அண்மை காலங்களில் வட மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்து தமிழகத்தில் தொழில் புரிபவர்கள் தங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்ற பீதியில் மாநிலத்தை விட்டு வெளியேறுவதாக செய்திகள் வந்தன.
அவர்கள் மாநிலத்தை விட்டு வெளியேறாமல் இருக்க அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக தமிழக அரசும் பலவித நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தன.வட மாநிலங்களில் இருந்து சில மாநில அரசு குழுக்களும் தமிழகம் வந்து அவர்கள் மாநில மக்களிடையே பேசி நிலைமையை அறிந்து கொண்டனர்.தற்போது நிலைமை சகஜ நிலைக்கு திரும்பி உள்ளதாக தெரிகிறது.
இத்தகைய நிலைமைக்கு -அதாவது, வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது ,நடத்தப்படும் என்கிற வதந்திகள் பரவிட -காரணமாக இருந்தவை தமிழகத்தில் உள்ள சில பிரிவினைவாத கட்சிகளே .இதில் மிக முக்கியமான பங்கு ஆளும் திமுக அரசுக்கும் இருக்கிறது.
பீடா வாயன்களும். திராவிட உபிஸ்களும்
இதுநாள் வரை வடக்கு மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்தவர்களை தமிழகத்தை சேர்ந்த பிரிவினைவாத கட்சி தொண்டர்கள் கேவலமாக பேசி வந்தனர்.பீடாவாயன் என்றும் பானி பூரி விற்பவர்கள் என்றும் அவர்களுக்கு வேறு எந்த தொழிலும் செய்ய தெரியாது எனவும் அவர்களை கேவலமாக பேசி வந்தனர். ஆளும் கட்சி அமைச்சர்கள் கூட பொது மேடைகளில் அவர்களை தரம் தாழ்த்தி பேசி வந்ததையும் நாம் கண்டிருக்கிறோம். மனிதநேயமற்ற இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடும் அளவிற்கு தமிழகத்தை தரம் தாழ்த்தியவர்கள் இங்கு உள்ள பிரிவினைவாத கட்சிகளே.
பரப்பப்படும் பீதி
வட மாநில தொழிலாளர்கள் இங்கே பெருமளவில் குடி பெயர்ந்து விட்டால் தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோகும் என்ற வதந்தியை இங்கு உள்ள பிரிவினைவாத கட்சிகள் கிளப்பிவிட்டன. அதன் அடிப்படையில் வடமாநில தொழிலாளர்களுக்கு எதிராக ஒரு தவறான கருத்து தமிழக இளைஞர்கள் இடையே திட்டமிட்டு பரப்பப்பட்டது.
வட மாநில தொழிலாளர்கள் இங்கு வந்து பெருமளவில் தங்குவதனால் மேலும் ஒரு பிரச்சனை ஏற்படக்கூடும் என இத்தகைய தேச விரோத பிரிவினைவாத கட்சிகள் பரப்பிவிட்ட விஷயம்,வடமாநில தொழிலாளர்களுக்கு வாக்குரிமை அளிப்பது என்பது ஆகும்.
அதாவது வட மாநிலத்திலிருந்து புலம்பெயர்ந்து வந்து இங்கு தொழில் புரிபவர்கள் இங்கேயே குடும்பத்துடன் தங்கி விட்டாலும் தற்போது வரை அவர்களுக்கு இங்கே வாக்குரிமை எதுவும் இல்லை தேர்தல் காலத்தில் அவர்கள் தங்கள் ஊருக்கு சென்று வாக்கு செலுத்தி விட்டு மீண்டும் தமிழகம் திரும்பி வந்து தங்கள் வேலையை தொடர்கின்றனர் .
அப்படி இல்லாமல் அவர்களுக்கு இங்கேயே வாக்குரிமை அளித்து விட்டால் அவர்கள் காங்கிரஸ் அல்லது பாஜகவுக்கு மட்டுமே ஓட்டு அளிப்பார்கள். அத்தகைய நிகழ்வுகளில் உள்ளூர் மக்களின் பிரதிநிதித்துவம் நீர்த்து போய் விடும் என்று தமிழகத்தில் உள்ள பிரிவினைவாத கட்சிகள் பீதியை தமிழக மக்களிடையே கிளப்பி விட்டுள்ளன.
