விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் ஒருநாள் பெரியதொரு போர் மூண்டதாம். அதில் இந்த வௌவால் ஒரு வேலை செய்ததாம். போரில் விலங்குகள் கை ஓங்குவதாகத் தெரிந்தால் அவற்றின் பக்கம் சேர்ந்து கொண்டு ‘பாருங்கள், நானும் உங்க ஆள் தான், பால் ஊட்டுகிறேனே’ என்று சொல்லுமாம். பறவைகள் கை ஓங்குவதாகத் தெரிந்தால் நைசாக அவற்றின் பக்கம் ஒதுங்கி ‘பாருங்கள், நானும் பறவை தான், பறக்கிறேனே!’ என்று கதை விடுமாம்!
இப்படி, ஒருவேளை பழங்களுக்கும் காய்கறிகளுக்கும் போர் வந்தால் இந்த ‘தக்காளிக்கு’ ஜாலி தான். இரண்டு பக்கமும் சேர்ந்து கொள்ளலாம்.’என்னை அப்படியே கடித்துச் சாப்பிடுகிறார்கள், நான் ‘juicy’ யாக இருக்கிறேன், ‘கனி’ந்து இருக்கிறேன், எனவே நான் ‘கனி’ தான் என்று தக்காளி வாதிடும். அதே சமயம், பழங்களை யாராவது சாம்பாரில் போடுவார்களா, எனவே நான் காய்கறி தான் என்று காய்கறிகளின் பக்கம் சேர்ந்து கொண்டு வாதிடும். ஜாலி தான்.
அழகான அந்த தலைத் ‘தொப்புள்’ தக்காளிக்குத் தவிர வேறு காய்களுக்கு இருக்கிறதா என்று தெரியவில்லை. ஸ்பானிஷ் மொழியில் தக்காளியின் பெயரே ‘தொப்புள் பழம்’ என்பது தான். மேலும், பெரும்பாலான இந்திய மொழிகளில் தக்காளி ‘டொமேட்டோ’ என்றே அழைக்கப் படுகிறது. ஹிந்தியில் ‘டோமேட்டர்’ என்பார்கள். தமிழில் தான் தனிப்பெயர் ‘தக்காளி’! தக்காளிக்குப் பெயர் வைத்த நாம் ஏனோ கேரட், பீட்ரூட் போன்றவற்றுக்குப் பெயர் வைக்கவில்லை. கேரட்டின் பெயர்க்காரணம் அது ‘கொம்பு’ போன்ற வடிவில் இருப்பதால் வருகிறது. தமிழில் ‘கொம்பன்’ அல்லது ‘கொம்புக் காய்’ எனலாம்.
சரி.
ஜைனர்கள் தக்காளியைத் தொடுவது இல்லை. தக்காளி ஒரு விதத்தில் மாமிசத்தை நினைவு படுத்துகிறது என்பதாலோ என்னவோ! red meat! அல்லது தக்காளி, வெள்ளரிக்காய் போன்ற ஏராளமான விதைகள் (குழந்தைகள்!) உள்ளே பொதிந்திருக்கும் காரணத்தால் அந்தக் காய்கறிகளை ஜெயின்கள் தவிர்க்கிறார்கள். தக்காளி சாப்பிடுவது என்பது அவர்களைப் பொறுத்தவரை ஒரு genocide, ஒரு massacre!
ஜெயின் சமூகத்தில் பிறந்த ஓஷோ ஒருநாள் நண்பர்களின் வற்புறுத்தலின் பேரில் இரவு நேரத்தில் தக்காளி உட்பட்ட விருந்தைச் சாப்பிட்டு விடுகிறார். ஓஷோ போன்ற அறிவுக் கூர்மை மிக்க மனிதர்களே ‘condition’ களில் சிக்கிக் கொள்கிறார்கள். அன்றிரவு தனக்குத் தூக்கமே வரவில்லை என்றும், மகா பாதகம் செய்து விட்டது போன்ற குற்றவுணர்ச்சியில் தவித்ததாகவும், பல முறை வாந்தி எடுத்து விட்டதாகவும் சொல்கிறார் ஓஷோ. family conditioning அத்தகையது.
பிராமணர்களின் பாரம்பரிய மெனு-விலும் தக்காளி இருக்காது. புளிப்புக்குப் புளி தான் இருக்கும். அதுவும் கூட ‘சாதுர் மாஸ்ய’ விரதத்தில் ‘ச்சீ ச்சீ இந்தப் புளி புளிக்கும்’ என்று ஒதுக்கப்பட்டு விடும். புளி, எலுமிச்சை, மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி, காய்கறிகள் இவை அத்தனையும் ஒரு மாதத்திற்கு உணவில் தவிர்க்கப்பட வேண்டும். இவை இல்லாத சமையல் படு மோசமாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம்! ஆஷாட மாச விரதச் சமையல் அத்தனை ருசியாக இருக்கும். இந்த விரதமுறை பொதுவாக சந்நியாசிகளுக்கென்று ஏற்பட்டது. சந்நியாசிகள் ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருப்பார்கள். தினமும் அறுசுவை உண்டியை அவர்கள் எதிர்பார்க்கக் கூடாது. அங்கங்கே கிடைப்பதை வைத்துத் திருப்தியடைய வேண்டும் என்பது தான் சாராம்சம்.
