பொது சிவில் சட்டம் என்பது ஏதோ பா.ஜ.க அரசு புதிதாக கொண்டு வர முயற்சி செய்வது போன்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் நான்காவது பிரிவின் கீழ் “அரசுக் கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடுகள்” எனும் தலைப்பின் கீழ் உள்ள 16 உட்பிரிவுகளில் ஒன்றான 44ம் உட்பிரிவு,
“குடிமக்களுக்கு ஒரே சீரான உரிமையியல் தொகுப்புச் சட்டம்: குடிமக்கள் அனைவரும் இந்திய ஆட்சி நிலவரை எங்கணும் ஒரே சீரான உரிமையியல் தொகுப்பு சட்டத்தினை எய்திடச் செய்வதற்கு அரசு முனைந்து முயலுதல் வேண்டும்” என்று சொல்கிறது.
அதாவது, பொது சிவில் சட்டம் என்பது அரசின் கொள்கையாகவும், அதை வரைவு செய்து சட்டமாக்குவது அரசின் கடமையாகவும் இருக்க வேண்டும் என்று டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்கள் நமக்கு வகுத்தளித்துள்ள இந்திய அரசியலமைப்பு சட்டம் சொல்கிறது.
பொது சிவில் சட்டத்தின் வரலாற்றை சற்றே திரும்பிப் பார்ப்போம்.
1948 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் தேதி உட்பிரிவு 35-ன் வரைவாக அரசியல் நிர்ணய சபையில் 44 -ம் உட்பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த சபையில் இருந்த இஸ்லாமிய உறுப்பினர்களில் சிலர் இந்த சட்டத்தில் எந்தவொரு பிரிவு மக்களும் தங்களுக்கென்று உள்ள தனிப்பட்ட சிவில் சட்டங்களை அந்த சமூகத்தின் முன் ஒப்புதல் இல்லாமல் மாற்றப்படாது எனும் திருத்தத்தை முன் வைத்தனர். ஒரு முழு நாள் அரசியல் அமைப்பு நிர்ணய சபையில் இந்த திருத்தம் பற்றி விவாதிக்கப்பட்ட பிறகே தற்போதைய வடிவத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த விவாதத்தில் திரு கே.எம்.முன்ஷி, அல்லாடி கிருஷ்ணஸ்வாமி ஐயர் போன்றோர் போது சிவில் சட்டத்தின் தேவை குறித்து பல வாதங்களை முன் வைத்தனர். ஹிந்து சமூகம் பின்பற்றிக் கொண்டிருந்த சமூக விதிகளில் நிலவிய பாலினப் பாகுபாடுகளை உதாரணமாகக் கொண்டு பேசினார். பாலினப் பாகுபாடு இன்றி பெண்கள் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று ஏற்கனவே சட்டம் இயற்றப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டி, அதை இந்து மத நடைமுறையின் ஒரு பகுதியாகப் பார்த்தால், ஹிந்துப் பெண்களின் நிலையை ஆண்களுக்கு நிகராக உயர்த்தும் ஒரு சட்டத்தைக் கூட நிறைவேற்ற முடியாது என்று வாதிட்டனர்.
விவாதத்தின் இறுதியில் டாக்டர் அம்பேத்கர் பதிலளித்துப் பேசும் போது, ஏற்கனவே நாடு முழுமைக்குமான சீரான குற்றவியல் நடைமுறைகளும், குற்றவியல் தண்டனை சட்டங்களும் உள்ளன. அதே போல் சொத்து பரிமாற்றங்களை முறைப்படுத்தும் பொதுவான சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இன்னும் இது போன்ற பல பொது சட்டங்கள் வழக்கத்தில் உள்ள போது, “இவ்வளவு பரந்த நாட்டிற்கு ஒரே மாதிரியான சிவில் சட்ட விதிகளை உருவாக்குவது சாத்தியமா மற்றும் விரும்பத்தக்கதா” என்ற சபையின் உறுப்பினரான திரு,ஹுசைன் இம்மாம் அவர்களின் கேள்வி ஆச்சரியத்தை அளிப்பதாக உள்ளது என்கிறார்.
