காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஏ.கே. அந்தோணியின் மகன் அனில் அந்தோணி, டில்லியில் பா.ஜ.,வில் இணைந்தார்.
கேரளாவை சேர்ந்தவரான ஏ.கே.அந்தோணியின் மகனான அனில் அந்தோணி, கடந்த சில நாட்களுக்கு முன்னர், பிரதமர் நரேந்திர மோடி குறித்த பிபிசியின் ஆவணப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ” பா.ஜ., உடன் பெரிய அளவிலான கருத்து வேறுபாடு இருந்தாலும், இந்தியாவுக்கு எதிரான, பாரபட்சத்துடன் செயல்படக்கூடிய, இங்கிலாந்து அரசின் ஆதரவைப் பெற்ற ஒரு சேனல் நரேந்திர மோடி குறித்த பார்வையை அப்படியே முன் வைப்பது நமது இறையாண்மையை குறைத்து மதிப்பிடுவதாகும்” எனக்கூறியிருந்தார்.
இது கேரள காங்கிரசில் சலசலப்பை ஏற்படுத்தியது. அனில் அந்தோணியை அக்கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர். இதனால், அனில் அந்தோணி கடந்த ஜனவரி மாதம் காங்கிரசில் இருந்து விலகினார். அது முதல் வேறு கட்சியில் சேராமல் இருந்து வந்தார்.
இந்நிலையில், டில்லியில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலகத்திற்கு சென்ற அனில் அந்தோணி, மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல் மற்றும் முரளிதரன் முன்னிலையில், அக்கட்சியில் இணைந்தார்.