கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா வுன்தன்னைப்பாடிப் பறை கொண்டு யாம் பெரும் சம்மானம்நாடு புகழும் பரிசினால் நன்றாகச்சூடகமே தோள் வளையே தோடே செவிப்பூவேபாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்ஆடையுடுப்போம் அதன்பின்னே பாற்சோறுமூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்கூடி இருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்
மேல் பாசுரத்தில் ஆறு கருவிகள் கொண்டு கைங்கரியங்கள் செய்வதற்கு அருள வேண்டும் என்று ஆண்டாள் கோஷ்டியினர் பிரார்த்தித்தார்கள். கைங்கரியத்தில் ருசி ஏற்பட்டு அவனை அனுபவிக்கும் பொழுது ஆனந்தம் ஏற்படும் . எப்பொழுதுமே ஒன்றை முழுவதுமாக அனுபவிக்கும் பொழுது, அதை நினைத்து நினைத்துப் பாரித்து அதை அனுபவிக்கும் போது ஏற்படும் ஆனந்தம் என்பது தனிரஸம். அந்த ஆனந்தம் என்பதும் தொலைந்து, எம்பெருமான் ஆனந்தமே பிரதானம் என்ற நிலை வரவேண்டும். ஆண்டாள் கீழ் பாசுரங்களில் பறை பறை என்று சொல்லி, பெரும் பறை அதாவது ஜாம்பவான் வாமன காலத்திலிருந்து உபயோகப்படுத்திய பறையைப் பெற்று கைங்கரிய அனுபவத்திற்காகச் செல்ல இருக்கிறார்கள்.
இந்தப் பாசுரத்தில் ஐந்து ஆபரணங்களைக் கேட்டு, ஆடை கேட்டு , மூட நெய் பெய்த பால் சோறு முழங்கை வழியக் கூடி இருந்து குளிர வேண்டும் என்று பிரார்த்தனையை வைக்கிறார்கள்.
இனிமையான பாசுரம் , இன்றைய தினம் இனிப்புடன் கூடிய பிரசாதம் கிடைக்கும் என்பதனால். ஆனால் ஜீவாத்மாக்களுக்கு ஒரு ஆசாரியனை அடைந்து பரமாத்மா ஞானம் பெற்று உறவுகளைத் தெரிந்து கொண்டு அந்த உறவுக்குக் கைங்கரியம் செய்து உவப்பு ஏற்படுவது என்பது இனிமை. அந்த இனிமையை இங்குக் காண்பிக்கிறாள்.
கூடாரை வெல்லும் சீர் என்று கூடாதவர்கள் வென்ற குணத்தைப் பாராட்டுகிறார். ஆனால் எம்பெருமானுக்குக் கூடாதவர்கள் என்று யாரும் இல்லை. எல்லோரையும் அரவணைத்துச் செல்வதுதான் அவன் இயல்பு. போர்க்களத்தில் ராவணனை இன்று போய் நாளை வா என்று கூறும் பொழுது கூட , திருத்துவதற்கு வாய்ப்பு கொடுத்தான். பிராட்டிக்கு எண்ணிப்பார்க்க முடியாத எண்ணற்ற துன்பத்தைக் கொடுத்தவனுக்குக் கூட திருந்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துபவன் தான் எம்பெருமான்.
அப்படிக் கூடாதவரை அம்பினால் திருத்துவதும், கூடியவரை அன்பினால் திருத்துவதும் எம்பெருமானுடைய சிறந்த குணம். அவனைக் கோவிந்தா என்று எளிய திருநாமத்தில் அழைக்கிறாள். கண்ணனுக்கு ஆயிரம் நாமங்கள் இருந்தாலும் அவன் உகக்கும் நாமம் , ஆயர்குல சம்பந்தத்தை உணர்த்தும் கோவிந்த நாமத்தின் மேல் ஆசை அதிகம். இந்த நாமத்தை அவன் பத்து அவதாரங்களுடன் ஒப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு ஒரு எளிய நாமம். இதைப் பெரிய நாமம் என்று அடுத்து அடுத்து பாசுரத்தில் அழைத்துத் தெரிவிக்க இருக்கிறாள்.
