பாசுபதாஸ்திரம் வேண்டி சிவபெருமானைத் தேடிச்சென்ற அர்ச்சுனனின் வரவை எதிர்நோக்கி இருந்தனர் மற்ற பாண்டவர்களும் திரௌபதியும். அப்போது ஆயிரம் இதழ்களைக் கொண்ட அழகிய தாமரை/சௌகந்திகா மலர் ஒன்று காற்றால் அடித்து வரப்பட்டதைக் கண்டாள் திரௌபதி. அதன் அழகைக் கண்டு இந்த மலரை நான் நீதிமானான யுதிஷ்டிரருக்கு வழங்குவதாகவும் எனக்கு இதுபோன்று இன்னும் சில மலர்கள் வேண்டும் என்றும் பீமசேனனிடம் வினவினாள் திரௌபதி. தனது இல்லாளின் சொல்லை ஏற்ற பீமன் அம்மலர்களைத்தேடி அம்மலர் அடித்து வந்த திசையை நோக்கி பயணத்தை மேற்கொண்டான் அந்த வாயுவின் மைந்தன்.!
திரௌபதியின் இச்சையை போக்கும் விதமாக பயணத்தை மேற்கொண்ட பீமசேசனன் தான் சென்ற திசையில் தனக்கு எதிராக இருந்த மரங்களையும், விலங்குகளையும் தூக்கி வீசி கர்ஜித்தபடியே முன்னேறினான் பீமசேனன். ஒரு யானையை இன்னொரு யானையின் மீதும் ஒரு சிங்கத்தை இன்னொரு இன்னொரு சிங்கத்தின் மீதும் வீசி எறிந்து கொல்ல ஆரம்பித்தான். தனது கர்ஜனைகளால் விலங்குகளை பயமுறச்செய்தான் அந்த விருகோதன். தனது பலம் ஒன்றையே நம்பிச்சென்ற பீமசேனன் தனது சங்கை எடுத்து முழங்கினான்.
இதைக்கண்ட பீமசேனனின் தமயனான அனுமன் பீமனுக்கு நன்மை செய்யும் பொருட்டு பீமனை தடுக்க எண்ணி பீமசேனன் வரும் வழியில் ஒரு வயோதிக குரங்கு வேடம் பூண்டு படுத்திருந்தார். பீமனோ தனக்கு வழிவிடுமாறு கூறியும், எனது வயோதிகத்தால் என்னால் இங்கிருந்து நகரமுடியவில்லை என்றும் வேண்டுமானால் என்னைத் தாண்டிச் செல்க என்றும் கூறியது அந்த வயோதிகக்குரங்கு (ஹனுமன்). இதைக்கேட்ட பீமன் குணங்களற்ற பரமாத்மா உடல் முழுவதும் இருக்கிறான். ஞானத்தால் அறியத்தக்க அவனை என்னால் அவமதிக்க இயலாது. எனவே, நான் உன்னைத் தாண்டிச் செல்ல மாட்டேன். அனைத்து உயிர்களிலும் உறைந்திருக்கும் பரமாத்மாவை நான் அறியாதிருந்தால், கடலைத் தாண்டிய ஹனுமானைப் போல, உன்னையும் இந்த மலையையும் நான் தாண்டியிருப்பேன்” என்றான்.
