மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வன வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்
ஆண்டாள் மேல் பாசுரத்தில் நேரில் நின்று கண்ணனின் பெருமையைக் கூறி , உன்னை அருத்தித்து வந்தோம் என்று சொல்லி , பறை தருதியாகில் என்றும் கேட்டால். பறை எதற்கு என்று கேட்க, மார்கழி நீராட்டத்துக்கு என்று முதல் பாடலில் பாடியதை நினைவு படுத்திக் கூறுகிறாள். மார்கழி நீராட்டத்துக்குப் பறை வேண்டும் என்பதனை எங்குக் கண்டீர்கள் என்று கண்ணன் கேட்க முன்னோர்கள் செய்த நெறிகளைப் பின்பற்றியே நாங்களும் கேட்கிறோம் என்று இப்பாடலில் கூறுகிறாள்.
இந்தப் பாசுரத்தில் பறைகள் என்று சங்கங்கள், பெரும்பறை, பல்லாண்டு பாடும் வேத விற்பன்னர்கள், கோல விளக்கு, கொடி, விதானம் ஆறு கருவிகளைப் பிரார்த்திக்கிறாள்.
மேல் பாசுரத்தில் அறுசுவைப் போற்றி பாடிய ஆயர் சிறுமிகள் இந்தப் பாசுரத்தில் அறுவகை உபகரணங்களை ( கருவிகளை) பிரார்த்திக்கிறாள்.
அவனை மாலே என்று அழைத்த காரணத்தினால் அவனிடம் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டதைக் காண்பிக்கிறது இந்தப் பாசுரம். அவனைப் பித்தன் என்று சொல்லும் அளவுக்கு நெருக்கத்தைக் காண்பிக்கிறது.நெருங்கியவுடன் அவன் சௌந்தரியத்தை ரசிக்கிறார்கள் ஆண்டாள் கோஷ்டியினர் ” மணிவண்ணா” என்று. மணி என்பது உபயோகப்படுத்துவானின் ரசனைக்கு ஆட்படுவது போல் எம்பெருமானும் ஜீவாத்மாக்களுக்கு இருக்கிறான். அதனால்தான் நாத்திகனுக்கு அவன் இல்லை என்றும் , ஆஸ்திகனுக்கு அவன் சொத்தாகவும் இருக்கிறான். மணிவண்ணன் குணம் எப்படியென்றால் ஐசுவரியத்தை அனுபவிப்பாருக்கு ஐசுவரியமாகவும், கைவல்ய அனுபவத்தை விரும்புபவர்களுக்கு அந்த ஆத்ம அனுபவத்தையும், பகவானை அனுபவிக்க விரும்புபவர்களுக்குத் தன்னையே தந்து பகவத் அனுபவத்தையும் ஏற்படுத்துகிறான் எம்பெருமான்
முன்னோர் மொழிந்த முறையில் நீராட்டத்துக்கானக் கருவிகளைக் கேட்கிறார்கள். ஆயர் சிறுமிகள் என்பதனால் சாஸ்திரத்தை அறியாதார் என்றும், ஆனால் வழிவழியாக வந்ததைப் பார்த்துக், கடைப்பிடித்து வந்ததால் அறிந்தோம் என்று கூறுகிறாள்.
பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே என்றால் தூய வெண்மை நிறத்தையுடைய உன் பாஞ்சசன்னியமே என்று கூறுகிறாள். பின் வரும் கருவிகள் அனைத்திலும் ” ஏ” காரத்தை ஏற்றிக் கூறுவதைக் கவனிக்கவும். அதேபோல் இருக்கும் வஸ்துக்களை அன்று, நாங்கள் கேட்கும் கருவிகளை மட்டுமே அப்படியே தந்தருள வேண்டும் என்று பிரார்த்திக்கிறாள்.
அவன் உபயோகப்படுத்திய பாஞ்சசன்னியம் போன்ற பல சங்கங்கள் வேண்டும் என்று முதலில் வேண்டுகிறாள். எந்த சங்கத்தை வைத்து சங்கநாதம் செய்து உலகத்தை நடுங்க செய்தாயோ, அந்த சங்கம் வேண்டும். அதேபோல் நிறையச் சங்கங்கள் வேண்டும் என்றாள்.
அகலமான பெரிய பறை வேண்டும்,உன் திருக்குணங்களைப் பாடவல்ல இசை வல்லுநர்கள் வேண்டும், நன்றாகச் சுடர்விட்டு பிரகாசிக்கக் கூடிய விளக்குகள் வேண்டும், உயர்ந்து பறக்கக்கூடிய கொடிகள் வேண்டும், பனி எங்கள் மேல் விழாமல் இருக்கப் பெரிய விதானம் வேண்டும் என்று கேட்டார்கள். இவை அனைத்துக்கும் இப்பொழுது எங்குச் செல்வோம் என்று கண்ணன் கேட்க, நீயோ ஆலின் இலையில் அமர்ந்தவன் என்பதனால் உன்னால் முடியாதது இவ்வுலகில் ஒன்றும் இல்லை என்பதைத் தெரிவித்தார்கள். ஆதலால் நீ எங்களுக்கு அருள்வாயாக என்று பிரார்த்தித்தாள்.
