ஒரு திக்குவாயனின் அனுபவம். மிகச்சிறு வயதில் நான் பலமுறை பேச்சுப்போட்டிகளில் வென்றிருக்கிறேன்.
( 1ம் 2ம் வகுப்பு அளவில்)” நேரு மாமா வந்தாராம்..” என்னுமளவில் இருக்கும் பேச்சுகள் அவை.
மூன்றாம் வகுப்பில் இருக்கும்போது திடீரென எனக்குத் திக்குவாய் ஏற்பட்டது. கொன்னல் என்றால் மிகமிக மோசமான அளவில் இருந்தது அது. பள்ளியிலும், சொந்தக்காரர்களிடம் பேசும்போதும் “அடப்பாவமே” என்னும் பச்சாதாபமே கிட்டியது.
சரியாகப் படித்திருந்தும், இந்தத் திக்குவாய் காரணமாகவே பல முறை பதிலளிக்க முயலாமல் உள்ளே குமுறியிருக்கிறேன். ‘என்னமோ படிப்பான். உருப்போட்டு எழுதுவான்’ என்னுமளவிலேயே என்னைக்குறித்தான கணிப்பு ஆசிரியர்களிடம் இருந்தது. ஒரு கல்வி சார்ந்த, கல்வி சாராத போட்டிகளிலும் நான் பங்கெடுத்துக் கொண்டதில்லை. நானே விலகியிருந்ததால், சீக்கிரம் விலக்கவும் பட்டேன். இந்த விஷச் சுழற்றலில் தாழ்வு மனப்பான்மை மட்டும் வளர்ந்துகொண்டே போனது.இது பத்தாம் வகுப்பு வரை தொடர்ந்தது.
தூத்துக்குடி புனித சவேரியார் மேல்நிலைப்பள்ளி. பத்தாம் வகுப்பில் (10 H வகுப்பு)எனக்கு வகுப்பாசிரியராக வந்தார் ஜோசப் ஜெயராஜ் சார்.வகுப்பு ஆசிரியர் என்பதோடு இல்லாமல் ஆங்கிலமும் எடுப்பார்.
10 B வகுப்பிற்கு அவர் சரித்திரம் எடுத்தார். சிறிது தடித்த சரீரம். உருண்டு உருண்டு அவர் வகுப்பறை தாழ்வாரத்தில் நடந்து வருவதை எளிதில் தெரிந்துகொண்டு, அவர் வகுப்பு ஆரம்பமாகுமுன் அவரவர் இடத்தில் போய் அமர்ந்துவிடுவோம்.
நான் முன்பெஞ்சு( ‘கண்ணாடி போட்ட பையன்களெல்லாம் முன்னால வாங்கல’ – என்று அவர்தான் முன்னால் உட்கார வைத்தார். அதுவரை 2வது 3வத் பெஞ்சு ஒரு மூலையில் யார் கண்ணுலயும் படாம உட்கார்ந்திருப்பேன்).Tempest ஒரு பாடமாக உரைநடையில் இருந்தது. ஒருநாள் கதை சொல்லிக்கொண்டே வந்தவர் திடீரென நிறுத்தினார். வகுப்பின் பின்பெஞ்சுகளில் சலசலப்பு காரணமாக இருக்கும்.
“இங்க்லீசு எல்லாம் படிச்சிட்டீய? பாடம் நடத்த வேண்டாம்.என்னலா? சரி. சரித்திரம் தெரியுதான்னு பாக்கேன்” அவர் சொல்லவும், விவகாரம் முத்துகிறது என அனைவருக்கும் புரிந்தது.”
வெள்ளைக்காரன் ஏன் இந்தியாவுக்கு கடல் வழி கண்டுபிடிக்கணும்-னு முனைப்பா நின்னான்?” வகுப்பு மெளனமானது.பிரம்பைச் சுழற்றிக்கொண்டே பெஞ்சுகளுக்கு இடையில் நடந்தார் ” எவனுக்குல தெரியும்? எந்திரி..பாப்பம்”மீண்டும் மயான அமைதி.
எனக்கு பதில் தெரியும். மனசு மோதுகிறது.. சொல்லிவிடவேண்டும்.. கையைத் தூக்கு…கையைத் தூக்கு…வழக்கமான பயம் என்னை வென்றது. என் முகத்தில் அவர் ஏதோ கண்டிருக்கவேண்டும். நின்றார்.” ஏல, கண்ணாடி.. எந்திரு.”எழுந்தேன். ” நீ சொல்லு”வாய் திறந்தேன். வழக்கம் போல வார்த்தைகள் வரவில்லை . உதடுகள் மட்டும் துடித்துக் கொண்டிருந்தன..”இ..இ..இ…” இஸ்தான்புல் நகரை ஓட்டாமான் துருக்கியர் கைப்பற்றினர் எனச் சொல்லவேண்டும்- இஸ்தான்புல் இ..இ.இ ய்ல் நின்றது.அவர் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்.
” சார் அவனுக்கு திக்குவாயி. இன்னிக்கு பூரா அப்படியே நிப்பான்” பின்னாலிருந்து எவனோ சொன்னான். ஒரு சிரிப்பலை மோதியது.
கையை மேலே தூக்கி, கண்களைத் துடைத்துக்கொண்டேன். வாய் மட்டும் துடித்துக் கொண்டிருந்தது.அருகே வந்தார். ” சாயங்காலம் வீட்டுக்குப் போறதுக்கு முன்னால என்னைப் பாத்துட்டுப் போ. வெளங்குதா?’சரியென தலையாட்டினேன்.
