காலம் சில நல்லவர்களை அதர்ம கூட்டத்தில் வைத்திருக்கும். அவர்கள் அந்த கூட்டத்தில்தான் இருப்பார்கள். அவர்கள் செய்யும் பல கொடுமைகளை, அதர்மங்களை கண்டுகொண்டேதான் இருப்பார்கள். நல்லவர்கள் இவர்களால் பாதிக்கப்படும்பொழுது பல்லைக்கடித்து கொண்டு அமைதியாய் இருப்பார்கள்.
காரணம் எப்பொழுது பாயவேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும். எப்பொழுது நிலமை எல்லைமீறி செல்லுமோ அப்பொழுதுதான் நாம் பேசவேண்டும். அதுவரை அமைதிகாக்க வேண்டும். அவசரப்பட்டு தர்மத்தை பேசுகின்றோம் செய்கின்றோம் என மொத்தத்தையும் கெடுத்துவிட கூடாது என்பது அவர்களுக்கு தெரியும்.
பாரதத்தில் விதுரர் போன்றவர்கள் உண்டு. ராமாயணத்திலும் பலர் உண்டு. அவர்கள்தான் கடைசி நேர குழப்பத்தில் தர்மம் அரங்கேற முழு காரியமும் செய்திருப்பார்கள்.
அந்த பாரம்பரியத்தில் வந்தவர் பட்டேல். சர்தார் வல்லபாய் பட்டேல்.
அவரும் நேதாஜி போல, வ.உ.சி போல கிளம்பியிருந்தாலோ இல்லை காமராஜர் போல முழு காங்கிரஸ் அடிமையாக மாறி இருந்தாலோ இன்றைய இந்தியா இல்லை.
ஆம். சுதந்திரம் பெறும்பொழுதே உடைந்தே சிதறிய தேசம் அதன் பின்னும் பல துண்டுகளாக உடையும் ஆபத்து இருந்தது.
பிரிட்டன் வெளியேறினாலும் பிரான்சும் போர்ச்சுக்கலும் இந்தியாவில் இருந்து வெளியேற மறுத்து இவை எங்கள் பகுதி என மல்லுகட்டின.
அதைவிட மாபெரும் மிரட்டல் இந்தியாவின் அன்றைய நிஜாம்களும் நவாப்புக்களும்.
மராட்டிய சிவாஜி காலத்தில் அடங்கியிருந்த அந்த சுல்தான்கள் பின் மெல்ல எழும்பொழுது வெள்ளையன் வந்து இந்நாட்டினை இந்துக்கள் ஆதரவோடு கைபற்றினான்.
அதே நேரம் இந்த நவாப்புக்களை சுல்தான்களை முழுக்க ஒழித்தால் இந்துக்கள் மிக சிறுபான்மையான தங்களையும் விரட்டிவிடுவார்கள் எனும் அச்சம் அவனுக்கு இருந்தது. இதனால் இந்துக்களை நவாப் நிஜாம் என கொண்டு ஆண்டுகொண்டிருந்தான்.
சுல்தான்களும் அவனுக்கு கட்டுபட்டு சந்தோஷமாக வரிகட்டி கொண்டிருந்தனர்.
அந்த சுல்தான்கள் 1947க்கு பின் போர்கொடி தூக்கினர். சிறு சிறு சமஸ்தானத்து நவாப்புகளெல்லாம் இனி நாங்கள் தனிநாடு என கிளம்பின. இவைகளுக்கு பின் பாகிஸ்தான் இருந்தது. பாகிஸ்தான் பின்னால் யார் யாரெல்லாமோ இருந்தார்கள்.
மலபார், மைசூர்,தமிழக சில பகுதிகள் உள்ளிட்டவை அடங்கிய தெற்கு பாகிஸ்தான் வேண்டும் என குரல் எழும்பியது.
ஐதரபாத் நிஜாம் தனி அரசாக துடித்து கொண்டிருந்தார். இன்னும் வங்கம் முதல் ஆற்காடு வரை ஆளாளுக்கு இனி எங்கள் சமஸ்தானம் என கிளம்பினார்கள்.
இந்தியாவில் அன்று பலமான ராணுவமில்லை. அரசு இல்லை. சட்டங்கள் முழுமையில்லை. கஜானா இல்லை. இனி இந்தியா கிபி 1500ம் ஆண்டுக்கு திரும்பும். அந்நாடு உடைந்து அரேபியா போல சுல்தான்களின் தேசங்களாக உதிக்கும் என உலகம் நம்ப தொடங்கிற்று.
