ஆன்லைன் சூதாட்டத்தால் இரண்டு உயிர்பலியே இறுதியானதாக இருக்கட்டும்”.
-தாமதமின்றி வலுவான சட்டமியற்ற தமிழக முதல்வருக்கு கோரிக்கை.
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு எதிராக கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட கண்துடைப்பு சட்டத்தை எதிர்த்து சூதாட்ட நிறுவனங்கள் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம் அச்சட்டத்தை ரத்து செய்ததோடு புதிய சட்டம் கொண்டு வர தடையில்லை என்றது.
உடனடியாக தமிழக அரசின் தரப்பில் இருந்து ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய புதிய சட்டம் இயற்றப்படும் என அவசர அவசரமாக அறிவித்த அறிவிப்பு கடலில் கரைக்கப்பட்ட பெருங்காயமாகி போனது. விளைவு இதோ சென்னை தாம்பரத்தில் கிஷோர் , விழுப்புரத்தில் பச்சையப்பன் என்கிற இரண்டு இளைஞர்களின் உயிரை ஆன்லைன் அரக்கன் காவு வாங்கியிருக்கிறது.
ஏற்கனவே தமிழகத்தில் தொடர்கதையாகி வந்த ஆன்லைன் சூதாட்டத்தால் நிகழ்ந்த தற்கொலைகள் மீண்டும் நிகழாமல் தடுத்து நிறுத்தவும், மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள் மத்தியில் ஆசையை தூண்டி விட்டு ஏமாற்றும் பணியை ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் மேற்கொள்ளும் என்பதால் சற்றும் தாமதமின்றி “ஆன்லைன் ரம்மி” உள்ளிட்ட இணையதள சூதாட்ட நிறுவனங்கள் தமிழகத்தில் மீண்டும் கால்பதிப்பதற்கு முன் உடனடியாக அவற்றுக்கு எதிராக உரிய விதிமுறைகளை உருவாக்கி, கடுமையான தண்டனை விதிக்கக் கூடிய வகையில் புதிய அவசர சட்டத்தை விரைந்து இயற்றி இணையதள சூதாட்டங்களின் பிடியிலிருந்து தமிழக மக்களை காத்திட வேண்டும் என கடந்த ஆகஸ்ட்-5ம் தேதி அரசுக்கு முன் வைத்த கோரிக்கையை தமிழக அரசு பரிசீலித்ததாகவே தெரியவில்லை.
கடந்த ஆட்சியாளர்கள் கொண்டு வந்த அவசர சட்டத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்த உடனேயே தமிழக அரசு விழித்துக்கொண்டு விரைவாக செயல்பட்டிருந்தால் பல்வேறு கனவுகளுடன் இருந்த இரண்டு இளைஞர்களின் உயிர் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு பலியானது தடுக்கப்பட்டிருக்கும்.
மக்களுக்கான அரசு என அடிக்கடி கூறி வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இவ்விவகாரத்தில் ஏன் அஜாக்கிரதையாக இருந்தார் அல்லது இருக்கிறார் என்று தெரியவில்லை. எனவே இணையதள சூதாட்ட விளையாட்டுகளுக்கு எதிரான சட்டத்தை கடுமையான விதிமுறைகளை பின்பற்றி தாமதமின்றி உருவாக்கி, அச்சட்டத்தை நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றி மேலும் இதுபோன்ற துர்மரணங்கள் நிகழாவண்ணம் செயலாற்றிட வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி
சு.ஆ.பொன்னுசாமி
மாநில செயலாளர்
மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி.
மாநில தலைவர்
நம்மவர் தொழிற்சங்க பேரவை