காந்தியை ஏன்
சுட்டுக் கொன்றார்
சொல்லட்டுமா?
சுதந்திர இந்தியாவில்
அவரது
தற்கொலையைத்
தடுக்கத்தான்!
என்று கவிதை ஒன்று எழுதினார் வைரமுத்து.
காந்திஜியின் ஏனைய கொள்கைகளைக் கைவிட்டு, அவரது முஸ்லீம் ஆதரவை முஸ்லீம் தாஜாவாக உருமாற்றி உருவெடுத்தது காந்திக்குப் பிந்தைய காங்கிரஸ். அதனால் காந்தியம் என்பது இந்தியத்திலிருந்து அந்நியப்பட்டது.
அதற்கு மாற்றாக, காந்திஜியின் முஸ்லீம் ஆதரவு நீங்கலான ஏனைய கொள்கைகளை தனதாக்கிக் கொண்ட பாஜக உருவெடுத்தது.
காந்தி பிறந்த குஜராத் மண்ணிலிருந்து வந்த நரேந்திர மோடி, காந்தியத்தைத் தூக்கிப் பிடிக்கும் பல வளர்ச்சி மாடல்களை முன்னிறுத்தி வருகிறார்.
காந்திஜியைப் போன்றே ஒரு நெருக்கடியான சவாலை தேசத்தின் சுயக் கட்டமைப்புக்கான வாய்ப்பாக மாற்றியுள்ளார். கொரோனா நெருக்கடி நிலையில் மோடி முன்வைத்த ஆத்மநிர்பர் பாரத் (சுயசார்பு இந்தியா) பல வகைகளில் காந்தியக் கொள்கைகளோடு ஒத்துப் போகின்ற ஓர் அணுகுமுறை.
சென்ற மாதத்து ‘மனதின் குரல்’ நிகழ்வில் கூட, காந்தி பிறந்த நாளான இன்று அனைவரும் காதி தயாரிப்புகளை வாங்க வேண்டும் என்று மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
காந்தி பிறந்த நாள் என்பது ஒரு குறியீடு. இது பண்டிகை காலம். நாம் பல்வேறு விழாக்களுக்கு கொடுக்கின்ற பரிசுகள், புதிதாக வாங்குகின்ற ஆடைகள் என அனைத்தையுமே காதிமயமாக்கலாம். அதுவும் ஒரு விதத்தில் காந்திமயமாக்கலே.
காங்கிரஸில் இருந்த போது ஈ.வெ.ராமசாமி நாயக்கர் கைத்தறி ஆடை பிரசாரத்தை மிகவும் தீவிரமாக மேற்கொண்டார். மூலை முடுக்குகளெல்லாம் சென்று கதராடைகளை கூவிக் கூவி விற்றார்.
காந்தியை தேசத்தந்தையாக ஏற்க மறுத்து, ஈ.வெ.ராவை தமிழர் தந்தையாக ஏற்ற திமுகவின் வாரிசுகள் யாரும் கதராடை அணிவதில்லை. உதயநிதி ஸ்டாலின் ஜீன்ஸ் போட்டுக் கொண்டே ஊர் சுற்றுகிறார். ஈ.வெ.ரா பிறந்த மண்ணில் கதருக்கு இருக்கும் மரியாதை அவ்வளவுதான். ஈ.வெ.ராவின் கொள்கைக்கு எதிராக திருட்டுத்தனமாக சாமி கும்பிடும் திராவிடக் கும்பலிடமிருந்து இதற்கு மேல் எதிர்பார்க்க முடியாது.
எனினும், சாதாரண இந்தியக் குடிமக்களாகிய நாம் காதியை ஆதரிப்பதன் வாயிலாக காந்தியத்தை மீட்டெடுக்கலாம்.
காதியில் ஆடைகள் வாங்குவது என்பது எண்ணற்ற கைத்தறி நெசவாளிகளின் வாழ்வில் ஒளியேற்றுவதற்குச் சமம்.
காதியில் பரிசுப் பொருட்கள் வாங்குவது என்பது கணக்கற்ற கைவினைக் கலைஞர்களின் படைப்புத்திறனையும், உழைப்புத்திறனையும் மதிப்பதற்குச் சமம்.
காதியில் மளிகைப் பொருட்கள், சோப்பு முதலான சுத்திகரிப்புப் பொருட்களை வாங்குவது மகளிர் சுய உதவிக் குழுக்கள் பலவற்றின் பசியாற்றுவதற்குச் சமம்.காந்தியக் கனவான கிராம சுயராஜ்ஜியத்தை கட்டமைக்க காதி பொருட்களை ஆதரிப்பது நம்மால் ஆகக் கூடிய எளிய வழி. பிரதமரின் மனதின் குரல் வேண்டுகோள் ஒரு மென்மையான நினைவூட்டல். காதி பொருட்களை ஊக்குவித்து, காந்தியம் மீட்போம். பொருளாதார ரீதியாகவும் சுதந்திர இந்தியாவை, சுய சார்பு இந்தியாவை, சுயராஜ்ஜியத்தை கட்டமைப்போம்.