யூ-டியூப்பில் ‘Time lapse of the universe’ என்று ஒரு வீடியோ உள்ளது.
எல்லாவற்றையும் விழுங்கி ஏப்பம் விடுகிறது காலம்.(Time). ஆனால் அந்தக் காலத்துக்கே ஒரு இறுதிக் காலம் எப்போது வரும்? என்று பிரபஞ்சத்தின் விதியை fast forward mode இல் முன்னோக்கிப் பார்க்கிறது இந்த வீடியோ.
அது குறிப்பிடும் பிரபஞ்சத்தின் time-lapse கீழே சுருக்கமாக:
பிரபஞ்சத்தின் தற்போதைய வயதான 13 பில்லியன் (1300 கோடி) வருடங்கள் காலத்தின் கதியில் ஒன்றுமே இல்லை. பிரபஞ்சம் இப்போது தான் பிறந்திருக்கிறது, அல்லது இப்போது தான் கருவாகி இருக்கிறது எனலாம்.சரி. இனி fast forward பயணம்:
1 மில்லியன் = 10 லட்சம், 1 பில்லியன் = 100 கோடி, 1 ட்ரில்லியன் = 1 லட்சம் கோடி.
2 பில்லியன் வருடங்கள்:
பூமியின் கடல்கள் சூரிய வெப்பம் தாளாமல் முற்றிலும் ஆவியாதல்.
3 பில்லியன் வருடங்கள்:
பூமியில் எஞ்சி இருக்கும் உயிர்கள் முற்றிலுமாகத் துடைக்கப்பட்டு அழிதல்.
5 பில்லியன் வருடங்கள்:
சூரியன் தன் எரிபொருள் தீர்ந்து ‘சிவப்பு ராட்சத’ விண்மீனாகி வீங்கத் துவங்குதல்.
8 பில்லியன் வருடங்கள்:
விரிந்து பெருகும் சூரியனால் பூமி முற்றிலும் விழுங்கப்படுதல்.
10 பில்லியன் வருடங்கள்:
சூரியன் ‘வெள்ளைக் குள்ளன்’ விண்மீனாகி எரிபொருள் எல்லாம் தீர்ந்து சுருங்கி, எஞ்சி இருக்கும் மிச்சம் மீதி வெப்பத்தில் மங்கலாக ஒளி விடுதல் (அடுப்பை அணைத்த பின்பும் கொஞ்ச நேரம் அடுப்பு சூடாக இருப்பது போல!). பிரபஞ்சத்தின் உறைய வைக்கும் குளிர் சூரியனை மெல்ல மெல்லக் குளிர வைத்து ஒன்றுமில்லாமல் அணைத்து விடுதல் .
1 ட்ரில்லியன் வருடங்கள்:
பிரபஞ்சத்தின் எல்லா நட்சத்திரங்களும் எரிபொருள் தீர்ந்து குளிர ஆரம்பித்தல். ‘மெகா பார்ட்டி’ ஒன்று முடிந்ததும் மெல்ல மெல்ல ஒவ்வொன்றாக அணைக்கப்படும் பிரம்மாண்ட மாளிகை ஒன்றின் விளக்குகள் போல நட்சத்திரங்கள் அணைந்து பிரபஞ்சம் ஒளியிழக்க ஆரம்பித்தல். பிரபஞ்சத்தின் அடிப்படை எஜமானர்களாகிய இருளும், குளிரும் தங்கள் ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டுதல் (ஒளி என்பது பிரபஞ்சத்தின் தற்காலிகத் தொந்தரவு!
200 ட்ரில்லியன் வருடங்கள்:
பிரபஞ்சத்தின் கடைசி நட்சத்திரம் அணைதல். 1000 ட்ரில்லியன் வருடங்கள்: எரிந்து தீர்ந்த நட்சத்திரங்களால் பிரபஞ்சம் ‘வெந்து தணிந்த காடாக’, ஒரு மெகா மெகா சுடுகாடாக மாறுதல்!