காரணம், காந்தி அதை தடுக்கும் சக்தி கொண்டவராக இருந்தார். நேருவுக்கோ எதுபற்றியும் கவலையில்லை. இனி யார் இதையெல்லாம் தடுக்க போகின்றார்கள் என தேசமே கவலையுற்ற நேரமிது.
(இதில் ஈரோட்டு ராம்சாமியின் திராவிடநாடு பிரிவினை எல்லாம் வராது. காரணம் அப்படி ஒரு நாடு சாத்தியமே இல்லை என்பது ராம்சாமிக்கும் அண்ணாதுரைக்கும் தெரியும்
தேசம் மாபெரும் சிக்கலில் இருந்த அக்காலங்களில் ஒரு காமெடி வேண்டும் அல்லவா? அந்த காமெடியினை அண்ணாதுரை. ராம்சாமி. கருணாநிதியெல்லாம் ஒரு ஓரத்தில் செய்து கொண்டிருந்தார்கள்.
இங்கே இனி மறுபடி சுல்தான்கள் ஆட்சியா. இல்லை கிறிஸ்தவ மிஷனரிகள் காங்கிரஸ் மூலம் ஆள்வார்களா? இல்லை இந்து புரட்சி வெடிக்குமா? இதையும் தாண்டி ரஷ்ய சீன பாணியில் கம்யூனிசம் வெடிக்குமா என்றெல்லாம் பல கடுமையான சிக்கல்கள் இருந்த நேரம்.
அந்த நேரம் இந்த ராம்சாமி கோஷ்டி ஓரங்க நாடகம் நடத்தி மக்களை தமாஷ் செய்து கொண்டிருந்தது அவ்வளவுதான்)
அதிலும் ஐதரபாத் நிஜாம் போன்றவர்கள் செல்வந்தர்கள். பெரும் படைகளை குவித்தும் வைத்திருந்தார்கள்.
அப்பொழுதும் இஸ்லாம் ராஜ்ஜியங்களாக உடையும் எனும் ஆரூடம் இருந்ததே தவிர. இந்துக்களுக்கு என ஒரு சிறு ராஜ்யம் கூட அமையும் என யாரும் சொல்லவில்லை. வரலாற்றின் கண்ணீர் சோகம் இது.
இந்தியா, இனி சுல்தானியங்களாக உடையும் என எதிர்பார்க்கபட்ட வேளைதான். ஒரு சிங்கம் உறுமியது.
அதுவரை காந்திக்கு அடிமை, நேருவிசுவாசி என நம்பபட்ட மனிதர் அற்புதம் காட்டினார். துண்டு துண்டாக நாட்டை உடைக்கவா சுதந்திரம் வாங்கினோம் என சீறி எழுந்தார்.
அந்த மனிதனாலே இன்றிருக்கும் ஒருங்கிணைந்த இந்தியா சாத்தியமாயிற்று. அவனும் அமைதியாக இருந்திருந்தான் என்றால் இன்றிருக்கும் இந்தியாவும் இல்லை, காஷ்மீரும் இல்லை. இந்தியா உடைந்து சிதறியிருக்கும்.
ஆம். சரியான நேரம் எழும்பி காந்தியினையும் நேருவினையும் எதிர்த்து சுதந்திர இந்தியாவினை பலமான ஒரே இந்தியாவாக அவர்தான் மாற்றினான்.
சுதந்திர இந்தியாவில் மறக்கமுடியாத மனிதர் அவர். இன்று இந்தியா சுல்தான்கள், மன்னர்கள்,நவாப்கள் இம்சையின்றி ஜனநாயக நாடாக இந்தியா இருக்க அவர்தான் முதல் காரணம். இந்தியாவின் பெரும் அடையாளம் அவரேதான்.
சர்தார் வல்லபாய் பட்டேல்.
காந்தி பிறந்த குஜராத்தில்தான் அவரும் பிறந்தார். மிக கடினமான சூழலில் வளர்ந்தார். இரவல் சட்டப்புத்தகங்களிலே வழக்கறிஞனர் ஆன உழைப்பாளி அவர்.
