இது காங்கிரஸின் சில பிரமாண்ட கற்பனை முகங்கள் போலி பிம்பங்கள் கலையும் நேரம். பொய்களும் அவர்களின் பல நடவடிக்கைகளும் பல கோணங்களில் இருந்தும் விமர்சிக்கபடும் காலமும் இது.
அந்த வரிசையில் இந்திராவினையும் மாறுபட்ட கோணங்களில் கண்டாக வேண்டும்.
இந்திராவின் நாட்டுபற்றுக்கு யாரும் மறுப்பு சொல்லமுடியாது. அவரின் நாட்டுபற்று அளப்பரியது. அது நாட்டுபற்று எனும் வகையில் வந்ததா இல்லை தந்தையின் தவறுகளை சரிசெய்ய வந்ததா. கட்சி தன் குடும்ப சொத்து எனும் கடமை உணர்வில் வந்ததா என்பதுபற்றியெல்லாம் விவாதிக்க ஒன்றுமில்லை.
இந்தியாவுக்கு சில நல்ல விஷயங்களை செய்தவர் எனும் வகையில் இந்திராவுக்கு எக்காலமும் இங்கு இடம் உண்டு.
பிறப்பாலே பெரும் செல்வாக்கு படைத்தவர் இந்திரா. நேருவின் மகளாக மட்டும் இருந்திராவிடால் நிச்சயம் கட்சி பதவியோ பிரதமர் பதவியோ அவரை தேடி வந்திருக்காது. ஆக பதவி அவருக்கு திணிக்கபட்டது என்பதே நிஜம்.
இந்த காங்கிரஸ் கட்சி எக்காலமும் அந்நிய பிடிகொண்ட கட்சி. அதை தொடங்கிய ஆங்கிலேயன் முதல் இந்நாள் தலைவி சோனியாவரை அந்நியர்களே. அப்படிபட்ட கட்சியில் பல நாட்டு உளவாளிகளின் கரங்கள் உண்டு என்பது 1960 கால செய்திகள்.
சாஸ்திரியின் திடீர்மரணமேதான் இந்திராவுக்கு வழிவிட்டது. நேரு குடும்பம் அல்லாத காங்கிரஸில் மிகபெரிய எழுச்சியினை சாஸ்திரி ஏற்படுத்தினார். அவரின் சர்ச்சைக்குரிய மரணத்துக்கு பின்புதான் இந்திரா பிரதமரானார்.
இதுதான் இந்திய வரலாற்றில் ஆச்சரியம். காங்கிரஸில் அன்று நேருவும் சாஸ்திரியும் மட்டும்தான் இல்லையே தவிர ராஜாஜி. காமராஜர். நிஜலிங்கப்பா இன்னும் யார் யாரெல்லாமோ சீனியர்கள் இருந்தார்கள். சுதந்திர போராட்ட தியாகிகள் இருந்தார்கள். அவர்களையெல்லாம் விட்டு இந்திரா ஏன் கொண்டுவரபட்டார் என்பது விடை தெரியா கேள்வி.
யாருடைய கைப்பாவையாகவோ அவர் கொண்டுவரபட்டார் என்பது நிஜம். ஆனால் ஆட்சிக்கு வந்தபின் இந்திராவுக்கு அவர் குடும்ப இயல்பான குணம் வந்தது. நேருவுக்குரிய கோபம், அகங்காரம், ஒருமாதிரி மேலாதிக்கபாவம் எல்லாம் இந்திராவுக்கும் வந்தது.
ஆனால், நேருவுக்கும் இந்திராவுக்கும் உள்ள வித்தியாசம் இந்திரா கொஞ்சம் அடாவடியானவர். மோதலுக்கு அஞ்சாதவர்.
இந்திராவின் சாதனைகள் நிச்சயம் இங்கு நிலைத்திருப்பவை. சிக்கிமை இந்தியாவோடு இணைத்தது. வங்கதேசத்தை விடுவித்து பாகிஸ்தானுக்கு ஒரு காலை வெட்டியது. இலங்கையில் பிரபாகரனை வளர்த்து ஜெயவர்த்தனேவினை மிரட்டியது.
இந்தியாவுக்கு ஏவுகணை முதல் அணுகுண்டுவரை கொடுத்த அவரின் பல நடவடிக்கைகள் எக்காலமும் இங்கு நிலைத்திருப்பவை.
