விசிஷ்டாத்வைதம் ஸ்தாபகர் , ஶ்ரீ வைஷ்ணவ ஆசாரிய பரம்பரையில் நடுநாயகமாகத் திகழ்ந்த ஶ்ரீ ராமானுஜர் என்ற உடையவர் அவதாரத்தை உலகுக்குக் காட்டிக்கொடுத்த மண். அவர் இம்மண்ணில் தோன்றுவதற்கு முன், அவருடைய அர்ச்சை திருமேனி விக்ரகம் , பொருநை நதியிலிருந்து தோன்றிய இடம். அந்த விக்ரகம் ” பவிஷ்யதாச்சாரியன்” ( வரும்கால ஆசாரியன்) என்ற பெயரில், பொருநை நதிக்கரையில் இருக்கும் ஆழ்வார்திருநகரியில் இன்றளவும் வழிப்பாட்டிலுள்ள புனிதமான மண், பாண்டிய மண்ணில். தமிழை உலகறியச் செய்த பெரியார்.
விசதவாக்சிகாமணி என்று அழைக்கப்படும், பொய்யில்லாத மணவாள மாமுனி அவதரித்த ஆழ்வார்திருநகரி ( சிலர் கருதும் சிக்கில் கிடாரம், இராமநாதபுரம் மாவட்டம்) என்ற ஊர், தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும், பொருநை நதிக்கரையில் அமைந்துள்ள பாண்டிய மண்.
மாறன் என்ற நம்மாழ்வார் கலையான திருவாய்மொழியை உணவாகக் கொண்டு வாழ்ந்து வந்த மணவாள மாமுனிகள் தென்மொழியான தேமதுரத் தமிழில் உபதேசரத்தினமாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி, ஆர்த்தி பிரபந்தம் இயற்றியுள்ளார்.
முமுக்ஷுப்படி , தத்வத்ரையம் , ஶ்ரீவசநபூக்ஷணம், ஆசார்யஹ்ருதயம் என்ற நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். நூலாசிரியர், உரையாசிரியர், ஞானாசிரியர் என்ற மூன்று பரிணாமத்துடன் திகழ்ந்தவர்.
பாட்டுக்கு ஒரு புலவன் என்று பெயர்பெற்ற முண்டாசு கவிஞன் பாரதி பிறந்த எட்டையாபுரம் பாண்டிய மண்ணில். தேச, சமூக, இறைச் சிந்தனைகளைத் தூண்டி, மாபெரும் எழுச்சி ஏற்படும் வகையில் பல கவிதைகளைத் தந்த மகாகவி பாரதியார் மண்.
நாயன்மார்களில் ஒருவரான, சமயகுரவர் நால்வரில் ஒருவரான வாதவூரர் என்றழைக்கப்படும் மாணிக்கவாசகர் பெருமான் அவதரித்த அற்புதமான ஊர் திருவாதவூர். திருவதாவூர் பாண்டியனின் தலைநகரான மதுரை அருகே அமைந்துள்ள சிவத்திருத்தலம். மாணிக்கவாசகர் பாண்டிய மன்னன் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்றபடி, தமிழகமும் தமிழும் உருகி நிற்கும் திருவாசகம் என்ற திருமறையைத் தந்தார். மார்கழி மாதத்தில் சைவநெறி முறையில் இறைவழிப்பட , அதிகாலை ஓதப்படும் திருப்பள்ளியெழுச்சி, திருவெம்பாவை என்ற அற்புத நூல்களை இயற்றியவர்.
சைவ சமயக் குரவர் திரு. குமரகுருபர ஸ்வாமிகள் அவதரித்தது, தூத்துக்குடி மாவட்டத்தில், திருவைகுண்டம் என்ற பாண்டிய மண்ணில்.
குமரகுருபர ஸ்வாமிகள் கந்தர் கலி வெண்பா, மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக் கலம்பகம், திருவாரூர் நான்மணிமாலை , முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், சிதம்பர மும்மணிக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, பண்டார மும்மணிக்கோவை, காசிகலம்பகம், சகலகலாவல்லி மாலை, கயிலைக் கலம்பகம், மீனாட்சி இரட்டை மணிமாலை, தில்லை சிவகாமி இரட்டை மணிமாலை போன்ற தமிழ் நூல்களை இயற்றி தமிழுக்குப் பெருமை சேர்த்த மகான்.
கீழ்க்கண்ட தமிழ் கவிஞர்களின் இறுதி மூச்சு இந்த பாண்டிய மண்ணிலிருந்து கிளம்பி, இறைவனுடன் ஐக்கியமாவதற்குக் காரணமாக இருந்த மண். ஒருவன் பிறக்கும் இடம் நேரம் , இறக்கும் இடம் நேரம், தாய் தந்தையர் யார் என்பதனை அறிந்து தேர்ந்தெடுக்கும் உரிமை இறைவனைத் தவிர எவர்க்கும் கிடையாது. ஆதலால் உடல் கீழே விழும் மண்ணும் புனிதமாகக் கருதப்படுகிறது.
ஆழ்வார்களில் கடைசியாய் அவதரித்துப் பல திவ்வியதேசங்களுக்குச் சென்று, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, நாலுக்கவி கவிஞர் என்று பெயர்பெற்ற கலியன் என்ற திருமங்கையாழ்வார் இறுதியில் பள்ளிப்படுத்திய இடம் ( சமாதியான இடம்) திருக்குறுங்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் பாண்டிய மண்.
சைவநெறியில் மெய்ப்பொருள் அறிந்த மெய்ஞான புலவர் தாயுமானவர், கடைசியில் சமாதி அடைந்த இடம் இலட்சுமி புரம் , இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் பாண்டிய மண்.