காந்திக்கும் அவருக்கும் முதலில் பொருந்தவில்லை. மோதலில்தான் சந்தித்தார்கள். அதற்கான சந்தர்ப்பம் ஒரு வறட்சியின் உருவில் வந்தது. குஜராத்தின் “கேடா” மாவட்டத்தில் கடும் வறட்சி. ஒன்றும் விளையவில்லை ஆனால் வரிகேட்டது பிரிட்டிஷ் அரசாங்கம்.
விளைச்சல் இல்லை என சொன்ன விவசாயிகள் கதறல் அவர்களுக்கு கேட்கவில்லை. நிலத்தை ஜப்தி செய்ய வந்தார்கள். இங்குதான் பட்டேல் போராட வந்தார். அது வெற்றியும் ஆயிற்று.
அதனை வாழ்த்த வந்தார் காந்தி. ஏனென்றால் ஒரு தலைவன் உருவாகின்றானா? விடக் கூடாதே என ஓடிவந்து பார்க்கும் தந்திரம் அது. அப்படி வந்த காந்தி கொடுத்ததுதான் சர்தார் பட்டம். சர்தார் என்றால் தலைவர் என பொருள்.
அதன் பின் காந்தி பட்டேல் நட்பு வலுபெற்றது. காந்தியின் எல்லா போராட்டங்களிலும் பட்டேல் இருந்தார். எல்லா மாநாடுகளிலும் அவரோடு கலந்துகொண்டார். பல சிறைகளில் அடைக்கபட்டாலும் காந்தியோடு கலந்திருந்தார்.
எரவாடா சிறையில் காந்தியினை மிக நன்றாக கவனித்துகொண்டவர் பட்டேல்.
பகத்சிங் விவகாரத்தில் இருந்து நேதாஜி விவகாரம் வரை காந்திக்கும் பட்டேலுக்கும் முரண்பாடுகள் அதிகம். மலபாரின் மாப்பிள்ளை கலவரம் முதல் காந்தியின் இஸ்லாமிய பாசம் வரைக்கும் பட்டேலுக்கு பிடிக்காதுதான்.
ஆனால், தனியே சென்றால் காந்தி தன்னை அடையாளமின்றி அழிப்பது நிச்சயம். இதனால் காந்தியோடு இருந்தே உரிய நேரத்தில் திருப்பி அடிக்க . காந்திக்கு ஒரு கண்காணிப்பாளனாக சுற்றி வந்தார்.
ஒருவழியாக சுதந்திரம் கிடைக்கும் காலம் நெருங்கிற்று. இந்திய வரலாற்றின் துரதிருஷ்டம். சுதந்திரம் பெற போராடியதை விட. பெற்றபின்புதான் சவால் அதிகம் இருந்தது.
முதல் சிக்கல், அந்த ஜின்னா வடிவில் வந்தது. நேரடி நடவடிக்கை என அந்த ஜின்னா பொறுப்பே இல்லாமல் பாய, இந்தியாவில் ரத்த ஆறு ஓடிற்று.
காந்தியின் பேச்சினை கொஞ்சமும் மதிக்காமல் தேசத்தை பிரித்துகொண்டு ஓடினார் ஜின்னா.
காந்தி மனமொடிந்து இருக்க,நேரு அவர்களும் சகோதரரே எனும் மிகபெருந்தன்மையில் இருக்க பட்டேலின் முன்னிலையிலே இத்தேசம் பிரிக்கபட்டது.
காந்தி என்னமோ சொல்லி அழுதுகொண்டிருக்க,மிக தைரியமாக தன் அதிரடி கருத்தை இப்படி சொன்னார் பட்டேல்.
“உடலில் வளர்ந்துவிட்ட கட்டி மற்ற உறுப்புகளை தாக்குமுன் அப்புறபடுத்தபடுவது போல. இத்தேசத்திற்கு வந்த ஆபத்தை வெட்டி எறிந்துவிட்டோம். இனி இத்தேசம் தன் வழியில் வளர்ச்சி நோக்கி செல்லட்டும்”
ஆம். அடம்பிடித்த ஜின்னாவினை இங்கே வைத்துகொண்டு சதா காலமும் சர்ச்சையினை வளர்ப்பதை விட. சனியனை அடித்து விரட்டுவது சரி என ஆணித்தரமாக சொன்னார் பட்டேல்.
காந்தி பட்டேல் மோதல் தொடங்கியது. பட்டேல் ஆர்.எஸ்.எஸ் அனுதாபி எனும் சர்ச்சை எல்லாம் வந்தது. கொஞ்சமும அசரவில்லை பட்டேல்.