இதுவரை, திருமணம் மற்றும் வாரிசுரிமை ஆகிய இரண்டு விஷயங்களை மட்டுமே இன்னும் பொது சிவில் சட்டங்கள் மூலம் நெறிப்படுத்த இயலாமல் இருப்பதாகக் குறிப்பிடும் அம்பேத்கர் அவர்கள், அந்த மாற்றத்தை கொண்டு வருவதே இந்த சட்டப்பிரிவை கொண்டு வர வேண்டும் என்று விரும்புவோரின் எண்ணமாகும் என்று குறிப்பிடுகிறார். கேரளத்தின் வடக்கு பகுதிகளில், மருமக்கதாயம் என்று வழங்கப்படும் தாய்வழி வாரிசுரிமை வழக்கம் ஹிந்து முஸ்லீம் பேதமின்றி அனைவரும் பின்பற்றுவதாக உள்ளதைக் குறிப்பிட்டு, நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள மதங்களுக்கு அப்பாற்பட்டு நடைமுறையில் உள்ள பழக்கங்களையும் மேற்கோள் காட்டுகிறார். எனவே, இந்த தனிப்பட்ட பொது சிவில் சட்டத்தை நீர்த்துப் போக செய்யும் திருத்தங்களை ஏற்க முடியாது என்று ஆணித்தரமாக சொல்கிறார்.இப்படியாக ஒரு நாள் முழுவதும் நீடித்த விவாதத்துக்குப் பிறகு, 23.11.1948 அன்று பொது சிவில் சட்டம் குறித்த 44ம் உட்பிரிவு நிறைவேற்றப்பட்டது.

ஆவணப்படுத்தப்பட்டுள்ள இந்த விவாதங்கள் அனைத்தும், பொது மக்கள் Constituent Assembly Debates (C.A.D) – Volume III-ல் படிக்க முடியும். இந்த விவாதங்களில் இருந்து பொது சிவில் சட்டம் பற்றிய நம் அரசியல் அமைப்பை உருவாக்கித் தந்தவர்கள் சிந்தனையை மிகவும் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
இந்த விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் தன் நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. பரவலாக அறியப்படும் ஷா பனோ வழக்கு சிறந்த உதாரணமாகும்.
தன் முஸ்லீம் கணவரால் கைவிடப்பட்ட இஸ்லாமிய பெண்ணான ஷா பனோ 1975ல் வீட்டை விட்டு கணவரால் வெளியேற்றப்படுகிறார். வெளியேற்றப்பட்ட மனைவிக்கு இந்த திருமணம் மூலம் ஏற்கெனவே இரண்டு பெண் குழந்தைகள் பிறந்திருந்தன. ஏப்ரல் 1978ல் ஜீவனாம்சம் கேட்டு Indian Penal Code பிரிவு 125-ன் கீழ் ரூ. 500/- ஜீவனாம்சம் கேட்டு ஷா பனோ இந்தூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார். நவம்பர் 1978ல் கணவர் திரு. மொஹம்மத் அகமது, முத்தலாக் மூலம் மனைவியை விவாகரத்து செய்து விட்டு, மனுதாரர் தன் மனைவி என்ற நிலையில் இப்போது இல்லை என்பதால் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டியதில்லை என்று வாதிடுகிறார். ஆகஸ்ட் 1979 இல், மாஜிஸ்திரேட் மனைவிக்கு பராமரிப்புத் தொகையாக மாதம் ரூ.25 தரும்படி உத்தரவிட்டார். ஜூலை 1980 இல், தாக்கல் செய்த சீராய்வு விண்ணப்பத்தில், மத்தியப் பிரதேசத்தின் உயர் நீதிமன்றம், பராமரிப்புத் தொகையை மாதத்திற்கு ரூ.179.20 ஆக உயர்த்தியது. இப்படி கீழ் கோர்ட்டில் இருந்து ஒவ்வொரு படிநிலையாகக் கடந்து 10 வருடங்கள் போராடி இறுதியாக 1985ல் உச்ச நீதிமன்றத்தில் முறையிடுகிறார் ஷா பனோ. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்ச், தன் கணவனால் கைவிடப்பட்ட பெண் ஷா பானோவுக்கு ஆதரவாக ஜீவனாம்சம் தரப்பட வேண்டும் என்று தீர்ப்பை வழங்கியது. இதில் அவருக்கு ஆதரவாக தீர்ப்பளிக்கப்பட்டது.
