திருப்பாவை -19
குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா! வாய்திறவாய்!
மைத் தடங்கண்ணினாய், நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ வொட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவமன்று தகவேலோ ரெம்பாவாய்.
மேல் பாசுரத்தில் நப்பின்னை பிராட்டி கடாக்ஷத்தை வேண்டினார்கள் ஆண்டாள் கோஷ்டியினர். அவள் கருணையைப் பெற்றுக்கொண்டு கண்ணன் அருளைப் பெறப் பிரார்த்திக்க வேண்டும் என்பது மரபு. அந்த மரபைப் பின்பற்றி நப்பின்னையுடன் சேர்ந்து கண்ணன் அருளைப் பிரார்த்திக்கும் பாசுரமாக இந்த பாடலும், அடுத்த பாசுரம் ” முப்பத்து மூவர்” பாசுரமும் அமைந்துள்ளது.
இந்த இரண்டு பாசுரமும் மந்திர ரத்தினம் என்று ஶ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தில் போற்றப்படும் த்வய மந்திரம் சாரமாக அமைந்த பாசுரம் என்று போற்றப்பட்ட பெருமையான சிறப்பான பாசுரங்கள். அடியார்கள் விரும்பும் பாசுரங்கள். தாயாரையும் பெருமாளையும் சேர்த்து அருளைப் பிரார்த்திக்கும் பாசுரம். த்வய மந்திரம் இரண்டு வாக்கியங்களைக் கொண்டது.
ஸ்ரீமன் நாராயண சரணௌ சரணம் ப்ரபத்யே. ஸ்ரீமதே நாராயணாய நம:
தாயாருடன் சேர்ந்திருக்கும் எம்பெருமானிடம் சரணாகதி அடைந்து, சேர்ந்திருக்கும் திவ்யதம்பதிகளிடம் கைங்கரியம் செய்வது என்பது பொருள். தாயாருடன் கூடிய எம்பெருமானே உபாயம் உபேயம்.
இந்த பாசுரத்தில் மலர் மார்பா என்று கண்ணன் அருளையும், மைத்தடங் கண்ணினாய் என்று நப்பின்னை பிராட்டி அருளையும் பிரார்த்திக்கும் பாசுரம்.
“கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா” என்ற வரியே , பாசுரத்தின் அச்சாணி. பொதுவாக நோக்கினால் பிராட்டியின் கருணையே மேல் என்று தோன்றும். அதுதான் இயல்பு. ஆனால் எம்பெருமான் கருணை என்பது பிராட்டியின் கருணையை விட மேல் என்று காண்பிக்கிறாள் இந்தப் பாசுர வரிகளைக் கொண்டு.
கொங்கை என்பது கருணையின் வடிவம். பாசம், கருணையின் பிறப்பிடம் என்பது பெண்ணின் முலைத் தடங்கள். நப்பின்னை கருணையின் மேல் கிடக்கும் , மலர்மார்பன் கருணை என்று காட்டப்பட்டது.
தந்தையும் மகளும் எம்பெருமான் கருணையை மேல் என்று காட்டினார்கள். திருத்தந்தையார் பெரியாழ்வார் திருமொழியில்,
“தன்னடியார் திறத்தகத்துத் தாமரையாளாகிலும் சிதகுரைக்குமேல்என்னடியார் அதுசெய்யார் செய்தாரேல் நன்றுசெய்தார் என்பர்போலும்”
என் அடியார்கள் குற்றங்கள் செய்ய மாட்டார்கள் , அப்படியே செய்தாலும் நன்மைகளே செய்வார்கள் என்று எம்பெருமான் தாயாரிடம் சொல்லுவதாக , பெரியாழ்வார் அமைத்துள்ளார்.
தாயாருடன் கூடிய எம்பெருமான் என்பது உபாயம் உபேயம். இதுதான் தத்துவம் ( உண்மை) தகவு ( இயல்பு). இதை திவ்ய தம்பதிகள் சேர்ந்து எங்கள் மேல் கருணை செய்யாமல் இருப்பது என்பது, உங்களுடைய தத்துவமும் தகவும் அன்று என்று காட்டப்பட்டது. உங்களுடைய தத்துவத்துக்கும் தகவுக்கும் ஏற்ப அருள் புரிவாயாக என்று பிரார்த்திக்கும் பாசுரம்.
பஞ்ச சயனம் என்று ஆண்டாள் இந்தப் பாசுரத்தில் பாடியுள்ளதை உற்று நோக்கினால் பலவிதமான கருத்துக்கள் இருப்பதை உணரமுடிகிறது.