10,000 ட்ரில்லியன் வருடங்கள் :
எரிந்து தீர்ந்த நட்சத்திரங்கள் தங்கள் இறுதியான மங்கிய உள்ளக ஒளியை வெளியிடுதல். இனி வரும் அனந்த காலங்களுக்கு இந்த மெல்லிய ‘எஞ்சிய’ ஒளி மட்டுமே ஆங்காங்கே மிஞ்சி இருக்கும். இதை ‘zombie universe’ (சவங்களின் பிரபஞ்சம்) என்று அழைக்கலாம்.
1 பில்லியன் ட்ரில்லியன் வருடங்கள்:
காலக்சி மையங்களைப் பலவீனமாகப் பிடித்துக் கொண்டிருந்த இறந்த விண்மீன் மிச்சங்கள் பிரபஞ்சம் முழுவதும் சிதறி அடிக்கப்பட்டு, சில புதிய விண்மீன்கள் விபத்தாகத் தோன்றுதல். எரிந்து தீர்ந்த ‘நியூட்ரான் ஸ்டார்’ விண்மீன்கள் இந்த ‘எறிதலில்’ ஒன்றுடன் ஒன்று மோதிச் சில தற்காலிக சூப்பர் நோவாக்கள் உருவாகி தீபாவளி கொண்டாடுதல்
1 ட்ரில்லியன் ட்ரில்லியன் வருடங்கள் :
வெள்ளைக் குள்ளன் விண்மீன்கள் மடியத் துவங்குதல். உள்ளக வெப்பம் முற்றிலும் மறைந்து குளிர்ந்த சாம்பல் பந்துகளான ‘கறுப்புக் குள்ளன்’ (black dwarf) நிலையை அடைதல். இவை முற்றிலும் எரிந்து தீர்ந்த விண்மீன்களின் அடர்ந்த கறுப்புச் சாம்பல் குவியல்கள். இவை ஒருகாலத்தில் பிரபஞ்சத்தில் ‘தங்களுக்கு அழிவே இல்லை’ என்று கோடி சூரியப் பிரகாசத்துடன் நின்று கோலோச்சிய விண்மீன்கள். ‘முடி சார்ந்த மன்னரும் பிடி சாம்பல் ஆவர்’ என்பதில் விண்மீன்களும் விதிவிலக்கு அல்ல. காலம் எல்லாவற்றையும் சாம்பலாக்கி விடுகிறது. பிரபஞ்சத்தின் பெரிய, சூடான, பிரகாசமான பிரம்மாண்ட நட்சத்திரம் உட்பட.
10 ஆயிரம் ட்ரில்லியன் ட்ரில்லியன் வருடங்கள்:
காலக்சிகளின் மத்தியில் உட்கார்ந்திருந்த கருந்துளைகள் (black holes) எஞ்சி இருக்கும் விண்மீன் சாம்பல்களை ஆக்கிரோஷமாக விழுங்க ஆரம்பித்தல். மீண்டும் ஒரு பிரபஞ்ச தீபாவளி. சுற்றி இருக்கும் ‘matter’ ஐ விழுங்கும் கருந்துளைகள் இப்போது ஒரு ‘தீபாவளி சங்கு சக்கரம்’ போன்று தோன்றலாம்.
1 பில்லியன் ட்ரில்லியன் ட்ரில்லியன் வருடங்கள்:
கருந்துளைகளின் சுழல் ஆற்றலை (rotational energy) உபயோகப்படுத்தி, கற்பனைக்கு அப்பாற்பட்ட அறிவுசார் உயிரினங்கள் (Intelligent creatures) மீண்டும் தோன்ற வாய்ப்பு. (நம்மைப்போன்ற அறிவு சார் உயிரினங்கள் – இங்கே நம்மைப் போன்ற என்ற அடைமொழி சரியா, நமக்கு நிஜமாகவே அறிவு இருக்கிறதா என்ற வாதத்தைத் தள்ளி வைத்து விடுவோம்!) . அறிவுசார் உயிரினங்கள் பிரபஞ்சத்தில் எத்தனை அரிதானவை என்று இப்போது விளங்கும்.