இந்த விரதத்தில் கடுகும் தவிர்க்கப் படுகிறது. (பொதுவாக காரம் தரும் எந்தப் பொருளுமே தவிர்க்கப் படுகிறது. இதில் மிளகுக்கு மட்டுமே அனுமதி!).
‘ஸ்ரீ ராகவேந்திரா’ திரைப்படத்தில் ஒரு காட்சியில் மடத்தில் ஆஷாட மாத விரதம் அனுஷ்டிக்கப்படும் நேரம். மகானை தரிசிக்க வரும் தாழ்த்தப்பட்ட மனிதர் ஒருவர் தமது காணிக்கையாக அழுக்கடைந்த கடுகுப் பை ஒன்றை பவ்யமாக அளிப்பார். சுவாமிகள் அதை மனமுவந்து ஏற்றுக் கொண்டு அன்றைய சமையலில் அக் கடுகைச் சேர்த்துக் கொள்ள உத்தரவிடுவார். சுற்றி நிற்கும் பிராமணர்கள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும். ‘சாக மாச விரதத்தில் கடுகு நிஷேதமாயிற்றே, என் ஆச்சாரம் என்ன ஆவது!’ என்று சிலர் சாப்பிடாமலேயே விலகிக் கொள்வார்கள். உண்மையான பக்தியின் முன் விரதம், நடைமுறைகள், நெறிமுறைகள், பத்ததிகள் எல்லாம் மிகச் சிறியவை என்று ராகவேந்திரர் நிரூபிப்பார்.
ஓகே, back to தக்காளி.
ஸ்பெயினில் ‘La Tomatina’ என்று தக்காளித் திருவிழா நடக்கிறது. ஒருவரின் மீது ஒருவர் அடித்து விளையாடிக் கொள்ள தக்காளியை விடச் சிறந்த பழம் இருக்கிறதா என்ன? ஆயிரக்கணக்கான டன் தக்காளிகள் இறைந்து அந்த இடமே ரத்தக் களம் போலக் காட்சி அளிக்கும். நம் ஊரில் முட்டை எறிவது போல வெளிநாடுகளில் தக்காளி எறிவது பிரபலம். இப்போது இருக்கும் நிலைமையில் இப்படி தக்காளியை எறிந்து விளையாடினால் நம் மீது கேஸ் போட்டுவிடுவார்கள். நாம் ஒன்று செய்யலாம், யார் மீதாவது கொலை வெறி இருந்தால் அவரைத் தக்காளியாக உருவகித்துக் கொண்டு அதைக் கண்டம் துண்டமாக வெட்டி திருப்திப் படலாம்.
இறுதியில், தமிழ் சினிமா பிரபலப் படுத்திய ‘எனக்கு வந்தா ரத்தம், உனக்கு வந்தா தக்காளி சட்னி’! – நாம் எல்லாருமே பொதுவாக இந்த மனோநிலையில் தான் இப்போது இருக்கிறோம். empathy நம்மிடம் குறைந்து கொண்டே வருகிறது. ‘தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்’ என்பது போல நமக்கென்று வரும் வரை எதையும் empathize செய்ய மறுக்கிறோம்.
வாரம் ஒருமுறை ஒருவர் தன் அம்மாவை ‘டயாலிசிஸ்’ செய்ய அழைத்துச் செல்ல வேண்டி இருக்கிறது. மூன்று மாதம் ஒருமுறை ஒருவர் தன் மகளை ‘கீமோதெரபிக்கு’ அழைத்துச் செல்ல வேண்டி இருக்கிறது. கீமோ என்பது ஒரு சித்தரவதை. அனுபவித்தவர்களுக்கே தெரியும். ‘இந்தக் கொடுமைக்கு என்னைக் கொன்று விடுங்களேன்’ என்றெல்லாம் சொல்வார்கள்.
இன்னொருவர் தன் ‘ஆட்டிஸக்’ குழந்தையை வைத்துக் கொண்டு சிரமப் படுகிறார். இதை ‘சிரமம்’ என்று சொல்வது சரியா என்று தெரியவில்லை. வெளியே அவர்கள் சொல்லிக் கொள்ளாவிட்டாலும் ஒருவிதத்தில் இது அவர்களுக்கு challenge தான். குறிப்பாக குழந்தை பருவமடைந்து விட்டால் சோதனைகள் இன்னும் அதிகமாகும் தான். ‘Single parent’ ஒருவரிடம் நாம் என்றாவது empathize செய்திருக்கிறோமா! ‘அவளுக்கு என்ன அழுத்தம் பாரு, புருஷன் காரன் எங்கோ ஓடிட்டான், மகளை இவளே ஒருத்தியா வளர்த்துடுவாளாக்கும்’ என்று வசை தான் பாடுகிறோம்!