நாட்டுக்கு நல்லதை செய்யும் நான் ஆர்.எஸ்.எஸ் அனுதாபி என்றால் அதை நான் பெருமையாக கருதுகின்றேன் என உறுமி நின்றார் பட்டேல். ஆடிபோனார் காந்தி. பட்டேலுக்கு ஆதரவு பெருகிற்று
காங்கிரசுக்கும் நாட்டின் பிரதமர் பதவிக்கும் ஒருவரே இருக்கவேண்டும் என்றார் காந்தி. ஆனால் காங்கிரஸ் பட்டேலின் கையில்தான் இருந்தது. அவருக்குத்தான் கட்சி ஆதரவு இருந்தது. நினைத்தால் நொடியில் பட்டேல் பிரதமராகியிருக்க நேரமது.
ஆனால் விட்டுகொடுத்தார் பட்டேல். உள்துறை மற்றும் ராணுவ அமைச்சர் ஆனார். காந்தியோடு மோதிகொண்டிருக்க அவருக்கு விருப்பமில்லை. காரணம் செய்யவேண்டிய வேலைகள் அவ்வளவு இருந்தன.
இந்திய பிரிவினை, பாகிஸ்தானியரால் அடித்துவிரட்டபட்ட இந்துக்கள், சொத்துக்களை இழந்த இந்து அகதிகள், நவாப்களின் தனி கொடிகள் என பெரும் சிக்கல்கள் இருந்தன.
இப்பொழுதும் காந்தி திருந்தியபாடில்லை. பாகிஸ்தானுக்கு கொடுக்கவேண்டிய 55 கோடி ரூபாயினை கொடுக்க சொன்னார். பட்டேல் மறுத்தார். அவர்கள் வெறிபிடித்த நிலையில் இருக்கின்றார்கள். இதனை கொடுத்தால் நம்மீதுதான் பாய்வார்கள். இது கொடுக்க வேண்டிய நேரம் அல்ல என மறுத்தார்.
உண்ணாவிரதம் தொடங்கினார் காந்தி. இறுதியில் காந்தியின் பிடிவாதம் வென்றது. பட்டேலுக்கு மனம் சோர்ந்தது. எனினும் லட்சியத்தில் பின்வாங்கவில்லை.
ஆனால், குஜராத்தின் ஜூனாகத் சர்ச்சையில் அவர் கவனம் செலுத்தினார். அங்கு இஸ்லாமிய மன்னன் இருந்தான் அவன் பாகிஸ்தானோடு இணைய விரும்பினான். மக்களோ இந்தியாவோடு இணைய விரும்பினர்
பெரும் குழப்பம் ஏற்பட்டது. இறுதியில் பட்டேலின் ஆலோசனையில் நடந்த பொது வாக்கெடுப்பில் மக்கள் தேர்வு இந்தியா என முடிந்தது. ஜூனாகத் சுல்தான் காட்சியில் இருந்தே அகற்றபட்டான். பெரும் ஆபத்து நீங்கியது.
பாகிஸ்தானுக்கு பெரும் அவமானம் ஆயிற்று. ஜூனாகத் இந்தியாவோடு இணைந்தது. இதற்கு பெரும் காரணம் பட்டேல்.
இங்கு சறுக்கிய பாகிஸ்தான், காஷ்மீரில் தேர்தல் என்றாலும் அம்மக்கள் மனம் இந்தியாவிற்குத்தான் செல்லும் என உணர்ந்தது. காரணம் மதவாத பாகிஸ்தானை இஸ்லாமியரில் பலரே விரும்பவில்லை.
பாகிஸ்தான் திட்டத்துக்கு காந்தி உண்ணாவிரதம் இருந்து வாங்கி கொடுத்த 55 கோடி மிகவும் உதவியது. ஆம் அந்த பணம் இன்று சில நூறு பில்லியன்களுக்கு சமம்.
அந்த பணத்தில்தான் காஷ்மீர்மேல் பாய்ந்தது பாகிஸ்தான். காந்தி எவ்வளவு பெரும் தவறு செய்தார் என்பதை தேசம் உணர்ந்து கொண்டது.
இந்தியா ஆயிரம் சிக்கலில் இருக்க. இந்தியாவின் இந்துக்களும் சீக்கியரும் எல்லையில் பாதிக்கபட்டு மானமின்றி சொத்து இன்றி வாழ்வின்றி அழுது கொண்டிருக்க, அவர்கள் சடலங்கள் தெருவிலும் கிணற்றிலும் மிதக்க, அந்த பாகிஸ்தானுக்கு காந்தி 55 கோடி கொடுக்க சொன்னதுதான் இந்திய இந்துக்களின் கோபத்துக்கு காரணம்.