1 ட்ரில்லியன் ட்ரில்லியன் ட்ரில்லியன் வருடங்கள்:
பிரபஞ்சம் தொடர்ந்து விரிவடைதல். கருந்துளைகளின் ஈர்ப்புக்குத் தப்பி அங்கும் இங்குமாக எஞ்சி இருக்கும் பருப் பொருட்கள் பிரபஞ்சத்தோடு சேர்ந்து விரிவடைதல். ஒளிவேகத்துக்கு மிஞ்சி பருப்பொருட்கள் விரிவதால் இரண்டு பொருட்களுக்கு இடையே எந்தவித தொடர்பும் இப்போது சாத்தியம் இல்லை. ‘அழிவே இல்லாத சிரஞ்சீவிகள்’ என்று கருதப்பட்ட அணுக்கள் கூட இப்போது விரிவடைந்து பிய்க்கப்படுதல்.இப்போது அணுக்களுக்கு ஏற்படும் ‘shock’-ஐ எண்ணிப் பாருங்கள். ட்ரில்லியன் ட்ரில்லியன் ட்ரில்லியன் வருடங்களாக உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் அணுக்கள் பிரபஞ்சத்தின் ultimate சக்தியான dark energy( கருப்பு ஆற்றல்)-யால் பிய்த்து எறியப்படும் போது அவைகள் ஒருவிதத்தில் ஆசுவாசப்படக்கூடும். ‘Finally, our time has come!! காலன் (time) எல்லாவற்றையும் அழித்து ஒழித்து விட்டான், எங்கே நம்மை மறந்து விட்டானோ, அவன் hit list டில் நம் பெயர் விடுபட்டு விட்டதோ என்று எண்ணி இருந்தோம்! நல்லவேளை, காலதேவன் நம்மை மறக்கவில்லை, நம்முடைய மரணமும் தவிர்க்க இயலாதது தான்’ என்று உணர ஆரம்பிக்கும் அணுக்கள்!
5 ட்ரில்லியன் ட்ரில்லியன் ட்ரில்லியன் வருடங்கள்:
அணுக்களின் அடிப்படைத் துகள்களான ‘ப்ரோடான்’ -கள் பிய்த்து எறியப்படுதல். (Proton decay) இந்த நிலையில் பிரபஞ்சத்தில் எந்த பருப்பொருட்களும் எஞ்சி இருக்க வாய்ப்பு இல்லை.
1 ஆயிரம் ட்ரில்லியன் ட்ரில்லியன் ட்ரில்லியன் வருடங்கள்:
கறுப்புக் குள்ளன்’ (black dwarf) ஞாபகம் இருக்கிறதா, அவை யாவும் இப்போது விரிந்து பிய்த்து எறியப்பட்டு பிரபஞ்சத்தில் ஆவியாதல். கடும் கோபம் கொண்ட குழந்தை ஒன்று வீட்டில் இருக்கும் எல்லாப் பொம்மைகளையும் அக்குவேறு ஆணிவேறாகப் பிய்த்துப் போடுகிறது. கரும் சக்திக்கு (dark energy) அப்படி என்ன கோபமோ, பிரபஞ்சத்தில் எல்லாவற்றையும், அணுக்கள், அணுக்கரு உட்பட எல்லாவற்றையும் காலப்போக்கில் அது கிழித்து எறிந்து விடுகிறது.பிரபஞ்சம் இப்போது கிட்டத்தட்ட காலியாகி விடுகிறது. ஒன்றுமே எஞ்சுவது இல்லை. ஓர் அணு கூட!
1 மில்லியன் ட்ரில்லியன் ட்ரில்லியன் ட்ரில்லியன் வருடங்கள்:
Black hole era வின் துவக்கம்!காலக் கடிகாரத்தில் வினாடி முள் இப்போது தான் கொஞ்சம் நகர ஆரம்பித்திருக்கிறது. பிரபஞ்சம் இப்போது தான் ஒரு சிறு குழந்தையாகத் தன் பயணத்தை ஆரம்பித்திருக்கிறது எனலாம்.Still, Long way to go! பிரபஞ்சத்தில் ஒவ்வொரு அணுவையும் பகாசுரப் பசியில் கபளீகரம் செய்து முடித்து விட்ட காலத்துக்கு இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டி இருக்கிறது.ஆனால் இந்தப் பயணம் நட்சத்திர, காலக்சி ஒளிகளால் அலங்கரிக்கப்பட்ட சுவாரஸ்யமான ஆனந்தப் பயணமாக இருக்கப் போவதில்லை.
