மத்திய அரசு முதன்முறையாக பொது முடக்கத்தினை அறிவித்தபோது சுட்டெரிக்கும் வெயிலில் கைகளிலும் தலையின் மீதும் தங்களது உடமைகளையும் கைக்குழந்தைகளையும் சுமந்தபடி பெண்கள், ஆண்கள் , முதியவர்கள், சிறுவர்கள் என வயது வித்தியாசமின்றி பெரும் திரளான மக்கள் பெரும் தூரத்திற்கு நெடிய வரிசையில் கூட்டம் கூட்டமாக நடந்து சென்ற காட்சி நம்மில் ஏற்படுத்திய அதிர்ச்சியும் தாக்கமும் மனசாட்சியுள்ள அனைவரையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. புலம்பெயர் தொழிலாளர்கள் என்ற பெயரில் அழைக்கப்படும் இவர்களின் வாழ்க்கை கொடும் துயரங்களும் வலிகளும் நிறைந்தது.
சில அடிப்படைப் புரிதல்கள்
==========================
உத்தரபிரதேசம் பீகார் மாநிலங்களில் இருந்து மிக அதிக அளவிலும் மத்திய பிரதேசம் பஞ்சாப்,ராஜஸ்தான், உத்தரகாண்ட்,ஜம்மு காஷ்மீர், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இருந்து கணிசமான அளவிலும் அன்றாட வாழ்க்கைக்கே கதியற்றுப் போன மக்கள் வேறு மாநிலங்களுக்கு புலம்பெயர்ந்து செல்கின்றனர். இந்தியாவின் கிராமப்புறங்களில் வசிக்கும் சுமார் 12 கோடி மக்கள் வருடந்தோறும் இவ்வாறு நகர்ப்புறங்களை நோக்கி இடம்பெயர்ந்து செல்வதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. வசிக்கும் இடத்திலும் அருகாமையிலும் வேலைவாய்ப்புகள் இல்லாதிருத்தல், பொருளாதாரத்தில் நசிவு, மிகவும் வறிய சூழல் போன்றவையே இந்த இடப்பெயர்ச்சிக்கான முக்கிய காரணங்களாக அமைகின்றன. இவர்கள் அனைவரும் மகாராஷ்டிரா ,டெல்லி, தமிழ்நாடு, குஜராத் ,ஆந்திரா, கேரளா போன்ற பொருளாதார வளம் மிக்க மாநிலங்களுக்கு பிழைப்பு தேடி தஞ்சம் புகுகின்றனர்.
கட்டுமானத்துறை (4 கோடி நபர்கள்), வீட்டு வேலை (2 கோடி நபர்கள்) ஜவுளி உற்பத்தித் துறை (1 கோடி நபர்கள்) செங்கல் சூளைகள் (1 கோடி நபர்கள்), போக்குவரத்து, சுரங்கங்கள், குவாரிகள் ஆகியவற்றில் இவர்களுக்கான வேலைவாய்ப்புகள் பெருமளவில் கிடைக்கின்றன. வேலைவாய்ப்பு என்ற உயர்ந்த வார்த்தையை படித்தவுடனே இவர்கள் ஏதோ நல்ல கௌரவமான நிலையில் பணிபுரிகிறார்களோ என்று தவறாக எண்ணிவிட வேண்டாம். மிகச் சிலரைத் தவிர்த்து அனைவரும் மிகவும் கடினமான பணிகளில் மிகவும் குறைந்த ஊதியத்துடன் ஈடுபடுத்தப்படுகின்றனர். பெரும்பாலானவர்கள் ஏதாவது ஒரு ஒப்பந்தக்காரர் (Contractor) மூலமாகவே பணியில் அமர்த்தப்படுகிறார்கள். பெரும் தொகையினை பெறும் அவர், அதன் குறைந்த பகுதியையே இவர்களுக்கு வழங்குவார், அதுவும் தவணை முறையில். கடினமான வேலை, குறைந்த கூலி, அடிப்படை வசதிகள் கூட இல்லாத தங்குமிடங்கள், பிற தொழிலாளர்களுக்கு உள்ள எந்தவித சலுகைகளும் இல்லாதிருத்தல் போன்றவை இந்தப் புலம்பெயர் தொழிலாளர்களின் நிரந்தர துயரங்கள். இவற்றை எதிர்த்து யாராவது குரல் எழுப்பினால் எந்த வித கேள்வியும் இன்றி உடனே வேலையை விட்டு நீக்கி சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள். அங்கோ அன்றாட வாழ்வாதாரத்திற்குக் கூட வழியில்லை என்பதால் அனைத்துக் கொடுமைகளையும் சகித்துக்கொண்டு வாழும் நிலைக்கு இந்த அபலைகள் தள்ளப்பட்டுள்ளனர்.