அந்த பணத்தை வாங்கி காஷ்மீரிலே பாகிஸ்தான் பாய்ந்தபொழுதுதான் காந்திமேல் வன்மம் பெருகிற்று. கோட்சே துப்பாக்கி தூக்க காரணம் இதுதான்.
கோட்சே இல்லாவிட்டால் இன்னொருவனுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால் அந்த வரலாற்று பெருமையினை இன்னொருவனுக்கு கொடுக்க கோட்சே விரும்பவில்லை; வென்றுவிட்டான்.
ஆம். பட்டேல் தடுத்து காந்தி வாங்கி கொடுத்த 55 கோடியில்தான் பாகிஸ்தான் காஷ்மீர் மீது படையெடுத்தது. மன்னன் ஹரிசிங் முதலில் இந்திய உதவியினை கோரவில்லை என்றாலும் பின் இறங்கி வந்தார். இந்தியா காஷ்மீரை மீட்டுத்தரவேண்டும் என்றார்.
இந்தியாவோடு இணைய சம்மதம் என்றால் தயார் என சொன்னது இந்தியா. இந்தியா என்றால் பட்டேல். போரில் பாதி காஷ்மீர் இந்தியா வசம் ஆயிற்று. மன்னரும் கையெழுத்திட்டார்.
பட்டேல் உறுதியாக சொன்னார். இதோ மன்னரின் ஒப்பந்தம் அதாவது முழு காஷ்மீரும் மன்னருடையது. மன்னர் இந்தியாவிற்கு தந்துவிட்டார். ஆக பாகிஸ்தான் தான் பாதி காஷ்மீரில் ஆக்கிரமிப்பு செய்திருக்கின்றது. நியாயம் நம் பக்கம் இருக்கின்றது. போர் மூலம் அதனை மீட்கலாம் என வாதிட்டார்.
ஆம். முழு காஷ்மீரும் மன்னருக்கு. மன்னர் இந்தியாவோடு இணைத்துவிட்டார். பாகிஸ்தான் ராணுவம் ஒன்றும் பிரமாதமானது அல்ல. அடித்து துவைத்து காஷ்மீர் முழுக்க எடுத்துவிடலாம். இதை இப்பொழுது செய்யாவிட்டால் பெரும் சிக்கல் என எச்சரித்தார் பட்டேல்.
ஆனால், நேருவா அசைவார்?. அவர் பாகிஸ்தானை தன் தம்பியாகவே கருதியவர் அல்லவா? இதனால் பாகிஸ்தானிய சகோதரனிடம் பாதி காஷ்மீர் இருப்பதில் என்ன தவறு என்பது போல பேசிவிட்டு போருக்கு சம்மதிக்கவில்லை.
ஐ.நா, அது, இது என என்னவெல்லாமோ சொல்லிகொண்டிருந்தார். அவர் மனதில் காஷ்மீரில் பாதி பாகிஸ்தானுக்கு இருக்கட்டும் எனும் ஒரு பாசம் இருந்து கொண்டே இருந்தது.
“மிக பெரும் தவறு செய்கின்றீர்கள் நேரு. இது பிற்காலத்தில் தீரா தலைவலி கொடுக்கும்” என்ற பட்டேலின் எச்சரிக்கையினை புறக்கணித்தார் நேரு.
மனம் நொந்த பட்டேல் காந்தியினை சந்தித்து தான் அரசியலிலிருந்தும். உள்துறை அமைச்சர் பதவியிலும் இருந்தும் விலகுவதாக சொன்னார். காந்தி இதுபற்றி அடுத்தமாதம் பேசலாம் என சொல்லி சமாதானப் படுத்தினார்.
காந்தியினை உயிரோடு சந்தித்த கடைசி பிரபலம் பட்டேல்தான்.
கடும் அதிருப்தியில் இந்தியாவும் ஏராளமான இந்துக்களும் இருந்தபோது 1948 ஜனவரி 20ம் தேதி காந்தி மீது குண்டு வீசபட்டது . தப்பினார் காந்தி. அந்த குண்டை வீசிய மதனாலால் எனும் அகதியினை பிடித்து விசாரித்தார்கள். ஆனால் காந்தியினை கொல்ல பல குழுக்கள் அலைந்தது அப்போது யாருக்கும் தெரியவில்லை.