சமஸ்தான ஒழிப்பு. மன்னர்கள் பென்சன் நிறுத்தம் உள்ளிட்ட பல விஷயங்கள் வாழ்த்துகுரியவை.
நிச்சயம், ஒரு ராணுவத்துறை மந்திரிக்குரிய அனைத்து குணங்களும் அவருக்கு இருந்தன. அவ்வளவு தந்திரம், நிதானம், சுத்தமாக எதிரியினை அழிக்கும் நுட்பம் என எல்லாமும் இருந்தன.
அவர் மிக உறுதியும் தந்திரமும் வீரமும் ஆளுமையும் மிக்கவர் சந்தேகமில்லை.
ஆனால், அந்த ஆளுமையினை பலாத்காரமாக இந்தியாவின் உள்ளும் காட்டினார். அதுதான் அவர் செய்த பெரும் தவறு.
வெளிநாடுகளை அடக்கிய அந்த வேகத்தை கட்சியிலும் நாட்டிலும் காட்டினார். யாருடைய உணர்வுகளையும் புரிந்து கொள்ள அவர் தயார் இல்லை.
சர்வாதிகாரத்தை கையிலெடுத்து கட்சியின் பெரும் தலைகளை எல்லாம் ஓட அடித்தார். காமராஜர் முதல் ராஜாஜி வரை காங்கிரசை விட்டு தலைதெறிக்க ஓடினார்கள். முதன் முதலாக காங்கிரஸ் இல்லாத அரசு வேண்டும் எனும் குரல் இந்திராவாலேதான் வந்தது.
பாகிஸ்தான் ஒரு இஸ்லாமிய தேசம். இந்தியா உருவாக்கிய வங்கதேசமும் ஒரு இஸ்லாமிய தேசம் என ஒப்புகொண்ட இந்திராவுக்கு இந்தியா ஒரு இந்துதேசம் என்பதை ஒப்புகொள்ள “நேருவின் ஈகோ” தடுத்தது.
அதை மட்டும் செய்திருந்தால் இதை இந்துநாடாக மாற்றி. சீக்கியருக்குள்ள உரிமைகளை கொடுத்திருந்தால் இந்திரா இந்தியாவினை சுமார் 50 ஆண்டுகள் சீனாவின் ஷின்பெங் போல் நிரந்தரமாக. ரஷ்ய புட்டீனை போல் வல்லமையுடன் ஆண்டிருப்பார்.
ஆனால், அவர் இந்துக்களின் உணர்வினை ஒரு இடத்திலும் புரிந்து கொள்ளவில்லை. கோவிலுக்கு அவர் செல்வதுமில்லை. திருநீறோ விபூதியோ ஏற்பதுமில்லை. இந்துக்கள் அதிகம் வாழும் நாட்டின் பிரதமர் எனும் ஒரு நினைவே அவருக்கு இல்லை.
பாகிஸ்தான் எனும் இஸ்லாமிய நாட்டுடன் மோதிய அவர் இந்திய இந்துக்களை ஏறேடுத்தும் பார்க்கவில்லை. பசுவதைக்கு எதிரான சாதுக்களுக்கு எதிரான அவரின் வன்முறையெல்லாம் மன்னிக்கமுடியா வரலாறு.
இந்திராவின் காலத்தில் யாருக்கும் மரியாதையில்லை யாருடைய கருத்துக்கும் பதிலே இல்லை. அவர்போக்கில் இரும்பு சர்வாதிகாரியாக ஆள ஆரம்பித்தார். அவரை கண்டு அவரின் மகன் சஞ்சய்காந்தியாரும் உருவானார்.
இந்திராவுக்கு தைரியம் அதிகம் என்றொரு கோணம் இருந்தாலும் அச்சமும் இருந்தது. ஆம், கட்சியின் பெரும் தலைவர்களுக்கு அஞ்சியது போலவே வரலாற்றின் பல இடங்களில் அவரின் அச்சம் இருந்தது.
தன்னைவிட இன்னொரு முகம் உருவாவதை அவர் விரும்பவில்லை. சர்வாதிகாரிக்குரிய அனைத்து அடையாளங்களும் அவருக்கு இருந்தது.
