மொழிபெயர்ப்பு ஆசிரியர் : ஸ்ரீதர் திருச்செந்துறை
நீண்ட கால நோக்கில், காந்தியை எதிர்ப்பதால் வலதுசாரிகள் தங்கள் குறிக்கோள்களை அடையப்போவதில்லை.
காந்தியை விமர்சிப்பதால் வலது சாரிகளும் ஹிந்துக்களும் ஓரு பலனையும் பெறப்போவதில்லை என்று நினைக்கிறேன். இது குறித்து, தொலை நோக்குடன் கருத்துக்களை உருவாக்க நினைப்பவர்களுடன் ஒரு உரையாடலைத் தொடங்க விரும்புகிறேன். நான் கூறுவது தவறாக இருக்கலாம், ஆகவே, என் கருத்தை முதலில் விளக்குகிறேன்.
மகாத்மா காந்தி, நீங்கள் வழக்கமாக எதிர்க்கும் ஹிந்து துவேஷி அல்லர்
ஒரு ஹிந்துவாக ஹிந்து சமுதாயம் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் எனக்குக் கவலை அளிப்பவையே. ஆனால், ஹிந்துக்கள் அவர்கள் மதத்திற்கும் கலாச்சார அடையாளத்திற்கும் உள்ள அச்சுறுத்தல்களை உணரவேயில்லை. இவற்றை எதிர்த்து நிற்காவிட்டால், சில தசாப்தங்களிலேயே மீள முடியாத அளவுக்கு ஹிந்து அடையாளங்கள் அழிக்கப்பட்டு விடும். அப்போது எந்த ஒரு ஹிந்துவும் அவன் மத கலாச்சார அடையாளங்களுக்கு சொந்தம் கொண்டாட முடியாது. உலகில் தனியே இன்னும் தாக்குப்பிடித்துக் கொண்டிருக்கும் கடைசி ‘பாகனிய’ மதமும் மறைந்துவிடும். ஆம், முகலாயர்களாலும் ஆங்கிலேயர்களாலும் சாதிக்க முடியாததை, இந்த நவீன கால நவீன மனோரீதியான தாக்குதல்கள் சாதித்துவிடும்.
ஆனால், என் அளவிற்கும் நீங்கள் பயத்துடனும் அவநம்பிக்கையுடனும் இருக்க வேண்டியதில்லை. ஏனெனில் அவை மனச்சோர்வையும் தோல்வி மனப்பான்மையையுமே தருவன. இருப்பினும், ஹிந்துகள் சந்திக்கும் அச்சுறுத்தல்கள் உண்மை என்பதை ஒப்புக்கொள்வீர்கள். ஏனெனில், ஹிந்து மதத்தை வெறுக்கும் நிறுவனங்களும் சித்தாந்தங்களும் எங்கும் உள்ளன. அவை ஹிந்து மதத்தை அழிக்க வேண்டியதைப் பற்றி பேசுகின்றன.
பெரியாரியர்களையும் அம்பேத்கரியர்களையும் போல சிலர், ஹிந்துமதத்தை அழித்தொழிப்பதன் தேவையை அப்பட்டமாக ஒப்புக்கொள்கின்றனர். சிறிதும் நேர்மையற்ற பலர், நயவஞ்சகத்துடன் தங்கள் ஹிந்து மத வெறுப்பை நன்கு மறைத்துக்கொண்டு, ஹிந்துத்துவம் – ஹிந்து மதம், பிராமணத்துவம் – ஹிந்து மதம் என்று மோதல்களை உருவாக்கும் கருத்துக்களை பரப்பி வருகின்றனர். இவர்கள் தங்களை லிபரல்கள் அல்லது நடுநிலையாளர்கள் என்று கூறிக்கொள்வர்.