ஆனால், கணவர் ‘குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 125 ஷரியத் சட்டத்திற்கு முரணானது’ என்பதால், முஸ்லிம்களுக்குப் பொருந்தாது என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வாதத்தை நிராகரித்த உச்ச நீதிமன்றம், ‘குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 125 ஒருவரது மதம் சார்ந்த தனிப்பட்ட சட்டத்தைத் தாண்டி அனைத்து நபர்களுக்கும் பொருந்தும்’ என்று தீர்ப்பளித்து கணவரின் மனுவை நிராகரித்தது.
அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு ஒய்.வி.சந்திரசூட் (1985-AIR பக் 946-955 உச்ச நீதிமன்றம்) இந்த மேல்முறையீடு, முஸ்லீம் பெண்களுக்கு என்று இல்லாமல் பொதுவாகவே பெண்களுக்கு எதிரான பாலினம் சார்ந்த அடக்குமுறைகளும் பாகுபாடுகளும் இல்லாத சமுதாயத்தை உருவாக்க விரும்பும் அனைவருக்கும் ஒரு நேரடியான சவாலை எழுப்புகிறது என்றும், அந்த திசையில் மனிதகுலம் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளது என்ற நம்பிக்கை பொய்யானது என்று தெரிவதாகவும் குறிப்பிடுகிறார்.
மேலும், நாட்டின் குடிமக்களுக்கு ஒரு சீரான பொது சிவில் சட்டத்தை அளிக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது என்றும் மதம் சார்ந்த மற்றும் முரண்பட்ட சித்தாந்தங்களால் கட்டமைக்கப்பட்ட தனிப்பட்ட சட்டங்கள் மேல் உள்ள விசுவாசம் அகற்றப்பட வேண்டும்,தேசிய ஒருமைப்பாட்டுக்கு பொது சிவில் சட்டம் அவசியம் என்பதும் தீர்ப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது போன்ற விவகாரங்களில் தேவையற்ற சலுகைகள் வழங்குவதன் மூலம் சமூக முன்னேற்றம் தடுப்படுகிறது என்ற கருத்தையும் தீர்ப்பு வலுயுறுத்துகிறது.

ஆனால், 1986ல் ராஜிவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு, இயற்றிய “முஸ்லிம் பெண்கள் விவாகரத்து மீதான உரிமைகள் பாதுகாப்பு சட்டம் ” மூலம் விவாகரத்து செய்யப்பட்ட பெண் மற்றும் அவரது முன்னாள் கணவர், ஷரியத் சட்டப்படி அல்லாமல் குற்றவியல் நடைமுறை 125-வது விதியின் கீழ் தாங்கள் நிர்வகிக்கப்படத் தயாராக இருக்கிறோம் என்று நீதிமன்றத்தில் விண்ணப்பிப்பதை கட்டாயமாக்கியது; அப்போதுதான், விவாகரத்து செய்யப்பட்ட முஸ்லீம் மனைவி, தன்னை விவாகரத்து செய்த முஸ்லீம் கணவரிடம் இருந்து பராமரிப்பு உதவித் தொகையைப் பெற முடியும் என்ற நிலையை உருவாக்கியது.