இன்னொருரின் மனைவிக்கு ஆஸ்துமா. என்னவென்றே தெரியாமல் பத்து நாளைக்கு ஒருமுறை மூச்சு விட முடியாமல் திணறி சாவின் எல்லைக்குப் போய் விடுகிறார். ஓடு ஹாஸ்பிடலுக்கு! ட்ரிப்ஸ் ஏற்று, இரண்டு நாள் ட்ரீட்மெண்ட், மீண்டும் டிஸ்சார்ஜ், மீண்டும் பழைய குருடி, கதவைத் திறடி! நோயாளிகளை விட அவர்களை கவனித்துக் கொள்ளும் மனைவியோ, அம்மாவோ, மகனோ, சகோதரரோ பாவப்பட்ட ஜென்மங்கள்! சிலருக்கு உடம்பில் ஒன்றுமே இருக்காது, ‘ஹிஸ்டெரிக்’ ஆக வாரம் பத்து நாள் ஒருமுறை நேர்த்திக் கடனாக ஹாஸ்பிடலுக்குப் போய் படுத்துக் கொண்டாக வேண்டும் அவர்களுக்கு. கூட இருப்பவர்களை சக்கையாகப் பிழிந்து விடுவார்கள்.
‘ஸ்கீஸோபெர்னியா’ மனநோய் தெரியுமா? இதன் குணநலனே ஆறு மாதத்துக்கு ஒருமுறை பாதிக்கப் பட்டவர் episode ஏற்பட்டுத் திடீரெனெ ‘hyper’ ஆவது. என்னதான் மருந்து, மாத்திரை எடுத்துக் கொண்டாலும் அவர்கள் கட்டுப்பாடின்றி அலைபாய ஆரம்பிப்பார்கள். ‘சாமி கூப்பிட்டு விட்டது, நான் போறேன்’ என்று வீட்டை விட்டுப் பையுடன் வெளியே கிளம்பி விடுவார்கள். உடைகளைக் களைவார்கள். வரைமுறை இன்றி சாப்பிடுவார்கள்.சகதியை எடுத்துச் சந்தனம் என்று பூசிக் கொள்வார்கள். மனம் போன போக்கில் திரிவார்கள், கையில் கிடைப்பதை எடுத்து எறிவார்கள். மிக நெருக்கமான கவனிப்பும், dosage ஜூம், கவுன்சிலுங்கும் அவர்களுக்கு அவசியம். கூட இருப்பவர்களுக்கு காலம் முழுவதும் ‘ரத்தம்’ தான்.
அவரகள் வாழும் அதே உலகில் தான் நாமும் நம் லடாக் டூர் கேன்சல் ஆகி விட்டது என்று கவலைப் பட்டுக் கொண்டிருக்கிறோம்!
எப்போதோ அபூர்வமாக மருத்துவமனை வாசலை மிதிக்கும் நாமெல்லாம் ஒருவிதத்தில் அதிர்ஷ்டம் செய்தவர்கள் என்று தான் சொல்ல வேண்டும்!. நம்மைப் பொறுத்தவரை மேற்கூறிய கேஸ்கள் எல்லாம் ‘தக்காளி சட்னி’ தான்.
“அதற்காக என்ன சார் செய்வது? உலகத்தில் யாருக்குத் தான் துன்பம் இல்லை, நான் உட்கார்ந்து அழ வேண்டுமா, நான் டூர் போகக் கூடாதா?”என்று நீங்கள் கேட்டால் you mistook me. தாராளமாக நீங்கள் போகலாம். வாழ்வை அனுபவிக்கலாம். மேற்கூறிய தக்காளிச் சட்னிகளை உங்கள் வாழ்வில் சந்திக்க நேர்ந்தால், அல்லது மேற்கூறிய தக்காளி சட்னிகள் உங்கள் தூரத்து சொந்தங்களில் ஒருவேளை இருக்க நேர்ந்தால் கொஞ்சமேனும் empathize செய்யுங்களேன், உங்களால் முடிந்த உதவி செய்யுங்களேன். ‘எல்லாம் கூடிய சீக்கிரம் சரியாகி விடும், இவை தற்காலிகம் தான், நீங்கள் நிம்மதியாக இருக்கப் போகிறீர்கள்’ என்று ஊக்கமாய் நாலு வார்த்தை சொல்லிப் பாருங்களேன்.
‘ஆமாம், ஊர் உலகில் இல்லாததது தான் இவனுக்கு வந்திருக்கிறதாக்கும், இவனுக்கு இதெல்லாம் வேணும் தான், சும்மா அலட்டிக்கிறான், பேனைப் பெருமாள் ஆக்குகிறான், சும்மா புலம்பி sympathy தேடப் பார்க்கிறான்’ என்று வாய் புளித்ததோ தக்காளி புளித்ததோ என்று பேசாமல் இருங்களேன்.