ஆஃப்கானிஸ்தானின் மூன்றே பெண் ஆளுநர்களில் ஒருவரான சலீமா மஜாரி தாலிபான்களால் கைது செய்யப்படும் வீடியோ பரபரப்பாகி வருகிறது.
ஆஃப்கானை ஆக்கிரமித்ததும் தாலிபான்கள், பெண்களுக்கு ஷரியத் சட்டப்படி எல்லா உரிமைகளும் வழங்கப்படும் என்று கூறி இரண்டே தினங்களில் பெண் ஆளுநர் சலீமாவைக் கைது செய்தது அதிர்ச்சியளிக்கிறது.
ஆஃப்கானிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட சலீமாவின் குடும்பம் சோவியத் போரில் தப்பியோடி ஈரானில் தஞ்சம் புகுந்தனர். சலீமா 1980ம் ஆண்டு ஈரானில் பிறந்தார்.பல்கலைக்கழகப் படிப்பு முடிந்து பல துறைகளிலும் கால் பதித்த சலீமா மஜாரி ஆஃப்கானிஸ்தானில் ஒரு மாவட்ட கவர்னர் பதவி காலியாக இருப்பதையறிந்து பெற்றோரை ஈரானில் விட்டு 2018ல் தேச சேவைக்குத் திரும்பினார்.
பல்க் மாகாணத்திலுள்ள சாகார் கின்ட் மாவட்ட ஆளுநராகப் பதவி வகித்தார்.
தாலிபான்களை எதிர்த்துத் துணிச்சலாகப் போராடியவர். பதவிக் காலத்தில்சுமார் 100 தாலிபான் தீவிரவாதிகளைச் சரணடைய வைத்தார்.
அதிபர் அஷ்ரஃப் கனி நாட்டை விட்டே தப்பிச்சென்ற பிறகும் கூட ‘இது என் தேசம் நான் இங்கு தான் இருப்பேன். தாலிபான்களை எதிர்த்துப் போராடிக் கொண்டே இருப்பேன்’ என்று துணிச்சலாக அறிவித்தார். சொன்னது போலவே தாலிபான்களிடம் சிக்கும் வரை பல்க் மாகாணம் சாகார் கின்ட் மாவட்டத்திலேயே இருந்தார்.
சலீமா மஜாரியின் கைது குறித்து அவரது ஆதரவாளர்கள் கூறுகையில் அவர் தாலிபான்களால் விரைவில் கொல்லப்படலாம், தங்களை எதிர்ப்பவர்களின் கதி இதுதான் என உலகத்திற்குத் தாலிபான் கூறும் செய்தி இது தான் என்றனர்