பெரியாரியர்களும் அம்பேத்கரியர்களும் காந்தியை அடி மனதிலிருந்து வெறுப்பவர்கள். சராசரி சங்கி காந்தியை வெறுப்பதை விட இவர்கள் அதிகம் வெறுக்கின்றனர். பிரதமர் நரேந்திர மோதியைப் போன்ற சங்கி கூட காந்தியைப் இடைவிடாமல் பாராட்டுவதுண்டு. ஆனால் காந்தியை பாராட்டும் ஒரு பெரியாரியரையோ, ஒரு நவ அம்பேத்கரியரையோ பார்க்கவே முடியாது.
இவர்கள்தான் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுடனும், நக்ஸல்களுடனும், அராஜகவாதிகளுடனும், சீனர்களுடனும், எவருடனும் சேர்ந்து கொண்டு, ஹிந்துத்துவம், பிராமணத்துவத்திற்கும் எதிராகப் பேசுகிறோம் என்ற போர்வையில் ஹிந்து வெறுப்பைக் கக்குவர். இந்த தேச விரோத சக்திகளுடன் சேர்ந்து கொள்வதோடு நிற்காமல், அக்கூட்டாளிகளின் இயல்பான வெறுப்புக்கு வெள்ளையடித்து மறைப்பர். மகாத்மா காந்தியை ஹிந்துத்துவத்திற்கு எதிரானவராக நிறுத்தினாலும், அவர்களுக்கு காந்தியை பாராட்ட வார்த்தை வருவதில்லை.
எனவே, ஹிந்து வெறுப்பாளர்கள் மகாத்மா காந்தியை ஒதுக்க ஏதாவது காரணம் இருக்க வேண்டும். இல்லையா? பின் அவர்கள் ஏன் காந்தியையும் வெறுக்க வேண்டும்? காந்தி மட்டும் இல்லாவிட்டால், ஹிந்து மதத்தை ஏற்கனவே தீர்த்துக் கட்டியிருக்கலாம் என்று அவர்கள் ஏன் எண்ணுகிறார்கள்? ஹிந்து மதத்தை ஒழிக்கும் இம்முயற்சியில் காந்தி எப்படி மண் அள்ளிப்போட்டார்?
சில நேரங்களில் எதிரியைப் போல யோசிப்பது நல்லது. சிந்தித்துப் பாருங்கள்.
நடுநிலையாளர்கள் காந்தி மீது காட்டும் பற்று, போலியானது
பெரியாரியர்களும் நவ அம்பேத்கரியர்களும் காந்தி மீது கொண்ட வெறுப்பு நேர்மையானது. ஆனால் ‘நடுநிலையாளர்கள்’ அவர்களுடன் இருப்பது நம்மைக் குழப்பத்தான். ஹிந்துக்களை குழப்புவதில் மட்டுமே அவர்களுடைய குவியம் இருக்கிறது. ஹிந்துக்கள், அவர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களின் மீது தங்கள் கவனத்தை செலுத்த விடாமல்,, அவர்களைக் குழப்பும் பொறுப்புதான் இந்த ‘நடுநிலையாளர்’ளுடையது.. உண்மையான பிரச்சினைகள் மீது ஹிந்துக்களின் கவனம் செல்லாமல் இருக்க, சங்கிகள் தான் ஹிந்து-முஸ்லிம் மோதலைக் கையில் எடுக்கின்றனர் என்றும் இவர்கள் கூறுவர்.
பெரியாரியர்களும் நவஅம்பேத்கரியர்களும் தோல்வியடையும்போது, நடுநிலைக்காரர்கள் வெற்றி பெறுவர். மகாத்மா காந்தியை வெறும் வாயளவில் புகழ்வர். அவர்கள், காந்தியைத் தங்களுடையவர்களாக ஆக்கிக் கொண்டதால், அவர்களின் அன்புக்குரியவர் மகாத்மா என்று நினைத்து, வலது சாரி ஹிந்துக்கள் காந்தியையும் தாக்கத் தொடங்கினர். உண்மையில் நடுநிலைக்காரர்களுக்கு காந்தி மேல் எந்த அபிமானமும் இல்லை.