அடுத்த 10ம் நாள் காந்தி கோட்சேவால் கொல்லபட்டார்.
பழி எங்கு விழுந்தது என்றால், பட்டேல் மீது விழுந்தது. ஆம். ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளை பட்டேல் கட்டுபடுத்தவில்லை. அவர்களுக்கு சாதகமாக நடந்தார். அவர்தான் கொலைக்கு பொறுப்பு என்றெல்லாம் கடும் குற்றம் சாட்டபட்டன.
மனம் நொந்தார் பட்டேல். பாகிஸ்தான் மதவெறியில் பிரிந்தது போல இந்தியாவிலும் எறியும் மதவெறி அவருக்கு வேதனை கொடுத்தது.
காந்தியின் கொலை அவர் மனதை பெரிதும் பாதித்தது . ஆனால் எந்த உணர்ச்சியும் வெளிகாட்டா இரும்பு மனிதர் அவர் அதனையும் காட்டிகொள்ளவில்லை.
அடுத்து அவர் உயிரோடு இருந்தது 2 வருடங்களே.
அந்த 2 வருடத்தில் பட்டேல் செய்ததுதான் உச்சபட்ச சாதனை.
ஆம் 527 சமஸ்தானமாக இருந்தது பிரிட்டிஷ் இந்தியா. வெள்ளையன் வெளியேறியதும் பல தாங்கள் சுதந்திர நாடு என அறிவித்தன. அதில் ஜூனாகத் இந்தியாவோடு இணைந்தது. இன்னும் ஏராளமான பகுதிகள் குதித்தன
அவற்றை எல்லாம் இந்தியாவோடு சேர்த்தார். பேச வேண்டிய இடங்களில் பேசினார். மிரட்ட வேண்டிய இடங்களில் மிரட்டினார். அடிக்க வேண்டிய இடத்தில் அடித்தார்.
பெரும் தொல்லை கொடுத்தது ஐதராபத் சமஸ்தானம். அதன் மன்னர் இணைய மறுத்தார். போருக்கு தயார் என்றார். பாகிஸ்தான் உதவிக்கு வரும் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது.
அவர் துருக்கி மன்னருக்கு சம்பந்தி என்பதால் பல கணக்குகள் அவருக்கு இருந்தன.
அவருக்கு ஆதரவாக மேற்கு பாகிஸ்தான். கிழக்குபாகிஸ்தான் போல தெற்கில் ஒரு பாகிஸ்தான் வேண்டும் என்ற குரல்களும் எழும்பின.
ஒருவித பரபரப்பு தொற்றிகொண்ட நேரமது. ஆனால் இந்திய படைகளுக்கு முழு உரிமை கொடுத்தார் பட்டேல் . போரில் சில அழிவுகளுடன் ஐதரபாத் இந்தியாவோடு இணைந்தது.
தெற்கு பாகிஸ்தான் எனும் விஷ வித்து அன்றே பிடுங்கி தூர எறியபட்டது.
இன்று நாம் காணும் சுதந்திர இந்தியாவின் முழு வடிவம் பட்டேல் எனும் இரும்பு மனிதன் கொடுத்தது.
பட்டேல் என்ற மாமனிதன் இல்லையென்றால் இத்தேசம் இந்த வடிவம் பெற்றிருக்குமா? என்பது சந்தேகம்.
காரணம், நேருவின் ஒரு மாதிரியான குணம் அது. ஏதோ பண்ணையார் மனநிலையில் இருந்து கடை தேங்காயினை எடுத்து பிள்ளையாருக்கு உடைப்பது போல் இந்திய பகுதிகளை அந்நியருக்கு விட்டு கொடுத்தே வந்தார்.
பிரிட்டன், பிரான்ஸ் எல்லாம் சிறிய தேசங்கள் அல்லவா? அப்படி இந்தியாவும் இருந்தால்தான் என்ன எனும் அளவு அவருக்கு சிந்தனை இருந்தது.
போர்ச்சுக்கல்லை கூட கோவாவில் இருந்து வெளியேற அவர் விரும்பவில்லை. பட்டேல் அதற்கு முயன்றபொழுது நேரு தடுத்தார். பட்டேல் மனம் மிகவும் கதறி அழுத தருணமது.
ஆம். பட்டேலுக்கு மிக தூய கொள்கை இருந்தது. நாட்டுபற்று இருந்தது. ஆனால், அதிகாரமும் சக்தியும் நேருவிடம் சிக்கிகொண்டது. நேருவினை விட்டு வந்தால் பட்டேல் நிலைக்கமுடியாது எனும் நிலவரம் இருந்தது.
சீன யுத்தமே நேருவுக்கு உண்மையினை கற்று கொடுத்தது. கோவா எனும் தனி நாட்டில் அந்நிய விமானம் வர இருந்தது.
இந்தியாவுக்குள் அந்நிய தளமும் நாடுகளும் இருப்பது எவ்வளவு ஆபத்து என பட்டேல் 1947ல் எச்சரித்தார். ஆனால் நேருவுக்கு 1962ல்தான் தெரிந்தது. தன் கடைசி நாட்களில் நேரு பட்டேலை நினைத்து அழுதிருக்க கூடும்.
பட்டேல் கொடுத்த எச்சரிக்கையிலேதான் போர்ச்சுகலின் கோவா,பிரான்சின் பாண்டிச்சேரி ஆகியவை பின்னாளில் நமக்கு கிடைத்தன. அதனை காண அவர் உயிரோடு இல்லை.
ஆனால், அவர் இந்த அளவு அடித்து நொறுக்கி இந்தியாவினை ஒன்று சேர்க்கவில்லை என்றால் இந்த இணைப்புகள் இன்னும் தாமதமாகியிருக்கும்.
வரலாறு சொன்னபடி இந்தியாவின் பிரதமராக பட்டேல்தான் வந்திருக்க வேண்டும். அவர் இருந்திருந்தால் காஷ்மீர் உள்ளிட்ட பெரும் சிக்கல்கள் முளைத்தே இருக்காது.
ஜூனாகத், ஐதராபாத் போல காஷ்மீரும் இன்று அமைதியாக இந்தியாவோடு இருந்திருக்கும்.
பட்டேலின் நாட்டுபற்றும். அவரின் தியாக வாழ்வும் நெருப்பு போன்றது. அதில் ஒரு குறை சொல்ல முடியாது
நெருப்பில் ஏது மாசு?
நாட்டுபற்று மிக்க ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மீது. காஷ்மீர் போரின் பொழுது நாட்டுப்பற்றை பேசிய அந்த ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை அவருக்கு பிடித்திருந்தது.
இந்திய, பாகிஸ்தான் பிரிவினையின் பொழுது அகதிகளாய் ஓடிவந்தவர்களுக்கு முகாம் அமைத்து உதவிய அந்த ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை அவருக்கு பிடித்தது.
இது நாட்டுபற்று மிக்க எல்லோருக்கும் வரும் உணர்வு. பட்டேலுக்கும் வந்ததில் ஆச்சரியமில்லை. வராவிட்டால்தான் ஆச்சரியம்.
இந்த நாட்டின் உண்மையான பாதுகாவலர்கள் ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் என நம்பினார் பட்டேல். அவர்கள் பணி அரசியல்வாதிகள் குறுக்கிடாமல் நடந்தால் ஒழிய இத்தேசம் நன்றாக இயங்காது என்பது அவரின் கொள்கை.
அது மகா உண்மையானதும் கூட.
இத்தேசத்தின் உண்மையான சவால் சுதந்திரத்திற்கு பின்பே இருந்தது. இத்தேசம் இரண்டல்ல, இரண்டாயிரம் துண்டாக உடையும் என உலகம் நம்பிகொண்டிருந்தது.
அதனை எல்லாம் பொய்யாக்கி, இந்த மாபெரும் தேசத்தை அமைத்து கொடுத்த அந்த மாபெரும் மனிதனுக்கு இன்று பிறந்த நாள்.
கஜினியால் இடிக்கபட்ட சோமநாதபுரி ஆலயத்தை திரும்ப கட்டியதில் மிகபெரிய பங்காற்றியவர் பட்டேல். அதை மறக்கவே கூடாது. தேசத்தில் அந்நிய ஆட்சியால் பாதிக்கபட்ட எல்லா ஆலயங்களும் பொலிவு பெற வேண்டும் என விரும்பிய தலைவர் அவர்.
நல்ல இந்தியனாகவும் நல்ல இந்துவாகவும் சிறந்த ராஜதந்திரியாகவும் விளங்கிய தியாக தலைவர் அவர். ஒருவகையில் வீரசிவாஜியின் மறுபிறப்பு அவர்.
பிரதமராகும் வாய்ப்பிருந்தும் கொஞ்சமும் சுயநலமின்றி உள்துறையில்தான் இத்தேசத்தை காக்கும் வாய்ப்பு உண்டு என சொல்லி ஏற்று அதனை சாதித்தும் காட்டியம் மாமனிதர் பட்டேல்.
இத்தேசத்தின் சர்தார் எனும் சொல்லுக்கு மிக பொருத்தமானவர் அவர். ஆம், இத்தேசத்தின் தலைவன் அவரே தான்.
இத்தேசம், காலம் தந்த அந்த மாமனிதனை அவர் பிறந்தநாளில் வாழ்த்தி வணங்குகின்றது.
அந்த மாமனிதன் காந்தியினை எதிர்த்தார். நேருவினை எதிர்த்தார் என்பதால் காங்கிரஸார் அவரை ஒதுக்கினார்கள் பட்டேலுக்கு பெரும் துரோகம் இழைக்கபட்டது.
ஆனால் பாஜக அரசுதான் அவருக்குரிய அங்கீகாரத்தை கொடுத்தது.
அவர்கள்தான் பட்டேலுக்கு மிகபெரும் சிலை திறந்தார்கள். பட்டேல் பாஜகவுக்கான அடையாளம் என்பது சரியல்ல. அவர் தேச தலைவர்களில் ஒருவர்.
அவர் படமும் காந்தி, நேரு படங்களைவிட அதிகமாக இங்கே கொண்டாடபட வேண்டும்.
இந்திய ரூபாயிலும் இந்திய அரசின் அடையாளங்களிலும் தயக்கமின்றி அந்த மனிதனை சேர்க்கலாம். காரணம், அவன் இல்லையென்றால் பரந்த இந்த தேசமில்லை; இந்த அடையாளங்கள் இல்லை.
அந்த தேசத்தலைவனுக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்படி கரன்ஸி முதல் காவல் நிலையம் வரை அவர் படம் வைக்கப்படவேண்டும். அதுதான் அவருக்கான அங்கீகாரம்.
இத்தேசம் 3 துண்டுகளாய் உடைய மனப்பூர்வமாக ஆசிவழங்கிய காந்தி,அது இன்னும் பல்நூறு துண்டுகளாக உடைந்தாலும் சம்மதம் என இருந்த நேரு போன்றோருக்கு கொடுக்கப்படும் கவுவரவத்தை விட இந்த தேசத்தை ஒரே நாடாக்கிய அந்த மாமனிதனுக்கு எவ்வளவு பெரும் கவுரவம் கொடுக்கபடவேண்டும்?
அதை இன்னும் இத்தேசம் செய்யவில்லை. விரைவில் செய்யும் என நம்புவோம்.
இத்தேசம் ஒரே தேசமாக இருக்க வேண்டும் என பாடுபட்ட அந்த மாமனிதனுக்கு தேசத்தின் அஞ்சலிகள்.
பட்டேலின் கனவுபடி இந்தியா ஒரே தேசமாக. பாதுகாப்பான தேசமாக வளர்ந்து நிலைத்திருக்க இத்தேசம் உறுதிமொழி எடுக்கின்றது.
ஒரு விஷயத்தை உறுதியாக சொல்லலாம் .காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து . பாதி காஷ்மீர் பாகிஸ்தானுக்கு என்பதிலெல்லாம் பட்டேலுக்கு உடன்பாடே இல்லை. காஷ்மீரை இந்தியாவின் பூரண பகுதியாக்குவதுதான் அவர் கனவு. ஆனால், நேரு விடவில்லை.
பட்டேலின் நெஞ்சில் குத்திய முள் அது. இந்த அரசு 370 பிரிவினை நீக்கி அந்த முள்ளை எடுத்துவிட்டது
பட்டேல் சிலையினை விட அவருக்கு மகா பெருமையான விஷயம் அதுதான்.
இந்தியாவின் இரும்பு மனிதனுக்கு. லெனின்,கரிபால்டி, பிஸ்மார்க், கமால் பாட்சா, மாவோ என்ற உலக வரிசையில் வந்த மாமனிதனுக்குக்கு ஒவ்வொரு இந்தியனின் நெஞ்சார்ந்த அஞ்சலிகள் நன்றி கண்ணீராய் கொட்டிகொண்டிருக்கின்றது.
வந்தே மாதரம். ஜெய்ஹிந்த்!