அரசியல் நிர்ணய சட்டப்படி, இந்தியர்கள் எவரும் இந்தியாவில் எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் புலம்பெயர்ந்து தொழில் நடத்தலாம்; குடியேறலாம்; வாக்குரிமை செலுத்தலாம் என்ற உரிமை வழங்கப்பட்டுள்ளது.அப்படி இருக்க புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வாக்குரிமை அளிக்கக்கூடாது என்பதே சட்டப்படியாக சரியானது அல்ல.
என்ற போதிலும், தர்ம நியாயங்களின் அடிப்படையில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வாக்குரிமை அளிக்க வேண்டுமா என்பது பற்றி நாம் சிந்திப்போம்.
வாக்குரிமை என்பது அனைத்து குடிமக்களின் அடிப்படை உரிமை
வாக்குரிமை என்பது ஒரு இடத்தில் வசிக்கும் குடிமக்கள் தங்களுக்கு ஏற்ற வாழ்க்கையினையும் வாழ்வுக்கு ஆதாரமான அடிப்படை வசதிகளையும் பெற்றுக்கொள்ள தங்களது பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து சட்டசபைக்கும் பாராளுமன்றத்திற்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அனுப்புவதற்கு உள்ள உரிமை ஆகும்.
புலம்பெயர் தொழிலாளர்கள் இங்கே நிரந்தரமாக தங்கள் குடும்பத்துடன் குடியேறிய பிறகு அவர்களுக்கு தேவையான வசதிகளை பெற்றுக்கொள்ள அவர்கள் தங்களது சட்ட ரீதியான பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க அவர்களுக்கு முழு உரிமை உண்டு. அப்படி இருக்க அவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக்கூடாது என்பது எந்த விதத்தில் நியாயம்?
பிரிவினைவாத கட்சிகள் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வாக்குரிமை அளித்து விட்டால் உள்ளூர் தமிழ் மக்களின் கலாச்சாரம் பண்பாடு வாழ்வு ஆதாரங்கள் சிதைந்து போகக்கூடும் என்ற பீதியை கிளப்புகின்றன.இதற்கு ஆதாரமாக இலங்கையில் தமிழர் பகுதியில் கட்டாயமாக சிங்களர்களை குடியமர்த்திய நிகழ்வுகளை அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
இன அழிப்பு ஆதிக்க அரசியலா?
இலங்கையில் நடந்தது தமிழர்கள் மீதான வன்முறை ஆகும். அதனையே நாம் உதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.ஐரோப்பியர்கள் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் குடி புகுந்த போது அங்கிருந்த பழங்குடியினர்களை கோடிக்கணக்கான எண்ணிக்கையில் கொன்று குவித்த பின்னரே அவர்கள் தங்களுக்கென ஒரு நாட்டினை உருவாக்கிக் கொண்டனர்.இவையெல்லாம் வரலாற்றில் நாம் காணும் பிழைகள் ஆகும்.அவற்றை நாம் உதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
மத அரசியல் தான் உண்மையான அச்சுறுத்தல்
இந்தியாவில் உள்ள ஆபிரகாமிய மதங்களின் தலைவர்கள் இந்தியாவில் உள்ள பெரும்பாலானவர்களை மதம் மாற்றி தங்கள் மதத்தின் ஆட்சியைக் கொண்டு வருவோம் என அறிவிக்கிறார்கள்.கிருஸ்துவர்கள் அதிகமாக உள்ள கிருஸ்துவ நாடுகளில் மக்கள் சீரழிவு கலாச்சாரத்தை பின் பற்றி நாசமாகப் போவது ஒரு புறம் இருக்க, இஸ்லாமிய நாடுகள் என்று தங்களை அறிவித்துக் கொண்டவை எவையும் பிற மதத்தவர்களை வாழ விடுவது இல்லை என்பதோடு அவர்களுக்கிடையே இருக்கும் மற்றும் மதப்பிரிவினைகள் அடிப்படையில் தங்களுக்குள் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு இலட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்து வருகின்றனர்.இத்தகைய மத ஆட்சியை இந்தியாவில் கொண்டு வருவோம் என்பதுதான் நமக்கு முன் உள்ள மிகப்பெரிய ஆபத்து. நாம் அனைவரும் சிந்தித்து ஜனநாயக விரோத மத ஆட்சி பற்றிய விவாதங்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.