அதற்கு அந்த வயோதிகக் குரங்கு பீமசேனனிடம் “கடலைத் தாண்டிய அந்த ஹனுமான் யார்? ஓ! மனிதர்களில் சிறந்தவனே, நான் உன்னைக் கேட்கிறேன். உன்னால் முடிந்தால் அதைச் சொல்” என்று கேட்டது அந்த அப்பாவி குரங்கு. இங்கிருக்கும் இந்த வயோதிகக்குரங்குதான் ஹனுமன் என்று அறியாத பீமசேனன் இவ்வாறு கூறினான். “அவன் எனது தமயன். அனைத்தையும் அற்புதமாகவும் சரியாகவும் செய்பவன். அவன் புத்திகூர்மை கொண்டவன். மன பலமும் உடல் பலமும் கொண்டவன். ராமாயணத்தில் அறியப்பட்ட சிறப்பு மிக்கக் குரங்குகள் தலைவன் அவனே. சீதைக்காக, அந்தக் குரங்கு மன்னன் ஒரே எட்டில் நூறு யோஜனைகள் கொண்ட கடலைத் தாண்டினான். அந்தப் பெரும் பலமிக்கவனே எனது தமயன். நான் சக்தியிலும், பலத்திலும், பராக்கிரமத்திலும், போரிலும் அவனுக்குச் சமமானவன். என்னால் உன்னைத் தண்டிக்க முடியும். அதனால் எழுந்திரு. ஒன்று எனக்கு வழியை விடு, அல்லது எனது பராக்கிமத்தை இன்று பார். நான் சொல்வதை நீ கேட்கவில்லையென்றால், நான் உன்னை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்புவேன்” என்று மறுமொழி கூறினான் பீமசேனன்.
பலத்திலும், தனது கரங்களின் வலிமையின் மீது கொண்ட கர்வத்திலும் பீமசேனன் போதையுண்டிருப்பதை அறிந்த ஹனுமான் இந்த கர்வத்தை அழிக்க எண்ணி பீமசேனனிடம் நீ அவ்வளவு பெரியவீரனானால் எனது வாலை மட்டும் நகர்த்தி விட்டுச்செல் என்றார்.இதைக்கேட்ட பீமசேனன் வாலை நகர்த்த முற்பட்டான். தனது முழு பலத்தை பயன்படுத்தியும் வாலை சிறிதளவு கூட நகர்த்த முடியவில்லை. இதில் ஏதோ செய்தி உள்ளது என்பதை அறிந்த பீமன் நீங்கள் யார் என்று ஒரு சீடன் ஆசிரியரிடம் வினவுவதைப்போல வினவினான்.
இதைக்கேட்ட அந்த வயோதிகக்குரங்கின் உருகொண்ட ஹனுமன் இவ்வாறு கூறினார். “நான் உலகத்தின் உயிரான வாயுத்தேவனால் கேசரியின் மனைவியிடத்தில் பெறப்பட்டவன். நான் ஒரு குரங்கு. எனது பெயர் ஹனுமான். ஒருமுறை பெரும் பலம் வாய்ந்த அனைத்து வானர மன்னர்களும், வானரத் தலைவர்களும், சூரியனின் மகன் சுக்ரீவனிடமும், இந்திரனின் மகன் வாலியிடமும் காத்து நின்றார்கள்.காற்றுக்கும் நெருப்புக்கும் இடையே இருப்பது போல எனக்கும் சுக்ரீவனுக்கும் இடையில் நட்பு இருந்தது. ஏதோ காரணத்திற்காகத் தனது தமயனான வாலியால் துரத்தப்பட்ட சுக்ரீவன் என்னுடன் நீண்ட நாட்களாக ரிஷ்யமுக மலையில் வசித்து வந்தான். தசரதனின் பெரும் பலம் வாய்ந்த மகனும், விஷ்ணுவின் மானுட உருவமுமான வீரன் ராமன் இவ்வுலகத்தில் தனது பிறப்பை அடைய நேர்ந்தது.
வில்லாளிகளில் முதன்மையான ராமன் தனது தந்தையின் நன்மைக்காகத் தனது சீதையையும்}, தனது தம்பியான இலட்சுமணனையும் அழைத்துக் கொண்டு வந்து தண்டக வனத்தில் வசிக்க ஆரம்பித்தான். ராட்சச ஏகாதிபதியும் தீயவனுமான இராவணன், ரத்தினம் போன்ற புள்ளிகள் கொண்ட பொன் மான் வடிவம் கொண்ட மாரீசன் என்ற ராட்சசன் உதவியோடு, மனிதர்களில் முதன்மையானவனை வஞ்சித்து, அவனுடைய சீதையைக் கபடத்தாலும் பலத்தைப் பயன்படுத்தியும் கடத்திச் சென்றபோது ராமனுக்கு உதவியாக இருந்து 100 யோஜனை தூரம் கடந்து சென்று இலங்கையை அடைந்து சீதாதேவியைக்கண்டு அவர் கொடுத்த கணையாழியை இராமனிடம் கொடுத்து தகவல் சொன்ன தூதவனான ஹனுமன் நானே.” என்றார்.

