சர்வோதயம், சோசலிசம் மற்றும் கம்யூனிசம் ஆகிய சித்தாந்தங்கள் எல்லாம் அடிப்படையாக கூறுவது கடையனுக்கும் கடைத்தேற்றம். இந்த லட்சியத்தை அடைவதற்கு அவரவர்கள் ஒரு வழியை வைத்திருக்கின்றனர்.கடையனுக்குத் தான் இதுவரை கடைத்தேற்றம் கிடைக்கவில்லை.
ஆனால் இது எதையும் சாராமல் பொது மக்களாகிய நாம் இந்த லட்சியத்தை சமூகம் எளிதாக அடைய உதவ முடியும்.
எந்த ஒரு சமூகமும் தனக்குத்தானே உதவி கொண்டால் அது மற்ற எல்லா சமூகத்தையும் விட மிகவும் சிறப்பாக மிகவும் எளிதாக முன்னேறி விடும் என்பது உலக நியதி. அத்தகைய பல சமூகங்களை நாம் தமிழகத்திலும் நமது பாரத நாட்டிலும் ஆங்காங்கே கண்டு வருகிறோம்.

எனினும், ஒரு குறிப்பிட்ட ஜாதி மக்கள் அடங்கிய சமூகம் மட்டும் முன்னேறுவது போதாது.அனைத்து ஜாதி மக்களும் முன்னேற வேண்டும்.அப்படியென்றால் அனைத்து ஜாதி மக்களின் பல சிறிய முன்னெடுப்புகளும் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வல்லன. ஜாதி மத வேறுபாடின்றி பொதுமக்கள் தத்தம் பகுதியிலுள்ள ஏழை மக்களுக்கு சிறிய அளவில் பொருளாதார உதவி அளிக்கும் போது அது சிறுதுளி- பெருவெள்ளம் ஆகி அரசாங்கத்திற்கு நிதிச்சுமையை அளிக்காமல் சமூகத்திற்கும் பெரிய சுமையை அளிக்காமல் ஒட்டு மொத்த சமூகமும் எளிதாக முன்னேற வழி வகுக்கிறது. அத்தகைய வழிமுறையை நாம் இக்கட்டுரையில் காண்போம்:
தீபாவளி என்றாலே நாம் எல்லோரும் ஆயிரக்கணக்கான ரூபாயை ஓரிரு வாரங்களில் பெரிய முதலாளிகள் நடத்தும் கடைகளில் செலவிடுகிறோம். ஆனால் பிளாட்பாரங்களில் வியாபாரம் செய்யும் ஏழை மக்களிடம் நமது பார்வை செல்வதில்லை. ஏனெனில் அவர்கள் வியாபாரம் செய்யும் பொருட்கள் தரமற்றதாக இருக்கும் அல்லது விலை சற்று கூடுதலாக இருக்கும்;அல்லது நமக்கு தேவையானதாகக் கூட இல்லாமல் இருக்கலாம்.
ஒவ்வொரு விஷயத்திலும் நாம், நமது காசு செலவாவதை நுட்பமாக கணக்கிட்டு, மிகவும் தரமான-அதே சமயத்தில் மலிவான விலையில் விற்கும் வியாபாரியிடம் நமக்கு தேவையான் பொருளை வியாபாரம் செய்வது ஏழை எளிய வியாபாரிகளை நஷ்டம் அடைய செய்து அவர்கள் அந்த வியாபாரத்தை விட்டுவிட்டு மாத வருமானம் அளிக்கக்கூடிய முறைசார் தொழிலை தேடிச் செல்லும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
நமது நாட்டின் பலமே ஏழை எளிய மக்கள் சுயதொழில் எனும் முறை சாராத தொழில்களில் ஈடுபடுவதே ஆகும். ஏறக்குறைய 90 சதவீதம் வேலைவாய்ப்பு முறைசாராத தொழில் பிரிவுகளில் தான் உள்ளன.
ஏழைகள் எல்லோரும் சுய தொழிலை கைவிட்டு முறைசார் மாத வருமானம் வேலைவாய்ப்புகளை நாடும்போது, அரசாங்கம் அதிக அளவில் வேலைவாய்ப்புகளை உற்பத்தி செய்கிறேன் என்ற பெயரில் ஊழல் மிகுந்த நடைமுறைகள் மூலம் அதிக நிதிகளை விரையம் செய்து சமூகத்திற்கு அதிக அளவில் பொருளாதாரச் சுமையினை ஏற்படுத்தக் கூடிய நிலைமையை ஏற்படும். மேலும் சமூகத்திற்கு அவசியமான துறைகளில் அரசாங்கத்தின் முதலீடு குறைந்து பொது மக்களின் வாழ்க்கை கஷ்டம் மிகுந்ததாக மாறிவிடும்.
எனவே,தீபாவளியை ஆயிரக்கணக்கான ரூபாய் செலவில் கொண்டாடும் நாம் இலாபம்,தரம் அல்லது நமது தேவை ஆகிய இவை எவற்றையும் கருத்தில் கொள்ளாமல் பிளாட்பார கடைகளில் குறைந்த பட்சம் பத்து ரூபாய்க்காவது வியாபாரம் செய்யலாம்; அதை நூறு பேரிடமாவது வியாபாரம் செய்யலாம். வியாபாரம் சில சமயங்களில் நமக்கு தேவையற்ற பொருட்களை வாங்க வேண்டிய சூழல் கூட ஏற்படலாம். இருந்தாலும் அதை விற்கும் ஒரு ஏழையின் பொருளாதார பின்னணியை கணக்கில் கொண்டு அதை வாங்குங்கள். நாம் ஒவ்வொருவரிடமும் நூற்றுக்கணக்கிலோ அல்லது ஆயிரக்கணக்கிலோ வியாபாரம் செய்யப்போவதில்லை; வெறும் பத்து அல்லது இருபது ரூபாய்க்கு மட்டுமே வியாபாரம் செய்யப்போகிறோம். மிஞ்சி மிஞ்சி போனால், 100 ரூபாய் அளவிற்கு வியாபாரம் செய்ய வேண்டி வரலாம் எனவே இதில் உங்கள் பொருளாதாரத்தை கணக்கில் கொள்ளாதீர்கள்.

சராசரியாக ஒவ்வொரு வியாபரியிடமும் பத்து ரூபாய் என்ற கணக்கில் சுமார் ஆயிரம் பேர் ஒவ்வொரு பிளாட்பார வியாபாரியிடம் வியாபாரம் செய்தால், அவர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் வியாபாரம் ஆகி அதில் ஆயிரம் ரூபாயாவது இலாபம் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும்.அது அவர்களுக்கு பெரிய தொகை; அவர்களும் தீபாவளியை கொண்டாட உதவும்.எதிர்காலத்தில் அவர்கள் தொடர்ந்து தங்கள் தொழிலை நடத்திட அவர்களுக்கு நம்பிக்கையும் ஏற்படும்.
எனவே, ஒவ்வொருவரும் குறைந்தது இந்த தீபாவளிக்கு ஆயிரம் ரூபாயாவது பிளாட்பார வியாபாரம் செய்வோம்.
இதை ஒவ்வொரு பண்டிகையின் போதும் ஒரு இயக்கமாகவே நடத்துவோம்.
இதுதான் உண்மையான சமூக நீதி!