பசு பாதுகாப்பு, ஜாதி (ஜாதிக் கொடுமை அல்ல) உட்பட ஹிந்து மத பாரம்பரியங்களை காந்தி ஆதரித்தே வந்துள்ளார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். சமூகத்தின் நலனுக்கு கோவில்களின் முக்கியத்துவம் மற்றும் பிற பாரம்பரிய விழுமியங்களை ஆதரித்தும் பேசியுள்ளார். அவர் காலத்தில் உருவ வழிபாட்டை எதிர்ப்பது சீர்திருத்தமாகக் கருதப் பட்டாலும், காந்தி உருவ வழிபாட்டை ஒரு நாளும் எதிர்த்தவரல்லர். ஹிந்து வெறுப்பாளர்கள் அவரை எதிர்க்க, இப்படிப் பல உதாரணங்கள் உண்டு.
லிபரல்கள் எனப்படும் நடுநிலையாளர்களும் இவற்றை வெறுப்பவர்களே. ஆனால் அதை இப்போது வெளிப்படுத்தாமல் இருப்பது அவர்களுடைய புத்திசாலித்தனம். கருத்துக்களை எப்போது வெளியிட வேண்டும் என்று அவர்களிடம் ஒரு தொலைநோக்குத் திட்டம் உள்ளது. சில சமயம், அதையும் மீறி காந்தி மீதுள்ள வெறுப்பு வெளிப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, ஒரு லிபரல் சிந்தனையாளர், ஒரு லிபரல் வலைத்தளத்தில் பதிப்பித்தது:

இந்தியாவின் பிரிவினைக்கு காந்தி மீது பழி சுமத்தியுள்ளனர். அப்படி காந்தி என்ன தவறு செய்தார்? ஹிந்துவாக வாழ்ந்ததுதான் அவர் செய்த தவறு. பெரியாரியர்கள், அம்பேத்கரியர்கள் போல் லிபரல்களும் ஹிந்துவாக இருப்பதே தவறு என்றுதான் நம்புகின்றனர். ஆனால் லிபரல்கள் அதை வெளிப்படையாகச் சொல்வதைத் தவிர்க்கின்றனர். அப்படி சொல்லிவிட்டால், லிபரல் முகமூடிக்குப் பின் யார் இருக்கின்றார் என்ற உண்மை தெரிந்துவிடும்.
இதில் வெண்டி டோனிகர், ஸ்க்ரால் தளம் எல்லாம் ஒரே ரகம். அருந்ததி ராய் போன்ற பல லிபரல் முக்கியஸ்தர்கள் காந்தி மீது அவ்வப்போது பழி சுமத்தியுள்ளனர். ஆனால் அதை அளவுக்கு அதிகமாக செய்ய மாட்டார்கள். ஏனென்றால் அவர்களுக்கு காந்தி தேவை. அதாவது, நாதுராம் கோட்ஸேயின் துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்ட காந்தியின் உயிரற்ற உடல் அவர்களுக்குத் தேவை.
லிபரல்களுக்குப் பிடித்த காந்தி – செத்த காந்தி
அவர்கள் வணங்கும் கடவுளின் பிண உரு ஒன்று தான் அவர்களுக்குப் பிடித்தது. உயிருடன் இருந்த காந்தியின் கொள்கைகள் அவர்கள் இந்தியாவைப் பற்றி கொண்டிருந்த கருத்துருவுடன் ஒத்துப் போகாதது மட்டுமல்ல; ஹிந்துக்களுக்காக பேசும் யாரையும் கோட்ஸே கூட்டத்தினர் என்று வசை பாட காந்தியின் சவம் தான் பயன்படும். அவர்களைக் கேள்வி கேட்கும் எல்லோரையும் கவிழ்க்க காந்தியின் மரணம் ஒரு சிறந்த ஆயுதம்.
மகாத்மா காந்தியை எதிர்ப்பதால், ’லிபரல்கள்’ பலவீனப்படுவதில்லை
காந்தியின் கொள்கைகளையும் செயல்களையும் எதிர்த்தால், ‘கோட்ஸே கூட்டத்தோடு’ ஒருவர் இருப்பதில் ஒன்றும் தவறில்லையே என்று வாதிடலாம்.