இந்நிகழ்வை அருணகிரிநாதர் அழகாக விளக்குவார். அதாவது அனுமன் இராமபிரானின் கணையாழியை சீதாதேவிக்கு காட்டிய இராமாயணக் காட்சியை மிக அழகாகவும் இவ்வாறு எடுத்துரைக்கிறார்.
“குடக்குச் சிலதூதர் தேடுக வடக்குச் சிலதூதர் நாடுக குணக்குச் சிலதூதர் தேடுக – வெனமேவிக்” “குறிப்பிற் குறிகாணு மாருதி யினித்தெற் கொருதூது போவதுகுறிப்பிற் குறிபோன போதிலும் வரலாமோ””அடிக்குத் திரகார ராகிய அரக்கர்க் கிளையாத தீரனு மலைக்கப் புறமேவி மாதுறு – வனமேசென்””றருட்பொற் றிருவாழி மோதிரமளித்துற் றவர்மேல் மனோகர மளித்துக் கதிர்காம மேவிய – பெருமாளே”– திருப்புகழ்.
பொருள் : மேற்குத் திசையில் சில தூதர்கள் தேடட்டும் என்றும், வடக்குத் திசையில் சில தூதர்கள் தேடட்டும் என்றும், கிழக்குத் திசையில் சில தூதர்கள் தேடட்டும் என்றும் அனுப்பி குறிப்பினால் குறிப்பை உணரும்அனுமனை இனி தெற்கு திசையில்தூதனாக அனுப்ப வேண்டியது.சொல்லி வைத்த குறிப்பின்படி தேடும்
பொருள் (சீதை) கிடைக்காமல் போனாலும் தோல்வியுடன் வரலாமோ? அடியோடு வஞ்சகர்களாகிய அரக்கர்களிடம் தோற்று இளைக்காத தீரனாகிய அனுமனும் அலை கடலைத் தாண்டி அப்புறம் உள்ள இலங்கைக்குச் சென்று, சீதாபிராட்டி இருந்த அசோகவனத்தை அடைந்த ராமபிரானது அழகிய பொன் மோதிரத்தை அன்னைக்கு அளித்துமீண்டு வந்த அந்த அனுமனுக்கு அனுக்கிரகத்தைத் தந்தருளி கதிர்காமத்தில் வீற்றிருக்கும்பெருமாளே. )Source : அரச பாரதம்.
இப்படி தனது தமயனைக் கண்ட ஆனந்தத்தில் பீமசேனன் செய்வதறியாது திகைத்தான். அப்போது ஹனுமன் பீமசேனனின் வழியை தடுத்ததற்கு காரணத்தைக் கூறி வேறு வழியாகச் செல்லவும், மகாபாரதம் போரில் உதவி செய்வதாகவும், மகாபாரதப்போரில் அர்ச்சுனனின் தேர்க்கொடியில் அமர்ந்து கடும் கர்ஜனை செய்து எதிரிகளின் ஆற்றலைக் குறைப்பேன் என்றும் “சகோதர உணர்ச்சியாலும் பாசத்தாலும், ஏராளமான அம்புகளும் ஈட்டிகளும் கொண்டு வரும் உனது எதிரிகள் மத்தியில் நான் பாய்ந்து உனக்கு நன்மையைச் செய்வேன் என்றும் நீ சிம்ம கர்ஜனை செய்யும்போது, நான் எனது கர்ஜனையையும் சேர்த்து அந்த ஒலிக்கு கூடுதல் பலத்தை அளிப்பேன்என்று பீமசேனனிடம் அஞ்சனை மைந்தனான அனுமன் வாக்குறுதி அளித்தார்.