சமூக முன்னேற்றமே ஆதிக்க அரசியலுக்கு எதிரான ஆயுதம்
வடமாநிலத்தவர்கள் அதிக அளவில் தமிழகத்தில் குடியமர்ந்து விட்டால் அவர்களது ஆதிக்கம் அதிகமாகிவிடும் என்ற பீதி தேவையற்றது.ஏனெனில் மக்கள் பொருளாதார ரீதியில் பின் தங்கியிருக்கும் போது அவர்கள் மீது பொருளாதார ரீதியில் உயர்ந்தவர்கள் ஆதிக்கம் செலுத்துவது இயல்பான ஒன்றாகும்.புலம்பெயர் தொழிலாளர்களின் ஆதிக்கம் இருக்கக் கூடாது என்றால் தமிழக இளைஞர்கள் நன்றாக படித்து முன்னேறி தங்களை தாங்களே உயர்த்திக் கொண்டு பொருளாதார ரீதியில் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே அவர்கள் எப்பொழுதும் மற்றவர்களுக்கு அடிமையாகாமல் தங்களது ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்ளக்கூடிய நிலையில் இருப்பார்கள்.
தற்போது கூட தமிழக இளைஞர்கள் பிற மொழி பேசுபவர்களின் ஆதிக்கத்தில் தான் உள்ளனர்.தமிழகத்தில் தெலுங்கர்கள் மற்றும் மலையாளிகளின் ஆதிக்கம் இல்லை என சொல்லிவிட முடியாது.
அவர்களுடைய ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்ளும் தமிழக பிரிவினைவாத கட்சிகள் வட மாநிலத்தவர்களின் ஆதிக்கத்தை ஏன் மறுக்கிறார்கள்? அதற்கு காரணம், தமிழகத்தில் உள்ள பிரிவினைவாத கட்சிகளை நடத்துபவர்கள் பெரும்பாலானோர் தமிழர்களே இல்லை என்பது தான்.
அவர்கள் தெலுங்கு மற்றும் மலையாளத்தை தாய்மொழியாக கொண்டவர்கள். அதனால் அவர்கள் தங்களது மொழி பின்புலத்தினை மறைக்க “தமிழ்”,”தமிழ்” என்று பேசி பச்சைத் தமிழர்களை ஏமாற்றி வருகின்றனர் அவர்கள் தமிழர்களை ஏமாற்ற போட்டுக் கொள்ளும் முகமூடி தான் தமிழின தேசியவாதம் என்பது.
மொழி அடிப்படை தேசியவாதம் எனும் முட்டாள்தனம்
தமிழ் என்ற ஒரு மொழியின் அடிப்படையில் ஒரு தேசியவாதம் என்பது முட்டாள்தனமான ஒரு கருத்து ஆகும்.மொழி என்பது மக்கள் தங்களுக்குள் கருத்துக்களை பரிமாறிக் கொள்ள பயன்படுத்தும் ஒரு கருவியாகும். ஒரு குறிப்பிட்ட மொழியை பயன்படுத்துவார்கள் எல்லாம் ஒரே மாதிரியான கலாச்சாரம்,பண்பாடு கொண்டவர்களாக இருப்பார்கள் என்று கூற முடியாது. தமிழகத்தில் வட மாநிலத்தவர்கள் பெரும்பாலானவர்கள் வசித்து வந்தாலும் அவர்கள் சரளமாக தமிழை பேசுகிறார்கள். சென்னை சவுகார்பேட்டையில் வசிக்கும் வட மாநிலத்தவரின் தமிழினை சென்னைவாசி புரிந்து கொள்ளும் அளவிற்கு நாகர்கோயில் தமிழரின் தமிழை புரிந்து கொள்ள இயலாது. எனவே ஒரு மொழியின் அடிப்படையில் ஒரு ஒற்றுமையை ஏற்படுத்தும் விதமாக தேசிய இனம் என்று கூறுவது பிதற்றல் ஆகும்.
ஐரோப்பாவில் ஒரே மொழியை பேசும் மக்களை கொண்ட பல நாடுகள் உள்ளன. இந்தியாவிலும் ஒரே மொழியை பேசும் மக்களை கொண்ட பல மாநிலங்கள் உள்ளன.எனவே ஒரு மொழியின் அடிப்படையில் ஒரு இனத்தை வரையறுக்கும் முட்டாள் தனத்தை இத்தகைய பிரிவினைவாத கட்சிகள் நிறுத்த வேண்டும்.