பிரபஞ்சம் தன் எஞ்சியுள்ள வாழ்நாளைப் பெரும்பாலும் இருட்டான, காலியான, மற்றும் குளிரான வெறுமையிலேயே கழிக்கவிருக்கிறது. 120 வயது வரை வாழும் பாட்டி தன் பெற்றோர், கணவன், சகோதர சகோதரிகள், பங்காளிகள், பையன்கள், ஏன் பேரன்களின் மரணங்களைப் பார்த்து விட்டுத் தனிமையில் காலம் கழிப்பது போலக் காலம் எல்லாவற்றையும் பறிகொடுத்து விட்டுத் தனிமையில் காலம்(?) தள்ள ஆரம்பிக்கிறது.மனிதர்கள், பூமி, சூரிய மண்டலம், மில்கி வே- இவை எல்லாம் அதன் தொலைதூர ஞாபக அடுக்குகளில் என்றோ தொலைந்து போய் விட்டிருக்கும்.
பிரபஞ்சத்தின் வாழ்நாளில் ‘உயிரினங்களின்’ காலம் ஒரு கணப்பொழுது தான். கண்மூடிக் கண்திறக்கும் காலம் தான். இந்தக் கணப்பொழுது calculation அது கூட மிக அதிகம் தான். ஒரு Pico second தான்.பிரபஞ்சத்தின், காலத்தின் வாழ்க்கைத் துணையாக, நீண்டகால companion ஆக இப்போது கருந்துளைகள் மட்டுமே விடாப்பிடியாக எஞ்சி இருக்கின்றன. காலம் இனித் தன்னுடைய பழங்கதைகளைப் பகிர்ந்து கொள்ள, நட்சத்திரக் கதைகளை சொல்லிச் சிரிக்க ஒரே துணையாக இந்த கருந்துளைகள் மட்டுமே எஞ்சி உள்ளன.
1 ஆயிரம் ட்ரில்லியன் ட்ரில்லியன் ட்ரில்லியன் ட்ரில்லியன் வருடங்கள்:
எஞ்சி உள்ள கருந்துளைகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து (blackhole merger) பெருக்கின்றன. அடுத்த தீபாவளி வந்து விட்டது. இதைத்தான் உண்மையான தீபாவளி என்று அழைக்க வேண்டும். ஒளிஜாலம் அல்ல, ஒலிஜாலம்!! கருந்துளைகள் தங்களைச் சுற்றி எதுவுமே இல்லாத தைரியத் தனிமையில் ஒன்றுடன் ஒன்று இணைந்து ரௌத்திராகாரமாகப் பிரபஞ்ச நடனமாடி (சிவபார்வதியின் ஊழித் தாண்டவம்) அந்தக் களேபரத்தில் காலவெளியை (spacetime) கிழித்தெறியவல்ல பலம் பொருந்திய ஈர்ப்பு அலைகளை (gravitational wave) வெளியிடுகின்றன. மேற்கண்ட இந்த blackhole merger இடுகாட்டில் உடுக்கையுடன் ஆடும் காலபைரவனின் தாண்டவத்தோடு ஆச்சரியமாக ஒத்துப் போகிறது. கால பைரவன் இப்போது அவன் நடுத்தர வயதில் இருக்கிறான். (midlife crisis?). அந்த விரக்தியில் அவன் நடனமாடி பிரபஞ்சத்தை அசைக்கிறான். எல்லாமே எரிந்து தீர்ந்த நிலையில் கருந்துளைகள் நடனமாகி தங்கள் cosmic உடுக்கையில் இருந்து ஆற்றல் வாய்ந்த ஈர்ப்பு அலைகளை வெளியிட்டுப் பிரபஞ்சத்தை நடுநடுங்கச் செய்கின்றன.