இதன் விளைவாக இந்நிகழ்வானது பகவத்கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பகவத்கீதையில் அர்ச்சுனனின் தேர்க்கொடியில் அனுமன் நிலைபற்றிருந்த செய்தி முதலாவது அத்யாயத்தின் 20 ஆவது ஸ்லோகத்தில் உள்ளது.
“அத² வ்யவஸ்தி²தாந்த்³ருஷ்ட்வா தா⁴ர்தராஷ்ட்ராந்கபித்⁴வஜ:|ப்ரவ்ருத்தே ஸ²ஸ்த்ரஸம்பாதே த⁴நுருத்³யம்ய பாண்ட³வ:”- பகவத்கீதை.
பொருள் : இருபுறமும் அம்புகள் பறக்கத் தலைப்பட்டன. அப்போது குரங்குக் கொடியுயர்த்த (அனுமனின் உருவம் பொறித்த) பார்த்தன் திருதராஷ்டிரக் கூட்டத்தாரை நோக்கி வில்லை யேந்திக் கொண்டு, கண்ணனைப் பார்த்துச் சொல்லுகிறான்.
இந்நிகழ்வு மகாபாரதத்தின் வனபர்வத்தின் 150ஆவது பகுதியில் உள்ளது. இந்நிகழ்வை அப்படியே காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் அழகாக எடுத்துரைப்பார்.
அதாவது “கூல மறுகும் கொடித்தேர் வீதியும் பால்வேறு தெரிந்த நால்வேறு தெருவும் உரக்குரங்கு உயர்த்த ஒண்சிலை உரவோன் காவெரி யூட்டிய நாள்போற் கலங்க அறவோர் மருங்கின் அழற்கொடி விடாது மறவோர் சேரி மயங்கெரி மண்டக் கறவையும் கன்றும் கனலெரி சேரா”- சிலப்பதிகாரம்.
பொருள் : தானியம் விற்கும் கடைவீதி, கொடி கட்டிய தேர்கள் செல்கிற தேர்வீதி, பிராமணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற நால்வர்ணத்தவரும் வாழும் தெருக்கள் மதுரையானது, வலிமையான குரங்கான அனுமனை தன் கொடியில் வைத்திருந்த வில் ஆற்றலில் வல்லவனாகிய அர்ச்சுனன் காண்டவ வனத்தை தீயில் எரித்தபோது அந்த காடு தீயில் எரிந்தது போல முழுவதும் எரிந்து சாம்பலாகின. என்று மதுரை தீக்கிரையான தகவலை மகாபாரத்ததுடன் ஒப்பிடுகிறார் இளங்கோவடிகள்.
இங்கே அர்ச்சுனனின் கொடியில் அனுமன் அமர்ந்திருந்த செய்தி குறிப்பிடப்பட்டிருப்பது உற்றுநோக்கத்தக்கது. இந்த மாபெரும் வீரனான அனுமன் ருத்ரரின் அம்சம் என்பதை திருப்புகழில் அருணகிரிநாதர் அழகாக எடுத்துரைக்கிறார்.
அதாவது,“இரவிஇந்த்ரன் வெற்றிக்கு ரங்கி னரசரென்றும் ஒப்பற்ற உந்தி யிறைவன்எண்கி னக்கர்த்த னென்றும் – நெடுநீலன்””எரியதென்றும் ருத்ரற்சி றந்தஅநுமனென்றும் ஒப்பற்ற அண்டர்எவரும்இந்த வர்க்கத்தில் வந்து – புனமேவ”– திருப்புகழ்.
பொருள் : சூரியனின் அம்சமாக சுக்ரிவனும், இந்திரனின் அம்சமாக வாலியும் வெற்றி வானர அரசர்களாகவும், ஒப்பில்லா திருமால் வயிற்றிலே பிறந்த பிரமனும், கர் இனத் தலைவன் ஜாம்பவானாகவும், நெடிய நீலன் அக்கினியின் கூறாகவும், ருத்திர அம்சம் அநுமன் என்றும், ஒப்பில்லாத தேவர்கள் யாவரும் இன்னின்ன வகைகளிலே வந்து இப் பூமியில் சேர்ந்தனர் என்று கூறுகிறார் அருணகிரிநாதர்.