ஆவின் இலை கிருஷ்ணன் என்றால் சிறிய உருவத்தினுள் பெரிய உலகத்தை அடக்கியவன் என்று பொருள். ஆலமரத்தின் விதை சிறியது ஆனால் மரமோ பெரியது. ஆதலால் அதன் இலைமேல் பள்ளி கொண்டு சிறிய வஸ்துக்குள் பெரியது அடக்கம் என்பதனைத் தெரிவித்தான். இதற்கு அகடதகடனா சாமர்த்தியம் என்று கூறுவார்கள். மற்றவர்களினால் எண்ணமுடியாத செயல்களைச் செய்து முடிப்பவன் இவன் என்று பொருள். ஆதலால் நாங்கள் கேட்ட கருவிகளை உன்னால் எளிதில் கொடுக்கமுடியும் என்று , ஆலின் இலையாய் அருள் என்று ஶ்ரீ வில்லிபுத்தூர் வடபத்ரசாயி( ஆவின் இலை சயனத்தன்) எம்பெருமானை வேண்டி நிற்கிறாள்.
இந்த ஆறு கருவிகளை ஆண்டாள் எங்கே பார்த்தால் என்றால், பெரியாழ்வார் ஆண்டாள் வாழ்க்கை என்பது கோவில் சுற்றி அமைந்தது. கோயில் புறப்பாடு காலங்களில் , பெருமாள் புறப்பாடு முன் சங்கநாதம் , சின்னம் என்ற கருவிகள் மூலம் ஒலி எழுப்பப்படும். பறை வாத்தியங்கள் முழங்கப்படும். திவ்யபிரந்த வித்துவான்கள் பல்லாண்டு பாடுவார்கள். தீப விளக்குகள் பலவற்றை ஏந்திச் செல்வார்கள். சிறுவர் சிறுமிகள் கொடிகள் , சாமரம், தண்டுகளைப் பிடித்து வருவார்கள். வெயில் மற்றும் பனித்துளிகள் எம்பெருமான் விழாமல் காக்க விதானம் பிடிப்பார்கள். இதை அனைத்தும் வடபத்ரசாயி எம்பெருமானிடம் பார்த்ததை இந்த பாசுரத்தில் கேட்கிறாள்.
ஒன்று புரிகிறது இந்த ஆறு கருவிகளும் எம்பெருமான் கைங்கரியத்துக்குப் பயன்படும் பொருள்கள் என்று. மேல் பாசுரத்திங்களில் அறுசுவை பல்லாண்டு பாடி, உன்னை அருத்தித்து வந்தோம் என்று சொல்லி, ஆறு கைங்கரியங்களைப் பிரார்த்தித்து நிற்கிறார்கள்
நம்மாழ்வார் கைங்கரிய பிரார்த்தனையை மூன்றாம் பத்தில் ஒழுவிலா காலம் பதிகத்தில் வைத்து , ஆறாம் பத்தில் சரணாகதி உலகம் உண்ட பெருவாயா என்ற பதிகத்தில் வைத்தது போல் ஆண்டாள் பாசுரங்கள் உள்ளது. உன்னை அருதித்து வந்தோம் என்று சொல்லி , கைங்கரியம் செய்வதற்கான கருவிகளை இங்கே கேட்பதன் எண்ணத்தை வைத்துப் பார்க்கும்போது தெரிகிறது.
ஆண்டாள் 28வது பாசுரத்தில் சரணாகதி அனுஷ்டித்து , 29ல் கைங்கரியத்தைத் தெளிவாகத் தெரிவித்தாலும், மேல் பாசுரத்திலும் இந்த பாசுரத்திலும் கைங்கர்யம் பிரதானம் என்பதை மறைத்துக் காட்டியுள்ளதைக் கவனித்தால் ஆண்டாளின் நுணுக்கம் தெளிவாகத் தெரிகிறது.
ஆறு கருவிகளின் மூலம், வடபெருங்கோயிலுடையான் அருளுடனும் ஆண்டாள் சரணாகதிக்கு மனதைப் பக்குவப்படுத்திக் கொண்டு செல்வதற்கு ஆயத்தமாக இருப்பதைத் தெரிவிக்கும் பாசுரம்.
அநந்ய சேஷத்துவம், பாரதந்திரியம், சத்சங்கத்துவம், பாகவத சேஷ ஞானம், பகவத் கைங்கர்யம், போக்த்ருத்துவ நிவர்த்தி என்று இந்த ஆறு குணங்களை இந்த ஆறு கருவிகளின் மூலம் கேட்பதாக பெரியவர்கள் சொல்லி கேள்வி. அந்த வகையிலும் அறிந்து இந்தப் பாசுரத்தை அனுபவிக்கலாம்.
ஆண்டாள் திருவடிகளே சரணம்