இந்த வாதம் செல்லாது. என்ன நியாயம் பேசினாலும், நாதுராம் கோட்ஸே ஒரு கொலைகாரர். அந்தக் கொலைக்காக அவர் வெறுக்கப்படுவார், வில்லனாகப் பார்க்கப்படுவார் என்பது கோட்ஸே அறிந்ததே. இஸ்லாமில், இல்முத்தின் போல, நபியையோ அவர்கள் மதத்தையோ பழிப்பவர்களைக் கொன்றால் போற்றப்படுவது போல, ஹிந்து மதத்தில் நடப்பதில்லை. இரு மதங்களில் மரபுகள் மாறுபட்டவை. எனவே கோட்ஸே கூட்டத்தில் இருப்பதால் பாராட்டு ஒன்றும் கிடைக்காது.
தொலைநோக்குடன் கருத்துக்களை உருவாக்க நினைத்தால், கோட்ஸே கூட்டத்தில் இருப்பது பலனளிக்காது என்று நினைக்கிறேன். ஒன்றிரண்டு ஹிந்துக்களிடம் செல்லுபடியாகலாம்; ஆனால் ஒட்டுமொத்த ஹிந்து சமூகம் கோட்ஸே கூட்டத்துடன் சேராது.
கோட்ஸேவின் செயலை நியாயப்படுத்தாமலோ, இன்னொரு கோட்ஸே உருவாகாமல் இருப்பதோ அதி முக்கியம் அல்லவா? ஒரு காரணத்திற்காக கோட்ஸே தன்னை வில்லனாக்கிக் கொண்டார். அவர் அந்தப் பாவத்தை செய்யவில்லை என்றால், அந்தப் பாவம் லிபரல்கள் மீது விழுந்திருக்கக் கூடும்.
கோட்ஸே மட்டும் காந்தியைக் கொல்லாமல் இருந்திருந்தால், லிபரல்கள் காந்தியின் சிந்தனைகளை, அவர் யோசனைகள, அவர் கொள்கைகளை மிகச்சில வருடங்களிலேயே தீர்த்துக் கட்டியிருப்பார்கள். அண்ணா ஹசாரேவைப் பாருங்கள்; பாலில் விழுந்த ஈயைத் தூக்கி எறிவது போல, அவர் பெயரைச் சொல்லி அரசியலில் வெற்றி பெற்ற பின், அந்தக் கட்சி அவரைத் தூக்கி எறிந்து விட்டது. சுதந்திர இந்தியாவில், முதல் தேர்தலுக்குப் பின் மகாத்மா காந்திக்கும் அதே நிலைமை தான் நேர்ந்திருக்கும்.
இன்றைய காங்கிரஸ், காந்தியை ஏற்கனவே கொன்று விட்டது. அவர்கள் இப்போது போற்றுவது பெரியாரை. எனவே, காந்தியைத் தாக்குவதால், லிபரல்கள் பலவீனப்படப் போவதில்லை; ஏன், காங்கிரஸுக்கு கூட இக்காலத்தில் அதனால் பாதகம் ஒன்றும் இல்லை.
காந்தியை விமர்சிக்கக் கூடாது என்று சொல்லவில்லை
ஹிந்து மதம் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களை உணர்ந்த ஒரு ஹிந்துவாக நான், மகாத்மா காந்தியை விமர்சிக்கக் கூடாது என்றோ, பெரும் ஹிந்து ஞானியாக போற்ற வேண்டுமென்றோ சொல்லவில்லை. அவர் கருத்துக்கள் இன்று செல்லுபடியாகக் கூடியவை அல்ல.