உன்னைப் பாடுவதற்குச் சன்மானம் கொடுக்கவேண்டும், ஆனால் அந்த சன்மானம் என்பது நாடு புகழும் பரிசு என்பதாக இருக்கவேண்டும் என்று பிரார்த்திக்கிறாள்.
* நரசிம்ம அவதாரத்தில் பிரகலாதனுக்குக் கொடுத்த நாடு புகழும் பரிசு.* இராம அவதாரத்தில் அனுமனுக்குக் கொடுத்த முத்துமாலை *. வீபிஷணனுக்குக் கொடுத்த குலதனமான ஶ்ரீ ரங்க விமானப் பரிசு* பட்டாபிஷேகம் அன்று பெண் வானரங்களுக்கு உன் தாய்கள் அலங்காரம் செய்தது போன்ற பரிசு * கண்டேன் சீதை என்றவுடன் அனுமனை ஆலிங்கனம் செய்தது நாடு புகழும் பரிசு* கிருஷ்ண அவதாரத்தில் திரௌபதிக்குப் புடவை சொரிந்தது நாடு புகழும் பரிசு* குசேலனின் அவல் உண்டு அருள் பாலித்த நாடு புகழ் பரிசு* ததிபாண்டனுக்கு மோக்ஷம் கொடுத்தது நாடு புகழும் பெரும் பரிசு* பாண்டவர்களுக்காகத் தூது சென்று ராஜ்யத்தை மீட்டுக் கொடுத்தது நாடு புகழும் பரிசு.
ஆனால் எங்களுக்குக் கீழ்வரும் சன்மானங்களைக் கொடுக்க வேண்டும் என்று பட்டியலிட்டுப் பிரார்த்திக்கிறாள்
1 சூடகமே என்ற கைகளுக்கு அணியக் கூடிய ஆபரணம்2. தோள் வளையே என்ற தோளில் அணியக்கூடிய ஆபரணம்3. தோடே என்ற காதில் அணியக்கூடிய ஆபரணம். 4. செவிப் பூ என்ற மேல் காதில் அணியக்கூடிய ஆபரணம்5. பாடகமே என்ற பாதங்களில் அணியக் கூடிய ஆபரணம் 6. ஆடை
ஆபரணங்கள் ஆடை என்பது அணிந்தவர்களின் அழகைக் கூட்டி , பார்ப்பவர்களுக்கு ஆனந்தத்தை ஏற்படுத்தும். ஆண்டாள் இரண்டாவது பாசுரத்தில் நெய்யுண்ணோம் பாலுண்ணோம் மையிட்டேழுதோம் மலரிட்டு முடியோம் என்று பிரிவாற்றல் மிகுதியில் கூறியவை. இன்று எம்பெருமான் அருகாமையில் இருப்பதனால் ஆபரணம் ஆடை பால் சோறு நெய் சோறு என்பவற்றையெல்லாம் கேட்டு அழகு ஏற்படுத்திக் கொண்டு இனிமையாக இருக்க வேண்டும் என்பதைத் தெரிவிக்கிறாள். பகவானைப் பிரிந்ததால் ஏற்படும் வருத்தத்தையும் , கூடுவதால் ஏற்படும் பேரானந்தத்தையும் தெரிவிக்கிறாள் இந்த இரண்டு பாசுரங்களின் மூலம் என்று கொள்ளலாம். இதுதான் ஜீவாத்மாவின் இயல்பு.
இதை ஆபரணங்கள் என்று பார்க்காமல், ஆசாரியன் செய்யும் பஞ்ச சம்ஸ்காரம் என்று பூர்வர்கள் சொல்வது உண்டு.
