மாற்றத்தை நோக்கி நம்பிக்கை தரும் தீர்ப்பு
ஆந்திரா உயர்நீதி மன்றம் ஐந்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி அளித்தது. அரசாங்கத்தின் தலைமை மருத்துவ அதிகாரியோடு கூட முக்கியத்துறைகளின்அதிகாரிகள் உட்பட ஐந்து பேருக்குசிறை தண்டனையும் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது.
ஆந்திரப் பிரதேஷ் அரசாங்கத்தின் மீது ஏற்கெனவே நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் நடந்து வரும் பின்னணியில் 2021 செப்டம்பர் 2ம் தேதி வியாழக் கிழமை இந்த முக்கிய உத்தரவு வெளிவந்துள்ளது. ஒரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆந்திர உயர்நீதி மன்றம் ஒரேயடியாக ஐந்து மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு சிறைத்தண்டனை விதித்ததோடு அபராதமும் விதித்து பரபரப்பு உத்தரவுகள் வெளியிட்டது.
விவரங்களுக்குள் சென்றால்… நெல்லூரு மாவட்டம் தாள்ளபாக்கத்தைச் சேர்ந்த சாயி பிரம்மா என்ற 62 வயது விதவைப் பெண்மணியிடமிருந்து நிலத்தை எடுத்துக் கொண்ட அதிகாரிகள் அதற்கான இழப்பீடு அளிக்கவில்லை. மாநில அரசாங்கம் மனநலம் குன்றியவர்களுக்கான தேசிய நிறுவனம் அமைப்பதற்காக நிலத்தை எடுத்துக் கொண்டு இழப்பீடு அளிக்காததால் 2017ல் அப்பெண்மணி ஹைகோர்ட்டை நாடினார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் அதிகாரிகள் மீது தவறு கண்டது.
அப்பெண்மணிக்கு மாநில அரசு வெளியிட்ட அரசு உத்தரவின்படி உரிய இழப்பீடுகளை மூன்று மாதங்களுக்குள் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனாலும் அந்த உத்தரவு அமலுக்கு வரவில்லை. அதனால் மனுதாரர் மீண்டும் 2018ல் நீதிமன்றத்தை நாடினார். அண்மையில் இந்த விவகாரத்தின் மீது விசாரணை நடத்திய ஹைகோர்ட் இதற்குப் பொறுப்பான ஐஏஎஸ் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுப்பதற்கு முன்வந்தது. மூன்று ஆண்டுகளுக்குப் பின்2021 மார்ச் 30 அன்று ஆந்திர அரசாங்கத்தால் இழப்பீடு வழங்கப்பட்டது.
நீதிபதி பட்டுதேவானந்த் அதிகாரிகளின் அலட்சியத்தாலும் நீதிமன்ற தீர்ப்பை கீழ்படியாததாலும் அந்த முதிய பெண்மணி சொல்லொணாதுயரங்களுக்கு ஆளானார் என்று அறிவித்தார். அதிகாரிகள் கோரிய மன்னிப்பை நீதிபதி ஏற்க மறுத்தார். வழக்கு செலவுகளுக்காக மனுதாரருக்கு மாநில அரசு ஒரு லட்சம் அளிக்கும்படி உத்தரவிட்டார்.
இதற்குமுன்பு ஹை கோர்ட் அளித்த உத்தரவுகளை வேண்டுமென்றே மீறியதற்காக கோர்ட் அவமதிப்பு நடவடிக்கையின் கீழ் உயர் நீதிமன்றம் சிறை தண்டனைகளோடு கூட அபராதமும் விதித்துள்ளது. ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியும் முன்னாள் வருவாய்த்துறை தலைமைச் செயலருமாக இருந்த மன்மோகன் சிங்குக்கு ஒரு மாத சிறை தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது. அப்போதைய நெல்லூரு கலெக்டர் சேஷகிரிபாபுவுக்கு இரண்டு வார சிறை தண்டையோடு ஆயிரம் ரூபாய் அபராதம், தற்போதைய நிதி அமைச்சக செயலாளர் எஸ்.எஸ் ராவத்துக்கு ஒரு மாத சிறை தண்டனையும் இரண்டாயிரம் ரூபாய் அபராதமும், தலைமை மருத்துவ அலுவலகத்தில் ஜிஎடி பொலிடிகல் செயலாளராக உள்ள ரேவுமுத்யால ராஜுவுக்கு இரண்டு வார சிறை தண்டனையும் அபராதமும் விதித்தது. அதே போல் மற்றுமொரு ஐஏஎஸ் அதிகாரி இந்தியாஜ் என்பவருக்கு இரண்டு வார சிறை தண்டனையும் அபராதமும் விதித்து ஹை கோர்ட் உத்தரவிட்டது.
இதில் அதிகாரிகளுக்கு விதித்த அபராதங்களை அவர்களின் சம்பளத்திலிருந்து வசூல் செய்து மனுதாரருக்கு கொடுக்க வேண்டும் என்று ஹை கோர்ட் தன் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.இதனால் அதிகாரிகளின் நிலைமை சங்கடத்தில் ஆழ்ந்துள்ளது. அவர்களுக்கு ஹை கோர்ட் விதித்த தண்டனை மற்றும் அபராதங்களின் மீது மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக ஒரு மாத காலம் தண்டனைகளை இடைநீக்கம் செய்துள்ளது நீதிமன்றம்