1 நூறு ட்ரில்லியன் ட்ரில்லியன் ட்ரில்லியன் ட்ரில்லியன் ட்ரில்லியன் வருடங்கள்:
கருந்துகளைகள் ‘என்னை மிஞ்ச யாரும் இல்லை, எனக்கு அழிவே இல்லை’ என்னும் தைரியத்தில் தாண்டவம் ஆடினாலும் காலத்தின் கணக்கில் கருந்துளைகளும் விதிவிலக்கு அல்ல. அவைகளும் அழிந்தே ஆக வேண்டும். அவைகளுக்கும் காலதேவன் தன் டைரியில் நாள் குறித்தே இருக்கிறான். கருந்துளைகள் அழிவற்றவை என்று கருதப்பட்டன. ஆனால் ‘ஸ்டிபன் ஹாக்கிங்’ கருந்துளைகளும் மெல்ல மெல்ல ஆவியாகி ஒருநாள் அழிந்து போகும் (Hawking radiation) என்றார். கருந்துளை தான் ஒளியைக் கூட வெளிவிடாதே, அப்படி இருக்கையில் ஆவியாவது எப்படி? என்று கேட்டால் ஓர் உதாரணம். உங்களிடம் எந்தப் பணமும் இல்லை. zero. நீங்கள் ஒரு blackhole. என்று வைத்துக் கொள்வோம். ஒருவரிடம் பத்தாயிரம் ரூபாய் கடன்வாங்கி ஒருவாரத்தில் திருப்பிக் கொடுத்து விடுவதாக வாக்குறுதி தருகிறீர்கள். அதன்படியே வாங்கி அந்தப் பத்தாயிரம் ரூபாயைச் செலவழித்துத் தாராளமாக வாரி இறைத்து விடுகிறீர்கள். செலவு செய்வதற்கு ஒன்றுமே உங்களிடம் இல்லை. பூஜ்ஜியம். ஆனாலும் உங்களிடம் இருந்து பணம் எப்படியோ வெளியே வந்து விட்டது. பணம் வெளியேறி விட்டது. கடன் கொடுத்தவர் திரும்பி வந்து உங்களிடம் கடனை வசூலிக்க முடியாதபடி உடனே வெளிநாட்டுக்குப் பறந்து போய் விடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். இதே போல கருந்துளைகளின் விளிம்பில் (event horizon) தோன்றி மறையும் பொருள் எதிர்ப்பொருள் (matter, antimatter pair) இணைகளில் ஒன்று கருந்துளைக்குள் தவறி விழுந்து விடுகிறது. இன்னொன்று தன்னை அழித்தொழிக்கத் தன் இணை இல்லாததால் விடுதலையாகி அதுமட்டும் வெளியே தங்கி விடுகிறது. இதை வெளியில் இருந்து பார்த்தால் ஒன்றுமே இல்லாத கருந்துளை கதிர்வீசி எதையோ வெளித்தள்ளுவது போலத் தோன்றும். இந்த விதத்தில் கருந்துளைகள் மெல்ல மெல்ல ஆவியாகித் தங்கள் நிறையை இழக்க ஆரம்பிக்கின்றன.
1 நூறு மில்லியன் ட்ரில்லியன் ட்ரில்லியன் ட்ரில்லியன் ட்ரில்லியன் ட்ரில்லியன் வருடங்கள்:
இப்போது பிரபஞ்சத்தின் இறுதியான மற்றும் கொண்டாட்டமான தீபாவளி நடக்க ஆரம்பிக்கிறது.யுக யுகங்களாகக் கருந்துளைக்குள் சிறைப்பட்டிருந்த ஆற்றல் (radiation) கருந்துளைகளின் பெருவெடிப்பில் வெடித்துச் சிதறி வெளிவருகின்றன. வானமெங்கும் கோலாகல வாணவேடிக்கை தான் இப்போது!காலம் தனக்கு இருந்த ஒரே ஒரு பேச்சுத் துணையான கருந்துளைகளையும் பறிகொடுத்து மயானத்தில் எரியூட்டி விட்டுத் தனி ஆளாக வீடு வந்து சேருகிறது.