பொருளாதார வளர்ச்சியில் பங்கு
================================
உண்மையில் இந்தப் புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டின் பொருளாதாரத்தை கட்டமைப்பதில் ஆற்றும் பங்கு அளப்பரியது. நகர மயமாகிவிட்ட வாழ்க்கை சூழலில் நகரங்களை நிர்ணயிப்பது இவர்களின் மிகவும் கடுமையான உழைப்பு மட்டுமே. தொழிற்கூடங்களில் உற்பத்தியைப் பெருக்கி நிறுவனங்களின் லாபத்தை உயரச் செய்வதும் இவர்களே. ஏனையோர் ஈடுபட தயங்கும் சவால்கள் மிகுந்த சுரங்கம், குவாரி போன்ற துறைகளில் துணிந்து வேலைசெய்து பொருளீட்டி தருவதும் இவர்களே. உண்மையில் இவர்கள் பொருளாதாரத்தில் இரட்டை இயந்திரங்களாக (Double Engine) செயல்படுகிறார்கள். தாம் வேலைபார்க்கும் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒருபுறம் பாடுபடுகிறார்கள் என்றால் அதில் வரும் வருமானத்தை தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி அந்த மாநிலத்தினையும் முன்னேற்றுகிறார்கள். தேசிய வருமானத்தில் இவர்களின் பங்கு மிகவும் அதிகம்.
சமூகப் புறக்கணிப்பு
======================
இவ்வளவு இருந்தும் கூட இவர்கள் பொது சமூகத்தினால் புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளார்கள். பொதுசமூகத்தில் இவர்கள் அனுபவிக்கும் வேதனைகள் குறித்து எந்தவித விவாதங்களும் நடத்தப்படுவதில்லை. அரசுகளும் கூட இவர்கள் விஷயத்தில் பாராமுகமாக இருந்து வந்துள்ளன. இந்தியர்களுக்கான H1-B விசாவினை அமெரிக்கா குறைத்தால் ஆகாயம் மண்ணில் விழுந்ததுபோல குதிக்கும் அமைப்புகளும் ஊடகங்களும் இவர்கள் விஷயத்தில் நீடித்த மௌனத்தையே கடைப்பிடிக்கின்றன. ஒரு இடத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் பாடுபடும் மக்கள் கூட்டத்திற்கு உறைவிடம், நியாய விலையில் உணவுப் பொருட்கள், அடிப்படை மருத்துவ உதவிகள் மற்றும் கல்வி ஆகியவை மறுக்கப்படுவது ஈவு இரக்கமற்ற மனிதம் மடிந்துபோன செயல்.