கட்சியில் சஞ்சயினை தன் வாரிசாக உருவாக்கினார் இந்திரா. இன்று காங்கிரஸில் இருக்கும் அனைத்து வீழ்ச்சிக்கான அடித்தளம் இதுதான். இன்றும் காங்கிரசுக்கு வலுவான தலைவர் நேருகுடும்பம் தாண்டி வராததற்கு முதல் அஸ்திவாரம் அதுதான்.
இந்திராவின் முதல் கோணல் அல்லது சுயரூபம் காமராஜரை விரட்டும்பொழுது தெரிந்தாலும் அவரின் அச்சம் வங்கப்போருக்கு பின்பேதான் தெரிந்தது.
இந்த தேசம் கண்ட தனிப்பெரும் வீரன் மானெக்சா. அவரின் வியூகமும் ராணுவ மூளையும் அபாரமனது. அவரை முன்னிறுத்தினால் 1962ல் அவ்வளவு பெரும் தோல்வி ஏற்பட்டிருக்காது.
அது 1965 யுத்தத்தில் தெரிந்தது. மானெக்சாவும் அவருடன் இருந்த யூத இந்தியரான ரபேல் ஜேக்கப் போன்றோர் அணியும் அபாரமானவை. அவர்களால்தான் 1965 யுத்தம் வெற்றிபெற்றது. அதிலும் காஷ்மீரை இந்தியா மீட்கபோகும் நேரம் சாஸ்திரி மரணமடைந்தார்.
1971ல் மாபெரும் வெற்றியினை தேசத்துக்கு பெற்றுகொடுத்தார் மானெக்சா. தேசம் அவரை கொண்டாடியது. மிகபெரிய வரவேற்பு அவருக்கு இருந்தது.
காங்கிரசின் சில ஊழல்கள், வாரிசு அரசியல் என வெறுப்புற்ற இந்தியா மானெக்சாவினை அப்துல்கலாமை நோக்கியது போல் நோக்கின.
ஆம். மானக்சாவுக்கும் இந்திராவுக்குமான மோதல்கள் இந்திய வரலாற்றில் மறைக்கபட்ட ஒன்று.
இம்முறையும் காஷ்மீரை விட கூடாது என உறுமினார் மானக்சா. 1 லட்சம் பாகிஸ்தான் வீரர்கள் சரணடைந்த நேரம் முழு காஷ்மிரை மீட்க வேண்டும் என்றார் மானெக்சா.
ஆனால், ராணுவம் அரசியலில் தலையிட கூடாது என சீறினார் இந்திரா. ஆனால் தேசம் மானெக்சா பக்கமே இருந்தது. இது இந்திராவுக்கு அச்சமாயிற்று.
காஷ்மீரை மீட்டால் சாஸ்திரி போல் தனக்கும் முடிவு நேரலாம் என இந்திரா அஞ்சுகின்றார் என செய்திகள் வந்தன. மானெக்சா இதை மறுக்கவில்லை.
இந்திராவின் இமேஜ் நொறுங்கிகொண்டிருந்தது.
மானெக்சா ஒரு மாமனிதன். அவன் நினைத்திருந்தால் நொடியில் அன்று ஆட்சியினை கைபற்றியிருக்கலாம். இல்லை, தேர்தலில் நின்றால் பெருவெற்றி பெற்றிருக்கலாம்.
ஆனால், ராணுவம் அரசியலில் தலையிட கூடாது. அதே நேரம் நாட்டுக்காக சாகும். ராணுவம் சொல்வதை அரசும் ஏற்கவேண்டும், ராணுவம் நாட்டுநலன் ஒன்றையே சிந்திக்கும் என சொல்லிகொண்டிருந்தான் மானெக்சா.
ஆம். மானெக்சாவுக்கு மிக அஞ்சினார் இந்திரா. பின்பு சாவர்க்கருக்கு நேருவுக்கு இழைக்கபட்டதெல்லம் மானெக்சாவுக்கும் நடந்தது.
வடக்கே இருந்தால் அவருக்கு ஆதரவு பெருகும் என கருதி. மிக நுணுக்கமாக திராவிடப் பிடியில் இருந்த தமிழகத்தின் ஊட்டிக்கு அனுப்பபட்டார் மானெக்சா.
ஆம். வங்கபோரின் நாயகன். காஷ்மீரை கைபற்ற இந்திராவிடம் மல்லுகட்டிய அந்த மாவீரன் தமிழக ஊட்டியில் அனாதைபோல் வாழ்ந்தான் என்பது யாருக்கும் தெரியாது.
