Face value!
ஐந்து ரூபாய் காயின் ஒன்றின் மதிப்பு என்ன? ‘இது என்ன கேள்வி’ என்று தோன்றலாம். ஐந்து ரூபாயின் மதிப்பு : ஐந்து ரூபாய். இது ‘அந்த நாணயத்தின் face value’ எனப்படுகிறது. உங்களிடம் legitimate ஆக ஒரு நூறு ரூபாய் இருந்தால் அந்தத் தாளுக்கு நூறு ரூபாய்க்கு உரிய பொருட்கள் கிடைக்கும் என்று ரிசர்வ் வங்கி உறுதி அளித்திருக்கிறது.
சரி.
கீழ்க்கண்ட சம்பவத்தை நினைத்துப் பாருங்கள்.
இளைஞன் ஒருவன். இருபது வயது. ‘மெட்ராஸுக்கு’ ரயில் ஏற ரயில் நிலையம் வருகிறான். கையில் காசில்லை. கண்களில் மட்டும் கோடிக்கணக்கான கனவுகள். பிளாட்பாரம் பெஞ்சில் படுத்திருக்கிறான். அப்போது அருகில் வந்து அமரும் பெரியவர் ஒருவர் அவனிடம் மெல்லப் பேச்சு கொடுக்கிறார். சிறுவனின் கனவுகளைப் புரிந்து கொண்டு ஒரு நூறு ரூபாயை அவன் கைகளில் திணிக்கிறார். ‘மெட்ராஸ் ரயில் இன்னும் கொஞ்ச நேரத்தில் வரப்போகுது தம்பி, டிக்கெட் வாங்கிட்டு ஏறிக்க, all the best’ என்கிறார். இளைஞன் உற்சாகமாகி டிக்கெட் வாங்கி ரயிலில் ஏறுகிறான். சென்னை வந்து இறங்குகிறான். பேப்பர் போடுகிறான், ஹோட்டலில் டேபிள் துடைக்கிறான், ஷூ பாலிஷ் போடுகிறான்..பூம்..இருபது இருபத்தைந்து வருடம் கழித்து அவன் தான் தென் இந்தியாவின் no.1 தொழில் அதிபர். பல ஆயிரம் கோடிகளில் சொத்து, பங்களா, வாகனங்கள், பிரைவேட் ஜெட், கப்பல், ஷேர்கள், பணம், புகழ்.. etc.
கொஞ்சம் சினிமாத்தனமாக இருந்தாலும் இதன் உள்ளடக்கத்தை மட்டும் ஆராய்வோம்.
ஒருவிதத்தில் பார்த்தால் இதற்கெல்லாம் அந்த நூறு ரூபாய் தான் ஆதிப்புள்ளி. அந்த நூறு ரூபாய் தான் இப்போது நூறு கோடி. அன்று அந்த நூறு ரூபாய் இல்லாவிடில் ஒருவேளை அந்த இளைஞன் சொந்த ஊரிலேயே ஏதோ ஒரு மளிகைக்கடை வைத்துக் கொண்டு கோடியில் ஒருவனாக முடங்கிப் போய் இருக்கலாம்.
அதற்காக, தன்னை ரயிலேற்றி விட்ட அந்தப் பெரியவரைத் தேடிப்போய் நூறு கோடி ரூபாய் கொடுக்க முடியுமா? அல்லது, அந்தப் பெரியவர் தான் இதைத் தெரிந்து கொண்டு சென்னை வந்து ‘உன் சொத்து முழுவதும் எனக்குத் தான் சொந்தம்’ என்று கேஸ் போட முடியுமா?
ஒரு ரூபாய் நாணயம் ஒன்று. பெண் ஒருத்தி பாடுகிறாள். அந்த ஒரு ரூபாய் காயின் அவன் காதலன் கொடுத்ததாம்.
‘கடவுள் வந்து கேட்டால் கூட காணிக்கை இடமாட்டேன்’
அந்த ஒருரூபாயின் மதிப்பு என்ன? பொதுவாக அற்பம் தான். பஸ்ஸில் ஒருரூபாய் பாக்கி என்றால் நாம் பெரும்பாலும் கேட்கக் கூட மாட்டோம். இங்கே அந்த ஒரு ரூபாய் விலை மதிக்க இயலாத ஒரு வஸ்துவாகி விட்டது அவளுக்கு. விலையே இல்லை. நூறு கோடி, ஆயிரம் கோடிகளுக்குக் கூட ஈடாகாது. Face value என்று பார்த்தால் ஒரு ரூபாய் தான். இந்தக் காலத்தில் ஒரு ரூபாய்க்கு என்ன வரும் என்று யோசிக்க வேண்டி இருக்கிறது. ஹால்ஸ் மிட்டாய் ஒரு ரூபாயா?
பல நேரங்களில் வாழ்க்கையில் நாம் இந்த Face value வைத் தவிர அதில் மறைந்துள்ள ‘potential value’ வைப் பார்க்க வேண்டி இருக்கிறது. மேற்கண்ட உதாரணத்தில் என்ன தான் சமாதானம் சொன்னாலும் ஒருவிதத்தில் அந்தத் தொழில் அதிபரை இந்த விஷயம் உறுத்திக் கொண்டு தான் இருக்கும். இந்தச் சொத்து ஒரு விதத்தில் பார்த்தால் என்னுடையது அல்ல. ரயில்வே ஸ்டேஷன் பெரியவருடையது. சட்டப்படி, பொருளாதாரப்படி அதன் face value 100 ரூபாய் தான். என்ன பணவீக்கத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, வட்டியும் முதலுமாகத் திருப்பித் தந்தாலும் அதிகபட்சம் 500 ரூபாயைத் தாண்டாது. ஆனால் மனசாட்சிப்படி அந்த நூறு ரூபாயின் மதிப்பு பல கோடிகளாக, பல லட்சம் கோடிகளாக இருக்கிறது. undeniable fact இது.
சில பொருட்களைச் சிலர் கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்து வருவார்கள். ஒருநாள் அதை இழந்து விட்டுத் தவிப்பார்கள். நாமோ கூலாக, ‘விடு, அது வெறும் யானை பொம்மை, அது வெறும் சட்டை, அது வெறும் வாட்ச், இன்னொன்னு வாங்கிக்கலாம், இப்போது உன்னிடம் இருக்கும் பணத்துக்கு அது மாதிரி ஆயிரம் பேனா வாங்கலாம்’ — face value வை மட்டுமே பார்க்கிறோம். அந்தப் பொருளில் ஏற்றப்பட்ட அனுபவங்களை, நினைவுகளை, கனவுகளை, சந்தோஷங்களை, காதலை, பாசத்தை, வரலாற்றை உணரத் தவறுகிறோம்.
பொருட்களுக்கு என்று இல்லை. மனிதர்களிடமும் இதே தவறைச் செய்கிறோம். ‘face value’ வைப் பார்க்கிறோம். அந்த கணத்துக்கு உரிய face value. வெளித்தோற்றம்!. புத்தம் புதியதாய் வாங்கிய BMW காரில் சுற்றுலா செல்கிறோம். கொழுத்த பர்ஸ். காரில் நடமாடும் நகைக்கடைகளாய் அம்மாக்கள், அக்காக்கள், மகள்கள். உயர் ரக ஆடைகள். நறுமணம் கமழும் டியோக்கள். அங்கே, சாலையோரம் ஒருவர் அழுக்கேறிய உடைகளுடன், சடாமுடியுடன் அமர்ந்து உடைந்த அலுமினியத் தட்டில் பிச்சை எடுத்துக்கொண்டு இருக்கிறார். அவரைப் பார்க்கக் கூடத் தயங்குகிறோம். நம் status-ஸுக்கு அவரைப் பார்ப்பது கூட ஒவ்வாது.
‘What a total failure’ என்கிறோம். ‘This man can’t even afford a mid day meal’ என்கிறோம். ஆனால் அவர் உண்மையில் ஒரு மகாஞானியாக இருக்க முடியும். அக உலகின் செல்வங்களை எல்லாம் திரட்டித் தனதாக்கிக் கொண்டவராக இருக்க முடியும். நமக்கு அவர் potential value தெரிவதில்லை.
வார்த்தைகளும் இப்படித்தான். வார்த்தைகளின் face value வை மட்டும் வைத்துக்கொண்டு தவறு செய்கிறோம். ‘It’s just a word, it can’t hurt you’ என்கிறோம். ஆனால் வார்த்தைகள் அவற்றுக்குள் மலையளவு பாரத்தை, கடலளவு ஆழத்தை ஒளித்து வைக்க வல்லவை. வசவுச் சொற்கள் இப்படித்தான். ‘just a word’ என்று கடந்து செல்ல முடியாது.’cool guy’ யான கிருஷ்ண பரமாத்மாவாலேயே ஒரு கட்டத்துக்கு மேல் வசவுகளைப் பொறுக்க முடிவதில்லை. வார்த்தைகளை ஒழிக்க, மாற்ற அரசாங்கங்கள் இதனால்தான் மெனக்கெடுகின்றன. ‘ஒது, லி, ni, ப** பயல், நொ *, பொ,, ஒருநொடியில் கொலை செய்ய வைத்து விடும் அல்லது தன்னையே கொலை செய்து கொள்ளத் தூண்டி விடும் கனமுள்ள வார்த்தைகள் இவை.
இதே தான் நற்சொற்களுக்கும் பொருந்தும். ‘I love you’ சொல்லாவிட்டால் என்ன? அவை வெறும் வார்த்தைகள்! உண்மை தான். ஆனால் இந்த வார்த்தையில் பூமியின் ஒட்டுமொத்தக் காதலர்களின் காதல் அடங்கி இருக்கிறதே!. ‘வாழ்க வளமுடன்’, ‘பார்த்துப் போங்க’, ‘கவலைப் படாதீங்க’, ‘நான் இருக்கிறேன்’, ‘all is well’ , ‘நல்லதே நடக்கும்’, ‘it’s ok’ ,’you will be fine’ ,’things will be better’ ,’it’s alright’, ‘I understand’, “I can relate’, ‘நல்லா இருக்கீங்களா?’ ஏன் ‘சாப்பிட்டாயா?’ என்பது கூட அத்தனை கனமான ஒரு வார்த்தை. face value வைப் பார்த்தால் இது வெறும் வார்த்தை. stupid question. cliché. இதைச் சொல்லாவிட்டால் தான் என்ன? கேட்காவிட்டால் என்ன? வெறும் சத்தம். ஆனால் ‘சாப்பிட்டாயா?’ என்ற ஒற்றை வார்த்தை அன்றிரவு நடக்க இருக்கும் ஒரு தற்கொலையைத் தடுக்க முடியும் என்று உணர்ந்திருக்கிறோமா?
நூறு ரூபாயில் நூறு கோடி ரூபாயைப் பார்க்கத் தெரிந்தவர்கள் புண்ணியவான்கள். ‘இந்தப் பையன் பெரிய ஆளாக வருவான், இவனிடம் ‘ஏதோ’ இருக்கிறது என்று ஆசிரியர் ஒருவர் அறிந்து கொள்கிறார். அவனிடம் தனிக்கவனம் செலுத்துகிறார். பிரபல இசை வித்வான் ஒருவரிடம் நூற்றுக்கணக்கான சிஷ்யர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர் ‘below average’ சிஷ்யன் ஒருவனது எதிர்கால பிம்பத்தைப் பார்த்தவர் போல ‘இவன் பெரிய ஆளா வருவான்’ என்று நம்புகிறார்.
சமீபத்தில் ‘சர்பட்டா பரம்பரை’ என்ற திரைப்படம் வந்தது. அதில் குத்துச் சண்டை மாஸ்டர் ஒருவர் தன் successor ஐத் தேர்ந்தெடுக்க வேண்டி வருகிறது. அவரது சொந்த மகனே ஒரு குத்துச் சண்டை வீரன் தான். அது மட்டும் அல்லாமல் அவரது பிரதான சிஷ்யன், ஊர் அறிந்த வீரன் ஒருவன் இருக்கிறான். அவரோ இருவரையும் நிராகரிக்கிறார். இன்னொருவனைத் தெரிந்தெடுக்கிறார். அவனோ இதுவரை ஒரு சாதாரணப் பார்வையாளன் மட்டுமே. ஹார்பரில் வேலை பார்ப்பவன். ‘குத்துச்சண்டை ஒரு தவம்’ என்கிறார் மாஸ்டர். யாருடைய முகத்தில் அப்படி ஒரு தாவலை நிகழ்த்த வல்ல ‘தவக்களை’ தெரிகிறது என்று அவர் உணர்ந்திருக்கிறார்.
சின்ன விதையில் வனத்தைப் பார்க்கத் தெரிந்தவர்கள் பாக்கியசாலிகள்.
மாற்கு (4:30-4:32) என்னை மிகவும் கவர்ந்த ஒரு Parable.
‘கடுகு விதை சிறியது என்று எண்ணிவிடாதீர்கள்’ என்கிறார் ஏசு. ‘அதில் ஒளிந்துள்ள பிரம்மாண்ட விருட்சத்தைத் திருஷ்டியுங்கள்’ என்கிறார்.
ஆன்மிகம் இப்படித்தான் இருக்கிறது. விதைகளை, மிகச்சிறிய கொட்டைகளை, தளிர்களை, பிஞ்சுகளை நாம் காண்கிறோம். முளைக்கும் விதைகளை அறிந்து கொள்ள, விதைகளில் ஒளிந்துள்ள விருட்சங்களைக் காண, ஞானக் கண்கள் தேவைப்படுகின்றன.
காதலும் கடவுளும் ஒருவிதத்தில் ஒன்று தான்.
‘ஒருநாள் என் மனதில் விதையாய் நீ இருந்தாய்,
மறுநாள் பார்க்கையிலே வனமாய் மாறி விட்டாய்!’