“தன் மனைவியை ஷரியத் சட்டப்படி விவாகரத்து செய்த கணவன், அவளது விருப்பத்துக்கு இணங்கி எப்படி தன் சுயநலத்துக்கு எதிரான ஒரு சிவில் சட்டத்திற்குத் ஒப்புக் கொள்வான் என்பதை அரசு ஊழியர்கள் துளியும் சிந்திக்கவே இல்லை. இதன் மூலம் ஒட்டுமொத்தப் பெண்களின் கண்ணியம், பாலின சமத்துவம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே அடித்து விட்டார்” என்று சாடிய ராஜீவ் காந்தியின் அமைச்சகத்தில் இருந்த ஆரிப் முகமது கான், அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்து விட்டார். அவரே தற்போது கேரள ஆளுநராக உள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

1976ம் ஆண்டு இந்திரா காந்தியால் அவசரகாலத்தின் போது “பெண்களின் கண்ணியத்தை இழிவுபடுத்தும் வகையில் உள்ள நடைமுறைகளைத் துறப்பது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமையாகும்” என்ற பிரிவு 51A (e) கூறுகிறது. ராஜீவ் காந்தி 1986ல் கொண்டு வந்த இந்த பிற்போக்குச் சட்டம் குறித்து அரசியலமைப்பு வழக்கறிஞர் எம்.ஆர்.டி.டி.பாசு, இந்தச் சட்டம் பிரிவு 51க்கு எதிரானது என்று கண்டனம் தெரிவித்தார். ராஜீவ் காந்தி உச்ச நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்யும் விதமாக புதிய சட்டத்தை கொண்டு வந்தார், அதன் மூலம் அம்பேத்கரால் மிகவும் சிறப்பாக உருவாக்கப்பட்ட 44வது சட்டப்பிரிவையும் அவர் அழித்தார்.
பொது சிவில் சட்டம் மூலமாக மட்டுமே பெண்களின் உரிமைகள், நலன்களுக்கு எதிரான செயல்கள், குறிப்பாக முஸ்லீம் பெண்களின் நலனுக்கு எதிரான போக்கை சரி செய்ய முடியும். அத்தகைய சட்டம் மட்டுமே மதம், இனம், சாதி, பாலினம் அல்லது பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதைத் தெளிவாகத் தடுக்கும் அடிப்படை உரிமைகள் பற்றிய அரசியல் அமைப்பு பிரிவு 15ஐ சரியாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்யும்.
இது தொடர்பாக, இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த சிறந்த சட்ட நிபுணர்களின் கருத்துக்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.
லக்னோ-வை சேர்ந்த பெரும் வழக்கறிஞர் 1949-ல் திரு. சௌதாரி ஹைதர் ஹுசைன், ‘A Unified Code for India’ என்ற தலைப்பில், “இரண்டு நூற்றாண்டுகளாக ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் வாழ்ந்த நாம் இந்துக்கள் இந்து சட்டத்தால் ஆளப்படுவது இயற்கையானது என்று கருதி வந்தோம், ஆனால் நவீன உலகில் இதற்கு இடமில்லை. பிரான்சில் அங்கு வாழும் அனைவரின் உறவுகளையும் நிர்வகிக்கும் ‘நெப்போலியன்’ விதிகளை வைத்திருந்தார்கள். அதேபோல், ஜெர்மன் சிவில் சட்டம் என்று பல நாடுகளும் பலவற்றையும் வைத்திருந்தார்கள். ஆனால் முன்னேறிய அந்த நாடுகள் இப்படிப்பட்ட தனி சட்டங்களை விட்டு தற்போது ஒரே சீரான பிராந்திய சட்டங்களை வைத்துள்ளனவே தவிர