2008ல் அவர் சாகும்வரை அப்படி ஒரு நாயகன் இருந்தது தமிழனுக்கும் தெரியாது.
மானெக்சாவின் புகழ் பெருகும் பொழுதுதான் அவர் தமிழகம் வரலாம் எனும் பொழுதுதான் இங்கே ராமர்படத்தை செருப்பால் அடித்த திசைதிருப்பல் நடந்தது.
இந்திரா ஏன் அந்நேரம் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது புரிந்திருக்கலாம்.
ஆம். திமுகவுக்கும் இந்திராவுக்கும் ரகசிய புரிதல்கள் இருந்தன. காமராஜர் தலையெடுப்பது தன் அரசியலுக்கு எதிரான விஷயம் என கருதிய இந்திரா திமுகவுடன் உறவு பாராட்டினார்.
ஆனால், திமுகவின் உண்மையான முகத்தை மதுரையில் அடிவாங்கும்பொழுதுதான் புரிந்துகொண்டார். அதன் பின்னும் திமுகவுக்கு எதிராக பெரும் நடவடிக்கை ஏதும் அவர் செய்யவில்லை. நீதிபதி ரஞ்சித்சிங் சர்காரியாவினை அனுப்பினார். அத்தோடு கருணாநிதிக்கும் தேசாபிமானம் வந்துவிட்டது.
இந்திராவின் நடவடிக்கைகள் அனைத்தும் அடக்கி ஆளுதல் எனும் சித்தாந்தத்திலே இருந்தன. ஒரு அச்சமும் குழப்பமும் அவரிடம் இருந்து கொண்டே இருந்தது.
எல்லோரையும் அடக்கிய அவர் தன் அந்த அகந்தையினை சீக்கியரிடமும் காட்டினார். அதுதான் தவறு. மாபெரும் தவறு.
தன்னை அதிபுத்திசாலியாகவும் மாபெரும் ஆற்றல் நிறைந்தவராகவும் நினைத்து இஷ்டத்துக்கு ஆடிகொணடிருந்து எல்லோரையும் காலில் போட்டு மிதித்த இந்திரா சில இடங்களில் சறுக்கினார்.
அதில் சீக்கியர் விவகாரமும் ராஜிவ் திருமணமும் ஒன்று.
இந்தியாவினை ஆளும் சக்திவாய்ந்த தலைவி இந்திரா. அவருக்கு உலக உளவுத்துறை முதல் உள்ளூர் உளவுத்துறைவரை அத்துபடி.
ஒரு அந்நியநாட்டு பெண்மணி தன் வீட்டுக்கு வருவதை- அவள் நல்லவளாகவே இருக்கட்டும், ஆனால், அவளின் சுற்றம் குடும்பம் வழியாக அயல்நாட்டு உளவுத்துறைகள் கால்பதிக்காதா என்பதை- உணராமல் இருந்ததுதான் ஆச்சரியம்.
இவ்வளவுக்கும் சிக்கிமினை இணைக்கும் பொழுது சிக்கிம் அரசரின் அமெரிக்க மனைவி மூலம் நடந்த அனைத்து நாடகங்களையும் அறிந்தவர் இந்திரா.
அவர் சோனியாவினை வீட்டுக்குள் அனுமதித்தது தவறு. அதைவிட பெரும் தவறு, அவரோடு ஒரே வீட்டில் தங்கியது.
இதையெல்லாம் பாதுகாப்பு அமைப்புக்கள் எடுத்து சொன்னாலும் கேட்கும் நபர் அல்ல இந்திரா.
உண்மையில், சீக்கிய இனம் பரிதாபத்துகுரிய இனம். அவர்களின் கண்ணீரும் வரலாறும் சோகமும் வரலாற்றின் கண்ணீர் பக்கங்கள்.
இன்றுவரை அவர்களின் கண்ணீர் வரலாறும் அவர்களின் நியாயமும் வெளிவரவில்லை என்பதுதான் சோகம்.
ஆம். அந்த இனம் 15ம் நூற்றாண்டில் ஆப்கானியரால் அவ்வளவு பாதிக்கபட்டது. அந்த மண்னின் வளத்தின் மேல் அதன் விளைச்சலின் மேல் கண்வைத்த ஆப்கானியர் அங்கு நிகழ்த்திய கொடுமைகள் அப்படி.
