நம்மில் பலருக்கு கிரெடிட் கார்டு ( கடன் அட்டை) வாங்கி பயன்படுத்த தயக்கம் உள்ளது. பலருக்கு அது இல்லை எனில். அன்றாட நாளே (நொடியே) நொடித்து விடும் ஆனால் அது அலாவுதீன் அற்புத விளக்கு தேய்த்தால் வரும் பூதம் போல். தேய்க்க, தேய்க்க ஒரு பூதம் உங்கள் முன் தோன்றும், நீங்கள் கட்டளையிட்டதை மட்டும் அது செய்யும்.
கட்டுப்பாடின்றி நீங்களே அதை பணித்தால் அது உங்களை ஆட்டுவிக்கும். அதை ஆட்டுவிக்கும் வித்தையை நீங்கள் பழக வேண்டும். யானை எப்படி அங்குசத்திற்கு அடங்குகிறது. யோசியுங்கள்.
இன்றைய சவாலான பொருளாதார ஏற்ற இறக்க சூழ்நிலையில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். அப்போது பிறரிடம் சென்று அவசரத்திற்கு கையேந்துவதை விட கிரெடிட் கார்டு உங்களை தற்காத்துக் கொள்ள உதவும்.
கிரெடிட் கார்டு பயன்பாட்டை நான் மூன்று விதமாக கையாளுவேன்.
1. ஒவ்வொரு அட்டையும் அதிகபட்சம் 45 நாள் வரை திரும்பச் செலுத்த அவகாசம் தந்து உங்களுக்கு கடன் வழங்கும். இதில் பில்லிங் ஆன பின், பணம் கட்ட வேண்டிய நாள் ஒரு பத்து நாள் இடைவெளியில் இருக்கும்.
இங்கு கவனிக்க வேண்டியது உங்கள் பில் நாள் 15ஆம் தேதி என்றால் அடுத்த பில் நாள் அடுத்த மாதம் 15. பணம் செலுத்த 25ஆம் தேதி வரை அவகாசம் கிடைக்கும். உங்கள் கார்டை 14ஆம் தேதி ஸ்வைப் செய்தால் 15ஆம் தேதி பில்லில் வரும். பத்து நாளில் பணம் கட்ட வேண்டும். 16ஆம் தேதி தேய்த்தால் அடுத்த மாதம் 25ஆம் தேதி பணம் கட்டலாம். 45 நாள் அவகாசம். இதை (ரிவால்விங் கிரெடிட்) முறையாக பயன்படுத்தினால் நல்ல இலாபம்.
ஒவ்வொரு தனி நபருக்கும் செலவு தேவை, நாள்கள் மாறும், அதற்கு ஏற்றாற் போல இந்த பில் போடும் தேதியை வங்கிக்கு அழைத்து நீங்கள் மாற்றி கொள்ளுங்கள்.
2. மாதாந்திர செலவுகளை மட்டும் இதில் தேய்க்க வேண்டும். உங்கள் மின் கட்டணம், பால், தொலைபேசி, இணைய சேவை, மளிகை, சிலிண்டர், பெட்ரோல் என அனைத்தும் இதில் செய்ய வேண்டும்.
இதற்கான நமது மாத பட்ஜெட் அளவைத் தாண்டி நாம் இதனை பயன்படுத்தக் கூடாது. இதனால் நமது அன்றாடச் செலவுகளை செய்ய வைத்திருக்கும் பணம் அதிகபட்சம் 45 நாள் வரை உங்கள் கைவசம் சுழல்வதற்கு கிடைக்கும். எதிர்பாராத மருத்துவ செலவு போன்றவை இதில் சேராது.
உங்கள் சேமிப்பு அதில் கிடைக்கும் உபரி வருமானம், உங்கள் கண்ணுக்குத் தெரியாது. லிக்விட் ஃபண்ட் எனும் பரஸ்பர நிதியில் உங்கள் பணத்தை முதலீடு செய்து வைத்து அன்றாட டிவிடெண்ட் வாங்கினால் உங்கள் பணம் எப்படி குட்டி போடும் என்று புரியும்.
3. உங்களது கிரெடிட் கார்டு தேய்க்கும் அளவுக்கு உங்களுக்கு பின்னணியில் பாயிண்ட் சிஸ்டம் மூலம் சில புள்ளிகளை சேர்த்துக் கொண்டே வருவார்கள். இதனை பணமாகவோ, பொருளாகவோ நீண்ட கால சேமிப்பின் அடிப்படையில் பெறலாம்.
இது மறைமுகமாக உங்கள் செலவு உங்களுக்கு சம்பாதித்துக் கொடுக்கும் கூடுதல் பணம். கேஷ்பேக் போல எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு வேளை தீபாவளி ஜவுளி, தங்க நகை, அதிக விலையுள்ள ஒரு வீட்டு உபயோக சாதனம் வாங்க இதனை பயன்படுத்துங்கள். !!!!
ஆச்சரியம் வேண்டாம். ஒரு சின்ன கண்டிஷன். ஒரு நிமிடம், இங்கு உங்களிடம் கைவசம் வங்கியில் ரொக்கம் இருந்தால் மட்டும் இதனை செய்யவும். கூடுதல் புள்ளிகள் இங்கு கிடைக்கும். ஓரிரு நாளில் பணத்தை சேமிப்பு கணக்கில் இருந்து பாக்கியை செலுத்தி நேர் செய்து விட வேண்டும்.
சிறப்பு வாய்ப்பு:
சில மாத கட்டண சேவைகள் சந்தாதாரர்களுக்கு சலுகை அளிப்பார்கள். உதாரணமாக எனது ACT Broadband. அதன் சேவையை ஆறு மாதமாக தேர்ந்தெடுத்து கட்டினால் ஒரு மாதம் இலவசம். கட்டணத்தில் 20% டிஸ்கவுண்ட்டும் உண்டு. இங்கு உங்கள் கிரெடிட் கார்டில் செலுத்தி அதனை 3/6/9/12 மாதத் தவணையாக மாற்றினால் எளிதாக மாதச் செலவை குறைக்கலாம். வட்டி 5% என்றாலும் 15% மிச்சம்.
எச்சரிக்கை:
சில கிரெடிட் கார்டுகள் எரிபொருள் நிலையங்களில் IOCL / HPCL / BPCL போன்ற ஏதாவது ஒன்றோடு மட்டுமே ஒப்பந்தம் செய்திருக்கும். அதை கவனித்து தேய்க்க வேண்டும். இல்லை என்றால் கூடுதலாக 0.5% செலவு செய்ய நேரிடும்.
காலம் தாழ்த்தி செலுத்தப்படும் கடன்களுக்கு ஆண்டு வட்டி 48%. நினைவில் இருக்கட்டும். முறையாக பூதத்தை ஆட்டுவிக்க வாழ்த்துகள்.