நம் நாட்டில் உள்ளது போல் சமூகங்கள் சார்ந்த தனிப்பட்ட சட்டங்கள் வைத்திருக்கவில்லை. உண்மையில், நம் நாட்டில் கூட, பெரும்பாலான சட்டங்கள் பொதுவானவை, அவற்றிலிருந்து யாரும் விதிவிலக்கு அளிக்கப்படவில்லை. உதாரணமாக திருட்டுக்கு குற்றத்தில் ஈடுபடும் ஒரு முஸ்லீம் மற்ற சக குடிமகனைப் போல சிறைக்குத் தான் அனுப்பப்படுகிறானே தவிர, ஷரியத் சட்டத்தின்படி அவனது வலது கையை துண்டித்து விடுவது பற்றி சிந்திக்கக் கூட முடியாது. எனவே இந்திய தேசத்தின் எல்லைக்குள் வாழும் அனைவருக்கும் ஜாதி, மதம் அல்லது மத பேதங்கள் இல்லாமல் அனைவருக்கும் பொருந்தும் ஒரு பொது சிவில் சட்டத்தை வைத்திருப்பதன் அவசியத்தை நான் கடுமையாக வலியுறுத்துகிறேன். இதுவே மதவாத இனவாதப் பிரச்னைகளுக்கான சட்டரீதியான தீர்வு. நாட்டில் ஒரே சட்டத்தின் மூலம் ஒரே தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு இது முற்றிலும் இன்றியமையாததாகத் தோன்றுகிறது”.
சில வருடங்கள் இந்திரா காந்தியின் அமைச்சரவையில் இருந்த, தீவிர மதசார்பின்மை கொள்கைகள் உடையராகவும் பெரும் தேசியவாதியாகவும் விளங்கிய தலைமை நீதிபதி திரு எம்.சி.சக்லா மார்ச் 1973-ல் வெளியான தனது “Plea for a Uniform Civil Code” எனும் கட்டுரையில், “அரசு கொள்கைகளை கட்டுப்படுத்தும் ஒரு கட்டாய பிரிவான அரசியல் சாசனத்தின் 44-ம் உட்பிரிவை நடைமுறைப்படுத்த அரசு கடமைப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சட்டம் முழு நாட்டுக்கும் இயற்றப்படுவது, முழு நாட்டையும் கட்டுப்படுத்துகிறது. இந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு பிரிவினரும் சமூகமும் அதன் விதிகள் மற்றும் அதன் உத்தரவுகளை ஏற்றாக வேண்டும்… இந்த விஷயத்தில் அரசின் அக்கறையின்மை மற்றும் அலட்சியத்திற்கான காரணங்களைப் புரிந்துகொள்வது கடினம் அல்ல. இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் குறிப்பிட்ட சில சமூகங்களின் உணர்வுகளைப் புண்படுத்த விரும்பாமல் இந்த அரசு அதற்கு எதிரான அந்த சமூகங்கள் வெளிப்படுத்தும் வலுவான உணர்வுகளுக்கு முழுமையாக ஆதரவுடன் இருப்பதை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ள விரும்புகிறது. உண்மையில், முஸ்லிம் பெண்கள் விவாகரத்து உரிமைகள் பாதுகாப்பு மசோதா, 1986 மீதான விவாதத்தின் போது, சட்ட அமைச்சர் சிறுபான்மை சமூகத்தினரின் தனிப்பட்ட சட்டங்களில் சீர்திருத்தங்கள் கொண்டு வருபதைப் பற்றி பேசும் போது, சம்பந்தப்பட்ட சமூகத்தினரே அந்தக் கோரிக்கையை முன்வைத்து ஆதரிக்கும் வரை அரசாங்கம் காத்திருக்க விரும்புகிறது என்று தெளிவாக சொல்கிறார். பிரிட்டிஷ் ஆட்சியின் போது இத்தகைய அணுகுமுறை புரிந்துகொள்ளத்தக்கது. ஆனால் சுதந்திரம் அடைந்து 39 ஆண்டுகளுக்குப் பிறகும் உலகளாவிய அளவில் சமூக நீதி எனும் முழக்கம் ஒலிக்கும் இந்த நவீன காலத்திலும் இப்படி இருக்கக்கூடாது.