அந்நேரம் வேறுவழியின்றி அதே நேரம் இஸ்லாமாக மாற வழியுமின்றி ஒரு மதத்தை சமைத்து எங்களை அமைதியாக வாழவிடுங்கள் என கெஞ்சிய சமூகம் அது. ஆனால் விடிவு இல்லை.
அந்நேரம்தாம் வீரசிவாஜி எழும்பினான். ஒரு இந்து அரசனாக மாபெரும் அசாத்திய சாதனைகளை செய்தான். அவன் கொடுத்த நம்பிக்கைதான் சீக்கியரை உற்சாகம் கொள்ள வைத்தது.
சிவாஜி எழ ஒரே காரணம் இந்துமதத்தை காக்கும் விஷயம். இந்து ஆதரவு ஒன்றுதான் அவனை உயர்த்தியது என்பதை உணர்ந்த சீக்கியர்கள் வீரமுடன் எழுந்தனர்.
ஆம். வரலாற்றில் நன்றியோடு நினைக்கவேண்டிய சமூகம் அது.
அவர்கள் மட்டும் காபுலுக்கும் வங்கத்துக்கும் இடையில் துண்டாடி ஒரு அரசு அமைக்கவில்லை என்றால் இந்நேரம் பாகிஸ்தான் வங்கம் வரை விரிந்திருக்கும்.
அவர்கள்தான் அரணாக நின்றார்கள்.
வீரசிவாஜி வீழ்ந்து அவுரங்கசீப் மராட்டியரை அடக்க முற்பட்டபொழுது முகலாய அரசுக்கான வீரர்கள் மேற்கில் இருந்து அதாவது ஆப்கன்,உஸ்பெக், ஈரான், துருக்கி என எங்கிருந்தும் வராத அளவு தடுத்தவர்கள் அவர்கள்தான்.
அந்த மனிதவள வழங்கல் நின்றதால்தான் ஆஙகிலேயரால் மொகலாயரை அகற்றமுடிந்தது. சிவாஜி காலத்தில் இந்த சீக்கிய சுவர் எழும்பியிருந்தால் அவுரங்கசீப் தலையினை என்றோ சீவியிருப்பான் வீரசிவாஜி.
ஆம், அலை அலையாக வந்த அந்த முரட்டு மனிதவளமேதான் மொகலாயர் உள்ளிட்ட அந்நிய சுல்தான்களின் பலத்துக்கு காரணம்.
அதை சீக்கிய இனமே தடுத்தது. இன்று இந்தியா இந்தியாவாக இருக்க அவர்களும் அவர்கள் கண்ட சீக்கிய மதமும் காரணம்.
அந்த சீக்கிய இனம் இந்திய பிரிவினையில் மிகவும் பாதிக்கபட்டது. உண்மையில், லாகூர் பாகிஸ்தானுக்கு செல்லவேண்டிய பகுதியே அல்ல. ஆனால், சீக்கியரை சீண்டினால் இந்தியா இன்னும் பலவீனமாகும் என அந்த சதியினை செய்தான் வெள்ளையன்.
காந்தியும் நேருவும் அதற்கு உறுதுணையாய் இருந்தனர். தேச சுதந்திரத்தில் 17ம் நூற்றாண்டிலிருந்தே போராடிய சீக்கிய இனத்தின் பஞ்சாப் பிரிக்கபட்டது. ஒவ்வொரு சீக்கியனையும் பாதித்தது
அவர்கள் அழுதார்கள்; கதறினார்கள். அவர்கள் குரல் யார் காதிலும் விழவில்லை.
இந்தியாவில் ஒரு இனம் வஞ்சிக்கபட்டது என்றால் அது சீக்கிய இனமே. அதை சொல்ல எமக்கு தயக்கமே இல்லை. அவர்களுக்கு நிகழ்ந்த கொடுமையும் வலியும் அப்படி.
இந்த சீக்கிய இனம் அப்பொழுதும் தனிநாடு கோரவில்லை. இந்தியா எம் நாடு என இங்கு மகிழ்வாய் வந்தார்கள். இந்திய ராணுவத்தை தாங்கினார்கள்.
அன்று பாசுமதி அரிசி கூட பாகிஸ்ததானின் பஞ்சாபில் சிக்கியது. அதை கடத்திவந்து இந்திய பாசுமதி சந்தையினை உருவாக்கி காட்டினார்கள். மோட்டார் தொழிலில் கொடிகட்டி பறந்தார்கள்.
