துணிக்கடை ஒன்றுக்குப் போகிறோம். ஒரு குறிப்பிட்ட உடை நம்மை ஈர்க்கிறது. அதை அலட்சியம் செய்து விட்டு ஓர் அரை மணி நேரம் செலவு செய்து மற்ற உடைகளை எல்லாம்நோட்டம் விடுகிறோம். மனம் அந்த முதல் உடையிலேயே நிலைகுத்தி நிற்கிறது. இறுதியில் அதையே எடுத்துக்கொண்டு வருகிறோம்!
ரெஸ்டாரண்ட் ஒன்றுக்குப் போகிறோம். ஒரு மதப்புத்தகம் ரேஞ்சுக்கு இருக்கும் மெனு புக்கை புரட்டிப் பார்த்து ஓரிரு நிமிடங்களில் ‘ரெண்டு இட்லி’ என்கிறோம்.ஓகே.
நாம் ஒரு தேர்வை (choice) செய்யும்போது பகுத்தறிவை நம்பி, கணக்கீடுகளின் துணையோடு, தர்க்கத்தின் துணையோடு இது நல்லது இது கெட்டது என்று நன்றாக ஆராய்ந்து முடிவெடுக்கிறோம் என்று நினைக்கிறோம். ஆனால் நிலைமை வேறு மாதிரி இருக்கிறது என்கிறார்கள் உளவியல் வல்லுநர்கள்.
நம் மூளை அறிவை நம்பி அல்ல, emotionகளை, உணர்வுகளை, instinct ஐ பொறுத்து தான் பெரும்பாலும் முடிவெடுக்கிறது என்று சொல்கிறார்கள்.உடையை மட்டும் அல்ல. இவர் நல்லவர், இவர் கெட்டவர் என்று தரம் பிரிப்பதில், வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில், நண்பர்களைத் தெரிவு செய்வதில், ஏன் வேலை செய்ய இருக்கும் நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பதில் கூட பெரும்பாலும் மூளை இந்த first impression களை , gut feeling களை நம்பியே களம் இறங்குகிறது.
“இவன் நல்லவன்யா” என்று உள்ளே ஒரு பட்சி சொல்கிறது. நாம் தீவிரமாக சிந்தித்து ஆராய்ந்து கணக்குப் போட்டு வந்த முடிவு அல்ல. ஏதோ திடீரென்று தோன்றுகிறது.காதலில் விழுந்து விடுகிறார்கள். காதல் நம் அறிவைக் கேட்டுவிட்டு வருவதில்லை.
ஜெயம் ரவி பாடுவது போல “உன்னை என்னை கேட்டுக்கிட்டா காதல் நெஞ்சை தட்டிச்சு ?”
ஓர் எளிய சோதனையை சைக்காலஜிஸ்டுகள் செய்தார்கள். மாணவர்கள் சிலருக்கு திரையில் மகிழ்ச்சியான முகம் ஒன்றும் சோகமான முகம் ஒன்றும் காட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து பரிச்சயமில்லாத, உணர்ச்சிகளைக் காட்டாத சைனாக் காரரின் முகம் ஒன்று காட்டப்பட்டது. சிரித்த முகத்தைப் பார்த்தவர்கள் அதைத் தொடர்ந்து காட்டப்பட்ட சைனீஸ் காரரை தங்களுக்குப் பிடித்திருக்கிறது எனவும் சோக முகத்தைப் பார்த்தவர்கள் பிடிக்கவில்லை எனவும் கூறினார்கள். (priming).
இப்போது இதே சோதனை மாற்றி நிகழ்த்தப்பட்டது. முதலில் புன்னகை முகம் பார்த்தவர்களுக்கு இப்போது சோக முகம் காட்டப்பட்டு அதே சைனீஸ் ஆள் மீண்டும் காட்டப்பட்டார். இப்போது அவர்கள் தங்கள் முடிவுகளை மாற்றிக்கொள்ளவில்லை. “எனக்கு இந்த ஆளைப் பிடிக்கவில்லை” என்பதிலேயே நிலையாக இருந்தார்கள்.
கணக்குப் போடும் மூளை மனிதனுக்கு பரிணாம வளர்ச்சியில் மிகவும் தாமதமாக வந்த ஒரு feature. அதற்கு முன் அவன் instinct ஐ, உள்ளுணர்வை நம்பி இருக்க வேண்டி இருந்தது. மனித மூளையை simplify செய்து அதன் பழைய பகுதிகள் மையத்திலும் புதிய பாகங்கள் அதைச் சுற்றி வெளியிலும் இருப்பதாகச் சொல்கிறார்கள். மையத்தில் நமக்கு மீன் மூளை. அதைச் சுற்றி ஊர்வனவற்றின் reptile மூளை. அதைச் சுற்றி தன்னைத் தற்காத்துக் கொள்ளும் விலங்கு மூளை. இவை எல்லாம் மிகவும் வேகமானவை. நொடியை நூறு கூறு போட்டால் வரும் கால இடைவெளியில் முடிவெடுக்கும் திறன் வாய்ந்தவை. ஒரு மானை துரத்திப் பிடிக்கப் பாருங்கள். அவ்வளவு தூரம் வேண்டாம். ஈயை? கொசுவை?