தேசம் முழுமைக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டம் இயற்றி நடைமுறைப்படுத்த அரசின் முழுமையான முயற்சி செய்ய வேண்டும் என்று 44ம் உட்பிரிவு சொல்கிறது. பொது சிவில் சட்டத்தை இயற்றுவதில் எதிர்கொள்ளக்கூடிய பெரும் சிரமங்கள் குறித்து நம் அரசியல் சாசன ஸ்தாபகர்கள் நன்கு உணர்ந்தே இருந்தனர். ஆனால் சிரமங்கள் இருந்தபோதிலும், ஒரே மாதிரியான சிவில் சட்டங்களை அமல்படுத்த உதவும் சில நடைமுறை வழிகளைக் கண்டறிய வேண்டும்.” என்று முடிக்கிறார் திரு. எம்.சி. சாக்லா, எனும் புகழ்பெற்ற முஸ்லீம் நீதிபதி.
மற்றுமொரு புகழ்பெற்ற ஜெய்ப்பூர் உயர்நீதிமன்றத்தின் 17 Lawyers’ Chambersஐ சேர்ந்த திரு எம்.ரஃபிக், “Right to maintenance under Muslim Law – A Legalistic view” என்ற தனது கட்டுரையில் இவ்வாறு தன் கருத்தை பதிவு செய்கிறார்: “தான் விவாகரத்து செய்து விட்ட மனைவிக்கு முஸ்லீம் கணவனால் தரப்பட வேண்டிய ஜீவனாம்சம் பற்றி ஷா பனோ வழக்கு மூலம் நிறைய பேசப்பட்டும் எழுதப்பட்டும் விட்டது. ஜீவனாம்சம் பற்றிய ஷரத்துகள் 1973 குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 125-128 பிரிவுகளில் சொல்லப்பட்டுள்ளது. சட்டத்தின் பார்வையில் பார்க்கும் போது ராஜிவ் காந்தி கொண்டு வந்துள்ள முஸ்லீம் பெண்கள் விவாகரத்து பாதுகாப்பு சட்டம், 1986, என்பது முஸ்லீம் பெண்களுக்கு நீதி வழங்கும் வகையில் அல்லாமல் அவர்களது நிலையை பல நூறாண்டுகள் பின்னோக்கி இழுத்து சென்று விடவே வகை செய்கிறது. குரான் சொல்லும் விஷயங்களுக்கு முரணாக பல சட்டங்கள் IPC-யில் உள்ளன. அவற்றுக்கு எதிராக தற்காலத்தில் நாம் அடைந்துள்ள முன்னேற்ற நிலையை கருத்தில் கொண்டு ஒருவரும் இது வரை பேசியதில்லை. 21ம் நூற்றாண்டின் வாயிலில் நிற்கும் நாம், பெண்களை வெறும் உயிரோடு நடமாடும் சொத்தாக பார்த்த இடைக்காலத்துக்கு திரும்ப வேண்டுமா என்று நாம் இப்போது முடிவு செய்தாக வேண்டும். பாகிஸ்தான் உட்பட பல இஸ்லாமிய தேசங்கள் விவாகரத்து, பலதார மணம் போன்ற விஷயங்களில் இந்தியாவில் உள்ளதை விட கடுமையான சீர்திருத்தங்களை கொண்டு வந்து சட்டங்கள் இயற்றி விட்டன. பாகிஸ்தான் போன்ற ஒரு நாடு இவற்றை சட்டங்கள் மூலம் வழக்கறுத்து தாளத்துக்கு உச்சிதமற்றதாய் ஆனா பிறகும், மதசார்பற்ற நாடான இந்தியாவில் ஏன் அப்படி செய்ய முடியாது? அல்லது, நாம் நம் மதசார்பற்ற தன்மையை படிப்படியாக இழந்து வருகிறோமா?” என்று கேள்வி எழுப்புகிறார். இவை புகழ் பெற்ற இஸ்லாமிய வழக்கறிஞரான திரு எம்.ரஃபிக் அவர்களின் வார்த்தைகள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்!