இந்தியாவின் காவல் முதல் கோதுமை வரை அவர்கள்தான் கொட்டி கொடுத்தார்கள்.
அந்த இனம் கேட்டது ஒன்றே ஒன்றுதான். மிக எளிதான கோரிக்கை அது.
எங்கள் உணர்வுகளையும் எங்கள் கோரிக்கைகளையும் ஏற்று கொண்டு சீக்கிய மதத்துக்கு ஒரு அங்கீகாரம் தாருங்கள். எங்களை அங்கீகரியுங்கள் என்பது.
ஆனால், காங்கிரசுக்கு இந்தியர் உணர்வினை புரிந்துகொள்ளும் வழக்கமே கிடையாது அல்லவா? இதனால் வழக்கமான திமிரை சீக்கியர் மேல் காட்டிற்று,
ஹரியானா பிரிக்கபட்டபொழுது, சீக்கியர் இன்னும் அழுதனர். காங்கிரஸ் அதன் போக்கில் இருந்தது.
காங்கிரசுக்கும் சீக்கியருக்குமான உறவு கெட்டு சீக்கியர்கள் மெல்ல மெல்ல விலகினர். இந்திரா அதனை இன்னும் பெரிதாக்கினார்.
சிரோன்மணி அகாலிதளம் உருவாகி வளர்ந்தபொழுது அவர்களை பலவீனமாக்க பிந்த்ரன்வாலேவினை இந்திராதான் வளர்த்தார். சந்தேகமில்லை.
இன்னும் சீக்கிய பெண்ணான மேனகாவினை விலக்கி வைத்து இத்தாலி மருமகளை இந்திரா அரவணைத்தது சீக்கியர்களின் கோபத்தை கூட்டிற்று.
பிந்த்ரன்வாலே அந்நிய கரங்களில் வீழ்ந்தான். தொடக்கத்திலே முடித்திருக்க வேண்டிய அவனை வளரவிட்டார் இந்திரா. பஞ்சாபில் ஒரு கலவரம் வரவேண்டும் என அவர் விரும்பியது போல் தெரிந்தது.
இந்திரா நினைத்திருந்தால் பல விஷயங்களை தடுத்திருக்கலாம். கொஞ்சம் இறங்கி சென்றிருந்தால் சீக்கியருடன் உறவை பேணியிருக்கலாம்.
ஆனால், தன்னலமும் பயமும் அங்காரமும் கொண்ட இந்திரா-அதுவும் அந்த சுயநல எமர்ஜென்சி கொடுமைக்கு பின்னும் வேறுவழியின்றி தேசம் தன்னிடம் சிக்கியதை உணர்ந்த இந்திரா- சீக்கியரை மதிக்கவில்லை.
காஷ்மீரை மீட்க அஞ்சிய இந்திரா, தன் வீரத்தையெல்லாம் இப்படித்தான் இந்தியாவுக்குள் காட்டிகொண்டிருந்தார்.
சீக்கிய உணர்வுகள் உதாசீனபடுத்தபட்டன. அவர்களின் வலி கண்டுகொள்ளபடவில்லை.
இந்திய வரலாறு, காலிஸ்தான் தீவிரவாதிகள் தனி சீக்கியநாடு கேட்டனர்; அதனால் இந்திரா ராணுவத்தை அனுப்பினார் என சொல்லுமே தவிர ஏன் தனிநாடு கேட்டார்கள் என சொல்லுமா?
சீக்கியரின் நியாயமான கோரிக்கைகளை சொல்லுமா? சொல்லாது. அதுதான் இந்திய வரலாறு.
விளைவு, என்னவெல்லாமோ நடந்தது. பொற்கோவில் விவகாரம் ஒவ்வொரு சீக்கினையும் அழவைத்தது. போர்குணம் கொண்ட அந்த கூட்டம் தன் போராட்டம் இன்னும் முடியவில்லை என தவறாக நம்பிற்று,
அந்நிலைக்கு அவர்களை தள்ளினார் இந்திரா
ஆயினும் அந்த சீக்கியர் இந்திய ராணுவத்தை விட்டு வரவில்லை. இந்திய ராணுவம் உடையவில்லை, அவர்களின் தேசபற்று வானாளவ நின்றது,
அப்பொழுதும் இந்திரா திருந்தவில்லை; இறங்கிவரவில்லை.