” உக்காரு” என்றவர் வகுப்பு முழுதையும் எழுந்து பெஞ்சு மேல் நிற்கச் சொன்னார்.அனைவருக்கும் கையில் இரண்டு அடி – செமத்தியாக..”வெக்கமாயில்ல? உங்கூடப் படிக்கிற பயலுக்கு திக்குவாயின்னா சிரிக்கேங்களே? நீங்கெல்லாம் ஓவியமோ?அடுத்தவன் கஷ்டத்தப் பாத்து சிரிக்கவால சொல்லிக்கொடுத்திருக்கு ? சோத்தத் திங்கீயளா ** யத் திங்கீயளா?” அவர் போட்ட சத்தத்திலும் அடியிலும் வகுப்பு உறைந்து தலை குனிந்தது.
சாயங்காலம் , ஆசிரியர் அறையில் அவரைப் பார்க்கப் போனேன். கிளம்பியிருந்தார். சைக்கிள் ஸ்டாண்டு வரை அவருடன் நடந்தேன்.
“நீ பேசணும்டா. நிறையப் பேசணும்.. தைரியமா பேசு.பேசப்பேசத்தான் நீ புத்திசாலின்னு தெரிஞ்சுக்குவாங்க?”அவரது வார்த்தைகளில் விம்மினேன்.
“இல்ல சார். எனக்கு படிப்பு வராது. நான் மக்குளி சார்.”
” இல்லடே. நீ படிப்பே. ஒரு நாளு நீ மேடைல பேசுவ. பெரிசா பரிசெல்லாம் வாங்குவ பாரு. ” அன்போடு தோளில் கை போட்டு அழுத்தினார்.”எங்கேந்துடே வார?”
“ஹார்பர் குவார்டர்ஸ் சார்”
” கடற்கரைக்குப் போ. தனியா நீ பாட்டுக்கு கத்தி கத்திப் பேசு. என்னதான் பேசணும்னு இல்ல. நீ படிச்ச பாடத்தைஉரக்கச் சொல்லிப்பாரு. உம்-முன்னால இருக்கிற மணலெல்லாம் ஆளுங்கன்னு நினைச்சுக்க.”என் தலையில் வலக்கையை வைத்தார் ” என் பிள்ளேள் எவனும் சோடைபோனதில்ல. போவ விடமாட்டேன். கர்த்தர் இருக்காரு. தைரியமா இரு ராசா”.
கிளம்பினவனை மீண்டும் நிறுத்தினார்” திக்குவாயி நோயில்ல தம்பி. தைரியமாப் போராடு. ஓடியே போயிரும். முதல்ல உன்னை நம்பு”.
மறுநாள் தனியே கடற்கரைக்குப் போனேன். அலைகள் சோம்பலாக அடித்துக்கொண்டிருந்தன.தெரிந்த கேள்வி பதில்களைச் சொல்லத்தொடங்கினேன். முதலில் வெட்கமாக இருந்தது. ‘கோட்டிக்காரங்கணக்கா என்னல தனியா பினாத்திக்கிட்டு கிடக்கே?’ன்னு எவனாச்சும் கேட்டான்னா?யாருமில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, அருகில் இருந்த இராவணன் மீசை முட்களைப் பார்த்து கொஞ்சம் கத்திப் பேசத் தொடங்கினேன்.நானே கேள்வி கேட்டேன். நானே பதிலும் சொன்னேன். சில சமயங்களில் கையைத் தூக்கியும் “சார் சார்” எனக் கூவி சொல்லிப்பார்த்துப் பழகினேன்.
கொஞ்சம் கொஞ்சமாக வெட்கம் விட்டு , சுவாரசியமாக ஆனது.பேசுமுன் ஒரு முறை மனதுள் ” பொறுமை.பொறுமை” எனச் சொல்லிக்கொண்டு நிதானமாகப் பேசத் தொடங்கினேன்.இருநாட்களில் அம்மா ஆச்சரியப்பட்டாள்.
” என்னடா, இன்னிக்கு கொன்னலே இல்லையே?!” அண்ணன் சந்தோஷத்தில் முதுகில் தட்டினார்.
தனிமையான கடற்கரைப் பேச்சுப் பயிற்சி மறைமுகமாகத் தொடர்ந்தது. கொஞ்சம் கொஞ்சமாக என் பேச்சு தெளிவானது. திக்குவாய் நின்றே போனது.இரு வருடங்கள் பின் கல்லூரியில் தமிழ், ஆங்கிலப் பேச்சுப்போட்டி, பட்டிமன்றம் என மேடையேறி பரிசுகளை வென்றேன்.
ஒவ்வொரு முறையும் ஜோசப் ஜெயராஜ் சாரை மனத்துக்குள் நினைத்துக்கொள்வேன்.இன்று வருடங்கள் பல கழிந்து, கோப்பைகளுடன் நான் இருக்கும் புகைப்படத்தைப் பார்க்கையில் அவர் நினைவு வந்தது. அதுதான் இப்பதிவின் உந்துதல்.
“இறைவனுக்கு எந்த மொழி தெரியும்?” என யாராவது என்னிடம் கேட்டால், சொல்லுவேன். ” அராமிக்கோ, அரபியோ, சமஸ்க்ருதமோ அல்ல….
தமிழ்.. தூத்துக்குடித் தமிழ்”.