சயனம் என்றால் படுக்கை, அதில் என்ன பஞ்ச சயனம் என்றே தோன்றும். அந்த ஒரு சப்தத்துக்குள் எத்தனை அர்த்தங்களை அள்ளி வழங்குகிறாள் ஆண்டாள். ஆண்டாளின் தமிழ் புலமையும் , சொல் திறனும் இதன் மூலம் புலப்படும்.
பஞ்ச சயனத்தின் மேலேறி என்றால், பரமபதம் செல்லும் ஆத்மாக்கள், ஆதிசேஷன் என்ற படுக்கையின் மேலேறி எம்பெருமான் மடியில் அமருவதை உணர்த்துவதாகக் கொள்ளலாம்.
1. எம்பெருமான் எல்லா இடங்களில் உறைந்து இருந்தாலும் , குறிப்பாக ஐந்து இடங்களில் விசேஷமாக உறைந்து இருப்பதைப் பார்க்கமுடிகிறது.a) ஆதிசேஷன் மேல் துயில்b) ஆலிலைத் துயில் c) உறை நிலங்கள் எனும் திவ்ய தேசம்d) வேத வேதத்தின் உட்பொருளாகe) அந்தரியாமி
2. பஞ்ச சயனம் என்பது ஐந்து குணங்களைக் கொண்ட படுக்கை என்று பொருள் கொள்ளலாம்.a) மென்மை b) குளிர்ச்சிc) நறுமணம் d) அழகுe) தூய்மை (அ) வெண்மை
அழகுக்குப் பதில் விஸ்தாரமான படுக்கை என்ற ஒரு பாடமும் கொள்ளலாம்.
3. பஞ்ச சயனம் என்பது ஐந்து பொருள்களினால் செய்யப்பட்ட படுக்கை
a) மென்கம்பளிb) இலவம் பஞ்சுc) நறுமண பூக்கள்d) கோரைப் புல்e) தேங்காய் நார்
4. பரமபதம் செல்வதற்கு அர்த்த பஞ்சகம் என்ற ஐந்து அர்த்தங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது ஶ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயம்.
a) இறைநிலை (பரமாத்மா ஸ்வரூபம்)b) உயிர்நிலை ( ஜீவாத்மா ஸ்வரூபம்)c) அடையும் வழி (அ) தக்க நெறி ( உபாய ஸ்வரூபம்)d) தடை ( விரோதி ஸ்வரூபம்)e) அடைந்து அனுபவிக்கும் நிலை ( புருஷார்த்த ஸ்வரூபம்)
5. பஞ்ச சயனம் என்பது பஞ்ச பூதங்களிலும் உறைந்து நிற்கும் எம்பெருமான். இதனைத் திருமழிசையாழ்வார் பாசுரம் மூலம் அனுபவிக்கலாம்.
“பூநிலாய வைந்துமாய்ப் புனற்கண்நின்ற நான்குமாய்
தீநிலாய மூன்றுமாய்ச் சிறந்தகா லிரண்டுமாய்
மீநிலாய தொன்றுமாகி வேறுவேறு தன்மையாய்
நீநிலாய வண்ணநின்னை யார்நினைக்க வல்லரே.“
6. பஞ்ச சயனம் என்பது ஐந்து பொறிகளை அடக்கும் தன்மை கொண்டவை. ஐந்து பொறிகளும் ஒருங்கே பஞ்ச சயனத்தின் மேல் ஈர்க்கப்படும் சக்தி உண்டு.
7. பஞ்ச சயனம் என்ற ஐந்து காவேரி கரை க்ஷேத்திரத்தில் சயனித்துள்ளான்a) ஆதிரங்கம், ஶ்ரீரங்க பட்டினம், புஜங்க சயனம்b) அப்பால் ரங்கம், புஜங்க சயனம்c) மத்யரங்கம் , திருவரங்கம், புஜங்க சயனம்d) சதுர்த்த ரங்கம், சார்ங்கபாணி, உத்தான சயனம்e) அந்தரங்கம், திருஇந்தளூர் , சதுர் புஜத்துடன் வீரசயனம்
8. பாஞ்சராத்ரா முறைப்படி எம்பெருமானை ஆராதித்து கண்ணன் எம்பெருமானைப் பற்றுவது என்பது காட்டப்பட்டது. இந்த ஆகம விதிகள் எம்பெருமானை அடைவதற்கான நெறிமுறைகள்.
ஆண்டாள் திருவடிகளே சரணம்
மகர சடகோபன்தென்திருப்பேரை