“மேடம் உங்கள் வீட்டின் பாதுகாப்பு சரியில்லை. வீட்டை மாற்றுங்கள் தனியாக தங்குங்கள்” என எத்தனையோ ஆலோசனைகள் சொல்லபட்டபொழுதும் இந்திரா மாறவில்லை.
கடைசியில் நடக்க கூடாதது நடந்தது. தன் ஈகோவுக்கான விலையினை அவர் பெற்றார்.
ஒரு தலைவர் என்பவர் எப்படி வெளிநாட்டை கையாள வேண்டும், . ராஜதந்திர நடவடிக்கை, ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்கு இந்திரா பெரும் உதாரணம்.
ஆனால் ஒரு தலைவர் நாட்டுமக்களை எப்படி நடத்த கூடாது என்பதற்கும் அவரே உதாரணம்.
வங்கத்தின் ஒரு குழப்பம் விளைவித்து பின் உள்ளே நுழைந்து பெற்ற அதே வெற்றியினை எல்லா இடத்திலும் முயற்சித்தார் இந்திரா.
பஞ்சாபில் அதை செய்து தன உயிருக்கு நாள் குறித்தார்.
இலங்கையிலும் அதையே செய்து தன் மகன் உயிருக்கும் நாள் குறித்தார். இந்திரா இல்லையென்றால் ஈழ போராட்டமில்லை; பிரபாகரனுமில்லை; ”நாம் தமிழர்” சைமன் காமெடியுமில்லை.
இலங்கை குழப்பங்களுக்கு அவர்தான் காரணம்.
இலங்கையில் தனிநாடு அமைக்கும் திட்டம் அவருக்கு இல்லை. அப்படி இருந்தால் என்றோ நடந்திருக்கும். இலங்கையில் தனிநாடு அமைந்தால் தமிழகம் பிரிவினை கோரும் எனும் கோணத்தில் அவர் சரியாக இருந்தார்.
மெல்ல, மெல்ல ஒரு தமிழ்மாகாண அரசுக்குத்தான் அவர் மனதோரம் திட்டம் வைத்திருந்தார். அதைத்தான் ராஜிவும் செய்தார்; செத்தார்.
இந்திரா இருந்திருந்தால் பிரிதொரு நாளில் பிரபாகரனை ஒழித்திருப்பார் . பிந்த்ரன்வாலே போலவே பிரபாகரனும் முடிந்திருப்பான்.
தனிநாட்டை இந்திரா கொடுக்கபோவதில்லை. அது அல்லா எதையும் பிரபாகரன் வாங்க போவதுமில்லை எனும் வகையில் இதுதான் நடந்திருக்கும் அல்லது ராஜிவுக்கு முன்பே இந்திரா சிதறி இருப்பார்.
ஆக, பஞ்சாபில் தானே நுழைந்து தன் சாவுக்கு வழிதேடினார் இந்திரா. சீக்கியரின் உணர்வுகளை புரிந்திருந்தால் அந்த கொடுமை நிகழ்ந்திருக்காது.
இலங்கையில் ஒரு முடிவினை கொடுக்காமலே இறந்து தன் மகனும் சாக வழிசெய்துவிட்டு செத்தார் இந்திரா.
அவரின் வாழ்வில் அதிரடி முடிவுகள் ஏராளம் .அதே நேரம் சறுக்கல்களும் அதிகம்.
வங்கவிடுதலை,சிக்கிம்.மன்னர் மானியம் ஒழிப்பு, அணுகுண்டு என பல விஷயங்களில் அவர் நின்றாலும் மிதமிஞ்சிய பயம், சந்தேகம்,ஒரு இறுமாப்பு, தகப்பன் போலவே ஐரோப்பிய வழக்கில் மருமகள் என பல சொதப்பல்களை செய்தார்.
சஞ்சய் இறந்த கொஞ்சகாலத்திலே அவருக்கு தனக்கும் குறிவைக்கபட்டது தெரிந்தது. ஆனால் கடைசிவரை அவர் சீக்கியர்களை சந்தேகிக்கவில்லை . சந்தேகித்திருந்தால் செத்திருக்கமாட்டார்.
அவரின் சந்தேகம் யார்.மேலேயோ இருந்திருக்கின்றது. அதை சொல்லமுடியாதபடி அவர் நிலைமை சிக்கலாகியிருந்திருக்கின்றது.
