கறவைகள் பின்சென்று கானம்சேர்ந்து உண்போம்
அறிவுஒன்றும் இல்லாத ஆய்க்குலத்து உந்தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம்உடையோம்
குறைஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு
உறவேல் நமக்குஇங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை
சிறுபேர் அழைத்தனமும் சீறி அருளாதே
இறைவாநீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.
மேல் பாசுரத்தில் கூடாரை வெல்லும் சீர் பாசுரத்தில், உன்தன்னைப் பாடிப் பறைக்கொண்டு யாம் பெறும் சம்மானம் என்று ஐந்து பஞ்சசம்ஸ்கார ஞானங்களைப் பெற்றாள். யாம் பெறும் சம்மானம் என்பது இங்கே கொஞ்சம் தொக்கி நின்றது. ஆனால் பாசுர இறுதியில் பகவானுக்கு போக்கியமாகி, அந்த தொக்கியலையும் போக்கி, அவன் ஆனந்தம் ஏற்பட எல்லோரும் கூடியிருந்து குளிர்ந்த வைபவத்தை விளக்கினாள்.
மேல் பாசுரங்களில் சேஷத்துவம் , பாரதந்திரியம் என்ற ஞானங்களைப் பெற்று, சரணாகதி அனுஷ்டிப்பது இன்றைய கறவைகள் பின் சென்று பாசுரம் . அவனே உபாயம் உபேயம் என்பது சம்பிரதாய அர்த்தம். இந்தப் பாசுரத்தில் இறைவா நீ தாராய் பறை என்று, அவன் கையை எதிர்பார்த்து இருக்கும் தன்மையை எடுத்துக் காட்டுகிறாள்.
நாங்கள் அறிவு ஒன்றும் இல்லாத ஆய்குலத்து என்று சொல்லியதன் மூலம் எல்லாவற்றையும் அவனையே எதிர்பார்த்து இருக்கும் தன்மையை வெளிப்படுத்தினார்கள். அதே சமயத்தில் அவனை குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா என்று அழைத்ததன் மூலம் அவனே எல்லாவற்றையும் கொடுக்க வல்லவன் என்று தெரிவித்தார்கள். இதுவே ஆண்டாள் கோஷ்டியினர் முழுவதுமாக அவனை நம்பியிருப்பதை வெளிப்படுத்துகிறது. எதையும் எதிர்பார்க்காமல் அவனிடம் முழு சரணாகதி அடைந்தார்கள் என்பதை உணர்த்துகிறது.
1.அனுகூல்ய சங்கல்பம்
தர்மப் படி நடப்பது எம்பெருமானுக்கு அனுகூலம். ஆயர்குலத்துக் கடமைகளை எந்தவித பலனையும் எதிர்பாராமல் சரிவரச் செய்தனர். பசுக்களின் பின்சென்று மேய்ச்சல் தொழிலைச் செய்து ஜீவித்தனர். இதை ஆண்டாள் “கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்” என்று கூறினாள். ஜீவனத்துக்காகவும் செய்யவில்லை என்பதில், அவர்கள் கூலி வாங்கும் விதத்தில் நன்றாகத் தெரிகிறது என்பது வியாக்னத்தில் காட்டப்பட்டது.
2. பிராதி கூல்ய வர்ஜனம்
தர்மத்துக்கு விரோதம் , எம்பெருமானுக்கு விரோதம். “உன்தன்னை சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதே” என்று சாஸ்திர விரோதமாகக் கூறியிருந்தால் மன்னித்தருள வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறாள். செய்ய வேண்டும் என்று செய்யவில்லை என்பதனை அறியாத பிள்ளைகள் என்பதன் மூலமும், பிள்ளைகள் என்பதனால் சிறுவர்கள் என்பதன் மூலமும், அன்பினால் அழைத்தனர் என்பதன் மூலமும் தெரிவித்தாள்.
3. மஹா விசுவாசம்
எம்பெருமான் ஒருவனே ரக்ஷகன் என்ற மஹா விசுவாசத்துடன் இருக்கவேண்டும். “குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா” என்பதனால் அவன் மேல் உண்டான விசுவாசத்தை வெளிப்படுத்தினாள். மேலும் வலுசேர்க்கும் வகையில் “உந்தன்னோடு உறவேல் நமக்குஇங்கு ஒழிக்க ஒழியாது” என்று அறிதிட்டு அறிவிக்கிறாள்.
4. கோப்த்ருத்வ வர்ணம்
எம்பெருமானிடம் பிரார்த்திக்க வேண்டும். சரண் அடைந்து அவன் திருவடி நிழல் ஒன்றை மட்டுமே பிரார்த்திக்க வேண்டும். சரண் அடைந்தது பிரார்த்திப்பது என்பதும் என் செயல் அன்று என்ற எண்ணத்தில் இருக்கவேண்டும். அவனது இன்னருளால் சரண் அவனது இன்னருளால் பெறப்படும் அருள். “இறைவா நீ வாராய் பறை” என்று அவனிடமே வைத்து விட்டாள் ஆண்டாள் நாச்சியார்.
5. கார்ப்பண்யம்
என்னைக் காத்துக்கொள்ள என்னிடம் ஒன்றும் இல்லை என்று தெரிவித்தல். திரௌபதி இருகைவிட்டு கோவிந்தா என்று அலறியதைப் போல். “அறிவு ஒன்றும் இல்லாத ஆய்குலத்து” என்று எங்களிடம் ஒன்றும் இல்லை , இறைவா நீ தாராய் என்று காட்டினாள்.
சரணாகதிக்குத் தேவையான ஐந்து அங்கங்களைப் பூர்த்தியாகக் கொண்டு ஆண்டாள் நாச்சியார் இந்தப் பாசுரத்தில் சரணாகதி அடைந்து, பறையைப் பிரார்த்திக்க இருக்கிறாள்
ஆண்டாள் திருவடிகளே சரணம்