்பரேட்களுக்கும் அவர்களுக்கு வேண்டியவர்களுக்கும் தான். ஏதோ பெரிய நிறுவனம் வங்கியிடம் கடன் வாங்கும். கடன் என்றால் 5000, 10000 என்று நினைக்க கூடாது. அதெல்லாம் நம் போன்ற சாமானியர்கள் வாங்குவது. ஆயிரக்கணக்கான கோடிகள். சல்லி பைசா திருப்பி கட்டாமல் ஏமாற்றும். வருடக்கணக்கில் தாவா நடக்கும். பிறகு ஏதோ போனால் போகிறது என்று ஒரு ரூபாய் கடனுக்கு 40 காசு, 50 காசு கட்டுவார்கள். அப்போ மீதி பணம்? அவ்வளவு தான். போயே போச்சு. It’s gone. நான் சொல்வதில் நம்பிக்கை இல்லை என்றால் வங்கி விஷயம் அறிந்தவர்களை கேட்டுப் பாருங்கள். Haircut in loan recovery என்று ஆங்கிலத்தில் அருமையாக விளக்கம் தருவார்கள்.
இப்படி அக்கிரமம் செய்பவர்களுக்கு haircut மூலம் எத்தனையோ ஆயிரம் கோடிகள் தாரை வார்ப்பார்களாம். ஆனால் வெறும் காலில் கொளுத்தும் வெயிலில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் நடந்து சொந்த ஊருக்கு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பண உதவி செய்ய பணம் இருக்காதாம். எது எதற்கோ இத்தனை ஆயிரம் கோடி, அத்தனை ஆயிரம் கோடி என்று நீட்டி முழக்கி அறிவித்தீர்களே, இந்த அபலைகள் வங்கி கணக்கில் ஒரு 5000 ரூபாய்கள் போட்டால் என்ன கூடுதல் செலவு ஆகி விடும்? 5 கோடி நபர்கள் என்று மிக அதிகமாக கணக்கில் கொண்டால் கூட வெறும் 25000 கோடிகள் தானே? அது அவர்கள் ஜீவனத்திற்கு எவ்வளவு பெரிய உதவி. அதைக்கொண்டு அவன் அரிசி பருப்பு மளிகை சாமான் வாங்கினால் அதன் மூலமும் பொருளாதார பண சுழற்சி ஏற்படாதா? பெரிதாய் பெருமை பேசி தம்பட்டம் அடித்துக் கொள்ளும் வங்கிக் கணக்கில் நேரடி வரவு வைக்கும் முறை (DBT) இந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு செயல்படாதா?
(தொடர்வேன்)
ஜோசுவா பெனடிக்ட்டும் அதனை மொழிபெயர்த்துதருபவரும் விஸ்தாரமாக பேசி வாசிப்பவரின் மனநிலையை மோடிக்கு எதிராக திருப்ப பிரயத்தனம் செய்கிறார். MRV, Dr. SS Samy ஆகியோரை வீணாக துணைக்கழைக்கிறார். பாவம்! மோடிக்கு எதிரான மனநிலையை முதலில் உருவாக்கிவிட்டு, அதன்பின் தன்கருத்துகளை சொல்லும் உத்தியைக்கைவிட்டு நேரடியாக விஷயத்திற்கு வரலாமே!
திரு. சுப்பிரமணி அவர்களே, கட்டுரையில் கூறப்பட்ட ஒவ்வொரு விஷயத்திற்கும் முழுமையான ஆதாரங்கள் உள்ளன. உங்களது சார்புநிலைகள் அவற்றை ஏற்க மறுத்தால் ஒன்றும் செய்வதற்கில்லை.
என்ன ஆதாரங்கள் உள்ளன ? அதை ஒரு கட்டுரையாக தர இயலுமா ? ( வாட்ஸ் அப் / பேஸ்புக் ) பார்வெர்ட் மெசேஜ்களை ஆதாரமாக ஏற்றுக் கொள்ள இயலாது
திரு. சாதாரணன், கட்டுரையில் சொல்லப்பட்ட விவரங்கள் அனைத்துமே தொடர்புடைய நபர்களின் யூ ட்யூப் சேனல்கள் முதலான இடங்களில் இருந்து பெறப்பட்டவையே. மீண்டும் என்ன கட்டுரை எழுதுவது?
மாற்றுத் திட்டங்கள் என்று எதனை முன்வைக்கிறீர்கள் பெனடிக்ட்? யாரோ என்னவோ சொல்லி விட்டுப் போகட்டும், உங்கள் கருத்து என்ன? புலம்பெயர் தொழிலாளர்கள் நலனில் அக்கறைஇருப்பது போன்று மாய்மாலம் காட்டுகிறீர்களே, அதே புலம்பெயர் தொழிலாளர்களின் நலன்களுக்கு இந்த மத்திய அரசு அறிவித்துள்ள கணக்கற்ற நலத்திட்டங்கள் பற்றி கொஞ்சமாவது உங்களுக்கு தெரியுமா? எழுத்திலும் கருத்திலும் நேர்மை கொள்ள கேட்டுக் கொள்கிறேன்.
திரு. வெங்கட்ரமணன், கட்டுரை எழுப்பியுள்ள விஷயங்களை முடிந்தால் ஆதாரங்களுடன் மறுக்கவும். தேவையில்லாமல் திசை திருப்பும் முயற்சிகளை கைவிடவும்.
//உங்களது சார்புநிலைகள் அவற்றை ஏற்க மறுத்தால் ஒன்றும் செய்வதற்கில்லை.///
பாஜக ஆதரவாளர்கள் என்றும் கண்மூடித்தனமாக சப்போர்ட் தர மாட்டார்கள். இங்கு யார் சார்பு நிலை எடுக்கிறார்கள் என்பது வாசகர்களுக்கு நன்று புரியும். ஆசிரியர் குழுவிற்கு, ஆதாரமில்லாத கட்டுரைகளை பதிப்பிக்க வேண்டாம். இப்படிப்பட்ட கட்டுரைகளை போட்டுத்தான் சார்பின்மையை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை