இப்போது அர்பன் நக்சல்ஸ் – லெஃப்ட் இன்டலக்சுவல்ஸ் – அதாங்க இடதுசாரி “அறிவு சீவி”- கட்டு அவிழ்த்துவிடப்பட்டோர் – லிபரல்ஸ்… எல்லாம் உத்தரப் பிரதேச தேர்தல் ஜோசியம் சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க!
“ஒன்பது MLA பாஜகவில் இருந்து விலகல் – 3 மந்திரிகள் பாஜகவில் இருந்து ஓட்டம் – அவ்வளவுதான் உ.பியில் பாஜக காலி – யோகி அவுட்டு!”
இவர்களை நம்பி இளவட்டங்கள் – பழைய அரசியல் தெரியாதவங்க – கூட சேர்ந்து ஜால்ரா!
உ.பி.யில் பாஜக என்பது ஏதோ மக்களின் உணர்வுபூர்வமான எழுச்சியில் spontaneousஆக உருவானதல்ல. உணர்வுபூர்வமான விஷயங்களை – ராம ஜென்ம பூமி போன்றவை – அது பிரசாரத்தின் ஒரு பகுதியாக வேண்டுமானால் பயன்படுத்தி இருக்கலாம்!
ஆனால் மிகத் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட கட்டமைப்பு அடங்கிய வளர்ச்சி அது!
கல்ராஜ் மிஸ்ரா, கல்யாண் சிங், ராஜ்நாத் சிங் போன்றவர்களின் நீண்டகால உழைப்பு அது!
சமுகக் கட்டமைப்பில் வெவ்வேறு சாதியச் சேர்மானங்களையும் – social engineering என்று ஆங்கிலத்தில் புகலப்படும் அணிசேர்க்கையை – திட்டமிட்டு வடிவமைத்த தளம் அது!
உ.பி. அரசியலில் ராம் மனோகர் லோகியாவின் சோஷலிஸ்டுக் கட்சிக்கு மிகப் பெரிய பலம் உண்டு – அவருடைய சீடர்கள்தான் முலாயம் சிங் யாதவ் மற்றும் பீகாரில் லல்லு போன்றவர்கள்!
இன்றைக்கு ராம் மனோகர் லோஹியா சித்தாந்த சோஷலிசத் தடத்தில் மிச்சம் இருப்பது சமாஜ்வாதிகள் இப்போது அணியும் சிவப்புக் குல்லாய் மட்டும்தான்!
முலாயம் சிங் காலத்திலேயே – சோஷலிசம் – எல்லாவற்றையும் கழற்றிவிட்டு – லோகியா விட்டுச் சென்ற OBC vote base- என்பதை மட்டும் ஸ்வீகரித்துக் கொண்டார்.
நம்ம ஊர் திமுக மாதிரி – பிராமண எதிர்ப்பு அதே நேரம் தலித்துகளை ஊறுகாய் மாதிரித் தொட்டுக்கொண்டு தமது OBC ஆதரவு தளத்தை மட்டுமே குறிவைத்து இயங்கியது சோஷலிஸ்ட் கட்சி – பிற்கால சமாஜ்வாதி! பிறகு காலப்போக்கில் “எல்லா OBC களுக்குமான தளம்”- என்பது சுருங்கிப் போய் – “யாதவ்”- கட்சியாக மட்டும் மாறிப்போனது சோஷலிஸ்ட் இயக்கம். இப்போது OBC – எனப்படும் “பிற்படுத்தப் பட்டோர்”- வாக்கு வங்கி முலாயம் சிங்குக்கு தளர்ந்து – “யாதவர் அல்லாத” இதர OBC க்களின் குரலாக பாஜக தன்னை கல்யாண் சிங் (லோத் சமூகம்) – உமா பாரதி போன்றோர்களை முன்னுக்குக் கொண்டு வந்தது!
இதனிடையில் கன்ஷிராமும் – மாயாவதியும் தங்கள் “தலித்” என்ற புதிய அரசியல் உத்வேக சொல்லாக்கத்தின் மூலம் – “பஹுஜன்”- (பெரும்பான்மையான தொகை உள்ள மக்கள்) என்ற பொருளில் BSP ஐ வளர்த்ததும் – அதுவரை முலாயம் சிங் கட்சி – ஊறுகாய் போலத் தொட்டுக் கொண்ட – தலித் வோட்டு வங்கி மாயாவதி பக்கம் திரும்பியது! (அதற்கு முன்பே யாதவ் சேனா, தாக்கூர் சேனா போன்ற அமைப்புகள் – தலித் மக்கள் மீது தொடுத்த தாக்குதல்கள் பிரசித்தம்).
நல்ல வாய்ப்பாக ராமர் கோயில் பிரச்னை முன்னுக்கு வந்தது – முலாயம் சிங் அதை ‘முஸ்லீம் அணிதிரட்டலுக்கு’ பயன்படுத்திக் கொண்டு – மாயாவதியால் உருவான – தலித் வோட்டு வங்கி இழப்பை சமன்படுத்திக் கொண்டார்! இதில் கடுமையாக பாதிக்கப்பட்டது காங்கிரஸ்தான்!
பிராமணர் வோட்டு – தலித் வோட்டு – முஸ்லீம் வோட்டு – என்ற முக்காலியில் சம்மணம் போட்டு உட்கார்ந்து இருந்தது காங்கிரஸ்! பிராமணர் வோட்டை BJP கழட்டிக் கொண்டு போக, முஸ்லீம் வோட்டை முலாயம் கழட்டிக் கொண்டு போக, தலித் வோட்டை மாயாவதி கழட்டிக் கொண்டு போக… – முக்காலியின் மூன்று கால்களும் கழன்று “பொத்”- என்று விழுந்தது காங்கிரஸ்!
நடுவில் சில காலம் – 1993 (என நினைவு) – முலாயம் + மாயாவதி OBC / SC UNITY என்றெல்லாம் சீன் காட்டினார்கள்! மாயாவதி அந்த ஆட்சியைக் கவிழ்த்து விட்டு பாஜகவுடன் கூட்டணி வைத்தது திருப்பம் என்றால் அரசு கெஸ்ட் ஹவுசில் வைத்தும் சட்டசபைக்குள்ளும் மாயாவதி கட்சிக்காரர்களை முலாயம் கட்சியினர் வெளு வெளு என்று வெளுத்ததும் நடந்தது! அத்துடன் OBC/ SC UNITY முடிவுக்கு வந்தது! பிறகு மாயாவதி தனது பிராமண துவேஷம், பனியா வெறுப்பு, வைசிய விரோதம் எல்லாவற்றையும் தற்காலிகமாக மூட்டை கட்டிவிட்டு – “பஹுஜன்”- என்பதை “சர்வஜன்”- என்று மாற்றி பிராமணர்கள் உள்ளிட்ட எல்லா வகுப்பினருக்கும் சீட் கொடுத்து – அதில் ஜெயிக்கவும் ஜெயித்து காட்டினார்! (2007).
இத்தனை அமர்க்களத்துக்கு நடுவில் சைலண்டாக வேலை பார்த்தது பாஜக! பதவிக்கு வந்த மாயாவதி – தலித் சமூகத்தவரிலேயே தான் சார்ந்த (மீனா) சாதிக்கு மட்டும் பரிவு காட்டினார் என விமர்சனங்கள் எழுந்தன! ஏற்கனவே முலாயம் சிங் கட்சி – ஒட்டுமொத்த “பிற்பட்டோருக்கான” கட்சி என்ற பிம்பத்தை இழந்து – யாதவ் பார்ட்டி – என்ற ஒற்றை லேபிளுடன் நின்றது!
எனவே .
1) யாதவர் அல்லாத இதர OBC.
2) மாயாவதியின் சமூகம் சாராத இதர தலித்.
3) ஏற்கனவே காங்கிரசிடம் இருந்து கழன்று கொண்டு பாஜக நோக்கி நகரத் தொடங்கிய பிராமணர் உள்ளிட்ட முற்பட்ட வகுப்பினர்.
ஆகியோரின் இணைவு பாஜகவை நோக்கி நகரத் தொடங்கியது! இதையே மற்றவர்கள் செய்தால் – “SOCIAL ENGINEERING”- என்பார்கள்! அப்படி உருவாகும் சந்தர்ப்பத்தை பாஜக பயன்படுத்தினால் – “சாதிய அணி சேர்க்கை” என்பார்கள்! அதுதான் 300 க்கு மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளை பாஜகவுக்கு அள்ளிக் கொடுத்தது!
இப்போதும் ராகுல் காந்தி என்னதான் ‘காஷ்மீர் கவுல் பிராமண ‘- வேடம் போட்டாலும் பிராமணர்கள் நம்பத் தயாராக இல்லை! மாயாவதி என்னதான் – “சர்வஜன்”- என்றாலும் அவருடைய சமூகம் அல்லாத இதர தலித் சமூகத்தவரும், வர்மா, பாண்டே, திரிபாதி, திவாரி எவரும் நம்பத் தயாராக இல்லை! அகிலேஷ் “சிவப்புக் குல்லாய்” மாட்டிக் கொண்டு லோகியா காலத்து – OBC IMAGE – ஐ தூக்கி நிறுத்த முயன்றாலும் யாதவர் தவிர இதர OBC பகுதியினரில் பெரும்பாலோர் நம்பத் தயாராக இல்லை!