கவிச்சக்கரவர்த்தி கம்பன் சமாதி அடைந்த மண் நாட்டரசன் கோட்டை, சேது நாட்டில் இருக்கும் பாண்டிய மண்.
“வாசமான தென்பாண்டி நன்னாடு மதுரை நாட்டில் வளரு மிந்நாடு காசினிக் குட் கதிர்க்கின்ற நாடுமுன் கம்பர் வந்து துதிக்கின்ற நாடு பூசுரர்க் கன்னதானஞ் செய்நாடு புலவர்டே லபிமானஞ் செய்நாடு ராஜலக்ஷமி கண்னுடையாளருள் நல்கு நாட்டரசன் கோட்டை நாடே” என்ற பாடல் மூலம் கம்பன், நாட்டரசன் கோட்டை புகழ் அறியப் படுகிறது.
திருக்குறளுக்கு செவ்வன உரை எழுதிய பரிமேலழகர் பிறந்த மண் தென்செழுவை என்னும் ஊர், பாண்டிய மண்டலத்து சேதுநாடு என்று ரா.ராகவைய்யங்கார், சேது நாடும் தமிழும் என்ற நூலில் ஆதாரங்களுடன் தெரிவிக்கிறார்.
” தெள்ளிய மொழியியலைத் தேர்ந்துரைத்துத் தேமொழியார்ஒள்ளிய காமநூல் ஓர்ந்துரைத்து – வள்ளுவனார்பொய்யற்ற முப்பாற் பொருளுரைத்தான் தென்செழுவைத்தெய்வப் பரிப்பெருமாள் தேர்ந்து”
பெருந்திரட்டில் உள்ள செய்யுள் ஒன்று (பெருந். 1547) பரிமேலழகரைக் ‘கலைதேர் ஒக்கைக் காவலன்’ என்று குறிப்பிடுகின்றது. ஒக்கை என்பதுஒக்கூர். அவ்வூர் பாண்டிய நாட்டில் உள்ளது.
வேறொரு செய்யுள் (பெருந். 1548) ‘போற்று தமிழ்க் கூடற் பரிமேலழகியான்’ என்று இவரைக் குறிப்பிடுவதால் மதுரையில் இவர்வாழ்ந்தவர் என்பது அறியப்படும். இரு கருத்துகளையும் இணைத்துநோக்கும்போது, பரிமேலழகர் ஒக்கூரில் அரசியலில் தலைமை பூண்ட குடியில் பிறந்து, பின் புலமைச் செல்வராய் விளங்கி, தமிழ் வளர்த்தமதுரையில் தங்கித் தமிழ்ப் பணிபுரிந்து வந்தார் என்று கருதலாம் ,என்று உரையாசிரியர்கள் என்ற தொகுப்பு நூலில் மு.வை.அரவிந்தன் குறிப்பிடுகிறார்.
பரிமேலழகர் உரையில் பாண்டிய நாட்டு வழக்குச் சொல் காணப்படுகின்றன என்பது ஆன்றோர்கள் கருத்து.
சங்க நூல் புலவர்கள் ஏராளம் பாண்டிய மண்ணில் தோன்றினார்கள்.
பனம்பாரனார் என்பவர் தொல்காப்பியம் என்ற முதுபெரும் நூலுக்குச் சிறப்புப் பாயிரம் எழுதியவர். இவர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகில் பன்னம்பாறை என்ற ஊரைச் சேர்ந்தவர் என்று கருதப்படுகிறது.
தமிழ் இலக்கண இலக்கிய நூல்களுக்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர், பாண்டிய நாடு தலைநகர் மதுரையில் பிறந்தவர் என்று கீழ்வரும் பாடல் குறிப்பிடுகிறது.
” வண்டிமிர் சோலை மதுரா புரிதனில் எண்டிசை விளங்க வந்த ஆசான் பயின்ற கேள்வி பாரத் துவாசன் நன்மறை துணிந்த நற்பொருள் ஆகிய தூய ஞானம் நிறைந்த சிவச்சுடர் தானே யாகிய தன்மை யாளன் நவின்ற வாய்மை நச்சினார்க் கினியன்”
தொல்காப்பியம் என்ற முதுபெரும் நூலுக்கு எழுத்து, சொல் , பொருள் அதிகாரத்துக்கு உரை எழுதியவர் நச்சினார்க்கினியர். தொல்காப்பியம் உரைகளில் இவரது உரை முக்கியத்துவம் வாய்ந்தது.
கலித்தொகை, குறுந்தொகை ஒரு பகுதி, பத்துப்பாட்டு, சீவக சிந்தாமணி போன்ற சங்க நூல்களுக்கு உரை எழுதியுள்ளார்.
பின்வரும் பாடல்களில் நச்சினார்க்கினியர் உரை நூல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
“பாரத்தொல் காப்பியமும் பத்துப்பாட் டுங்கலியும்ஆரக் குறுந்தொகையுள் ஐந்நான்கும்-சாரத்திருத்தகு மாமுனிசெய் சிந்தா மணியும்விருத்திநச்சி னார்க்கினிய மே”
சங்க புலவர்களில் பலர் பாண்டிய நாட்டில் தோன்றி பாடல்களை இயற்றியுள்ளனர். ஒரு நாகரிகத்தின் வெளிப்பாடு பண்டைய இலக்கியங்கள் மூலம் அறியப்படுகிறது. ஆதலால் இலக்கியங்கள் இன்றியமையாத ஒன்று, மனித நாகரிக வளர்ச்சியின் அடிப்படை ஆதாரம்.
பாண்டிய நாட்டுச் சங்க புலவர்கள் ஒரு சிலரைப் பற்றி…….(தொடரும்)