இவர்களை பொது வெளியில் ஒதுக்குவதன் மூலமும் அவர்கள் முட்டாள்தனத்தை தைரியமாக பொது இடங்களில் போட்டு உடைப்பதன் மூலம் பொதுமக்களாகிய நாம் தான் இவர்களை அரசியல் களத்திலிருந்து அப்புறப் படுத்த வேண்டும்.
தூய்மைவாதம் சாத்தியமா?
வடமாநில புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழகத்தில் ஆதிக்கம் பெற்று விட்டால் தமிழினவாதம் நீர்த்துப்போகும்.அத்தகைய சூழ்நிலையில் தமிழர்கள் தங்களது பண்பாடு கலாச்சாரம் ஆகியவற்றினை இழுந்து விடுவார்கள் என்ற வாதம் மிகவும் சொத்தையானது.
ஏனெனில்., தற்போது நாட்டில் பெரும்பாலாக நடக்கும் காதல் திருமணங்கள் மூலம் பல்வேறு மொழி ஜாதிகளுக்கு இடையே திருமண உறவுகள் ஏற்பட்டு வருகின்றன.அதன் மூலம் பல்வேறு வகையான மரபணு கலப்பும் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சுத்தமாக ஒரு குறிப்பிட்ட இனத்தை வைத்துக் கொள்வது என்பது இயலாது.
தமிழர்கள் அந்நிய மதங்களை ஏற்று அந்த மதங்களுக்கு உண்டான அந்நிய நாட்டின் கலாச்சாரத்தை பின்பற்றுகின்றனர்.அவர்கள் வைக்கும் பெயர்கள் எல்லாமே அந்நிய நாட்டின் மொழியிலேயே இருக்கின்றன.தமிழ் பேசுவதால் மட்டும் எப்படி அவர்களை தமிழர்களாக கருத முடியும்?
சிறுபான்மையினர் தாஜா அரசியல் செய்வது ஆதிக்க அரசியல் இல்லாமல் வேறு என்ன?
இந்தியாவில் பெரும்பான்மையான கட்சிகள் சிறுபான்மையினரை தாஜா செய்து அரசியல் நடத்துவதை நாம் நன்கு அறிவோம்.
தேர்தல் நேரத்தில் சர்ச் மற்றும் மசூதிகளில் , அந்தந்த மதத்தினர் ஒட்டு மொத்தமாக எந்த கட்சிக்கு ஓட்டு போட வேண்டும் என்பதை மதத்தலைவர்கள் முடிவு செய்து அதை தங்கள் சமூகத்தினருக்கு ஒரு கட்டளை போல் இடுவதை கேள்வி படுகிறோம்.
இவர்கள் ஓட்டு போட முடிவு செய்யும் கட்சிகள் அனைத்தும் பெரும்பாலும் பெரும் ஊழல் புரியும் கட்சிகளே.மதத் தலைவர்களைப் பொறுத்தவரை நாடு எக்கேடு கெட்டுப் போனாலும் பரவாயில்லை; அவர்கள் மதமாற்ற , மதப் பிரச்சார நடவடிக்கைகளுக்கு எந்த குந்தகமும் வந்து விடக் கூடாது.
இதனால் பெரும்பான்மை இந்துக்கள் சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து வளர்ச்சி அரசியலின் நன்மைகளை சுவைக்க முடியாமல் இருந்து வருவதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதெல்லாம் வெகுஜன மக்கள் மீதான ஆதிக்கமாகாதா?
ஆதிக்கத்தின் புவியியல் வரம்பு எது?
உள்ளூர் மக்கள் என்பதற்கான வரையறை மாநிலமாகத் தான் இருக்க வேண்டுமா?அதனடிப்படையில், வெளிமாநில மக்கள் இங்கு வந்து தங்கி வாக்குரிமை பெறுவதுதான் பிரச்சினையை ஏற்படுத்துமா?ஏன் மாவட்ட அளவினை புலம் பெயர்வதற்கான புவியியல் வரம்பாக கொள்ளக் கூடாது? அதனடிப்படையில் மாவட்டம் விட்டு மாவட்டம் புலம் பெயர்பவர்களை ஏன் தடுக்க கூடாது?
உள்ளூர் மக்களின் ஆதிக்கம் நிலைநாட்டப்பட வேண்டும் என்றால் தமிழகத்திலேயே பல மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு குடி பெயர்ந்து உள்ள மக்களை அனைவரையும் அவரவர் மாவட்டங்களுக்கு துரத்தி அடிக்க வேண்டும்.