நிச்சயம், சீக்கியரிடம் தப்பினாலும் இலங்கையில் அவர் வாங்கிகட்டியிருப்பார் என்பது நிஜம். அங்குள்ள சிக்கல் அப்படி.
1965ம் ஆண்டும் 1971ம் ஆண்டும் காங்கிரஸ் அரசின் பல குளறுபடியால் இந்திய ராணுவவீரர்களின் தியாகங்கள் பறிபோயின. அவர்கள் சாவுக்கு அர்த்தமே இல்லாமல் காஷ்மீர் விட்டுகொடுக்கபட்டது. இந்திய தேசத்தின் ராணுவ வீரர்கள் செத்து வங்கதேசம் எனும் இஸ்லாமிய நாட்டை உருவாக்கி கொடுத்தனர்.
ஆனால், சொந்த நாட்டின் காஷ்மீர் சிக்கலானது. இன்றும் அங்கே ராணுவவீரன் செத்து கொண்டே இருக்கின்றான்.
அந்த சாபமோ இல்லை, சீக்கியருக்கு செய்ததுரோகமோ எதுவோ ஒன்று- அதாவது காவல் அமைப்புக்களின் உணர்வுகளுக்கும் தியாகத்துக்கும் இந்திரா மதிப்பு கொடுக்காமல் உதாசீனபடுத்தியது-அவரின் உயிருக்கு ஒரு காவலாளியின் துப்பாக்கியில் இருந்து முடிவாய் வந்தது என்பது எங்கோ எழுதபட்ட கணக்கு.
ஒருவகையில் இந்திராவும் ஜெயலலிதாவும் ஒரே வாழ்வு சாயல் கொண்டவர்கள்.
இருவருமே வெளியில் இரும்பு பெண்மணி தோற்றம் கொண்டவர்கள். ஆனால் உள்ளூர அச்சம் மிகுந்தவர்கள். சசிகலாவினை கூட வெளியேற்ற முடியாமல் அஞ்சி மர்மமாய் செத்தார் ஜெயா.
“உங்கள் வீடு பாதுகாப்பு அல்ல. மாற்றுங்கள்” என எத்தனையோ ஆலோசனைகள் சொன்னாலும் தனித்து வாழமாட்டேன். “உறவு”களுடனேதான் வாழ்வேன் என அந்த உறவு வளையத்தை மீறமுடியாமல் செத்தார் இந்திரா.
இருவரும் பரிதாபத்திற்குரியவர்கள். தங்களை கொல்பவர்கள் யார் என தெரிந்தே இருந்து. அதை வெளியே சொல்லமுடியாமல் அஞ்சி அஞ்சி செத்த பரிதாபத்துகுரியவர்கள்.
1984ல் இதே நாளில் அவரை வணங்கினான் பியாந்த்சிங். இந்திராவும் அவனை வணங்கினார். அதன் பின்புதான் சுட்டான் பியாந்த்சிங்.
ஒருவகையில் தனக்கு விடுதலை அளித்தவன் அவன். மிகப்பெரும் வளையத்தில் சிக்கிவிட்ட தன்னை விடுவிக்க வந்தவன் அவன் என நினைத்து இந்திரா வணங்கியிருக்கலாம்.
ஜெயா சாவினை விட மர்மமானது இந்திரா கொலை. ஏன் அவர் குடும்பத்தை விட்டு தனியாக தங்கவில்லை என்பதும் கொல்லப்பட்ட அன்று அவர் வழக்கமாக அணியும் குண்டுதுளைக்கா ஆடையினை ஏன் அணியவில்லை என்பதும். அவர் அதை அணியவில்லை என்பது எப்படி கொலையாளிக்கு தெரிந்தது என்பதும் வெளிவராத மர்மங்கள்.
சஞ்சய், இந்திரா எனும் மரணங்கள் நடந்தபின்னும் ராஜிவினை பிடித்து வைத்த சக்தி எது? ராஜிவ் செத்தபின்பும் இன்னும் சோனியா, ராகுல் என அக்கட்சியினை நடத்தும் சக்தி. நேரு குடும்பத்தால் மட்டும் காங்கிரஸ் இயங்க வேண்டும் என நடத்தும் மர்ம சக்தி எது?
அப்பல்லோ மர்மம் போல அதுவும் வரவே வராது. அதில் இந்திரா கொலை மர்மமும் ஒரு காலமும் வராது.