1. சூடகமே என்ற கை ஆபரணம் – திருக்கைகளால் செய்யும் திருவாதரணம். யாக சம்ஸ்காரம்2. தோள் வளையே என்ற தோள் ஆபரணம் – தோளில் பொறிக்கப்படும் சங்கு சக்கர முத்திரை . தாப சம்ஸ்காரம்3. தோடே என்ற காது ஆபரணம் – மந்திர ரகசியம். மந்திர சம்ஸ்காரம்4. செவிப் பூவே என்ற மேல் காது ஆபரணம் – தாஸ்ய நாமம். நாம் சம்ஸ்காரம்5. பாடகமே – திருவடிகளில் கைங்கர்யம். திருவடிகளை உடம்பில் தரித்தல். புண்டர சம்ஸ்காரம்
இந்த உடல் என்பது அந்தரியாமி என்ற இறைவனுக்கு ஆடை. ஆடை என்பது அடிமைத்தனத்தை உணர்த்துகிறது. சேஷத்துவம் காண்பிக்கப் படுகிறது. ஆடையை எடுத்து எப்படியும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்று பார்த்தால் பாரதந்திரியம் என்றும் கொள்ளலாம்.
பாற்சோறு மூடநெய் பெய்து முழங்கை வழிவார என்றால், இங்கே உண்போம் தின்போம் என்ற வினைச்சொல் இல்லை. பாற் சோற்றைக் கையில் எடுத்ததுதான் தெரிகிறது, நெய் முழங்கை வழியாக வழிவதைப் பார்க்கிறார்கள். ஆனால் அவர்கள் சாப்பிடவில்லை. பிறகு எல்லோரும் கூடியிருந்து குளிர்ந்தார்கள் என்று பாசுரத்தை தலைகட்டுகிறாள்.
அப்படியென்றால் என்ன நடந்தது என்று கூர்ந்து பார்க்கும் போது ஒரு உன்னதமான அர்த்தம் புலப்படுகிறது. எம்பெருமான் அருகாமையிலிருக்கும் அனுபவித்தில் இருக்க , உடலானது நெய் போல் உருகி நிற்பதால் எம்பெருமான் அல்லவோ அன்னமாக, ஜீவாத்மாக்களை உட்கொள்வதைத் காண்பிக்கிறது. அவனுக்குப் போகமாக இருப்பதுதான் ஜீவாத்மாக்களுக்கு இயல்பு. ஜீவாத்மாக்கள் அனைவரும் அவன் அனுபவிக்கப்படும் பொருள் என்ற உன்னதமான கருத்தை காட்டுகிறாள் ஆண்டாள் நாச்சியார் இந்த பாசுரத்தில். உடைமை உடையவன் என்ற பொருள் தொனித்தது இந்த பாசுரத்தில்.
எம்பெருமான் கைங்கரியத்தில் பேரானந்தம் அடைந்து, அடியார்கள் சூழ் இருப்பதுதான் மனதுக்குக் குளிர்ச்சி என்பதனை ” கூடியிருந்து குளிர்ந்து” என்று பாடியிருக்கிறார்.
சேஷத்துவம், பாரதந்திரியம், கைங்கரியம் இந்த மூன்றையும் தொடர்ந்து இரண்டு பாசுரங்களில் ஆண்டாள் வலியுறுத்தி பாடி வருவதைப் பார்க்கமுடிகிறது.சேஷத்துவம், பாரதந்திரியம் என்ற இரண்டு குணங்களும் கைங்கரியம் செய்ததற்கான அடிப்படை அம்சங்கள் என்று காண்பிக்கப்பட்டது.
எம்பெருமான் கைங்கரியம் பிராதனம் என்று தெரிவிக்கும் பாசுரம். பாடிப் பறைக் கொண்டு யாம் பெறும் சம்மானம் என்று கூறியதால் ஒன்று தொக்கி நிற்கின்றது. அதையும் ஒழித்து சரணாகதி செய்ய வேண்டும் என்பதனை அடுத்த பாசுரத்தில் காண்பிக்கப் போகிறாள்.
பிழைகள் அடியேனது நிறைகள் ஆசாரியன் திருடிக்கே