ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்
ஆண்டாள் இன்னும் அவர்கள் எதற்காக வந்துள்ளார்கள் என்று சொல்லாத நிலையில் , எம்பெருமான் உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்கிறான். பறை பறை என்று சொல்லுகிறீர்கள், அந்தப் பறையைக் கேட்பதற்காக நீங்கள் அதிகாலையில் எழுந்திருந்து இவ்விளவு தூரம் வந்தீர்கள் என்றும் எம்பெருமான் கேட்கிறான்.
உன்னையே அருத்தித்து வந்தோம் என்று ஶ்ரீ வைஷ்ணவ லக்ஷணத்தைத் தெரிவித்து , பறையைத் தந்தால் அதைவைத்து தாயாரையும் உன் வீர குணங்களையும் பாடி எங்கள் வருத்தத்தைத் தீர்த்து மகிழ்வோம் என்று ஆண்டாள் கூறுகிறாள்.
வருத்தமும் தீர்ந்து என்பதன் உட்பொருள் பலகாலம் தொடரும் இந்த ஊழ்வினையை இங்கே, அதாவது இப்பூவுலகில் தீர்த்து, பரமபதம் அடைந்து உன்புகழைப் பாடி பேரானந்தம் அடைவது என்பதனை மகிழ்ந்தோம் என்ற விசிஷ்டாத்வைத தத்துவத்தை விளக்குகிறாள் ஆண்டாள் இந்தப் பாசுரத்தில். அதனால்தான் நெடுமாலே உன்னை அருத்தித்து வந்தோம் என்று முதலில் பாடினாள்.
திருத்தக்க செல்வம் என்றால் திரு என்ற தாயாருக்கு ஏற்ற செல்வம் எம்பெருமான் , எம்பெருமானுடைய வீர சேஷ்டிதங்களை நாங்கள் பாடி வருத்தத்தை தீர்த்துக் கொண்டு , பாடுவதன் மூலம் மகிழ்ச்சியை அடைவோம்
இந்தப் பாசுரத்திலும் பறை தருதியாகில் என்ற சப்தத்தை வைத்து , இன்னும் முழுமையாக அவர்கள் வந்த காரியத்தைச் சொல்லாமல் யூகிக்கும்படி பாடியுள்ளாள்.
ஒருத்தி என்பதன் மூலம் ஒப்பற்ற ஒருத்தி, இவளைப் போல் மற்றொருத்தி இல்லை என்பதைக் காட்டுகிறாள். பெற்றதனால் ஒருத்தி , வளர்த்ததனால் ஒருத்தி.
விசிஷ்டாத்வைதம் தத்துவத்தில் பரம்பொருள் ஒருவனே. அவன் ஒப்பற்ற ஒருவன். அவனுக்கு நிகர் அவனே. அவனுக்கு மாற்றாக மற்றொன்றைக் கூறமுடியாது. இந்தப் பரம்பொருள் சேதனம் அசேதனத்துடன் கூடிய பரம்பொருள்.
பெற்ற தாய் ஒருத்திக்கு அவன் பரம்பொருள் என்பதனை சங்கு சக்கரமேந்திய தடக்கையன் மூலம் காட்சியளித்தான். அவள் பேச்சைக் கேட்டு சங்கு சக்கரத்தை மறைத்து இருக்கைகளோடு காட்சியளித்தான். பரத்துவத்தையும் எளிமையையும் ஒருமித்துக் காட்டினான் பெற்ற தாய் ஒருத்திக்கு. இவளுக்கு அவதார ரஸத்தை வழங்கினான்.
வளர்த்த தாய் ஒருத்திக்கு வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே என்று பரத்துவத்தை, அவனே ஜகத்காரணன் என்பதைக் காட்டினான். அவள் தாம்பு கொண்டு கட்டுவதற்கு அடிபணிந்தான். இப்படியாக வளர்த்த தாய் ஒருத்திக்குப் பரத்துவத்தையும் எளிமையையும் காட்டினான். இவளுக்கு லீலா ரஸத்தை வழங்கினான்.
இப்படியாக பரத்துவத்தையும் எளிமையும் என்ற இருதுருவ குணங்களைக் காட்டினான் எம்பெருமான். ஜகத்துக்கு காரணமான எம்பெருமான் இங்கு வந்த பிறந்தது என்றால், அவன் பிறந்து நாம் வாழ்ந்தோம் என்பதற்காக.
விசிஷ்டாத்வைத தத்துவத்திற்கும் இரண்டு தாய். ஈன்ற முதல் தாய் சடகோபன் வளர்த்த இதத்தாய் ராமானுஜன்.
ஒருத்தி என்று ஆண்டாள் பெயர் சொல்லாமல் விட்டுவிட்டதற்கு , கம்சன் ஆயர்பாடியில் தேடி கண்டுபிடிக்கட்டும், கண்டுபிடிப்பதில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தவே என்றும் கொள்ளலாம். வார்த்தையை மறைத்துக் கூறினாள். இந்த வார்த்தை பிரயோகத்தை அவளுடைய திருதகப்பனாரிடம் கற்றுக்கொண்டாள். பெரியாழ்வார் கண்ணன் பிறந்த நக்ஷத்திரத்தை மறைத்துக் கூறினார். திருவோணமா ? ரோகிணியா? என்ற யூகத்திற்கு விட்டார்.
“சித்தம் பிரியாத தேவகி தன்வயிற்றில் அத்தத்தின் பத்தா நாள் தோன்றிய அச்சுதன்”
கண்ணன் நேர் முன் நிற்பதனால் , அவனுடைய தாய்மார்களின் பெயர்களைப் பேர் சொல்லி அழைக்க முடியாது என்ற காரணமும் கொள்ளலாம். கண்ணன் நேரில் இல்லாத காரணத்தினால் மேல் பாசுரங்களில் யசோதா பிராட்டி என்று பேர் சொல்லி அழைத்தால்.
கஞ்சன் கண்ணனை அழித்துவிட பல திட்டங்களைச் செயல்படுத்தினான். அந்த திட்டங்கள் அனைத்திலும் பிழைகளை ஏற்படுத்தி பொய்க்கச் செய்து, திட்டங்களை பூண்டோடு அழித்தான் எம்பெருமான். இது ஒரு காரியமா ? இரண்டு காரியமா? கஞ்சன் எண்ணற்ற தீய காரியங்களை அழித்து அவன் வயிற்றில் நெருப்பென நின்றான். ஆய்ச்சியர்கள் வயிறுபிடித்தது அந்தக் காலம், இப்பொழுது வயிறுபிடித்தது கஞ்சன் வயிற்றில்.
கஞ்சன் வயிற்றில் நெருப்பு பிடிக்க கண்ணன், ஒருத்தி என்ற தேவகி வயிற்றில் பிறந்தான்.
ஆயர்பாடியில் புழு பூண்டுகள் எல்லாம் அசுர வடிவம் எடுப்பதைக் கண்டு, ஆய்ச்சியர்கள் ஆயர்கள் வயிறு பிடித்து இருந்த காரணத்தினால், கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ற நெடுமாலே என்று இவன் வயிற்றில் நெருப்பு பிடிக்க நின்றான் என்று பாடியுள்ளாள்.
ஆண்டாள் கண்ணனிடம் நெருங்கி வந்துள்ளதை இந்தப் பாடலில் உணரமுடிகிறது.
ஆண்டாள் திருவடிகளே சரணம்