மகாத்மா காந்தியின் விசித்திரமான தீவிர சமாதானக் கொள்கைகளால், ஹிந்துக்கள் பலமிழந்ததில் சந்தேகமே இல்லை. ஹிந்துக்கள் பெரும் வீரர்களாக இருந்ததாலேயே ஆயிரமாண்டுகள் படையெடுப்புகளையும், கோவில் அழிப்புகளையும், படுகொலைகளையும் எதிர் கொண்டு வந்துள்ளனர். ஹிந்துமதத்தை ஒரு அதி-சாத்வீக மதமாகவும், ஹிந்துக்களை அமைதி விரும்பிகளாகவும், பலவீனர்களாகவும் உருவகப் படுத்தி மகாத்மா ஒரு பெரும் பிழை செய்து விட்டார். விமர்சிக்கப் பட வேண்டியது, காந்தியின் இந்த செயலே அன்றி காந்தி என்ற மனிதனோ அல்லது அவர் அடையாளமோ அல்ல.
அதே போல, அவர் ஹிந்து-முஸ்லிம் நல்லிணத்தை தேவைக்கதிகமாக நம்பியதும் விமர்சிக்கப் படவேண்டியதே. அகண்ட இஸ்லாமிய இயக்கமாக இருந்து, பாகிஸ்தானின் பிறப்பிற்குக் காரணமான கிலாபத் இயக்கத்தை முட்டாள்தனமாகக் காந்தி ஆதரித்ததை விமர்சிக்க வேண்டியதுதான்.
இன்று இஸ்லாமியர்கள் இரண்டாவது கிலாபத் பற்றி பேசும் போது, அதை வளர விடாமல், இந்தியா இஸ்லாமிய அதிகாரத்திற்கு மீண்டும் அடி பணியாமல் இருக்க காந்தியின் தவறைப் பற்றி பேசுவது அவசியமாகிறது. மேலும், கோட்ஸேயைப் போற்றாமல், காந்தியின் வாழ்க்கை, அவர் ஆளுமை பற்றி குற்றம் சொல்லாமல் அவர் தவறைப் பற்றி மட்டும் பேச முடியுமே.
நான் முன்பு கூறியதைப் போல, இது கருத்துரு பற்றியது. கருத்துக்கள் படிக்கப்பட்டு, பேசப்பட்டு, புரிந்து கொள்ள வேண்டியதைப் பற்றியது. அவை காந்தியையோ அவர் தவறுகளைப் பற்றியோ அல்ல. அவர் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களைப் பற்றி பேச வேண்டும். அவரைக் குற்றம் சொல்வதால் ஆவது ஒன்றும் இல்லை. சிந்தித்துப் பாருங்கள். பிரிவினைக்கு மகாத்மா காந்தியைக் காரணம் காட்டினால், லிபரல்களின் பிரச்சாரத்திற்கு தீனி போட்டது போலாகும். (மேலே நான் சுட்டிய ஸ்க்ரால் கட்டுரையைப் பார்க்கவும்.)
இஸ்லாமியத்தினாலும் அதனால் நேர்ந்த பிரிவினையாலும் ஏற்படும் அபாயங்களைகாந்தி பார்க்கத் தவறி விட்டார். ஆனால் பிரிவினைக்குக் காரணம் காந்தி அல்ல; இஸ்லாமியமே. அவ்வளவு தான்.
காந்தி சில அச்சுறுத்தல்களைக் கண்டு கொள்ள, கணிக்கத் தவறிவிட்டார். அவர் இன்னும் சில காலம் உயிருடன் இருந்திருந்தால், கண்டு கொண்டிருக்கலாம்; இல்லாமலும் இருந்திருக்கலாம்.
எதிரியை அடையாளம் காண முடியாதவர் எதிரியாவதில்லை.
காந்தியையும் அவர் சிந்தனைகளையும் விமர்சிக்கும் எவரும் இதை நினைவில் கொள்ள வேண்டும்.
உரையாடல்கள் தொடங்கட்டும்……..
நன்றி:
மூலம்: Why Hindus don’t have much to gain by attacking Mahatma Gandhi (opindia.com)
ராஹுல் ரோஷன் OpIndia தளத்தில் எழுதியதன் தமிழாக்கம்.
Comments 1