இதனோடு ஒப்பிடும் போது மூளையின் வெளிப்பகுதி மிகவும் மெதுவானது. எதிரி துரத்தி வரும் போது இந்தப் பாகம் வேலைக்கு ஆகாது. நன்மை தீமைகளை உட்கார்ந்து calculate செய்து கொண்டிருந்தால் அதற்குள் அவன் ஏறி மிதித்து விட்டு போய்க்கொண்டே இருப்பான். ஆபத்துக் காலங்களில் நாம் விலங்கு மூளையை, பரிணாமத்தில் பின்தங்கிய மீன் மூளையைத் தான் பயன்படுத்த வேண்டி இருக்கிறது. ஆபத்தில் நாமெல்லாம் மீன்களாக மாறி விடுகிறோம் என்று கூடச் சொல்லலாம்.
சாமுராய்கள் தங்கள் ஆக்ரோஷமான சண்டையின் போது மனம் மறைந்து விடுகிறது என்கிறார்கள். சண்டைப்பயிற்சியின் போது குரு கவனித்துக்கொண்டே இருப்பார். பின் வாங்குவதோ, ரத்தம் வருவதோ, காயம் ஏற்படுவதோ, நின்று விடுவதோ தோல்வியின் அறிகுறி அல்ல. மனம் உள்ளே வந்து விடுவது, calculating mind உள்ளே வந்து விடுவது தான் தோல்வி. ஏனெனில் ஒரு split second இல் வாளின் நகர்வுகள் தீர்மானிக்கப்பட வேண்டும். நம் frontal lobe அல்லது neo cortex is simply too slow to manage! கலையிலும் இது நடக்கிறது.
எப்படி இத்தனை பிருகாக்கள், அனுஸ்வரங்கள், கமகங்கள், கற்பனை சுரப்பிரயோகங்கள், தாளக்கட்டு பிசகாமல் அநாயாசமாக வந்து விழுகின்றன என்ற கேள்விக்கு பாடகர்கள் “I dont know” என்றே பதில் சொல்கிறார்கள்.
1982 ஆம் ஆண்டில் எல்லியாட் என்பவருக்கு இந்த fast brain அல்லது பரிணாம மூளையில் கட்டி ஒன்று ஏற்பட்டு அது அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டதால் மூளையின் அந்தப் பகுதிகள் சில சேதமடைந்து விட்டன. கட்டி வருவதற்கு முன் எல்லியாட் சமூகத்தில் ஒரு well settled மனிதராக இருந்தார். நல்ல வேலை, நல்ல சம்பளம், நல்ல மனைவி, கணிசமான சேமிப்பு. etc. மூளையில் பாதிப்பு வந்ததும் அவரால் ஒரு சிறிய முடிவைக்கூட எடுக்க முடியாமல் போயிற்று.
எந்த சட்டையை அணிந்து கொள்வது, எந்த ரூட்டில் போவது, எந்த சேரில் உட்காருவது, எப்போது படுக்கையை விட்டு எழுவது என்பதற்கெல்லாம் மணிக்கணக்கில் திண்டாடி ஒரு infinite decision making loop இல் சிக்கிக்கொண்டார். சட்டையை தேர்ந்தெடுக்க முடியாமல் மலைத்துப் போய் மணிக்கணக்கில் நின்றார். மூளை blank ஆகவில்லை. instinct brain படுத்து விட்டதால் neo cortex எல்லாவற்றையும் தீவிரமாகக் கணக்குப் போட வேண்டி இருந்தது. மூளை முடிவெடுக்க முடியாமல் திணறியது. அவரது emotional response முற்றிலும் பூச்சியமாகி விட்டது.
தன் அம்மாவையும், ரோட்டில் போகும் பெண்மணியையும் இவர் ஒரே emotion னுடன் பார்க்க ஆரம்பித்தார். எல்லாவற்றையும் detached ஆகப் பார்க்க ஆரம்பித்தார். ஹோட்டலுக்குப் போனால் மெனுவையே மூன்று மணி நேரம் பார்த்துக் கொண்டிருந்தார். “ஏன் இவ்வளவு நேரம்?” என்றால் அவரது பதில் இப்படி இருக்கும். “of course இதற்கு நாட்கணக்கில் ஆகும். நான் கணக்குப் போடுகிறேன், இந்த உணவின் மூலப்பொருள், வாசனை, நிறம், சாதக பாதகங்கள், மணம், கலோரி, அளவு எல்லாவற்றையும் நாம் தீவிரமாக கணக்குப் போட்டுக்கொண்டிருக்கிறேன். எப்படி உடனே தேர்ந்தெடுக்க முடியும்?”of course இவரது வேலை போய் விட்டது. முடிவெடுக்கத் தெரியாதவர்களை யாரும் வேலைக்கு வைத்துக்கொள்ள மாட்டார்களே!