ஏனென்றால் கடந்த காலங்களில் இவர்கள் ஆண்ட லட்சணம் அப்படி! தாங்கள் அரசு – சமூக தளங்களில் ஓரம் கட்டப்படாமல் இருக்க வேண்டுமானால் பரந்த தளமான “ஹிந்துத்வா” தான் கை கொடுக்கும் என்பதை அனுபவ பூர்வமாக அறிந்தவர்கள் அவர்கள்! எனவேதான் அகிலேஷ் யாதவ் கட்சியினர் – நாங்கள் ‘மவுரியா’ வை இழுக்கிறோம், சவுஹானை இழுக்கிறோம் என்று – யாதவ் அல்லாத இதர OBC தலைவர்களை சிலரை இழுக்கிறார்கள்!
ஆனால் பாஜகவை நோக்கி வந்த அந்த சமூக அணி சேர்க்கையும் – அதை உரிய வகையில் வடிவம் கொடுத்து அரசியல் தளமாக பாஜக உருவாக்கிய சமூகக் களமும் அப்படியேதான் உள்ளது! “பாருங்கள் – உங்கள் ஜாதியைச் சேர்ந்த விகாஸ் துபேவை யோகி என்கவுண்டரில் போட்டுத் தள்ளிவிட்டார்!”- என்று ஒருவேளை பிராமணர்களிடம் பிரசாரம் செய்தாலும் , அவர்களுக்கு மோடி எடுத்த “கங்கா ஆரத்தி” தானே கண்ணில் தெரியும்! இதில் என்ன வேடிக்கை என்றால். இந்த அளவு உ.பி.யின் அரசியல் ஆழமே புரியாமல் பலரும் – “அவ்வளவுதான் யோகி காலி”- என்று குதிப்பதுதான்!
அவர்களுக்குப் புரியும் உதாரணமாகச் சொல்வோம்:- நினைவிருக்கிறதா 1980?
ஜனவரி 1980 – நாடாளுமன்றத் தேர்தல்! அதிமுக படு தோல்வி! சிவகாசி, கோபிசெட்டிபாளையம் இரண்டே இரண்டு தொகுதிகள்தான் அதிமுக வென்றது! திமுக – காங்கிரஸ் கூட்டணி பிரமாண்ட வெற்றி! கலைஞர் இந்திராகாந்திக்கு அழுத்தம் கொடுத்து – மற்ற மாநில ஜனதா கட்சி அரசுகளைக் கலைத்தபோது தமிழகத்தில் MGR ஆட்சியையயும் கலைக்க வைத்தார்! உடனே நாஞ்சில் மனோகரன், சுப்புலட்சுமி ஜெகதீசன், பி.டி.சரஸ்வதி போன்ற – அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்கள் எல்லாம் திமுகவுக்கு ஒடினார்கள்!
“அவ்வளவுதான் எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கை காலி!“- என்று துள்ளிக் குதித்தார்கள்!
பிறகு ஜூன் 1980 ல் சட்டமன்றத் தேர்தல்! கோபிச்செட்டிபாளையம் K.A. செங்கோட்டையன் (அதிமுக) வெற்றிச் செய்திதான் முதலில் – அதிலிருந்து அதிமுக வெற்றி மழையாகக் கொட்டியது! வள்ளுவர் கோட்டத்தில் தனது முதல்வர் பதவி ஏற்பு விழாக் கனவுகளோடு – கொடி தோரணம் சகல ஏற்பாடுகளுடன் காத்திருந்த கருணாநிதி – அண்ணாநகர் தொகுதியில் டாக்டர் ஹண்டேயிடம் ‘தப்பித்தோம் பிழைத்தோம்’ என்று வெறும் 699 வோட்டு வித்தியாசத்தில் கரை ஏறினார்!
கடைசி நேரத்தில் பிரசார நேரம் முடிந்ததால் – பேச முடியாது என்பதால் வெறுமனே இரண்டு விரலைக் காட்டியபடி – திறந்த வேனில் அரை மணி நேரம் வலம் வந்த MGR – மதுரை மேற்கில் அநாயாசமாக வென்றார்!
மயிலாப்பூரில் நாஞ்சில் மனோகரன் தோற்றதையே- மதுரை மேற்கில் MGR வென்றதை விட அதிக உற்சாகத்தோடு கொண்டாடி மகிழ்ந்தனர் அதிமுகவினர்!
இதெல்லாம் வரலாறு! ஒருசில தலைவர்கள் இடம் பெயர்வது தேர்தலில் கட்சியை பாதித்துவிடாது என்பதை இன்டலக்சுவல்ஸ், கழகத்தார் உட்பட உ.பி அரசியலை அலசுவோர் அறிய வேண்டும்!

பி.கு கருத்துக் கணிப்பு : 42% வோட் ஷேர், 52% யோகி முதல் அமைச்சர் தேர்வு, 250 + சீட்டுகள் என்று பாஜக செளகரியமான நிலையில் தற்போது உள்ளது