சென்னையில் உள்ள அரசு துறை அலுவலகங்களில் பிற மாவட்டங்களில் இருந்து வந்து வேலை செய்பவர்கள் தான் 90% பேர் இருப்பர். சென்னை மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்ட நபர்கள் 10% அளவிற்கு மட்டுமே பணியில் இருப்பர். அப்பொழுது சென்னையில் உள்ள மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டு விட்டது என்று கூறி தென் மாவட்ட பணியாளர்களை அவர்கள் மாவட்டத்திற்கு திருப்பி அனுப்பி விடலாமா? அப்படி செய்தால் அது எந்த விதத்தில் நியாயமாக இருக்கும்?
உதாரண சமூகமான பிராமண சமூகம்
தமிழகத்தில் அரசு பணிகளில் பெரும்பான்மையாக இருந்த பிராமணர்கள் இட ஒதுக்கீடு கொள்கை மற்றும் பிராமண துவேஷ கொள்கைகளினால் தற்போது தமிழக அரசுத் துறைகளில் ஒரு சதவீதம் அளவிற்கு கூட பணி புரிவதில்லை. அந்த நிலையில் அவர்கள் எல்லோரும் அழிந்து போய்விட்டார்களா என்ன? அவர்கள் தங்களை முன்னேற்றிக் கொண்டு வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து அங்கே சீரும் சிறப்புமாக உயர் பதவிகளை வகித்து இந்தியாவிற்கு பெருமை சேர்க்கிறார்கள் அல்லவா?வெளிநாட்டிற்கு சென்று அங்கே புகழ்பெற்ற கல்பனா சாவ்லா ,கமலா ஹரிஷ், ரிஷி சுனக், சுந்தர் பிச்சை போன்றவர்கள் அங்கே பேரும் புகழோடு இருக்கும்போது மட்டும் நாம் பெருமைப்பட்டுக் கொள்கிறோம். ஆனால் அவர்கள் அந்த வெளிநாட்டு மக்களின் வாய்ப்பினை பறித்துவிட்டு தான் தங்களை முன்னேற்றிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை நாம் ஏன் மறந்து விட்டோம்?
பன்மைவாதம் தான் எதிர்காலம்
எதார்த்தம் என்னவெனில் மக்கள் தங்கள் வாழ்வுக்காக எங்கும் புலம்பெயர்ந்து தொழில் செய்யலாம்; குடியேறலாம் மற்றும் அங்கு உள்ள உள்ளாட்சி மாவட்ட மாநில தேசிய நிலை தேர்தல்களில் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்தி தங்களுக்கு வாழ்வு வசதிகளை அளிக்கக்கூடிய பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் உரிமையை பெறலாம்.இதனை மறுப்பது என்பது பகுத்தறிவுக்கு ஒவ்வாத செயலாகும்.
தமிழர்களும் இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் இலட்சக்கணக்கில் புலம்பெயர்ந்து அந்தந்த மாநில மக்களுடன் இணக்கமாக வாழ்ந்து வருகிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
சுய சார்புடனான முன்னேற்றமே தேவை
இனவாதம் பேசி- தங்கள் இனத்தில் உள்ள இளைஞர்கள் முன்னேற அவர்களுக்கு ஊக்குவிப்பு அளிக்காமல்- பிறர் முன்னேறி விடுவார்கள் என்று பீதியை கிளப்பி தங்களது அரசியல் பிழைப்பை நடத்தும் பிரிவினைவாத கட்சிகளை நம்பும் தமிழக இளைஞர்கள் கடைசியில் அழிந்தே தான் போக வேண்டும்.
மாறாக, போட்டி மனப்பான்மையுடன் தமிழகத்திற்கே உரிய வளங்களை செழுமைப்படுத்தி தனிநபர் ஒவ்வொருவரும் வளர்ச்சி காணும் போது எவ்வித சக்தியும் தமிழனை ஆதிக்கம் செலுத்த முடியாது என்ற நிலை உருவாகும்.
அதைச் செய்ய வேண்டியது அரசியல் கட்சிகளல்ல; ஒவ்வொரு சாதித் தலைவர்களது வழிகாட்டுதலில் அந்தந்த சாதி உறுப்பினர் – குடும்பங்களே ஆகும்.