மனைவியும் கூடிய விரைவில் விவாகரத்து செய்து விட்டார். ஆனால் கடைசி வரை இவரை இவரது பெற்றோர்கள் தான் கை விடாமல் தங்களுடனேயே வைத்துக் காப்பாற்றி வந்தார்கள். Note this point your honor!!பகுத்தறிவாளன் என்ற பட்டம் கொடுக்க 100% தகுதியானவர் உலக வரலாற்றில் இந்த எல்லியாட் தான். கருப்பு சட்டை போடுவதால் யாரும் பகுத்தறிவாளர் ஆகி விடுவதில்லை.
வாழ்வின் பெரும்பாலான முடிவுகளுக்கு நாம் நம் பகுத்தறிவை நம்பி இருப்பதில்லை. டீ குடிக்க, செருப்பு போட, சட்டை அணிய, வெளியே கிளம்பிச் செல்ல இப்படி 99% விஷயங்களுக்கு நாம் நம் so called ‘மாட்டு மூளையையே’ பயன்படுத்த வேண்டி இருக்கிறது.
சில குறிப்பிட்ட அரசியல் வாதிகள் ஏன் மீண்டும் மீண்டும் வெற்றி பெறுகிறார்கள் என்று யோசித்தது உண்டா? அவர்கள் நம் பகுத்தறிவை குறி வைப்பதில்லை. emotional center களை குறி வைக்கிறார்கள். நம் ஆராய்சசி மூளைக்கு அவர்களைப் பிடிக்கவில்லை என்றாலும் நம் instinct மூளை, உள்ளக மூளை unconscious ஆக அவர்களை விரும்ப ஆரம்பித்து விடுகிறது.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்றோர் வெற்றிகரமான அரசியல் செய்ததன் சாராம்சம் இது தான். பொது மக்களின் அறிவைத் தாண்டிய உணர்வுப்பூர்வமான மூளையை activate செய்யும் கலையை அவர்கள் அறிந்திருந்தார்கள். இதனால் தான் புள்ளி விவரங்களைக் காட்டும் அரசியல் வாதிகள், chart களை வரைந்து காட்டுபவர்கள், போர்டில் எழுதிக் காட்டுபவர்கள் பரிதாபமாகத் தோற்றுப் போகிறார்கள்.
எண்கள் மனிதர்களை ஈர்ப்பதில்லை. மாய்ந்து மாய்ந்து எழுதினாலும் முகநூலில் முப்பது லைக்குக்கு மேல் வாங்காதவர்கள் குடும்ப போட்டோவை போட்டு, கல்யாண போட்டோவைப் பதிவேற்றி 1k லைக்குகள் வாங்கும் தாத்பரியமும் இதுவே.
குடும்ப போட்டோவை பார்க்கையில் நம் எமோஷனல் மூளை activate ஆகி தன்னிச்சையாக விரல் லைக் பட்டனை அழுத்தி விடுகிறது!
சில சினிமாக்கள் எத்தனை intellectual ஆக இருந்தாலும் ஏன் மக்களிடையே வெற்றி பெறுவதில்லை? வணிக இயக்குனர்கள் சிலர் மக்களின் நாடியை அறிந்து சினிமாவில் நம் ஆதி மனித மூளையை குறி வைக்கிறார்கள். படம் அமோக வெற்றி!
ஹீரோ எவ்வளவு பெரிய அப்பாடக்கராக இருக்கட்டும், மூளைக்காரராக இருக்கட்டும், கத்தியால் சரமாரியாகக் குத்தப்பட்ட பின்னும், இரும்புத் தடியால் பின்னந்தலையில் பல முறை தாக்கப்பட்டாலும் நூறு பேரை அடித்து துவம்சம் செய்பவராக இருக்கட்டும், ஊஹூம். வை ஒரு காட்சியை படத்தின் கடைசியில். அப்பா-மகள் சென்டிமென்டை வை. மக்களை உணர்வுப் பூர்வமாகக் கட்டிப்போடு. மகள் ஓட்டப்பந்தயத்தில் ஓடி வரும் காட்சியை வை. அப்பா அடிபட்டு அவள் முன் தோன்றுவதை வை. ‘எஞ் சாமி’ என்ற டயலாக்கை வை. சிறைக்கைதி தன் மகளை முதன்முதலாகப் பார்க்கும் காட்சியை வை. “பிள்ளைகளைப் பெற்றவனுக்கு சாவே இல்லை’ என்ற டயலாக்கை வை. எத்தனை cliche வாக இருந்தாலும் இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், மனிதகுலம் எத்தனை தொழில்நுட்ப முன்னேற்றம் அடைந்தாலும் இந்த மாதிரி காட்சிகள் நிச்சயம் ரசிக்கப்படும்.
ஏனெனில் நம் மூளைக்கு மத்தியில் இந்த அப்பாவியான, வெள்ளந்தியான ஒரு emotional மிருகம் உட்கார்ந்து கொண்டிருக்கிறது. இறுதியில், நமக்கெல்லாம் வேலை போய் விடாமல் தினம் தினம் காப்பாற்றிக் கொண்டிருக்கும் இந்த ‘மாட்டு மூளை’ க்கு ஜோராக ஒரு ‘ஓ’ போடுவோமா?