ஹிந்துக்கள் இடையேயும் உடன்கட்டை ஏற்றுதல், வரதட்சிணை, ஒரு சார்பான வாரிசுரிமை போன்ற வழக்கங்கள் இருந்தன. ஆனால் இந்திய விடுதலை அடைந்த சிறிது காலத்திலேயே, பெண்கள் மீதும், ஒடுக்கப்பட்ட மக்கள் மீதும் செய்யப்பட்ட அக்கிரமங்கள் பல சட்டங்கள் மூலமாக ஒழிக்கப்பட்டன. இந்த விஷயத்தில், நமக்கு செய்ய இன்னும் வேலை இருக்கிறது. தலாக் மற்றும் பலதார மணம் ஆகியவற்றை விட பெண்களுக்கு பெரும் அவமானங்கள் செய்ய வேறெதுவும் இல்லை. கடந்த அரை நூற்றாண்டில் முற்போக்கான முஸ்லிம்கள் நவீன, நாகரீக கருத்துகளை அடிப்படையாகக் கொண்ட பொது சிவில் சட்டத்தை வெகுவாக ஆதரித்து வருகின்றனர்.
பொது சிவில் சட்டம் என்பது முஸ்லிம்களின் நலனுக்கு எதிரானது என்பது முற்றிலும் தவறான கருத்தாகும். சொல்லப்போனால், பொது சிவில் சட்டம் அவர்களது நலனுக்கும், குறிப்பாக முஸ்லீம் பெண்களை அவமதிப்புகள், சமத்துவமின்மை ஆகிய சித்ரவதைகளில் இருந்து காப்பாற்றுகிறது. மலேஷியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட பல இஸ்லாமிய நாடுகள் தன் சிவில் சட்டங்களை நவீனப்படுத்தி ஒரே சீரான சட்டங்களை நாடு முழுமைக்கும் வைத்துள்ளனர். உலகில் வெவ்வேறு சமூகங்களுக்கு என்று தனித்தனியான சட்டங்களினை நடைமுறையில் வைத்துள்ள நாடு என்று ஒன்று கூட இல்லை. கம்யூனிஸ்ட்களும் கூட பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பது ஆச்சரியமாக உள்ளது. அவர்கள் ஆதர்சமாக கருதும் ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் கூட தங்கள் நாடு முழுமைக்கும் பொதுவான சிவில் சட்டங்களை தான் நடைமுறையில் வைத்துள்ளன என்பதை அவர்கள் உணர வேண்டும்.
நாட்டு மக்கள் அனைவரும், குறிப்பாக, பெண்களின் உரிமைகளுக்காகப் போராடும் அனைத்து தரப்பு பெண்களும் ஒற்றுமையாக முன் வந்து, தேசம் முழுமைக்குமான பொது சிவில் சட்டத்தை ஆதரிக்க வேண்டும். நீண்ட காலமாக பிணைத்து வைக்கப்பட்டிருக்கும் தளைகளிலிருந்து இந்தியப் பெண்களை, அவரகள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், விடுவிக்க வேண்டிய நேரம் இது. பொது சிவில் சட்டம் என்பது ஒரு மதத்துக்கு எதிராக மற்றொரு மதத்தை வைப்பது அல்ல என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்; உண்மையில் பொது சிவில் சட்டம் என்பது, ஒருபுறம் மதங்கள் தாண்டிய வெறுக்கத்தக்க ஆணாதிக்கவாதத்தின் மீதும், மறுபுறம் பெண்கள் விடுதலை மீதும் கவனம் செலுத்துகிறது.
இதில் பெண் விடுதலை விஷயத்தில் தேசம் வெற்றி பெறுவதற்கான நேரம் இது.
தமிழாக்கம்: மகாலட்சுமி பாலசுப்ரமணியன்