1 நூறு பில்லியன் ட்ரில்லியன் ட்ரில்லியன் ட்ரில்லியன் ட்ரில்லியன் ட்ரில்லியன் வருடங்கள்:
பிரபஞ்சம் தொடர்ந்து விரிவடைகிறது. எல்லாவற்றையும் விழுங்கி ஏப்பம் விட்ட காலம் இன்னும் உயிர் வாழும் ஆசையைக் கை விடாமல் காலக் கடிகாரம் தொடர்ந்து சலிப்பின்றி நகர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
1 மில்லியன் ட்ரில்லியன் ட்ரில்லியன் ட்ரில்லியன் ட்ரில்லியன் ட்ரில்லியன் ட்ரில்லியன் ட்ரில்லியன் வருடங்கள்:
இறுதி கருந்துளை அழிதல். பிரபஞ்சத்தின் one last-ever தீபாவளி!
100 ட்ரில்லியன் ட்ரில்லியன் ட்ரில்லியன் ட்ரில்லியன் ட்ரில்லியன் ட்ரில்லியன் ட்ரில்லியன் ட்ரில்லியன் வருடங்கள்:
பிரபஞ்சத்தில் இப்போது குளிர்ந்த, ஆற்றல் குறைந்த களைத்துவிட்ட போட்டான்கள் (ஒளித்துகள்கள்) மட்டுமே எஞ்சி இருக்கின்றன.
1 ஆயிரம் ட்ரில்லியன் ட்ரில்லியன் ட்ரில்லியன் ட்ரில்லியன் ட்ரில்லியன் ட்ரில்லியன் ட்ரில்லியன் ட்ரில்லியன் வருடங்கள்{
இப்போது பிரபஞ்சத்தில் எல்லாமே சம வெப்பநிலைக்கு வந்து விடுகின்றன. எதுவுமே நகர்வதில்லை. ஒளி உட்பட உறைந்து நின்று விடுகிறது. எதுவுமே மாறுவதில்லை. எந்த ஒரு சிறு அசைவும் இல்லை. சராசம் இப்போது வெறும் ‘அசரம்’!.
எந்த வித மாற்றங்களும் இல்லாததால் இப்போது காலம் (time) தன் அர்த்தத்தை இழக்கிறது. இத்தனை யுகங்களாக ஓய்வின்றி நிற்காமல் ஓடிய காலக் கடிகாரத்தின் முள் ஒருவழியாகத் தன் நீண்ட நெடிய ஓட்டத்தை நிறுத்தி ஓய்வெடுத்துக் கொள்கிறது.பிரபஞ்சத்தின் spectacular ஆன சுவாரஸ்யமான பயணம் இங்கே முடிவுக்கு வருகிறது.
இந்தக் கட்டுரையின் முதல் வரியிலேயே பூமி அழிந்து விட்டதை எண்ணிப் பார்ப்போம். நம் கவலைகள் எல்லாம் cosmic scales களில் உண்மையிலேயே அர்த்தம் அற்றவை என்று உணர்ந்து ஆசுவாசப் படுவோம்!எல்லாவற்றையும் அழித்து ஒழித்த காலதேவன், காலபைரவன், ரோபோ படத்தின் இறுதியில் சிட்டி ரோபோ தன்னைத் தானே ‘dismantle’ செய்து கொள்வது போல தனக்குரிய நாளைத் தானே குறித்துக் கொண்டு தன்னைத் தானே அழித்துக் கொண்டு மறைந்து போகிறான்.
காலத்தின் கணக்கில் காலமும் தப்புவது இல்லை. Nothing escapes time, time included!Programming படித்தவர்களுக்கு அதில் உள்ள ‘destructor’ function பற்றித் தெரியும். அது programming இன் இறுதியில் தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் ஒருவித function. அதாவது தனக்கான destroying code ஐ தானே எழுதி வைத்திருக்கும் function. காலமும் தனக்கான அழிவைத்த தானே தேடிக் கொள்கிறது. எல்லாவற்றையும் தயவு தாட்சிண்யம் இன்றி indifferent ஆக அழித்துப் புதைத்த பாவத்துக்குத் தனக்குத் தானே தண்டனை கொடுத்துக் கொண்டு தனக்கான புதைகுழியில் தானே படுத்துக் கொண்டு கண்களை மூடி விடுகிறது.
காலத்தின் கல்லறையில் எழுதுவதற்கு மிகப் பொருத்தமான வாசகம் ஒன்று இருக்கிறது.
அது: