கண்ணனை வணங்குபவர்களுக்கு எல்லாமும் கை கூடும் என்பார்கள், அது பாண்டவர் காலத்தில் இருந்தே கண்ட உண்மை.
அவனிடம் இருந்து ராஜதந்திரம் கற்ற நாடுகள் பெரும் இடம் சென்றன, அவனிடமிருந்து உளவும் போர் வியூகமும் கற்ற நாடுகள் உயரத்தில் மின்னினஅவனின் நிர்வாகமும் இன்னும் பலவும் பலருக்குப் பாடமாயின.
அணுவிஞ்ஞானி ஓப்பன் ஹைமரும் இன்னும் பலரும் அணுக்குண்டு வெடித்தபொழுது கீதையினை மேற்கோள் காட்டி அதிலிருந்தே பல மூல உண்மைகளைப் பெற்றதை ஒப்புக்கொண்டார்கள்.
இஸ்ரேலிய மொசாத் உட்படப் பல பிரசித்திபெற்ற அமைப்புகளின் குருநாதன் கண்ணனே. அவனால் ஞானம் பெற்றவரும், வாழ்வு பெற்றவரும் கோடான கோடிமாந்தர் உலகில் எக்காலமும் உண்டு. நடிகர்களில் கூட அவன் வேடமிட்டோர் பெருமிதம் பெற்றனர், என்.டி ராமராவ் அதில் முக்கியமானவர். ரஜினி வாயிலிருந்து வரும் வார்த்தையில் “கண்ணா.” எனும் வார்த்தை முந்தி வந்துவிழும், , பத்து வார்த்தை பேசியிருந்தால் 3 வார்த்தை “கண்ணா.” என வந்துவிழும். இன்றுவரை தமிழ் திரைத்துறையின் நம்பர் 1 அவரே.
புலவர்களில் கூட அவனைப் பாடியோர் பெரும் இடம் பெற்றனர். வில்லிபுத்தூராழ்வார் முதல் ஆண்டாள், பாரதி, கண்ணதாசன், வாலி என அவன் புகழ்பாடிய எல்லோரும் நிலைத்தார்கள். அவனுக்குப் பாடிய எம்.எஸ் சுப்புலட்சுமி அழியா இடம் பெற்றார். கண்ணனைப் பாடியவரும் சுமந்தவரும் பெரும் இடம் அடைந்தனர். கலை, இலக்கியம், பத்திரிகை, எழுத்து, பாடல் என எல்லாமும் கூர்ந்து கவனியுங்கள், கண்ணனை வணங்கியோர் தனி இடம் பிடித்திருப்பார், யாரும் தொட முடியா உன்னத இடம் அது.
தனிப்பெரும் கவிஞர்களாய் சிலர் நிலைத்தார்கள். மகா கவி பாரதி தனி ரகம். கண்ணதாசனும் வாலியும் மிக நீண்ட காலம் நிலைத்த ஒரே காரணம் கண்ணனே. ஆம் அவன் ஞான ஊற்று, தன்னை வணங்குவோருக்கு அள்ளி அள்ளி கொடுக்கும் அற்புத சக்தி. இன்றுள்ள தமிழ் திரையுலகில் ஏன் ஒரு கவிஞனும் வாலிக்குப் பின் உருப்படியாக இல்லை என்றால் கண்ணன் அவர்கள் மனதில் இல்லாததுதான் காரணம். அவனைப் போல் இனி ஒரு கவிஞன் தமிழுக்குத் திரை இசைபாடல்கள் எழுத முடியாது எனும் அளவுக்குக் காலத்திற்கும் நிற்கும் கான கல்வெட்டுக்களைக் கொடுத்தான், கண்ணன் பக்தி அதைச் செய்ய வைத்தது. அந்த திருவரங்க வாலி அதைச் செம்மையாகச் செய்தான், வாலி எழுதிய கண்ணன் பாடல்கள் தனி அழகு, தனி வரிசை .
பாரதிக்குப் பெயர் கொடுத்தான் கண்ணன், கண்ணா என உருகி அழுது நின்றான் பாரதி. வெறும் முத்தையா செட்டி கண்ணதாசன் என்றானதிலிருந்து உச்சம் தொட்டான், கடைசி வரை கண்ணா என நின்றான். அவன் தொழிலில் அவன் இருந்தவரை அவனை நம்பர் 1 என ஆக்கி வைத்திருந்தது கிருஷ்ண பக்தி.
ஆந்திர தேசத்தில் கிருஷ்ண வேடம் ஒன்றிலே மக்களைக் கவர்ந்து முதல்வரானார் என்.டி. ராமராவ். அவ்வப்போது தங்கச் சுரங்கத்தில் ஒரு சில வைரம் கிடைப்பது போல் கண்ணதாசனின் உதவியாளர் பஞ்சு அருணாச்சலம் போன்றோர் மின்னினர் “சின்ன கண்ணன் அழைக்கிறான்.” என ஒரே பாடலில் முத்திரை கொடுத்தார் அருணாச்சலம். பாரதி தொடங்கி வைத்த கண்ணன் பாடல்கள் கண்ணதாசனால் கோபுரம் அமைக்கப்பெற்று வாலியால் அதில் ஒரு மகுடமும் சூட்டப்பட்டது.
தசாவதாரம் படத்தில் “முகுந்தா முகுந்தா” என வாலி எழுதிய பாடலோடு ஒரு யுகம் முடிந்தது. அதன் பின் கண்ணன் பாடல்கள் இல்லை, இப்போதிருக்கும் கவிஞர்கள் பலருக்கு அந்த ஆசை இல்லை, ஆன்மீக ம் கலக்காத கலை எதுவும் நிலைக்காது.
இனி கண்ணனைப்பற்றிப் பாடக் கவிஞன் இல்லையோ என ஏங்கிய காலத்தில்தான் “கண்ணா நீ தூங்கடா..” எனும் பாடல் பாகுபலியில் வந்தது. அப்படத்தில் அப்பாடலே பாகுபலி சிலை போல விஸ்வரூபமாய் வளர்ந்து நின்றது, கண்ணனின் பக்தர்களுக்கு அது மாபெரும் உற்சாகத்தைக் கொடுத்தது. காலம் தோறும் ஒருவரைப் பிடித்துக் கொள்ளும் கண்ணன் அந்த கவிஞனைப் பிடித்ததாகத் தோன்றிற்று, அதில் உண்மையும் இருக்கலாம். அது யாரெனப் பார்த்தால் மதன் கார்க்கி, வைரமுத்துவின் மகன்.
அந்த பிரகலாதன் இவ்வழி தொடர்ந்து கண்ணனில் நிலைத்திருந்தால் நிச்சயம் மாபெரும் உயரம் அடைவான், அவனுக்கான விதி கண்ணன் சிலை முன்னால்தான் இருக்கின்றது.