சட்டப் பாதுகாப்பு
===================
புலம்பெயர் தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்க மாநிலங்களுக்கு இடையேயான புலம்பெயர் தொழிலாளர் சட்டம் (Inter-State Migrant Act) என்ற சட்டம் 1979ம் வருடத்தில் கொண்டுவரப்பட்டது. பல தொழிலாளர் சட்டங்களை போலவே அதுவும் வழக்கொழிந்து போய் கும்பகர்ண உறக்கத்தில் உள்ளது. இவ்வளவு ஏன், இந்திய குடிமகனின் சட்டபூர்வமான அடிப்படை உரிமையான வாக்களிக்கும் வாய்ப்புமே கூட இவர்களுக்கு கிடைப்பதில்லை. அவர்கள் தங்களது சொந்த ஊர்களில் வாக்காளர் பட்டியலில் இணைந்துள்ள காரணத்தால் தாங்கள் வசிக்கும் இடங்களில் வாக்களிக்க இயல்வதில்லை.
புலம்பெயர்தல் – மூல காரணிகள்
==================================
நகரமயமாக்கல் என்ற பெயரில் ஒரு பெரும் நிலப்பரப்பில் வசிக்கும் பல லட்சம் மக்களை ஒரு குறிப்பிட்ட குறுகிய பகுதிக்குள் அடைத்து வைப்பதன் அபாயத்தை நாம் உணரத் தொடங்கி உள்ளோம். உள்ளூர் தொழில்களை நசுக்கி அதில் ஈடுபட்டிருந்த அவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து அவர்களை பெருநிறுவனங்களின் கூலிக்காரர்களாக மாற்றிய “வளர்ச்சி” என்ற மாயபிம்பம் நமது கண்களின் முன்பாகவே உடைந்து நொறுங்கி சிதறுவதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். கட்டற்ற நகரமயமாக்கல் இந்தப் புலம்பெயர் நிகழ்வின் முக்கிய காரணி. நகரங்களை மையமாக கொண்ட மேற்கத்திய வாழ்வியல் முறைகள் மட்டுமே உயர்வானது என்று நன்கு கட்டமைக்கப்பட்டுள்ள பொதுபுத்தி, உள்ளூரில் உள்ள இயற்கை மற்றும் மனித வளங்களை கொண்டு உள்ளூரிலேயே பொருட்களை தயாரித்து அதனை உள்நாட்டில் சந்தைப்படுத்த முயற்சிகளை மேற்கொள்ள மறுக்கும் அதிகார வர்க்கம், ஆங்கில வழிக் கல்வியும் அது தரும் அடிமை வாழ்வுமே சிறந்தது என்பதை தொடர்ந்து வலியுறுத்தி அதில் பெரு வெற்றியும் கண்டுள்ள உள்ளூர் மற்றும் அந்நிய சக்திகள் போன்றவையெல்லாம் இந்தப் புலம்பெயர்தலை தூண்டிவிடும் அல்லது ஊக்குவிக்கும் பிற காரணிகள்.
தீர்வு – சில ஒளிக்கீற்றுக்கள்
============================
சமீபத்தில் மத்திய அரசினால் கொண்டுவரப்பட்ட “ஒரே தேசம் ஒரே குடும்ப அட்டை” திட்டம் புலம்பெயர் தொழிலாளர்களின் நெடுங்கால துயரங்களை துடைக்கும் மிகச் சரியான திட்டம் ஆகும். ஜூன் 1, 2020 முதல் நாடெங்கிலும் அமலாக்கப்பட உள்ள இந்தத் திட்டம் தனது இலக்குகளை அடையுமானால் அது நியாய விலையில் அனைத்து உணவுப் பொருட்களும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு கிடைப்பதை உறுதிப்படுத்தும்.

அதேபோல் நரேந்திர மோதி தலைமையிலான பாஜக அரசின் மற்றுமொரு சிறந்த திட்டமாகிய “ஆயுஷ்மான் பாரத்” புலம்பெயர் தொழிலாளர்களுக்கு கிடைத்துள்ள வரப்பிரசாதம். இந்த திட்டத்தில் உறுப்பினர் அட்டை வைத்திருப்பவர் மற்றும் அவரது குடும்பத்தினர் நாட்டின் எந்த ஒரு இடத்திலும் உள்ள மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை பெறலாம் என்பது புலம்பெயர் தொழிலாளர்களுக்கு கிடைத்த பெறுதற்கரிய வரம்.
மேலே குறிப்பிட்ட இரண்டுமே புலம்பெயர்ந்த இடத்தில் தொழிலாளர்களின் நல்வாழ்வை மேம்படுத்த உதவும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் புலம்பெயர்தலை எவ்வாறு தடுப்பது அல்லது குறைப்பது?
இதற்கான பதிலை தனது தெளிவான நடவடிக்கைகள் மூலம் நமக்கு அளிக்கிறார் உத்தரபிரதேச முதல்வர் திரு. யோகி ஆதித்யநாத் அவர்கள்.
கிராம பொருளாதாரத்தை ஊக்குவித்து மேம்படுத்தினாலே இந்த புலம்பெயரும் நிலை வெகுவாக குறைந்துவிடும் என்பதை நன்கு உணர்ந்துள்ள திரு.யோகி அவர்கள் அதனை செயல்படுத்தும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடர்புடைய துறை அதிகாரிகளைக் கொண்ட குழுக்களை அமைத்து அவற்றை தனது கட்டுப்பாட்டில் இயங்க வைத்துள்ளார். கைவினைப் பொருட்கள், ஆங்காங்கே தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தயாரிக்கும் சிறப்பு பொருட்கள், உள்ளூர் உற்பத்திப் பொருட்கள் போன்றவற்றின் தயாரிப்பினை ஊக்குவித்து அவர்களுக்கு எளிய நிபந்தனைகளின் அடிப்படையில் கடன் கிடைக்க ஏற்பாடு செய்து உத்தரவிட்டுள்ளார் திரு யோகி ஆதித்யநாத் அவர்கள். இதுமட்டுமின்றி சிறு குறு தொழில்களில் அவர்களுக்கு பயிற்சி அளிக்க திறன் மேம்பாட்டு கழகத்தினையும் நாடியுள்ளார் யோகி.
மேலும் கோரோனா விவகாரம் காரணமாக சீனாவை விட்டு வெளியேறும் பற்பல அயல்நாட்டு நிறுவனங்களையும் உத்தரப் பிரதேசத்துக்கு வருமாறு அழைத்துள்ளார் யோகி. அங்கே அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்துதர உறுதியளித்துள்ளார். முதற்கட்டமாக சுமார் நூறு அமெரிக்க நிறுவனங்கள் உத்தரபிரதேசத்தில் தங்களது தொழிற்சாலைகளை மாற்றிக் கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளன. இவ்வாறு வரும் நிறுவனங்களில் தங்களது திறன்களை மேம்படுத்திக் கொண்ட உள்ளூர் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம். இவை அனைத்தும் பலனளிக்க தூங்கும்பொழுது புலம்பெயர் தொழிலாளர்களை மிக அதிக அளவில் நாட்டின் பிற பகுதிகளுக்கு அனுப்பும் உத்தரப்பிரதேச மாநிலம் அவர்களுக்கான வாழ்வாதாரத்தை அவர்களின் சொந்த மண்ணிலேயே உறுதிசெய்யும், புலம்பெயர்தலும் வெகுவாக குறைந்துவிடும்.
தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டும் ஒதுக்கி வைக்கப்பட்டும் சொந்த நாட்டிலேயே இரண்டாம்தர குடிமக்களாக வாழ்வினை நடத்திக் கொண்டிருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்வியல் சூழல் மேம்பட அனைத்து தளங்களிலும் இது குறித்த விழிப்புணர்வும் உறுதியான தொடர் நடவடிக்கைகளும் மிகவும் அவசியம். பல வருடங்களாக அவர்களைப் புறக்கணித்து இருந்த அரசுகளின் மனோபாவத்தில் மிகச்சரியான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தீர்வுகள் தோன்றும் என்ற நம்பிக்கைகள் பிறக்கின்றன. இவை தொடரட்டும், இருள் மண்டிய அவர்களது வாழ்வில் புது வெளிச்சம் பிறக்கட்டும்.