இவ்வாறாக தமிழ் இலக்கியங்களில் மகாபாரதமும், மகாபாரதத்தில் அர்ச்சுனனின் தேர்க்கொடியில் அனுமன் நிலைபெற்ற செய்தியும் நமக்கு விரிவாகத் தருகினறன. இம்மாவீரனுக்காக ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதத்தில் வரும் மூல நட்சத்திரத்தன்று ஹனுமன் ஜெயந்தி இந்துக்களால் மகிழ்வுடன் கொண்டாடப்படுகிறது. சங்க இலக்கியங்கள் ஆகட்டும் பக்தி இலக்கியங்கள் ஆகட்டும் எங்கெல்லாம் இராமாயணத்தைப் பற்றியும், இராமரைப் பற்றியும் பேசுகிறோமோ அங்கு அனுமனை பற்றி பேசாமல் ஒதுக்கி விட முடியாது. அந்த அளவுக்கு இராமாயணத்தில் ஹனுமனின் பங்கு இன்றியமையாதது.
“யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம்பாஷ்பவாரி பரிபூரண லோசனம்மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்”
அதாவது எங்கெல்லாம் “ராம நாமம்” ஒலிக்கின்றதோ, அந்த இடங்களில் எல்லாம் கண்களில் நீர் பெருக்கெடுக்க, பக்திப் பரவசத்துடன் அமர்ந்திருக்கும் நபர் எவரோ, அவரே அனுமன்” என்று தெரிந்து கொள்கிறார்கள் என்பது பொருளாகும்.
இதைக் கம்பராமாயணத்தின் மிகைப்பாடல்களின் வரிகளால் கண்டால்:
“அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில்அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்”– கம்பராமாயணம்.
விளக்கம் : ஐந்து பூதங்களில் ஒன்றான வாயு பகவான் பெற்ற மைந்தனான அனுமன் ஐந்து பூதங்களில் ஒன்றான நீர்ப்பரப்பான கடலைத் தாண்டி ஐந்து பூதங்களில் ஒன்றான ஆகாயத்தை வழியாகக் கொண்டு ஶ்ரீராமனுக்காக சென்று ஐந்து பூதங்களில் ஒன்றான பூமி பெற்றெடுத்த சீதாபிராட்டியை இலங்கையில் கண்டு அங்கு ஐந்து பூதங்களில் ஒன்றான தீயை வைத்தான்அவன் எம்மை அனைத்து நலன்களும் அளித்துக் காப்பான்.
வலிமை, அறிவு, துணிச்சல், புகழ், வீரம், ஆரோக்கியம், சாதுர்யம் என அனைத்தையும் தன்னுள் கொண்டவரான அனுமனின் அவதார தினத்தன்று அனுமனை வழிபட்டால், சிவனையும், பெருமாளையும் வணங்கிய புண்ணியம் கிடைக்கும். மேலும் அனுமன் ஜெயந்தியில் அனுமனைத் தவறாமல் வணங்கினால், இதுவரை சந்தித்த துன்பங்கள் மற்றும் தொல்லைகள் நீங்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. அனுமன் ஒரு சிரஞ்சீவி. அதாவது அழிக்க முடியாதவர் என்பதால்தான் காலம் கடந்து மகாபாரதத்திலும் காட்சிப்படுத்தப்படுகிறார். தெய்வீக சக்தியில் அசைக்க முடியாத நம்பிக்கையைக் கொண்டவர்கள் அஞ்சனை மைந்தனான அனுமனின் அவதார நாளன்று வாயு புத்திரனான பீமசேனனின் தமயனை வணங்கி ஆசிபெறுவோம்.
– பா இந்துவன்.
.